Monday, August 04, 2008

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய எனக்கேயான ஒரு தளத்தில் அடிவைக்கிறேன். அதற்குள் இங்கே பல மாற்றங்கள். இன்று எப்படியும் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்ததோடு சரி செயல்படுத்த முடியவில்லை.எனக்கு நேரமே இல்லை என்று பொய் சொல்லவும் முடியவில்லை. அப்படி சொன்னால் முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஜீவன் என் மறுபாதியாக தான் இருக்கும். நேரமின்மை என்ற வார்த்தையை ஒத்துக் கொள்ளவே மாட்டார். எழுதணும் என்று நினைக்கிறேன் ஆனால் நேரமில்லை என்று சொன்னால்,அது உன்னுடைய தவறு நேரத்தின் தவறு இல்லை என்று ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடக்கும். சரி நம்ம மக்கள் எல்லாரும் மறந்து போகாமல் இருக்கணும்னு என்னுடைய கவிதை பக்கத்தில் புதிதாக எழுதியுள்ளேன். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர்கள், மடலில் வாழ்த்தியவர்கள், மனத்தால் வாழ்த்தியவர்கள், தொலைபேசியவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இனி எப்பொழுதும் போல் இங்கு தொடர்ந்து சந்திப்போம். இன்று ஆடிபுரத் திருநாள் , சூடி கொடுத்த சுடர்கொடியின் தாள் வணங்கி மீண்டும் இங்கு எழுத தொடங்குகிறேன் :)

Saturday, May 10, 2008

மீண்டும் சந்திப்போம்.. :)

விடைபெறும் நேரம் வந்துவிட்டது, தனிமையின் கரங்களில் இருந்து மெல்ல விடுபட்டு துணை சேரும் அந்த நொடிகளின் இடைவெளி அருகி கொண்டே வருகிறது.. தனிமையெனும் மொட்டவிழ்ந்து துணையோடு மணம் வீசும் அழகிய இல்லற தோட்டத்தில் அடியெடுத்து வைக்க போகிறேன் உங்கள் அனைவரின் ஆசியோடும்,வாழ்த்துக்களோடும். சுகந்தம் வீசும் வாழ்வில் நுழைய போகும் தருணத்தில் தவிர்க்கமுடியாததாய் பிரிவின் வருத்தமும் அடிமனதில் இழையோடி வரும் இந்நேரத்தில் நான் முன்பே எழுதிய இக்கவிதையை இங்கே பதிவிடுகிறேன். இக்கவிதை என் அம்மாவிற்காக..


இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.
பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்


பி.கு: மீண்டும் சந்திப்போம் :)