Wednesday, December 27, 2006

நான் ஒரு படிப்பாளி!


டிஸ்கி: இது நாட்டாமைக்கு, தலைப்பை பார்த்துட்டு இதுவும் அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி ஓடக்கூடாது,முழுசா படிச்சு பாருங்க, நம்ம குடும்ப மானத்தை கதை புத்தகம் படிச்சு தான் காப்பாத்தறேன், பாடப்புத்தகம் இல்லை:)

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறதே அது ஒரு போதை என்றே சொல்லலாம். அந்த வகையில் நான் புத்தக போதையில் உழன்றுக் கொண்டிருப்பவள், சாலையில் நடந்து போகும் போது நம் காலில் வந்து உரசும் சிறு காகிதத்துண்டிலிருந்து, கடையில் சாமான் வாங்கினால் சுற்றிக் கொடுக்கும் காகிதம்,வேர்க்கடலை பொட்டல காகிதம் என்று எது கிடைத்தாலும் படிக்கும் பழக்கம் உண்டு.

இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துக்கொண்டு வருகிறது என்று சிலர் சொன்னாலும் கடந்த சில வருடங்களாய் இருந்த தொய்வு நிலையிலிருந்து இப்பொழுது புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து பல வருடங்களாக சென்னையில் நடக்கும் வருடாந்திர புத்தக கண்காட்சிக்கு செல்வதால் என்னால் இதை உறுதியாக சொல்ல முடிகிறது.

சின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. 7, 8 வயதிலிருந்தே வீட்டுக்கு வரும் கல்கி,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதில் என்ன தான் படிச்சு புரிஞ்சுக்கிட்டேன்னு தெரியலை, ஒரு வேளை, வெறும் படங்கள் மட்டும் தான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். சிறிய வயதில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன்.

முதலில் நிறைய படங்கள் போட்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து ராணி முத்து காமிக்ஸ் ,அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி என்று ஆரம்பித்து நிறைய வார இதழ்கள், தொடர்கதைகள், பின் நாவல்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் மானாவாரியாக வீட்டுக்கு வரும் எல்லா புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தேன்(என்னிக்காவது உன் பாடப்புத்தகத்தை இப்படி படிச்சிருக்கியான்னு அசட்டுத்தனமா கேட்கக்கூடாது)பள்ளியில் படிக்கும் போது தொடர்கதை படிக்க வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். நான் மெதுவாக நழுவி வீட்டினருக்கு தெரியாமல் எல்லாம் படித்த காலம் உண்டு.

தமிழில் ராஜேஷ்குமார்,தேவிபாலா,சுபா போன்ற எழுத்தாளர்கள் தான் முதலில் எனக்கு தெரியும். அவர்களை தாண்டி படித்ததில்லை, ஆங்கிலத்தில் archies,asterix and obelix,tintin போன்ற காமிக்ஸ் ஒன்று விட்டதில்லை.

இப்படி ஒரு பாகுபாடும் இல்லாமல் படித்த நான் கல்லூரி காலத்திலும் அதற்கு பின்னும் தான் எனக்கு எந்த விதமான எழுத்துக்கள் பிடிக்கிறது என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். தமிழில் அறிவியல் கலந்த சுஜாதாவின் நாவல்கள், ஆண்பெண் சமத்துவம், பெண்ணியம்,சமூகம் சார்ந்த பிரபஞ்சனின்,வாஸந்தியின் நாவல்கள் என்று தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.இவர்களின் எழுத்துக்கள் என் எண்ணங்களை,இயல்புகளை மாற்றினவை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் காமிக்ஸ் மட்டுமே படித்து வந்த நான், கல்லூரியில் தான் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். மருத்துவம் சார்ந்து எழுதும் ராபின் குக்,அறிவியல் சார்ந்து எழுதும் மைக்கேல் கிரிக்டன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

ஒவ்வொரு புத்தகமும் நமக்கு புது உலகத்தை காட்டுகிறது.புத்தகத்தில் ஓடும் வரிகள் நம் மனக்கண்ணில் படமாக விரியும் போது நம் கற்பனை திறன் அதிகரிக்கிறது.

என்ன தான் அறிவியல் முன்னேற்றம் வந்து கணினியில் புத்தக்கங்கள் படிக்கும் வசதி வந்தாலும், ஒரு அமைதியான இடத்தில் அருமையான தேநீரை ருசித்துக்கொண்டே நமக்கு பிடித்த எழுத்தை நம் வசதிக்கேற்ப படிப்பது என்பது எதற்கும் ஈடாகாது.

பி.கு : விடுமுறை சமயம் என்பதால் எல்லாரும் காணாம போயிட்டாங்க, நாட்டாமை பழைய பஞ்சாயத்து நிறைய இருக்குன்னு பார்க்க போயிட்டார், மொ.ப. தலைவி(வலி) கீதா திடீர்னு வராங்க திடீர்னு போறாங்க, நாரதர் அம்பி சென்னையில் மழை பெய்யுதான்னு பார்க்கறேன்னு சொல்லி பாதி நாள் எஸ்கேப்,அவருக்கு பஜ்ஜி சொஜ்ஜி ஏற்பாடு பண்றதுல திராச பிஸி,சுகாதார துறை அமைச்சர் ப்ரியா மத்த மாகாணத்துல எல்லாம் சுத்தபத்தமா இருக்காங்களான்னு பார்க்க போயிட்டாங்க, தலைவர் கடலை கார்த்திகேயன் அமைச்சரவை மாற்றத்துல மும்முரமா இருக்கார். அதனால் நானும் நம்ம கட்சி மானத்தை(!) காப்பாத்த தென்மாவட்ட சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொள்கிறேன். எனவே அடுத்த வருடம் திரும்பி வந்து பட்டையை கிளப்பி விடலாம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பி.கு.கு: புதன்(27/12/2006) முதல் திங்கள்(1/1/2007)வரைக்குமான திருப்பாவை பாடல்களை ஒரே பதிவாக இன்று போட்டுள்ளேன். அதையும் படித்து விடுங்கள், வந்தவுடன் கண்டிப்பாக சர்க்கரை பொங்கல் உண்டு. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலருடைய வலைப்பக்கங்களுக்கு வர முடியவில்லை, என் வலைப்பக்கமே போக முடியவில்லை, ஊரிலிருந்து திரும்ப வந்தவுடன் எல்லார் வீட்டுப்பக்கமும் வந்து அட்டெண்டஸ் கொடுத்து விடுகிறேன் :)

திருப்பாவை பாடல் (12-17)

திருப்பாவை பாடல் - 12

"கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:


இளங்கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றை நினைத்து வருந்துகையில் மடியில் தானாக பால் வடிய அதனால் வீடே சேறாகும் செல்வனின் தங்கையே எங்கள் தலையில் பனி விழ உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறோம். சினம் கொண்டு அந்த இராவணனை(தென்னிலங்கை கோமானை) கொன்ற மனதுக்கினிய இராமனை நாங்கள் பாடி புகழ, நீயோ வாய் திறவாமல் இருக்கிறாய். பெண்ணே எழுந்திராய்! இது என்ன பெரும் உறக்கம்? நீ இப்படி உறங்குவதைப் பற்றி அனைத்து இல்லத்தினருக்கும் தெரிந்து விட்டது.


திருப்பாவை பாடல் -13

"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகாசுரன் என்னும் அரக்கனின் வாயை இரண்டாக பிளந்தவனும், மற்ற பொல்லாத அரக்கர்களை அழித்தவனும், இராவணின் பத்து தலைகளையும் புல்லை கிள்ளி எறிவது போல் எறிந்தவனுமானவனின் புகழைப் பாட நாங்கள் எல்லாரும் கூடி இருக்கிறோம். விடியற்காலையான இப்பொழுதில் சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்)உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது. பறவைகள் எல்லாம் இரை தேட புறப்பட்டு விட்டன, அழகிய தாமரை மலரில் மீது வண்டுகள் உறங்குவது போன்ற கண்களை உடையவளே! இந்த நல்ல நாளிலே நன்கு முழுகி நீராடாமல் இன்னும் படுக்கையில் கிடக்கிறாயே, தனியே இருந்து கபடம் நினைக்காமல் எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!


திருப்பாவை பாடல் - 14"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்"

பொருள்:

உங்கள் புழக்கடை தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் விரிந்து ஆம்பல் மலர்கள் குவிந்து விட்டன. காவி நிறத்தில் தோய்ந்த ஆடைகளை உடுத்துபவரும், வெண்மையான பற்களை உடையவருமான தவம் செய்யும் துறவிகள் தங்கள் திருக்கோயில்களில் ஆராதனை செய்ய புறப்பட்டு விட்டனர். நீராடுவதற்கு எங்களை 'எழுப்பி விடுவேன்' என்று சொல்லி வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொண்ட நங்கையே!எழுந்திராய்! சொன்னதை செய்யவில்லையே என்ற நாணம் சிறிதும் இல்லாதவளே ,நீ விரைவில் எழுந்து சங்கையும், சக்கரத்தையும் ஏந்தியுள்ளவனும், முழங்காலளவு நீண்ட கைகளை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை கொண்டவனுமான கண்ணனின் புகழ் பாடுவாயாக!


திருப்பாவை பாடல் - 15


"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இளமை கொண்ட கிளியின் இனிமையான சொல்லுடையவளே இன்னும் உறங்குகிறாயோ? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு 'சிலுகு சிலுகு என்று கூச்சலிட்டு ஏன் எழுப்புகிறீர்கள் இதோ வருகிறேன்' என்று நீ சொல்லவும் 'சாமர்த்தியமான உன் பேச்சுகளையும் உன் கட்டுக்கதைகளையும் நாங்கள் அறிவோம்'என்று நாங்கள் சொல்ல, 'நீங்கள் தான் பேசும் திறனில் வல்லவர்கள் நானும் அப்படியே இருந்து விட்டு போகிறேன்' என்று சொல்லி உடனே எங்களோடு வந்து சேர்ந்துக்கொள். உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எல்லாரும் வந்து விட்டார்களா? என்று கேட்கிறாயே, இதோ நீயே வந்து எண்ணிக் கொள். வலிமை மிக்க குவலயப்பீடமென்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களின் புகழை அழிக்க வல்லவனுமாகிய அந்த மாயவனை புகழை நாம் பாட நீயும் வருவாயாக!


திருப்பாவை பாடல் - 16

"நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாசல்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மாநீ
நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இடைக்குலத்தை சேர்ந்த எங்களுக்கு தலைவனாய் இருக்கும் நந்தகோபரின் வீட்டைக் காப்பவனே, அழகிய கொடிகள் தோரணங்கள் அலங்கரிக்கும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளை திறவாய்! அந்த மாயம் புரிபவன்,மணிவண்ணன் ஆயர்குல(இடைக்குலம்) சிறுமிகளான எங்களுக்கு வேண்டுவன தருவதாய் சொல்லியிருக்கிறான், அதனால் நாங்கள் தூய்மையாய் வந்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன்முதலில் நாங்கள் வந்துள்ள இந்த நேரத்தில் உன் வாயால் மறுக்காதிருந்து இந்த நிலைக்கதவின் தாள் நீக்குவீர்!

(முந்தின பாடல் வரையில் தன் தோழியை எழுப்பும் ஆண்டாள் இப்பாடலில் ஆயர்பாடியில் இருக்கும் இடையர்குல தலைவனான நந்தகோபனின் மாளிகையில் வாயில் காப்போனை எழுப்புகிறாள்)திருப்பாவை பாடல் - 17


"அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்.
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"

பொருள்:

அழகிய ஆடைகளும் தண்ணீரும் சோறும் தானம் கொடுக்கும் பெருமானே எங்கள் தலைவரே நந்தகோபாலா எழுந்திராய்! கொம்பை ஒத்த வதனத்தையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே! எங்கள் குலவிளக்கே யசோதையே எழுந்திராய்!ஆகாயத்தையும் தாண்டி வளர்நது அனைத்துலகையும் அளந்தவனே எழுந்திராய்! செம்மையான பொன்னால் செய்த கழலை அணிந்த பலதேவரே நீரும் உம் தம்பியும் உறக்கத்திலிருந்து எழுந்திரும்!

(இப்பாடலில் யசோதையையும்,கண்ணனையும்,அவன் சகோதரன் பலதேவனையும் எழுப்புகிறாள்)

Thursday, December 21, 2006

திருப்பாவை பாடல் (6-11)

திருப்பாவை பாடல் - 6

"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ் சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:

அதிகாலை நேரம் பறவைகளும் இரை தேட புறப்பட்டன. கருடனின்(புள்ளரையன்) தலைவனான இறைவனின் கோவிலில் வெண்மையான நிறம் கொண்ட சங்கின் ஒலி(பேரரவம்) கேட்கவில்லையோ? பெண்ணே எழுந்திரு! முலைப் பால் கொடுத்து தன்னை கொல்ல வந்த பூதனையை மடித்து திருப்பாற்கடலில் துயிலில் அமர்ந்தவனை உள்ளத்தில் கொண்டு எழுந்து 'அரி,அரி' என்று முனிவர்களும்,யோகிகளும் அழைக்கும் அரவம் நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது.

திருப்பாவை பாடல் - 7

"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப்பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அதிகாலையில் ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் கீசுகீசு என்று தமக்குள்ளே பேசும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ பெண்ணே? கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கலகலவென்று ஒலியெழுப்ப, நறுமணமுள்ள கூந்தலை உடைய இடையக்குல(ஆய்ச்சியர்) பெண்கள் மத்தினால் தயிர்கடையும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ? நாராயணனான கேசவனின் புகழ் பாடுவதை கேட்டும் நீ இன்னும் உறங்குகிறாயோ பெண்ணே? நீயே எழுந்து வந்து கதவை திறவாய்!திருப்பாவை பாடல் - 8

"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:


காலை புலர்ந்து விட்டது,கீழ்வானம் வெளுத்து விட்டது. புல் மேய்வதற்காக எருமைகள் செல்வதை காண்பாயாக! உன்னை தவிர பாவை நோன்பை மேற்கொள்ள போகின்றவர்களையும் போகாமல் தடுத்து உன்னை அழைக்க உன் வாசலிலே நிற்கின்றோம்! பெண்ணே எழுந்திராய்! குதிரை வடிவில் வந்த ஒரு அசுரனை இரண்டாய் பிளந்தவனை, மல்லர்களை கொன்றவனை அந்த தேவாதி தேவனின் புகழ் பாடி நாம் அவனை சேவித்தால் அவன் நம் மீது 'ஐயோ' என்றிரங்கி நம் குறைகளை கேட்டு அருள் செய்வான்.

திருப்பாவை பாடல் - 9


"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:


அழகான குறையற்ற மாணிக்கங்கள் அலங்கரிக்கும் மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, நறுமணத்துடன் எங்கும் தூபம் கமழ அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.திருப்பாவை பாடல் - 10

"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். "

பொருள்:

பாவை நோன்பிருந்து சுவர்க்கம் அடைய உன்னை எழுப்பினால் வாசல் கதவை திறக்காதவளே நீ பேசவும் மாட்டாயோ? மணங்கமழும்(நாற்றம்) துளசி(துழாய்) மாலையை அணிந்திருக்கும் நாராயணின் புகழை நாம் போற்றினால் அவன் நமக்கு வேண்டியன தருவான். அன்றொரு(பண்டொரு) நாள் எமனின்(கூற்றத்தின்) வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் ,உன்னிடம் உறங்கும் போட்டியில் தோற்று பெரும் உறக்கத்தை உனக்கு தந்தானோ? என்று சொல்லும் படி உறங்குபவளே, எங்களுக்கு அணியாய் இருப்பவளே தடுமாறாமல் தெளிவாய் வந்து கதவை திறப்பாயாக.திருப்பாவை பாடல் - 11

"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:


கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து, பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள் ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில் திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டு முற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்ட கண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும் அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?

Saturday, December 16, 2006

மாதங்களில் நான் மார்கழி(பாடல் 1- 5)மார்கழி மாதம் என்றதும் நினைவுக்கு வருவது வண்ணக்கோலங்கள், அதில் புள்ளி வைத்து தன் பங்குக்கு அழகு சேர்க்கும் அதிகாலை பனித்துளிகள், வீதி வழியே உலா வரும் மார்கழி பஜனை கூட்டங்கள், இனிமையினும் இனிமையாக ஆண்டாளின் அழகிய கவிதைகளான திருப்பாவை பாடல்கள், மாலையில் இன்னிசை கச்சேரிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கீதையில் கண்ணனே 'நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறான். மார்கழியில் மட்டும் என்ன அப்படி விசேஷம்?

பக்தி மார்க்கமாக பார்த்தால் எனக்கு தெரிந்த ஒரு விளக்கம். மனிதர்களான நம்முடைய ஒரு வருடம் என்னும் கால இடைவெளி தேவர்களுக்கு ஒரு நாள் எனவும் அதில் மார்கழி மாதம் அதிகாலை பொழுதை குறிக்கும் எனவும் பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த மார்கழி மாதத்தில தான் பாவை நோன்பிருந்து ஆண்டாள் அரங்கனை அடைந்தாள்.


கலை மார்க்கமாக பார்த்தால் மார்கழியில் விடியற்காலையில் எல்லார் வீட்டிலும் பூக்கும் அழகிய வண்ணப்பூக்களான கோலங்கள். இப்பொழுதெல்லாம் இரவிலேயே கோலங்களை போட்டு விடுகின்றனர். ஆனால் விடியற்காலையில் கோலம் போடுவது அதுவும் மார்கழி மாதத்தில் அந்த நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்று மாசற்றதாக இருக்கும் எனவே தான் விடியற்காலையில் கோலம் போடும் பழக்கம் வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டிலும் இரவில் தான் கோலம் போடுவது வழக்கம். சிறு வயதில் பெரிய தெருவில் இருக்கும் போது வீட்டு வாசலில் எல்லைக்கோடுகள் எல்லாம் வரைந்து பக்கத்து வீட்டு தோழி அதை தாண்டி கோலம் போடக்கூடாது என்றெல்லாம் சின்ன சின்ன சண்டைகள் போட்டிருக்கிறேன். மார்கழி மாதத்தில் பள்ளிக்கூடத்திலும் சரி கல்லூரி படிக்கும் காலத்திலும் சரி புத்தகங்களில், காகிதங்களில் எல்லாம் கோலம் போட்டுக்கொண்டே இருப்போம். அதிலும் வண்ணக்கோலங்கள் போடுவதென்றால் போதும் வண்ணங்களை கலந்து அது சரிவிகிதமாக இருக்கிறதா என்று ஆராய்ச்சியெல்லாம் பண்ணுவேன். கோலம் போடுவது ஒரு வித தியானம் தான். புள்ளியை நேராக வைத்து அழகிய கோடுகளை இழுத்து வளைந்து நெளிந்து இறுதியில் அழகிய ஓவியமாக வளரும் கோலங்கள் நம் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகின்றன.

மார்கழி மாதத்தில் களைகட்டுவது இசை கச்சேரிகளும் தான். சபாக்களுக்கு போய் அமர்ந்து கச்சேரிகளை கேட்பது போய் இப்பொழுதெல்லாம் நம் வீட்டின் வரவேற்பரையில் தொலைக்காட்சியின் மூலம் மிகவும் அமைதியாக அமர்ந்து ரசிக்க முடிகிறது.

இன்றிலிருந்து மார்கழி ஆரம்பம் என்பதால் வீட்டில் தினமும் திருப்பாவை படிப்போம். என் வலைப்பக்கத்திலும் தினம் ஒரு பாடல் என எழுத நினைத்திருக்கிறேன். அதற்கு முன் ஆண்டாளை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்' என்ற புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருப்பதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.


"ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஆண்டாள் நிஜமானவர் என்பதை அவருடைய பெண்மை மிளிரும் பாசுரங்களே
அறிவிக்கின்றன. இவர் தமிழில் மிகவும் புலமை பெற்றவர். திருப்பாவையின் யாப்பு மிகவும் கடினமானது. இன்று திருப்பாவையின் யாப்பமைதியில் பாடல் ஒன்றை நம் சிறந்த கவிஞர்கள் எழுதினால் கூட அத்தனை எளிமையாக,அழகாக அமைப்பது கடினம். ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் 'சங்கத்தமிழ் மாலை' என்று போற்றப்படுகின்றன். திருப்பாவை என்பது பின் வைத்த பெயராக இருக்கலாம். பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தைத் தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான் அகநானூறு, நற்றினை,பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலும் குறிப்பிடப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகக் கொண்டு வட பெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும், அதில் உள்ள தெய்வத்தைக் கிருஷ்ணனாகவும் பாவித்து செய்த பாவை நோன்பை விளக்குகிறது திருப்பாவை."

திருப்பாவை பாடல் - 1

"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்."
பொருள்:
மார்கழி மாதமும் முழு நிலா நாளுமான இன்று செல்வப் பெருக்கையுடைய ஆய்ப்பாடியில் செல்வம் நிறைந்த இளம்பருவ பெண்களே நீராட வருவீர். கூர்மையான வேலும், கண்ணனுக்கு தீங்கு நினைப்பவருக்கு கொடியவனுமான நந்தகோபனுடைய குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளம் சிங்கம், மேகம் போல உடல், செந்தாமரையை ஒத்த கண்கள், கதிரவன் போன்ற ஒளியையும் சந்திரனை போன்ற முகம் கொண்டவனான நாராயணன் நாம் விரும்பியதைக் கொடுப்பான்(பறை தருவான்). எனவே உலகோர் புகழ இந்நோன்பில் ஈடுபடுவோம்.திருப்பாவை பாடல் - 2

"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
இந்த வையத்தில்(உலகத்தில்) வாழ்பவர்களே,நாம் பாவை நோன்புக்கு செய்யும் செயல்களை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல துயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை பாடுவோம். விடியற்காலை(நாட்காலே) நீராடுவோம். நெய்,பால் போன்றவற்றை உண்ணாமல் இருப்போம். கண்களுக்கு மையிடாமல், மலர்கள் சூடாமல் இருப்போம். செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்போம். பிறரை கோள்(தீக்குறள்) சொல்லாமல் இருப்போம். தகுதியுள்ளவர்களுக்கு பொருளும்,பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு(ஆந்தனையும்) கொடுப்போம்.

திருப்பாவை பாடல் - 3

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய நெய்தல் மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி இடையர்கள் குடம் குடமாக பால் கறக்கும் பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க வேண்டும்.

திருப்பாவை பாடல் - 4

"ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்"


பொருள்:

மழைக்கு அதிபதியான வருணனே, நீ சிறிதும் ஒளிக்காமல்(கைகரவேல்) நடுக்கடலில்(ஆழியுள்)புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு(முகந்து) ,மேலே ஆகாயத்தில் ஏறி எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான இறைவனின் உருவம் போல் கறுத்து, அழகிய தோள்களையுடைய பத்மநாபன் கையில் மின்னும் சக்கரம்(ஆழி) போல் மின்னலடித்து, சங்கு(வலம்புரி) போல் ஒலித்து, சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல், உலகினர் மகிழ நாங்களும் மார்கழி நீராடி மகிழ மழை பொழிவாயாக.

திருப்பாவை பாடல் - 5

"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மாயங்கள் புரிபவனை வட திசையில் உள்ள துவாரகையின் அரசனானவனை, தூய்மையான நீர் விளங்கும் யமுனை நதிக்கரையில் இருப்பவனை, இடையர் குலத்தினில் தோன்றிய மணி விளக்கினை, யசோதையின் வயிற்றில் தோன்றி அவள் வயிற்றை பிரகாசிக்க செய்த தாமோதரனை, நாம் தூய்மையோடு மலர் தூவி தொழுது, அவன் பெயரினை பாடி, மனதினால் அவனையே சிந்தித்தால் இது வரை செய்த பிழைகளும் இனி வரப் போகும் பாவங்களும் தீயிலிட்ட தூசியாய் அழிந்துவிடும்

பி.கு.: அடுத்த பதிவு எழுதும் வரை தினமும் ஒரு திருப்பாவை பாடலை இந்த பதிவிலேயே சேர்க்கின்றேன்.

Tuesday, December 12, 2006

இது ட்ரெயிலர் இல்ல நிஜம்! அடிச்சாச்சு சதம்!

இது போன வாரம் ஓட்டின ட்ரெய்லர்:

சென்ற வாரம் களப்பணிக்கு சென்ற இடத்தில் சிறிது ஓவர்டோஸ் ஆகி(வேலையை தாங்க சொல்றேன்) தற்போது ஃபுல் அடிச்சு மப்புல ஆடற குடிமகன் ரேஞ்சுக்கு ஆகிட்டேன். வங்கக்கடலில் குடிக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா இல்லை அப்டியே ஓடிப்போயிடுமா என்பது போல் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என் உடல்நிலை சரியாகுமா இல்லை தொடர்ந்து நீடிக்குமா என்ற தெரியாததால், இன்னும் இரண்டோர் நாட்களுக்கு வலைப்பக்கங்களில் மேயமுடியுமா? என்ற சந்தேகமாக இருப்பதால் இப்போதைக்கு இது ஒரு ட்ரெய்லர் பதிவு, மீண்டும் வந்து இப்பதிவை நிறைவு செய்கிறேன். ரொம்ப கண்பட்டு விட்டதால் தான் இப்படி இருக்கிறது என்று என் அம்மா பீல் பண்ணுவதால் ட்ரெய்னிங்(!) சென்றுள்ள அண்ணன் நாட்டாமை வந்து சுத்தி போட்ட பின் மீண்டும் வருவேன்:)

இனி மெயின் சினிமா:

எல்லாம் 100வது பதிவு போடறதுக்கு ஒரு பில்டப் தான்:) ஆனா உண்மையிலேயே உடம்பு சரியில்லையாதலால் கொஞ்சம் தாமதமாயிடுச்சு:)

எப்படியோ தட்டு தடுமாறி 100வது பதிவை போட்டாச்சு. அடிதடி,டூயட்,தத்துவம் எல்லாம் கலந்த ஒரு சுமாரான மசாலா படத்தை 100 நாட்கள் ஓட்டின மாதிரி இந்த வலைப்பக்கத்துல சதம் போட்டாச்சு. சில சமயம் கடமைக்காக எழுதற மாதிரி இருந்தாலும் ஒரு விதத்துல இந்த ஒன்றரை வருடத்துல எனக்குள் பல மாற்றங்கள்,சிந்தனைகள் ஏற்பட்டதற்கு காரணம் இந்த வலைப்பூக்கள் தான், பல புதிய நட்புகளின் அறிமுகங்கள் உட்பட.ஆனா பாருங்க 100வது பதிவு போடறதுக்கு ஏகப்பட்ட தடங்கல், எல்லாம் எதிர்கட்சியின் சதி தான் வேறென்ன சொல்ல:)

தலைவர் கடலை கார்த்தியின் சொற்படி களப்பணிக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கணினியின் முன் உட்காரவே முடியாத நிலை, சரி இன்றாவது ட்ரெய்லரை எடுத்துட்டு முழு சினிமா ஓட்டலாம்னு பார்த்தா காலையிலிருந்து இணையத்தொடர்பில் பிரச்னை, சே நாட்டுல ஒருத்தரை முன்னேறவிட மாட்டேங்கறாங்க:)அப்பாடி இப்ப தான் இணையத் தொடர்பு கிடைச்சது, இப்ப மேட்டருக்கு வருவோம்.

இந்த டிசம்பர் மாதத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் அப்படி ஒரு ராசிங்க முக்கியமா என் பாட்டி விஷயத்துல, ஒவ்வொரு டிசம்பர் மாசமும் ஏதாவது நடந்துடும். இப்படி தான் ரெண்டு வருஷம் முன்னாடி திடீர்னு 'என்னால நடக்கவே முடியலை' அப்படின்னு சொல்லி ஒரு மாசம் முழுக்க படுக்கையிலேயே இருந்தாங்க. சாப்பாடு முதற்கொண்டு எல்லாம் படுக்கையில தான்.வீட்டுல ஒருத்தருக்கு உடம்புக்கு முடியலேன்னா அவ்வளவு தான் மத்தவங்களும் அப்டியே நோயில அடிப்பட்டவங்க மாதிரி ஆகிடும், அது தான் நாங்க கொஞ்சம் ஆடிப்போயிட்டோம்:)

அப்புறம் டிசம்பர் முடிஞ்சவுடன் எழுந்து நடமாட ஆரம்பிச்சிட்டாங்க. போன டிசம்பரில் கீழ விழுந்து இடுப்புல எலும்பு முறிவாகி அறுவை சிகிச்சை செய்து(அப்ப அவங்களுக்கு 85 வயசு) வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்தவமனையில் தான் கழிந்தது, விளைவு எங்க பாட்டியை தவிர எங்க எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போச்சு.

அதே டிசம்பர் மாதம் இந்த வருடமும் விதி விளையாட ஆரம்பிச்சுது, இந்த முறை மாரடைப்பு. போன வாரம் திங்கட்கிழமை இரவு 7 மணி அளவில் மூச்சு விட முடியாமல் இழுக்க ஆரம்பித்து விட்டது, எங்க குடும்ப மருத்தவருக்கு தொலைபேசியில் தெரிவித்த போது அது மாரடைப்பாக தான் இருக்கும்,உடனே மருத்தவமனைக்கு எடுத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார். சரி என்று காருக்கு ஏற்பாடு செய்த பிறகு தான் உறைத்தது நிலைமையின் தீவிரம்.

என் பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ததால் வாக்கர்(walker) இல்லாமல் நடக்க முடியாது, நாங்கள் இருப்பது முதல் மாடியில். என் தம்பி வேலையிலிருந்து வரவில்லை, என் அப்பா, சித்தப்பா ரெண்டு பேருமே என் பாட்டியை தாங்கிச் செல்லும் அளவு உடல் நலம் படைத்தவர்கள் அல்ல. உண்மையிலேயே அடுக்குமாடியில் குடியிருப்பதால் உள்ள லாப,நட்டங்கள் எல்லாம் அப்பொழுது தான் புரிந்தது. என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் அத்தனை பேரும் வந்து விட்டார்கள். தெருமுனையில் சென்று காரை சரியாக அழைத்து வர ஒருவர் சென்று விட்டார், கார் வந்தவுடன் என்ன நடக்கிறது என்ற்றறியும் முன் பாட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே காரில் கிடத்தினர் சிலர், எங்கிருந்தோ ப்ளாஸ்க்கும்,வெந்நீரும் வந்தன. விரைந்தோம் மருத்தமனைக்கு, கூடவே குடியிருப்பில் இருப்போர் சிலரும் வந்தனர்.

ஏனடா இப்படி ஒரு குடியிருப்பில் வந்து மாட்டிக்கொண்டோம் எல்லா விஷய்த்திலும் மூக்கை மட்டுமா தலையே நுழைக்கிறார்கள் என்று நான் நினைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவம், என் எண்ணத்தை மாற்றியது. எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நாம் மற்றவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ அதை தான் மற்றவரும் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்றனர் இல்லையா? ஒரு வேளை நாங்கள் தனித்து வசித்திருந்தால் இவ்வளவு வேகமாக உதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். நம்மள சுத்தி நாலு பேர் இருந்தா கூப்பிட்ட குரலுக்கு உதவி கிடைக்கும்னு சும்மாவா சொன்னாங்க. அதை அன்னிக்கு தான் பூரணமா அனுபவிச்சோம். இதை தான் நம்ம முண்டாசு கவிஞர் சொன்னார், 'அன்பென்று கொட்டு முரசே' என்று:)

பி.கு: இது நூறாவது பதிவு என்பதால் எல்லாரும் ஸ்பெஷலா கவனிப்பீங்கன்னு தெரியும்(அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா துப்பிட்டு போவீங்க) ஆனாலும் இன்னொரு விஷயமும் சொல்றேன், என் இன்னொரு வலைப்பக்கத்துல இப்பதான் 25வது பதிவு(அதாவது 25வது கவிதை) எழுதியிருக்கேன், அதையும் படிச்சு கொஞ்சம் உங்க கருத்துக்களை அங்கன சொல்லுங்க,ஹிஹி:)

Friday, December 01, 2006

கொடுமை கொடுமையோ...


"என்ன இது மசமசன்னு?சீக்கிரம் வாங்க செல்வியில ராதிகா இன்னிக்கு தாலியை கழட்டிக் கொடுக்கறாங்களான்னு பார்க்கணும் இல்ல"


ரெண்டு நாளா சீரியல பார்க்குற கொடுமையில மாட்டிக்கிட்டேன். எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி ஒருத்தங்க காலைல நாலு,மாலைல நாலு சீரியல்னு டைம்டேபிள் போட்டு சீரியல் பார்க்கறவங்க,அவங்களுக்கு கம்பெனி கொடுக்க நாமளும் பார்க்க வேண்டியதா போயிடுச்சு. பாருங்க எதுக்கெல்லாம் கம்பெனி கொடுக்க வேண்டியதா இருக்கு:(

ஆனா நான் கோலங்கள்,செல்வி மட்டும் தான் பார்த்தேன்,அதுக்கே மண்டை காஞ்சுப்போச்சு. இதுல கோலங்கள் சீரியல் நானும் ஆரம்பத்துல பார்த்துக்கிட்டுருந்தேன். ஆனா அபி,பாஸ்கர்(அவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியலேன்னா தமிழ்நாட்டுல இருக்கற்து வேஸ்ட்) பிரிஞ்சுப் போய் அப்புறம் பாஸ்கருக்கு வேற கல்யாணம் நடக்குதுன்னு காமிச்ச வரைக்கும் பார்த்தேன்,அந்த டைரக்டர் அதுக்கப்பறம் அபிக்கு நிறைய இடங்கள் அமைந்தும் அந்தம்மா கல்யாணம் பண்ணிக்காம அப்டியே தியாகச்சுடர் ரேஞ்சுக்கு போனவுடன் சீரியல் பாக்கறத நிறுத்திட்டேன். எல்லா சீரியலிலும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதை தான். இதுல கோலங்கள் நேத்து மகா கேவலமா இருந்தது, கல்யாணம் நிச்சயிக்கப்பட்டவுடன் மாப்பிள்ளை ரொம்ப கர்மசிரத்தையா நண்பர்களோட உட்கார்ந்து தண்ணியடிக்கறாரு. எனக்கு வந்த கோபத்துல நாலு அறை அறையணும் போல இருந்தது ஆனா என்ன பண்றது டிவிக்குள்ள போக முடியல:)
நாட்டாமை நீங்க தீர்ப்பு சொன்ன மாதிரி அடுத்த பதிவை போட்டாச்சு:) இன்னும் ரெண்டு நாளைக்கு ஊருல இருக்க மாட்டேன்,அதுனால கார்த்திகை தீப வாழ்த்துக்களை இப்பவே சொல்லிடறேன். கார்த்திகை தீபம் ஸ்பெஷலா இந்த பதிவுக்கு பொறிஉருண்டை தான் முதல் கமெண்டுக்கு:)

Friday, November 24, 2006

ஏன்?..

எங்கள் வீட்டில் வேலை செய்பவரின் கணவர் சிறிது நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். நாலு வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து உடல் நொந்து அவர் மனைவி கொண்டு வரும் பணத்தை அடித்துப் பிடுங்கிக் கொண்டு போகும் அக்மார்க் குடிமகன். வயதானவரும் கூட. ரொம்ப வருடம் தொடர்ந்து குடித்து வந்ததால் குடல் வெந்து சில மாதங்கள் முன் மருத்துவமனையில் படுத்துக் கிடந்தார். அவர் நிலையைப் பற்றி எங்களிடம் முறையிட்ட வேலைக்கார அம்மாளிடம் கொஞ்சம் பணமும் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற எங்களுக்கு தெரிந்த மருத்தவரிடம் அனுப்பி வைத்தோம்.

மருத்தவரோ நம்ம குடிமகன் சிகிச்சைக்கு பின் குடிக்காமல் இருப்பாரென உறுதியுடன் கூறினால் தான் சிகிச்சை தர சிபாரிசு பண்ண முடியும் என்று கூறி விட்டார். இதனால் தன் காது தோடுகளை அடமானம் வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் வேலைக்காரம்மாள். அவர் கணவர் சிறிது நாட்களே அங்கு இருந்து விட்டு தன்னால் இனி குடிக்காமல் இருக்க முடியாது என வீட்டிற்கு வந்து விட்டார். சிகிச்சைக்கு மறுத்து விட்டதனால் வீட்டில் உடல் நலமின்றி மிகவும் கஷ்டப்பட்டார். அவரை கவனிக்கவும் முடியாமல், வேலைக்கும் விடுப்பு எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட ஆயா எங்களிடம் புலம்பித் தள்ளினார். 'இவரு இப்படி கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தற்துக்கு ஒரேடியா போய் சேர்ந்து விடலாம்' என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

20 நாட்களுக்கு முன் ஒரு நாள் கணவருக்கு உடம்பு ரொம்ப மோசமென்று 2 நாட்கள் வேலைக்கு வரவில்லை, திடீரென்று ஒரு நாள் மாலை வந்து இன்னும் எவ்ளோ நாளைக்கு அது தாங்கும்னு தெரியலை, எனக்கும் வீட்டுல இருக்க பிடிக்கலை, நாளையிலிருந்து வேலைக்கு வரேன் என்று சொல்லிவிட்டு போனார். அப்போ நாங்க கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினோம். அவங்க பணத்தை வாங்கும்போதே கை தவறியது, அய்யோ கை தவறிடுச்சும்மா என்று சொல்லிட்டு அதை வாங்கிக்கிட்டு போனாங்க. அன்னிக்கு இரவு அவங்க கணவர் இறந்துட்டாரு, நாங்க கொடுத்த பணமெல்லாம் அந்த கடைசி செலவுக்கு தான் உபயோகம் ஆச்சு.

ஒரு விதத்தில் உபயோகமில்லாத கணவர் இறந்தது நிம்மதியாயிருந்தாலும் அடுத்தடுத்து இந்த பெண்களுக்கு தான் எத்தனை ப்ரசனை. என்ன தான் சமுதாயம் மாறினாலும், மக்கள் படித்திருந்தாலும் பல தேவையில்லாத நம்பிக்கைகள் நம்மை இருள் போல் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கூட மனசாட்சியேயில்லாமல் மனைவி கொண்டு வரும் பணத்தை பிடுங்கிக் குடித்து சீரழித்த அருமை கணவருக்காக இந்த மனைவி இழந்தது நிறைய, அதான் நம்ம சமூகத்துல எவ்ளோ மாறினாலும் இன்னும் பரவலா காணப்படுகிற விதவை என்கிற பட்டம். நேற்று எங்க வீட்டுக்கு 16 நாள் காரியம் முடிந்து விட்டதால் தான் இனி வேலைக்கு வரலாமா என்று கேட்க வந்திருந்தார் வேலைக்காரம்மாள். வீட்டு வேலை செய்பவர் என்றாலும் அதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி அழகா சுத்தமாக உடையணிந்து பூவும் பொட்டுமாக வலம் வந்தவர் இப்போ வெற்று நெற்றியுடன்.

இதை விட கொடுமை கூட நடந்தது. சமீபத்தில் கணவரை இழந்தவர் என்பதால் அவர் கண்ணில் படக்கூடாது,எனவே 2,3 மாதங்களுக்கு அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் சில வீட்டினர், எங்கள் குடியிருப்பிலும் அவர் 2,3 வீட்டில் வேலை செய்கிறார். எனவே குடியிருப்பில் அவர் நுழைவதற்கே(அதாவது 1 மாதத்திற்குள்) அனுமதி கேட்க வேண்டாமா என்று சிலர் கேட்டனர். இதெல்லாம் கேட்ட நான் அதிர்ச்சி அடைந்தேன். நம் வீட்டினுள் யார் நுழையலாம் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும் மற்றவர்கள் அல்ல, தேவையில்லாத நம்பிக்கைகளை தக்க வைப்பதற்காக ஒருவரின் வயிற்றில் அடிக்கும் பாவத்தை நாம் சுமக்க வேண்டாம் என்று என் அம்மாவிடம் கூறினேன், என் அம்மாவும் அதை தான் சொன்னார்.

ஒரு வழியாக அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து வரச்சொல்லி அனுப்பினோம். என் மனதில் அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான், ஏன் கணவரை இழந்த பெண் எல்லாவற்றையும் இழக்க வேண்டும்? உ.தா: பூ,பொட்டு,சுமங்கலி என்ற பெயர், நற்காரியங்களில் முன்னே வருவது, தாம்பூலம் மறுக்கப்படுவது, ஒரு வருடத்திற்கு மற்றவர் வீட்டு விசேஷங்களுக்கு போகாமல் இருப்பது(இது இப்போதும் நடக்கிறது), ஒட்டுமொத்தத்தில் தன் தனித்துவத்தை இழந்து இன்னாரின் விதவை என்றறியப்படுவது. தற்போது காலம் மாறி வருகிறது என்றெல்லாம் சொன்னாலும் பல இடங்களில் இப்படிப்பட்ட எண்ண்ங்கள் வேரூன்றி இருக்கின்றன,முக்கியமாக படித்தவர்கள் மத்தியில்.


தான் உண்டு தன் வேலை உண்டு என்று எந்த பிரச்னையும் தராமல் எங்களிடம் நற்பெயர் வாங்கிய வேலைக்காரம்மாளுக்கு திடிரென்று இவ்வளவு சோதனைகள்(வேலைக்கு போவது உட்பட) கணவர் இறந்து விட்டாரென்ற ஒரே காரணத்துக்காக, இதுவே மனைவி இழந்த கணவர்களுக்கு சுமூகத்தில் இவ்வளவு பிரச்னைகள் வருமா?

Friday, November 17, 2006

வலைக்கொரு மரம் வளர்ப்போம்...

இப்ப தான் ஒரு கதை எழுதி முடிச்சேன், அதுக்கே மூளையெல்லாம் கசக்கி பிழிஞ்சி(உடனே அது எப்படின்னு கேட்கக் கூடாது அது அப்படித் தான்) ஒரு வழியாயிடுச்சு. சரி இனிமே நம்ம மக்களை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா விதி யாரை விட்டது?உங்க ஹெட்லெட்டர் அப்படி, நான் எழுதற்தை படிச்சே ஆகணும் :) இது தான் சாக்குன்னு என் தலையில் இந்த டேகை கட்டிய பெருமை வாய்ந்தவள் கொடுமையின் உறைவிடமான நம்ம உஷா.

இது தான் ரூல்ஸாம்(ஹிஹி நாம என்னிக்கு இதெல்லாம் பாலோ பண்றோம்)


1. A blogger can add only 90-100 words (not more or less) at a time
2. All previous snippets of 90-100 words need to be copied before the new set of 90-100 words are appended.
3. Each entire snippet should be linked to the respective author
4. Characters, scenes, etc. can be introduced by an author
5. Bizarre twists, sci-fi, fantasy sequences are best avoided.
6. After appending 90-100, the Story Tree can be passed on to at most 5 bloggers.
7. If more than 1 branch leads to a blogger, s/he is free to choose any one of them but cannot mix the snippets of the individual branches.
8. The Story Tree is best left to grow than concluded
9. Please attach the image of the Story Tree above with each accepted tag (the link address can be copied and used).
10. Please comment back your story’s link to post from where you were initially tagged so that people can follow.

சரி இப்ப மரம் வளர்ப்போம்
The Unusual Endings
“It was rather strange”, he muttered to himself as he pondered on what had been happening for the past three days, while walking out of the arrogant Italian, Vencelli Darpkink’s 19th century office, which was home not only to its proprietor but also to pugent odours and queer looking sapiens from time to time.Meera Dias, was the name. They had first met when things were quite off note. “Lagos wasn’t a place for summer spots”, he had warned her. What he heard now was troubling him even more. Congo was not something he had suggested either.

"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...
(இனி என்ன ஆகுதுன்னு நான் சொல்றேன்)
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...
சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப இந்த கதையை தொடர்ந்து எழுத நான் அழைக்கும் நண்பர்கள், நம் நட்பு வட்ட எழுத்தாளர்கள்,
அமைச்சர் ப்ரியா,
தலைவர் கார்த்தி,
நண்பர்கள் அருண், பரணி
சரி மரம் எங்கன்னு தேடறீங்களா?
நானும் அதை தான் ரெண்டு நாளா தேடறேன், இது வரைக்கும் 20 தடவையாவது அதை வலையேற்றம் பண்ண முயற்சித்தேன் ப்ளாகர் என்னை கன்னாப்பின்னா திட்டி நீ ஆணியே புடுங்க வேண்டாம், எல்லாரும் மரத்தை கற்பனை பண்ணிப்பாங்க ஓடிப் போன்னு சொல்லிடுச்சு:) அதனால் அவங்கவங்க இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு மரத்தை கற்பனை பண்ணிக்கோங்க:)
உஷா இப்ப திருப்தியா?:)

Tuesday, November 14, 2006

தயவு செய்து பள்ளிக்கு அனுப்புங்கள்..

அம்மாவிற்கு துணையாய்
வீடு பெருக்கி
குப்பைகளுடன் ஆசைகளையும்
அள்ளிக் கொட்டி,
தேய்த்த பாத்திரங்களை
கவிழ்த்து வைக்கிறாள்,
தலைக்கீழாய் போன விதியறியாமல்.
எட்டாக்கனியாய் ஏடுகள் இருக்க,
ஏற்றி விட ஒரு
ஏணிக்காய் அலைகிறாள்.
பாடப் புத்தகங்களை சுமக்கும்
நாளறியாமல்
நித்தமும் சுமக்கிறாள் தன் வீட்டின் சுமையை.
சீருடைக்காய் ஏங்கும் அவளிடம்
சாக்லேட்டை நீட்டினாள் எசமானி மகள்,
இனிய குழந்தைகள் தினம் என்று.

என்னுடைய சிறு வயது குழந்தைகள் தின நினைவுகள் எல்லாம் மிக அருமையாக, பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள்,உரைகள் என பசுமையாக இருக்கிறது. ஆனால் பல குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தையே அனுபவிக்காமல் இருக்கிறார்கள் எனவறியும் போது மனம் கனக்கிறது. குழந்தைகளை தொழிலில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம், முற்றிலும் அதை ஒழிப்போம். பின் கொண்டாடுவோம் ஒரு அழகான குழந்தைகள் தினத்தை.

(இது ஒரு மீள் கவிதை போன வருடம் எழுதியது)
நான் என் கண்களில் கனவுகளையோ,
என் நெஞ்சில் ஆசைகளையோ,
சுமக்க விரும்பவில்லை,
என் முதுகில் புத்தகங்களை
சுமக்க விரும்புகிறேன்.
என்னை,
யாராவது தயவு செய்து
பள்ளிக்கு அனுப்புங்கள்.

Friday, November 10, 2006

அதாவது என்ன சொல்ல வரேன்னா...

இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் அண்ணியும் அவங்க நான்கு மாத கைக்குழந்தையுடன் மருத்தவமனை சென்றிருந்தோம். வீட்டை விட்டு மெயின் ரோட்டுக்கு வந்தால் என்றும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல், சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. நான் பள்ளியில் படிக்கும் போது பத்தாவது வந்தவுடன் தான் எனக்கு சொந்தமாக ஒரு சைக்கிளே வாங்கிக்கொடுத்தார்கள். இப்ப என்னடான்னா எங்கம்மா பாஷையில சொல்லனும்னா நண்டு சுண்டுங்கெல்லாம் கூட டிவிஸ்50 ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் இப்ப நடக்கற பழக்கமும் குறைந்துக் கொண்டே வருது, ஒரு வண்டி இருந்தாலே போதும் சும்மா பக்கத்து தெருவுக்கு போக கூட நடக்க தோணாது அந்த அளவுக்கு மோசமா போச்சு. குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டருக்குள்ள இருக்குற இடங்களுக்காவது நடந்துப்போகலாம் பெட்ரோலும் மிச்சம், நமக்கும் நல்ல பயிற்சி தான் இல்லையா?

அந்த நெரிசல்ல தப்பிச்சு ஒரு ஆட்டோ படிச்சு மருத்தவமனைக்கு போயிட்டோம். எங்க வீட்டிலிருந்து வண்டியில் போனால் சுமார் 10 நிமிடங்களில் போய்விடலாம் மருத்தவமனைக்கு, ஆனா நாங்க போய் சேர கிட்டத்தட்ட அரை மணி ஆச்சு. இந்த ஆட்டோ பிடிக்க ஒரு பெரிய சாமர்த்தியமே வேணுங்க. எனக்கு நிச்சயம் அந்த சாமர்த்தியம் கிடையாது, ஆட்டோ வாடகைக்கு பதிலா ஆட்டோ விலையையே சில பேர் சொல்லுவாங்க. இப்படித் தான் திரும்பி வரும் போது அதிசயமா எந்த சண்டையும் போடாம இது உண்மையாவே இவர் ஆட்டோ தானா அப்படின்னு அதிசயக்கிற வகையில நாங்க சொன்ன நியாயமான வாடகைக்கு ஒத்துக்கிட்டாரு.

சரி நம்ம நேரம் நல்லாயிருக்குன்னு நாங்களும் ஏறி உட்கார்ந்தோம், கொஞ்ச நேரம் தான் அதுக்குள்ள நம்ம ஆட்டோ டிரைவர் அவங்களுக்கே உரிய அந்த சர்க்கஸ் சாகசத்தை காட்ட ஆரம்பிச்சுட்டாரு. எங்களுக்கு முன்னாடி சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து வலதுப்பக்கம் இருந்த சாலைக்குள் திரும்பியது, நாங்களும் அப்படித்தான் போகணும், அந்த பேருந்து திரும்பறதுக்குள்ள நம்ம ஆட்டோகாரருக்கு அவசரம் அதை தாண்டிப் போக முயற்சித்தார். சென்னைல ஓடற ஆட்டோக்களை பத்தி ஒரு படத்துல விவேக் 'நாங்கெல்லாம் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுவோம், லெப்டுல கைய காமிச்சு,ரைட்டுல இண்டிகேட்டரை போட்டுட்டு ஸ்ட்ரைடா ஆட்டோவை வுடுவோம்' அப்படின்னு சொல்வாரு. அதை அன்னிக்கு எங்க ஆட்டோகாரர் எங்களுக்கு செயல்முறை விளக்கம் செஞ்சு காண்பிச்சார். அப்புறம் நான் திட்டினவுடனே வேகத்தை குறைச்சார். வேகமா போய் நாம் என்னத்த சாதிக்க போறோம்? இதை பத்தி தான் நண்பர் பாலாஜி அவர்களும் அவருடைய வலைப்பக்கதுல எழுதியிருக்கார்.

அவர் அங்கே சொல்லாத ஒரு விஷயம் சுடிதார் அணிந்து வண்டி ஓட்டும் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள். நாங்க அன்னிக்கு ஆட்டோல போகும் போது ஒரு இடத்துல போக்குவரத்து நெரிசல் காரணமா சிறிது நேரம் ஆட்டோ நின்றுக் கொண்டிருந்து. அப்போ திடீர்னு அடிச்ச காத்துல எங்க பக்கத்துல நின்றுக் கொண்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் துப்பட்டா வண்டியின் சக்கரத்தில் போய் மாட்டிக் கொண்டது. இதை அவர்கள் கவனிக்கவே இல்லை, பின் நான் பார்த்து சொன்னவுடன் துப்பட்டாவை எடுத்து முன்னால் முடிந்துக் கொண்டார்.

வண்டி ஓட்டுபவர்களும் சரி,பின்னால் அமர்ந்து செல்பவர்களும் சரி பெண்கள் இதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. துப்பட்டா அணிந்து வண்டியில் செல்லும் போது துப்பட்டாவை கழுத்தில் மாலையாக முன்பக்கம் வருமாறு அணிந்து அதையும் முடிந்துக் கொள்ள வேண்டும். இரு பக்கமும் 'பின்' செய்துக் கொள்பவர்கள் கூட அதை பறக்க விடாமல் முன் பக்கத்தில் கொண்டு வந்து முடிந்துக் கொள்ள வேண்டும். அதுவும் தவிர இப்படி செல்வதால் அவர்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை துப்பட்டா காற்றில் பறக்கும் போது ஒரு வேளை அவர்களை தாண்டிச் செல்லும் வண்டியில் மாட்டிக்கொண்டாலோ இல்லை வண்டி ஓட்டுபவரின் முகத்தில் போய் மறைத்தாலோ அது விபத்தில் தான் முடியும். உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை சமூகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று பராசக்தி வசனம் கேட்குதே:) எல்லாம் ஒரு சமூக அக்கறை தான் , அதுவும் தவிர நானும் பாதிக்கப்பட்டவள் தான்.

ஒரு முறை சைக்கிளில் போகும் போது அப்படித்தான் இரண்டு பக்கமும் துப்பட்டாவை பறக்கவிட்டுக் கொண்டு சென்றேன். என் துப்பட்டாவின் ஒரு முனை சக்கரத்தில் போய் மாட்டிக் கொண்டு பின்பு அதை கிழித்து தான் எடுக்க முடிந்தது. ஏதோ அன்று 'பின்' செய்யாமல் போனதால் என் கழுத்து தப்பித்தது. அன்றிலிருந்து யாராவது இப்படி துப்பட்டாவை பறக்கவிட்டுக் கொண்டு போனால் அவர்களிடம் எடுத்து சொல்வேன். சில பேர் கேட்பார்கள், சில பேர் தலையாட்டி விட்டு மீண்டும் அப்படியே போவார்கள். சரி இப்ப என்ன தான் சொல்ல வரேன்னு கேக்கறீங்களா? ஏதோ வண்டி ஓட்றவங்க சாக்கிரதையா இருந்துக்கோங்கன்னு சொல்றேன் அம்புட்டுத்தேன் :)

Friday, November 03, 2006

எதை தொலைத்தாள் அதை தேடுவதற்கு - 2

தன் உடல் மீது ஆயிரம் பூரான்கள் ஊறுவது போல் உணர்ந்தாள் அவள் . 'இல்ல, இல்ல என்னை விட்டுடு, தூ நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' என்று கதறியவளை ராணி உலுக்கினாள்.

'ஏய் என்னடி ஆச்சு? ஏன் இப்படி கத்தற ?ஏதாவது கனவு கண்டியா? 'என்றாள் ராணி.

'ஆமா இப்படி தான் அன்னிக்கு ராத்திரியும் எனக்கு இருந்தது, மங்கலா யாரோ வருவது தெரிஞ்சது, என்னால ஒன்னுமே பண்ண முடியல அப்புறம் தான் தெரிஞ்சது எனக்கு ஏதோ கலந்து கொடுத்துட்டான்னு, அன்னிக்கு அனுபவிச்ச வேதனையை வேற யாரும் அனுபவிக்க கூடாதுடி' என்றாள் அழுகையுடன்.

' நீ இங்க வந்து ஒரு வாரமாச்சுடி, நானும் பாத்துட்டே இருக்கேன். இப்டியே அழுதுக்கிட்டு இருக்க. நீ கவலைப்படாத நாம் போலீச்ல புகார் கொடுத்தடலாம் நீ தான் அதுக்கு ஒத்துக்க மாட்டேங்குற. இந்த நேரம் பாத்து என் புருசன் ஊருல இல்லை' என்றாள் ராணி

'இல்லடி எனக்கு பயமா இருக்கு, அவன் என்னை பத்தி ஊருல தப்பா சொல்ல ஆரம்பிச்சுடுவான். எங்கம்மா நான் எப்படி ஆகக்கூடாதுன்னு நினைச்சாங்களோ அப்டியே ஆகிட்டேன் நான் கெட்டுப்போயிட்டேன். அவன் என்னை மிரட்டி பணிய வச்சுடுவான், எனக்கு பயமா இருக்கு எனக்கு பயமா இருக்கு ராத்திரியெல்லாம் தூங்க முடியலை யாராவது வந்துடுவாங்கன்னு பயமா இருக்கு, இந்த ஆம்பளைங்களே மோசம்டி நான் கெட்டுப்போயிட்டேன்' என்று உளற ஆரம்பித்தாள்.

அவள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் , தன் தாயை போலவே தானும் ஆகிவிடுவோமோ என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள் எனப் புரிந்துக் கொண்டாள் ராணி.

மெல்ல அவளை அணைத்து, 'அப்டியெல்லாம் இல்லைடி நீ கெட்டுப் போகல, அதையே நினைச்சுக்கிட்டு இருக்காத எல்லா ஆம்பளைகளும் கெட்டவங்க இல்லடி' என்று சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். ராணி சொல்வதை அவள் காதில் வாங்காமல் அதையே சொல்லி அரற்றிக் கொண்டிருந்தாள்.

இவளை என்ன சொல்லி தேற்றுவது என யோசித்த ராணி ஓடிப் போய் தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தை ரவியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

அவளிடம் சென்று, 'இவன் யாருன்னு தெரியும்ல?' என்றாள் ராணி.

'உன் பையன்' என்றாள் அவள்.


'ஆமாம் என் பையன் தான், ஆனா இவன் அப்பா என் புருசன் ராஜா இல்லை' என்றாள்.

அது வரை தன் கவலைகளில் மூழ்கிக் கொண்டிருந்தவள் ராணியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து 'என்னது என்னடி சொல்ற?' என்றாள்.

ராணி, 'உனக்கே தெரியும் நான் ஒரு துணை நடிகைன்னு, என்னோட நடிச்சவனை தான் காதலிச்சேன், ரெண்டு வருஷம் ஒன்னா சுத்தினோம். நான் யாரையோ காதலிக்கிறேன்னு மட்டும் தான் எல்லாருக்கும் தெரியும் ஆனா என் காதலன் யாருன்னு என் நெருங்கிய தோழிகள் ரெண்டு பேரை தவிர வேற யாருக்கும் தெரியாது, ஏன் உனக்கு கூட தெரியாது அது யாருன்னு'

'ஆமாம், நான் அப்ப ராஜாவை பார்த்ததில்லை' என்றாள் அவள்

'நான் காதலிச்சது ராஜாவை இல்லை, வேற ஒருத்தனை. ஆனா ராஜாவை எனக்கு அப்பவே தெரியும் அவரு சினிமால செட் போடற டீம்ல இருந்தாரு. அவரும் என்னை காதலிச்சாரு அது எனக்கு தெரியாது, ஒரு முறை ஒரு சினிமாவுக்காக அவுட்டோர் ஷுட்டிங் போனப்போ எனக்கும் என்னை காதலிச்சவனுக்கும் பெரிய சண்டை வந்துடுச்சு, அவன் வேற ஒரு பொண்ணோட பழகிக்கிட்டு இருந்தான், எதிர்த்து கேட்ட என்னை அடிச்சு கேவலப்படுத்தினான். அப்போ தான் ராஜா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்து சமாதானம் பண்ணினாரு, எனக்காக அவன் கிட்ட பரிந்து பேசினாரு. ஆனா அவனுக்கு வட இந்தியாவுல சினிமா சான்ஸ் கிடைச்சுதனால நான் கெஞ்சினதையும் பொருட்படுத்தாம ஒரு நாள் திடீர்னு காணாம போயிட்டான் அந்த பொண்ணோட'.

'என்னது அப்ப ராஜாவை நீ காதலிக்கலையா?' என்றாள் அவள்.


'இதுக்கே அதிர்ந்து போயிட்ட இரு இன்னும் இருக்கு. என் காதலன் தலைமறைவாகி ரெண்டு நாள்ல நான் கர்ப்பமாயிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சது. என்ன செய்யற்துன்னு தெரிய்லை, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது தான் ராஜா என்னை தேற்றி , தானே திருமணம் பண்ணிக்கொள்வதாக கூறினார். அப்போ கூட காதலன் ஓடிப் போய்டதால தான் நான் தற்கொலை பண்ணிக்க போனதா நினைச்சார். ஆனா உண்மையான காரணம் தெரிஞ்சப்புறம் கூட 'பரவாயில்லை ராணி, நீ எனக்கு நல்ல மனைவியா இருந்தா போதும் நான் அந்த குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா உனக்கு ஒரு நல்ல புருஷனா இருப்பேன்' அப்படின்னு சொன்னாரு. இவ்ளோ நல்ல மனுசனை அடைய எனக்கு தகுதி இருக்கான்னு நானே தயங்கினேன். ஆனா இப்போ சந்தோஷமா இருக்கேன்'

'காதல்னா என்னன்னு தெரியாம ஏதோ இளமை வேகத்துல மனசால கெட்டுப்போய் அதனால உடம்பாலையும் கெட்டுப்போனேன். அப்படியும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சது, ஆனா நீ அப்படி இல்லைம்மா நீ மனசால கெட்டேபோகலை,ஏன் உடம்பால கூட கெட்டுப்போகலைம்மா. உனக்கு நடந்த விஷயத்தை மறக்கற்து கஷடம் தான். ஆனா முயற்சிக்கலாமில்ல. அப்டியே மறக்க முடியலேன்னா கூட அதை உன் மனசுலேந்து மறைச்சுடு.'

' முன்னல்லாம் ஒவ்வொரு முறையும் என் பையன் முகத்தை பார்க்கும் போது என்னை ஏமாத்திட்டு போனவன் நினைவு வந்தது, ஆனா இப்ப அந்த முகத்தை என் ராஜாவின் முகம் வந்து மறைச்சுடுச்சு, அந்த மாதிரி உன்னாலயும் முடியும் உனக்கு நடந்த விபத்தை மறக்க முடியலேன்னாலும் உன் குழந்தையை நினைச்சு அதை மறைக்க முயற்சி செய், மனசால நீ தைரியமா இருந்தா தான் வாழ்க்கையும் நல்லா இருக்கும் 'என்றாள் ராணி .

இப்படியெல்லாம் பேசி அவள் மனதில் ராமுவை எதிர்க்கும் தைரியத்தையும், நடந்ததை நினைத்து மனரீதியாக அவள் படும் அவஸ்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கவும் முயற்சித்தாள் ராணி. அவளுக்கு தெரியும் ஒரே நாளில் அது முடியாதென்று ஆனாலும் தான் பேசியதில் அவள் கொஞ்சம் சமாதானம் அடைந்த மாதிரி ராணிக்கு தோன்றியது.

மெல்ல விடியத் தொடங்கியது.

அப்பொழுது வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். உள்ளே இருந்து ராணி 'யாரு?' என கத்தினாள்.


'கதவை திறடி நாயே' என்று பதில் வந்தது.


'அடிச்செருப்பால, யாருடா அது?' என கத்திக்கொண்டே கதவை திறந்தாள் ராணி.


வெளியே தலையில் கட்டுடன் ராமு நின்றிருந்தான். இதற்கிடையில் குரல் கேட்டவுடனே வந்திருப்பது ராமு எனத் தெரிந்துக் கொண்டு தரையில் விட்டுருந்த குழந்தையை எடுத்து அவள் தன்னுடன் அணைத்துக் கொண்டாள்.


'என் பொண்டாட்டி இங்க தான இருக்கா? அவளை மரியாதையா வெளிய விடு' என்றான் ராமு ராணியைப் பார்த்து.


'தூ! நீயும் ஒரு புருஷனா? இரண்டு வாரம் முன்னாடி என் வீட்டுக்கு வந்தவ அன்னியிலிருந்து இன்னி வரைக்கும் அப்டியே பேயறஞ்சவ மாதிரி இருக்கா, ராத்திரில தூங்காம யாராவது வந்துடுவாங்கன்னு சொல்லிக்கிட்டு முழுச்சிக்கிட்டே இருக்கா. 'என்றாள் ராணி


'ஏய் அது உனக்கு தேவையில்லாத விஷயம் நீயே சினிமால கூத்தடிக்கிறவ உன் யோக்கியதை என்னன்னு எனக்கு தெரியும் வாய மூடு' என்றான் ராமு.


அது வரை நடுங்கிக்கொண்டே கணவன் என்ற பெயரில் வந்திருக்கும் மிருகத்தை பார்த்துக்கொண்டிருந்தவள் ராணியை தவறாக பேசியதைக் கண்டு கோவத்துடன், 'தன் பொண்டாட்டியை இன்னொருத்தனுக்கு விக்கற உன்னை விட அவ யோக்கியமானவ தான் ' என்றாள்.


'நீ அன்னிக்கே அம்மிக்கல்லை அவன் தலயில போட்டு சாக அடிச்சுருக்குணும் 'என்றாள் ராணி கோபத்துடன்.


'அன்னிக்கு அப்படி தான் நினைச்சு பாட்டிலால அடிச்சேன், எப்டியோ ஆஸ்பத்திரி போய் பொழச்சு வந்துடுச்சு, நாட்டுல நல்லவங்க எல்லாம் போய் சேர்றாங்க இவனுக்கு ஒரு சாவு வர மாட்டேங்குது' என்றாள் அவள்.


'இது பாரு தேவையில்லாம் பேசாத எப்படியும் நீ கெட்டு போய்ட? இனிமே அது தான் உன் விதி, மரியாதையா என் கூட வந்துடு, உன்ன வச்சு நிறைய ப்ளான் போட்ருக்கேன்' என்றான்.


'முடியாது நான் சாவடிக்கறதுக்கு முன்னாடி ஓடிப் போயிடு உன்னை அப்டியே விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காத . நான் போலிசுக்கு போவேன்' என்றாள் அவள்

'போ அங்க போய் என்ன சொல்வ? இத பாரு நம்ம வீட்டு பக்கத்துல இருக்கறவங்க கிட்ட என்ன சொல்லி வச்சுருக்கேன் தெரியுமா? அன்னிக்கு வந்துட்டு போனானே அவனுக்கும் உனக்கும் தொடர்பு இருக்கு அதை தட்டி கேட்ட என்னை நீ அடிச்சுட்டு போய்டன்னு சொல்லி வச்சுருக்கேன். அவனும் அதை தான் சொல்வான். எப்படி வசதி?' என்றான் ராமு.


அவனை எரித்து விடுபவள் போல் பார்த்து அவன் முகத்தில் தூ என்று துப்பினாள். 'இத பார் நான் ஒன்னும் எங்கம்மா மாதிரி கிடையாது, அவங்க தான் நம்ம தலைவிதி அவ்ளோ தான்னு நினைச்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. அந்த மாதிரி நானும் இருப்பேன்னு கனவுல கூட நினைக்காத' என்றாள்.


'என்னையா காறி துப்பற?' என்று முகத்தை துடைத்துக்கொண்டு அடிக்க வந்தவன் கூட்டம் சேருவதை பார்த்து, 'நீ எப்படி வாழறன்னு நானும் பாத்துடறேன்' என்றான்.

'இதோ நான் துப்பினதை நீ துடைச்சுக்கிட்டு போகல, அந்த மாதிரி என் உடம்புல உன்னால பட்ட எச்சிலை நான் துடைச்சுக்கிட்டு வாழ்வேண்டா' என்றாள்.

கோபத்துடன் போன ராமுவை பார்த்துக்கொண்டே 'ராணி ,எனக்கு உடனே ஒரு வக்கீலை பார்க்கணும் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யணும் , இவனை போலீச்ல பிடிச்சு கொடுக்கணும், இல்லேன்னா வேற எந்த பொண்ணையாவது ஏமாத்த முயற்சி செய்வான்' என்றாள் அவள்.

முழுவதுமாக பொழுது விடிந்தது.

பி.கு: இந்த கதையின் முதல் பாகத்தை எழுதி முடித்தவுடன் தான் கதையின் நாயகிக்கு பெயர் வைக்கவில்லை என உறைத்தது. பின் அப்படியே விட்டுவிடலாம் என நினைத்து கடைசி வரை அவளுக்கு பெயரே வைக்காமல் கதையை முடித்து விட்டேன். முடிவை பற்றி அவரவர் விமர்சனங்களை தயங்காமல் கூறுங்கள்:)


Friday, October 27, 2006

எதை தொலைத்தாள் அதை தேடுவதற்கு? - 1

மு.கு. : எல்லாரும் கதை எழுதறாங்களே நாமளும் முயற்சி செய்யலாமேன்னு தான் இந்த கதையை இங்கே எழுதுகிறேன். ஏதோ ஒரு முயற்சி அவ்வளவு தான் அதனால படிச்சுட்டு உங்க விமர்சனங்களை சொல்லுங்க. இப்ப முதல் பகுதி தான் பதிக்க போகிறேன், எனென்றால் எப்படி முடிப்பது என்று இன்னும் யோசிக்கவில்லை:) சரி கதை கேட்க ரெடியா?

அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள் அவள் அலங்கோலமாக. எங்கோ மிதப்பது போலவும், முள் படுக்கையில் படுத்திருப்பது போலவும் அவளின் ஒவ்வொரு அணுவும் வலித்தது. 'இல்லை எனக்கு நினைவே வரக் கூடாது எழக் கூடாது' என நினைத்துக் கொண்டே நினைவுக்கு வர மறுப்பவள் போல் பிடிவாதமாக மரணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் அவள் உயிரின் கதறல் தீனமாய் விழுந்தது.

நழுவ விட்ட நினைவை பிடித்திழுத்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். இன்னொரு மூலையில் தூளியில் இருந்து எட்டிப்பார்த்து அவள் உயிரின் ஒரு துளி அழுதுக் கொண்டிருந்தது. ஓடிச் சென்று அள்ளி அணைக்க கால்கள் பரபரத்தாலும், எழ முடியவில்லை.

அதற்குள் சத்தம் கேட்டு குடிசையின் வாசலில் வந்து நின்றான் அவள் கணவன் ராமு, அந்த பெயருக்கே உள்ள எந்த குணாதியசமும் இல்லாதவனாய்.(ராமன் என்றால் அனைத்து உயிருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று பொருள்)

அவனைப் பார்த்த கணம் எங்கோ பறந்துக் கொண்டிருந்த தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி தட்டுதடுமாறி எழுந்து அவன் தூளியின் அருகில் செல்லும் முன் தன் குழந்தையை எடுத்து வாரி அணைத்தாள்.

குடிபோதையில் ராமு, 'ஏண்டி நான் குழந்தையை தொடக் கூடாதா' எனக் கத்தினான்.
கண்களில் வழியும் குரோதத்துடன் அவனைப் பார்த்துக், 'ஏன்?' என்றாள்.

அவள் கண்களின் தீவிரம் தன்னை ஒன்றும் செய்யாதது போல 'என்ன கேக்குற? ஓ நேத்து நடந்தது பத்தியா? ஆமா பின்ன நான் என்ன தியாகம் செய்யவா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? உங்க அம்மா செஞ்சுக்கிட்டுருந்த தொழிலை கொஞ்சம் நாகரீகமா செய்யலாம்னு தான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். முதல்ல சொன்ன நீ ஒத்துக்க மாட்டேன்னு தான் இத்தன நாள் சொல்ல. அதான் என்னோட கொஞ்ச நாள் வாழ்ந்துட்ட இல்ல ஒரு குழந்தையும் வந்துருச்சு. இனிமே நான் சொல்றபடி தான் கேக்கணும். பாரு நீ நேத்து நான் சொன்னதுக்கு ஒத்துக்கல. அதான் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். காலைல அவன் போயிட்டான் எனக்கு பணம் கொடுத்துட்டு' என்றான் விகாரமாய்.

தன்னிடம் ஏதோ ஒன்று குறைவது போன்று உணர்ந்திருந்த அவள் அது உண்மையென்று அறிந்ததை விட, தன் கணவனே அதற்கு காரணம் என தெரிந்தவுடன் கதறி அழ ஆரம்பித்தாள். அவள் குழந்தையும் ஏதோ புரிந்ததுப் போல சேர்ந்து அழுதது.
'ஏய் இதுக்கு இப்படி சீன் போடற? இதெல்லாம் உனக்கு சகஜம் தான? உங்க அம்மா இதை தான் செஞ்சுக்கிட்டுருந்தா? பெரிசா பத்தினி போல் அழற' என்றான்.

[அவள் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி. தான் படும் அவலங்கள் தன் மகளும் படக்கூடாது என்று அவளை படிக்க வைத்து ராமனுக்கு கட்டி வைத்தாள். ராமனும் ரொம்ப நல்லவன் என்று சொல்ல முடியாது என அவள் தாய்க்கு தெரிந்தும், தன் மகளுக்கு திருமணம் என்று நடந்தால் போதும் என்று தான் நினைத்தாள். அதை செய்தும் காட்டினாள். சிறிது நாட்களில் உயிர் துறந்தாள். அது வரை அமைதியாக இருந்தவன் தன் சுயரூபத்தை காட்டத் துவங்கினான்]

பத்தினித்தனம் பெண்ணுலகிற்கே உரிய சொத்து என்பது போல் அவன் பேசியதைக் கேட்டவுடன் கோபம் அதிகமாகி சுற்றும்முற்றும் பார்த்தாள். முதல் நாளிரவு அவன் குடித்துவிட்டு உருட்டி விட்டிருந்த சாராய பாட்டிலை எடுத்து அவனை நோக்கி விட்டெறிந்தாள்.

அவள் கோபங்களை தாங்கிச் சென்ற அந்த பாட்டில் அவன் தலையில் பட்டு உடைந்தது. அய்யோ என்று கதறியவாறு கீழே விழுந்தவன், அங்கிருந்த உரலின் நுனியில் இடித்துக் கொண்டான். அவன் தலையிலிருந்து புறப்பட்ட ரத்த ஆறு புண்ணியம் தேடி ஓடுவது போல் அறையெங்கும் பரவி அவள் கால்களை நனைத்தது. ரத்தத்தால் நனைந்த கால்களை துடைத்துக் கொண்டு அவள் புறப்பட்டாள் குடிசையை விட்டு.

தொடரும்..

Wednesday, October 18, 2006

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று...

அருமை நண்பர் பொது அறிவின் களஞ்சியம் ஜீவ், சுகாதார துறை அமைச்சர் ப்ரியா, தலைவர் கார்த்திஆகியோரின் tags யை மொத்தமாக கலந்து ஒரு த்ரி -இன் -ஒன் பதிவு இது, நீண்.......................ட பதிவு கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோங்க:)

இது ஜீவ் டேகியது,

1. Which is the single best post you have read on any blog, post the link?
ஒன்றா இரண்டா சொல்வதற்கு...:)

2. Which is the best post you have written and which is the worst. Explain why?
என்னுடைய சிறந்த பதிவையும் மொக்கை பதிவையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகிறேன் :) எல்லாமே மொக்கைன்னு சொல்லி காறித் துப்புவர்களும், எல்லாமே சிறந்தது என்று கூறும் அரிச்சந்திரர்களும் உங்கள் கருத்துகளை பின்னூட்ட பகுதியில் பதியவும் :) கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு பிரியாணி பொட்டலம் கட்சி சார்பாக வழங்கப்படும்:)

3. How about a place you have never been to, but would very much like to see?
பத்ரிநாத். இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் போய்விடலாம் எனும் பொழுது மணல்சரிவு ஏற்பட்டு ராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டோம்.

4. If you were a member of the opposite sex, what would you do differently?
நட்டநடு நிசியில் எந்த கவலையும் இல்லாமல் நிலவை ரசித்தப்படி நடந்து செல்வேன்.

5. Do you remember a recurrent childhood dream or nightmare, tell us about it?
அதை பற்றி தான் கார்த்திக் எழுத சொல்லியிருக்கிறார், இந்த பதிவின் இறுதியில் எழுதியுள்ளேன்

6. Make me laugh or make me cry, put your words to use?
இடுக்கண் வருங்கால் நகுக:)

7. Do you regret unfulfilled dreams, the inaccessible roads and the
uncharted lands?

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் போது நடந்ததை பற்றி வருந்தி என்ன பயன்?

8.What is a friend to you and what are you to a friend?
இதை முன்பே இந்த பதிவில் சொல்லிவிட்டேன்(ஒரு ப்ளாஷ்பேக் எடுத்து படிச்சுட்டு வாங்க)

9.T.S.Elliot measured his life with coffee spoons, how about you?
என் கிட்ட அவ்ளோ spoons இல்லை:)

10.Write your own Epitaph, or if it is too hard, how would you like
your Epitaph to read?

அப்டின்னா என்னங்க? என்னமோ சொல்றீங்க புரியலை:)

இது ப்ரியா டேகியது,

1.The best thing to do - மற்றவருக்கு உதவுவது
2.The best gift - உண்மையான அன்போடு எனக்கு கிடைத்த எல்லாம்.
3.The best thing I've ever heard - இன்னும் இல்லை(என் குழந்தை என்னை அம்மா என்றழைக்கும் கணம் தான்)
4.The best thing I've said - மன்னிப்பு கேட்பது தான்(அது தாங்க கஷ்டம்)
5.The best thing that happened to me - என் அம்மா
6.The best person I've met - வாழ்க்கையில் பல கட்டங்களில் பல நல்ல மனிதர்களை கண்டுள்ளேன்.
7.The best friend - அனாமிகா
8.The best moment - ஒவ்வொரு கணத்தையும் சிறந்ததாக கருத தான் முயற்சிக்கிறேன்.
9.The best book - பிரபஞ்சனின் வானம் வசப்படும், வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசம், மைக்கேல் கிரிக்டனின்(michael crichton) டைம்லைன்(timeline).
10The best blog - அவரவர் பாணியில் அவரவர் சிறந்து விளங்கும் போது சிறந்தது என்று எதையும் தனியாக சுட்டிக் காட்ட முடியவில்லை
11.The best place - என் வீடு
12.The best food - தயிர்சாதமும் வினைத்தொகையும். தமிழ் இலக்கணத்தில் வரும் வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக என் அம்மா சொல்லிக்கொடுத்தது 'ஊறுகாய்'. எனவே எங்கள் வீட்டில் 'ஊறுகாய்' 'வினைத்தொகை'யாகிவிட்டது:)
13.The best song - குறையொன்றுமில்லை எம்.எஸ்ஸின் குரலில், என் மேல் விழுந்த மழைத்துளியே(மே மாதம்)
14.The best hangout - டிநகரும்,புரசைவாக்கமும்(கல்லூரி நாட்களில் ஒன்றுமே வாங்காமல் வெட்டியாக இந்த இடங்களில் சுற்றியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது)
15.The best eatout - என் கல்லூரி காண்டீன்
16.The best hobby - படிப்பது தவிர இப்பொழுது ப்ளாக்குவது
17.The best TV show ever - சஹானா
18.The best manager - நான் தான்:)
19.The best musician - இளையராஜா
20.The best gang - பள்ளியிலும், கல்லூரியிலும் தற்போது இங்கேயும் கிடைத்த நண்பர் குழாம் தான்
21.The best drink - பில்டர் காப்பி
22.The best quote - நடப்பதெல்லாம் நன்மைக்கே
23.The best woman - என் அம்மா
24.The best kid - எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே..
25.The best poem - நான் எழுதுவதெல்லாம் எனக்கு பெஸ்ட் தான் என்றால் அடிக்க வருவீர்கள்:) கனிமொழி,வைரமுத்து,கண்ணதாசன் கவிதைகள் பிடிக்கும்
26.The best dancer - பத்மினியும் என் கசினும்.
27.The best movie - அன்பே சிவம்
28.The best actor - கமல்ஹாசன்
29.The best vehicle - என் கரும்பச்சை நிற ஸ்கூட்டி
30.The best scene in a movie - அன்பே சிவம் படத்தில் ரயில் விபத்தில் அடிப்பட்ட சிறுவனுக்கு ரத்தம் கொடுத்து மாதவன் காப்பாற்றியும் அந்த சிறுவன் இறந்தவிடுவான். அதிர்ச்சியடையும் மாதவன் கமலிடம் பேசும் ஒரு காட்சி,

மாதவன்: எனக்கு புரியவேயில்லை என்ன மாதிரி டிசைன் இது? ஒரு ரயிலை கவிழ்க்க வச்சு ஒரு சின்ன பையனை சிக்க வச்சு சாகற நிலைக்கு கொண்டு போய் அப்புறம் என் மூலமா ரத்தம் கொடுக்க வச்சு அப்புறம் வழியில சாக வச்சி சே என்ன மாதிரி கடவுள் இது? (கடவுள் நம்பிக்கையில்லாத கமல் தன்னை பார்ப்பது தெரிந்தவுடன்)சே கடவுளை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது i am sorry. உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே?

கமல்: எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லேன்னு யார் சொன்னா?
மாதவன்: ஓ! இப்ப திடீர்னு கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?
கமல்: ரொம்ப நாளாவே இருக்கு
மாதவன்: யார் அந்த கடவுள்?


கமல் மாதவனை சுட்டிக்காட்டுகிறார்.

மாதவன்: look i dont understand ur jokes
கமல்: bcos its is not a joke, முன்னபின்ன தெரியாத ஒரு உயிருக்காக கண்ணீர் விடற மனசு இருக்கே அது தான் கடவுள்.
மாதவன்:thankyou என்ன திடீர்னு இந்த முடிவு?
கமல்: ஏன்னா நானும் கடவுள்
மாதவன்: அதானே பார்த்தேன் ஏதாவது ஒரு hook இருக்கணுமே? சரி நீங்க கடவுள்னு யார் சொன்னது?
கமல்: மலை மேல பொட்டிக்கடை வச்சுருந்த ஒரு அம்மா சொன்னாங்க.
மாதவன் : !!!
கமல்: என்ன புரியலையா?
மாதவன்: இல்லை
கமல்: புரியக்கூடாதது தான் கடவுள்.
மாதவன்: :):)
அன்பே கடவுள் என்பதை உணர்த்தும் இந்த காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்தது :)


இது தலைவர் டேகியது,(கனவுகள் பற்றி)

என் குழந்தை பருவத்திலே(14வயது வரை) நாங்கள் இருந்த வீடு மிக பெரியது. நீண்..........ட ஹால் அதில் இருபுறமும் நிறைய அறைகள் உண்டு. எனக்கு எங்கள் வீட்டு இருண்ட ஸ்டோர் ரூம் கண்டால் ரொம்ப பயம். இந்த பயத்தை அதிகரிக்கிற முறையில் ஒரு கனவு கண்டேன் என் 10வது வயதில். அந்த அறை வாசலில் கறுப்பு புடவை அணிந்த ஒரு பெண்ணின் சடலம் இருக்கிறது. முகம் சரியாக தெரியவில்லை, யாரும் எந்த கவலையும் படாமல் பிணத்தை எடுக்க ஏற்பாடு செய்கிறோம், கனவில் நான் பயப்படாமல் அந்த சடலத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறேன். கனவு அதோடு முடிந்தது. அவ்வளவு தான் ஏற்கனவே அந்த அறையைக் கண்டால் எனக்கு பயம் இப்போ கேட்கவே வேண்டாம், ஒவ்வோரு முறையும் அந்த அறையை தாண்டி செல்லும்போது கண்ணை மூடிக் கொண்டு ஓடுவேன். என்னை பயமுறுத்திய அந்த அறை தான் எனக்கு தைரியத்தையும் கொடுத்தது. நாம் எதற்காக இல்லாத ஒன்றுக்காக பயப்படவேண்டும் என்றெண்ணி அடிக்கடி அந்த அறை பக்கம் போக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில பயமாக தான் இருந்தது, ஆனால் என் பயத்தை என் மன உறுதியால் வென்றேன். ஆகவே என் வரையில் எனக்கு பயத்தையும் கொடுத்து பின் அதன் மூலமாகவே பயத்தை போக்கிய கனவு இது.

இதை தவிர எனக்கு அடிக்கடி வரும் கனவு ஒன்றும் உள்ளது. படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பேன், திடீரென்று படிகள் காணாமல் போய்விடும் கீழே விழும்முன்னே கனவு கலைந்து விடும். இன்று வரை அந்த கனவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு தூரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றியும் கூடவே தீபாவளி சிறப்பு பரிசாக என் நல்வாழ்த்துக்களையும் வாங்கிக்கோங்க:)

Friday, October 13, 2006

புது வரவு

செல்லம், புஜ்ஜு, தங்கம், வைரம் என வார்த்தைகள் சிதறிக் கிடக்கின்றன எங்கள் வீடெங்கும். காரணம் எங்கள் வீட்டின் புது வரவு என் கஸின் ப்ரதரின் இரண்டாவது குழந்தை:) தற்போது அதற்கு மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. ஒரு குழந்தையின் வரவால் தான் வீட்டின் சூழல்களில் எவ்வளவு மாற்றம். தொலைக்காட்சியின் குரல் ஓய்ந்து குழந்தையின் சிணுங்கல் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது. எல்லார் முகத்திலும் சிரிப்பு. வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குழந்தையை தான் தேடுகின்றது எல்லார் மனமும். என் கஸின் ப்ரதர் வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்து இருப்பதால் நான் போய் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விடுவேன். குழந்தையுடன் நேரம் கழிவதால் புது பதிவுகள் கூட போடுவதில்லை, அவ்வளவு பிஸி:) ஒரு வயதாகும் வரை குழந்தையை புகைப்படம் எடுக்க வீட்டில் தடா போட்டுவிட்டதால் இங்கே குழந்தையின் படம் போடவில்லை.

பி.கு: அம்பி, நான் கஸின் ப்ரதர் என்று தான் எழுதியிருக்கிறேன், அன்று கேட்ட மாதிரி அஸின் ப்ரதரா என்று கேட்காதீர்கள்:)

பி.கு.கு:
ஜீவ், ப்ரியா, கார்த்திக் உங்கள் மூவரின் டேகையும்(tag) சேர்த்து அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன் :)

Monday, October 09, 2006

அழுவதா? சிரிப்பதா?

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என கூறி தமிழ் வளர்த்த(!) நம் தமிழக முதல்வருக்கு விழா எடுத்தனர் தமிழ் சினிமா துறையினர். அதை தமிழ் வளர்க்கும் சன்(!) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர். அதில் நடிகர் சிம்பு சில நடிகர்களை பேட்டி எடுத்தார்,

சிம்பு: த்ரிஷா உங்களுக்கு யாருடைய நடனம் பிடிக்கும?

த்ரிஷா: நடனமா? அப்டினா ஆக்டிங்கா?

சிம்பு: !!!

பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு அழுவதா? சிரிப்பதா? என புரியவில்லை:)

Tuesday, October 03, 2006

கேதார்நாத்தில் நான் - 3


கேதாரம் என்றால் கவலை நீக்குதல் என்று பொருள். மகாபாரத போர் முடிந்த பின் பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். இமயமலையை அடைந்த அவர்களுக்கு சிவன் ஒரு எருது வடிவில் காட்சி தரவும் பாண்டவர்கள் பின் தொடர, எருது வடிவில் இருந்த சிவபெருமான் பூமியை தோண்டி உள்ளே நுழைய ஆரம்பித்தார். அதற்குள் பாண்டவர்கள் வாலை பிடித்து நிறுத்தி விட்டனர். அதற்கேற்றாற் போல் இந்த கோவிலின் சிவலிங்க அமைப்பு எருதின் பின்பாகம் போல் இருக்கும்.

சூடுவேன் பூங்கொன்றைச் சூடிச்
சிவன் திரள்தோள் கூடுவேன்
கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன்
செவ்வாய்க்கு உருகுவேன்
உள்ளுருகித் தேடுவேன் தேடிச்
சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன்
அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதும் காண்
அம்மானாய். (திருவாசகம்)

என்று பராசக்தியே இங்கு வந்து தவம் புரிந்து சிவனை திருமணம் செய்துகொண்டதாகவும் புராணம் கூறுகிறது.

ஜோராக குதிரையில் ஏறி அமர்ந்த எங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரமும் மிக அருமையானதாக அமைந்தது. எங்கெங்கு காணினும் இயற்கையின் கைவண்ணம். அதுவும் என் தம்பி ஏறி அமர்ந்த பஞ்சகல்யாணிக்கு(நாங்கள் வைத்த பெயர்) தன்னை தாண்டி யாரும் போக கூடாது, அவ்வளவு தான் நம்மூரில் சைக்கிள் கேப்பில் ஓடும் ஆட்டோக்களைப் போல உடனே ஓவர்டேக் பண்ணிவிடும். நான் அமர்ந்து வந்த குதிரையோ என்னை தள்ளிவிட்டு தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டதைப் போல்(இதை இதை தானே நீங்க எல்லாரும் எதிர்பார்த்தீங்க) ஒவ்வொரு முறையும் மலைப்பாதையின் வளைவுகளில் ஓரமாக தான் போகும்,. ஒவ்வொரும் வளைவு திரும்பும்போதும் என் இதயம் தொண்டை வரை வந்துப் போகும்.

என் அம்மாவோ என் நிலையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் குதிரைக்காரன் அதைப் பத்தியெல்லாம் கவலையே படாமல் என்னைப் பார்த்து 'நீங்க பயந்து குதிரையைப் பார்த்து ஏதாவது கத்தினீங்கன்னா அப்புறம் அது வேற ஏதாவது புரிஞ்சுக்கும்' என்றான். உடனே நானும், என் அம்மாவும் வாயை மூடியவர்கள் தான் அப்புறம் மலை மேல போற வரைக்கும் வாயே திறக்கலை. பின்ன நாம ஏதாவது சொல்லி அதை தான் திட்றோம்னு அது எங்கயாவது தள்ளிவிட்டுதுனா? இப்படியாக மூன்று மணி நேரம் பயணித்து (நடுவில் அரை மணி நேரம் ரெஸ்ட் எங்களுக்கில்ல குதிரைகளுக்கு) கேதாரம் வந்து சேர்ந்தோம்.

கோவிலின் வாசல் வரை குதிரை போகாததால் சிறிது தூரம் முன்பே இறங்கிவிட்டோம். இறங்கிய பிறகு தான் தெரிந்தது குதிரையில் பயணிக்கும் போது தோன்றும் வலி என்னவென்று சும்மா சொல்லக்கூடாது இடுப்பு கழன்று விட்டது. அப்படியே விந்தி விந்தி தான் நடந்து சென்றோம் கோவிலுக்கு. இங்கு சுயம்பு வடிவான கேதார்நாத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம். இதை பார்த்தவுடன் என் அம்மா வாய்ப்பை விடாமல் பயன்படுத்த வேண்டுமென்று சிறிது நேரம் காத்திருந்து பணம் கட்டி அபிஷேகம் செய்தார். நம் ஊரை போல் அல்லாமல் வடநாட்டில் கர்ப்பக்கிருகத்தில் நுழைந்து சாமியை தொட்டு வணங்கலாம். நாங்களும் சிவனை தொட்டு வணங்கினோம்.

என்ன தான் இருந்தாலும், நம்மூரில் இருண்ட சுவாமி சன்னிதியில் இயற்கையான விளக்கொளியில் முண்டியடித்துக் கொண்டு சுவாமியை தரிசிக்கும் போது உண்டாகும் அந்த அற்புத உணர்ச்சி இங்கே கிடைப்பதில்லை. தரிசனம் முடிந்ததும் வெளியில் உள்ள சின்ன சன்னதிகளையும் தரிசித்து ப்ரகாரத்தை சுற்றி வந்தோம். எங்களுக்கு மலைப்பு தான் மிஞ்சியது, போக்குவரத்து வசதியே இல்லாமல் இவ்வளவு உயரத்தில் வந்து கோவிலை அமைத்தது பெரிய சாதனை தான். இது கூட பரவாயில்லை, பத்ரிக்கு செல்வது இன்னும் கடினம் என்றார்கள் என் தாத்தா பல வருடங்களுக்கு முன் இந்த இடங்களுக்கு நடந்தே வந்தார் என்று என் அம்மா சொன்னதை கேட்டு இன்னும் ஆச்சரியம் அடைந்தோம்.

பின் அங்கிருந்து மீண்டும் குதிரை வாகனத்தில் அமர்ந்து கீழே இறங்கி வந்தோம். ஏற்கனவே ஊசலாடிக் கொண்டிருந்த எங்கள் இடுப்பு சுத்தமாக கழன்று விழுந்து விட்டது, அந்த அளவுக்கு வலி. கேதார்நாத் செல்பவர்களுக்கு நான் கூறும் ஒரே ஒரு அட்வைஸ் என்னவென்றால், முடிந்த வரை கீழே இறங்கும் போது குதிரையை தவிர்த்து நடந்தே வந்து விடுங்கள்.:)


பி.கு: இந்த முறை சில தவிர்க்க முடியாத காரணங்களால் கொலு வைக்க வில்லை, ஆனாலும் வழக்கம்விட்டுப் போகாமல் இருக்க சரஸ்வதி பூஜையன்று அவசர அவசரமாக வைத்த அலமாரி கொலு இது,

Wednesday, September 27, 2006

காதலின் முரண்பாடுகள்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பி.கு: இதை படித்தவுடன் உங்க கற்பனை வளத்தை அப்படியே உரம் போட்டு வளர்க்க வேண்டாம். சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை.

Wednesday, September 20, 2006

தமிழ் சங்கம் கவிதைப் போட்டி - 1

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் சங்கத்தின் முதல் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு நான் அனுப்பிய கவிதைகள்(தலைப்பு - இன்னும் இருக்கிறது ஆகாயம்),
கவிதை - 1
கவிதை - 2

இந்த வாய்ப்பை தந்த தமிழ்சங்கத்துக்கும், எனக்கு இதைப் பற்றி முதலில் தெரியப்படுத்திய நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி(சிவா நன்றி சொன்னா உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், ஆனாலும் அவை மரபுன்னு ஒண்ணு இருக்குல்ல, அதனால இந்த நன்றியை இப்ப வாங்கிக்கங்க, வேண்டாம்னா அப்புறம் திருப்பி அனுப்பிடுங்க:) )


Friday, September 15, 2006

கேதார்நாத்தில் நான் - 2

மு.கு: குதிரையைப் பத்தி குறிப்பிட்டதும் நான் குதிரையிலிருந்து விழுந்துட்டதா சந்தோஷப்பட்ட என் பாசக் கட்சிகளே அது மாதிரி எதுவும் நடக்கலை:)


மறுநாள் காலையில் நாங்கள் தங்கியிருந்த மலைக்கிராமமான ராம்பூரிலிருந்து இன்னும் மேலே கெளரிகுண்ட் என்னும் இடத்திற்கு பேருந்தில் சென்றோம். இந்த இடத்தில் இயற்கையாகவே பூமியிலிருந்து வெந்நீர் ஊற்றுகள் வருகின்றன. குளிருக்கு சுகமாக வெந்நீரில் குளித்து குதிரைப் பயணத்துக்கு தயாரானோம். குதிரைகள் கட்டி வைத்திருக்கும் இடத்திலிருந்து ஒரு மலைப்பாதை துவங்குகிறது, மலையை சுற்றி சென்று சுமார் 14 கிமீ பயணித்தால் கேதார்நாத் கோவில் சென்றடையலாம். ஏற்கனவே குதிரை குஷியில் இருந்த எங்களுக்கு முன் குதிரை என்று சொல்லி ஒன்றை கொண்டு வந்து நிறுத்தினார்கள்(pony).


எனக்கு கறுப்பு நிறத்தில் ஒரு குதிரை, என் தம்பிக்கு வெள்ளை நிறம், என் அம்மாவிற்கு ப்ரவுன் நிறம். அடப்பாவிகளா, இது எங்களையும் சுமந்துண்டு 14 கிமீ ஏறுமா? அப்படின்னு நான் யோசிக்க அதுக்குள்ள என் தம்பி குதிரை மேல ஜம்மென்று ஏறி அமர்ந்து விட்டான். குதிரைக்கார பையன்(நிஜமாவே சின்ன பையன், 15 ,16 வயசு தான் இருக்கும் ஏற்கனவே குதிரை ஒழுங்கா கொண்டுபோய் சேர்க்குமான்னு பயம், இதுல வேற துணைக்கு இவனுங்களான்னு பயம் அதிகமாயிடுச்சு)'தீதீ(அக்கா), ஜல்தி ஜல்தி(சீக்கிரம்)' என்றான்.


எனக்கு ஏற தெரியலை, என்னனென்னமோ செய்றேன், முடியவே இல்லை, என் தம்பி என்னைப் பார்த்து சிரிக்கிறான். அடப்பாவி துரோகி நீயெல்லாம் ஒரு தம்பியா?ன்னு நினைச்சுண்டே என் அம்மாவைப் பார்த்தா அவங்களும் குதிரை மேல இருக்காங்க, ஆஹா நம்ம மானம் இப்படித் தான் போகணுமான்னு நினைச்சுண்டே திரும்ப ட்ரை பண்றேன், திடிர்னு அந்த குதிரைக்கார பையன் என்னை அப்படியே தூக்கி உக்கார வச்சுட்டான்.


என் அம்மாவும், தம்பியும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னுது. அடப்பாவி மவனே நீ என்ன தீதீன்னு கூப்டதுனால தப்பிச்சுட்ட,இல்லேன்னா உனக்கு இன்னிக்கு சங்கு தான் அப்படின்னு அந்த பையனைப் பார்த்து முணுமுணுத்தேன். அவன் எதுவும் புரியாம விகல்பமா சிரிச்சுண்டே க்யா தீதீ? ஆப் ரெடி? என்றான் என்னைப் பார்த்து.


சரி கிளம்பலாம் என்று முடிவெடுத்தவுடன் இன்னொரு குண்டைத் தூக்கி போட்டான் . நாங்க ஒவ்வொரு குதிரையையும் பிடித்துக் கொண்டு கூட ஒருவன் வருவான் என்று நினைத்திருந்தோம், ஆனால் ரெண்டு குதிரைக்கு ஒரு ஆள் என்று அந்த பையன் சொன்னதும் என் அம்மாவிற்கு பயம் வந்து விட்டது. அவர் பயந்ததுக்கு காரணம் அந்த மலைப்பாதை மிக குறுகலானது. ஒரு பத்தடி அகலம் தான் இருக்கும், ஒரு பக்கம் குதிரையில் ஏறி செல்வர்கள், அதே பாதையில் தான் இறங்கியும் வர வேண்டும் இது தவிர கோவிலுக்கு கால்நடையாக செல்பவர்கள் கூட்டம் வேறு, இதையெல்லாம் விட ஒவ்வொரு திருப்பத்திலும் அகலபாதாளத்தில் கங்கை நதி. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அந்த மாதிரி ஆபத்தான ஆனால் மிக அழகான பயணம். கடவுளை வேண்டிக் கொண்டு மலையேற ஆரம்பித்தோம்.


தொடரும்.......

Monday, September 11, 2006

கேதார்நாத்தில் நான்..

இரண்டு வருடங்களுக்கு முன் நாங்கள் பத்ரிநாத், கேதார்நாத் போகலாம் என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்த பிறகு தான் தெரிந்த்து பத்ரிநாத் போகும் வழியில் எல்லாம் மணல்சரிவு ஏற்பட்டு பல பேர் இறந்துவிட்டனர் என்று. ஆனாலும் மனந்தளராமல் நாங்கள் ஏற்பாடு செய்தபடி கிளம்பிவிட்டோம்.

டெல்லியில் போய் இறங்கியவுடன் அங்கிருந்து ரிஷிகேஷுக்கு பேருந்தில் சென்றோம். டெல்லியில் இருந்து ரிஷிகேஷ், ஹரித்வார் செல்வது சுலபம், நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. ரிஷிகேஷ் சென்றவுடன் அப்போதைய நிலவரப்படி மணல்சரிவுகள் தொடர்ந்துக் கொண்டிருப்பதாகவும், ராணுவம் உதவிக்கு வரவழைக்கப்பட்டு பத்ரிநாத் செல்லும் பாதை சீரமைக்கப்படுவதாகவும் தெரியவந்தது. முதலில் போட்ட திட்டப்படி பத்ரிநாத் செல்லாமல், கேதார்நாத் பார்த்துவிட்டு வரலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.


உடனே எங்கள் குழுவில் வந்த சில மனிதருள் மாணிக்கங்கள்" நாம் பத்ரிநாராயணனை தான் முதலில் தரிசிக்க வேண்டும், உயிர் போனால் என்ன? பத்ரியில் போவது புண்ணியம் தான்" என்றனர். இப்படி பேசும் பெரிசுகளோடு மாட்டிக்கொண்ட என்னைப் போல் சில பேருக்கு இதயமே நின்றுவிட்டது. ஆஹா நீங்களெல்லாம் நல்லா 50 ,60 வருஷம் வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சுட்டு இப்படி பேசறீங்க, நாங்கெல்லாம் இப்பதான்யா வாழ்க்கையையே எட்டிப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம்னு மனசுக்குள்ள ஃபீல் பண்ணிக்கிட்டு நின்னோம். நல்லவேளை எங்க டூர் நிர்வாகி பத்ரிக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு அனுமதி கிடைக்காது என்று சொன்னப்புறம் தான் புலம்பல் நின்றது.


இப்படியாக எங்கள் பயணம் கேதார்நாத் நோக்கி துவங்கியது. கேதார்நாத் சிவன் ஸ்தலம், மலை மீது அமைந்துள்ளது. முதலில் தேவப்ரயாக் சென்றடைந்தோம், நாங்கள் போகும் இடமெல்லாம் மலைப்பிரதேசம் தான் கூடவே கங்கையும், வெவ்வெறு பெயரில். தேவப்ராயகையில் தான் பாகிரதி நதியும், அலகாநந்தா நதியும் இணைகின்றன(ஆனால் இரண்டுமே கங்கை தான்).இங்கிருந்து தான் மலைப்பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கேதார்நாத்தை நோக்கி, மற்றொன்று பத்ரிநாத்தை நோக்கி.


எங்கள் பேருந்து கேதார்நாத்தை நோக்கி சென்றது. போகும் வழியில் ராம்பூர் என்னும் மலைகிராமத்தில் அறை எடுத்து தங்கினோம். கடும் குளிரோடு அருமையான இயற்கைக் காட்சிகள். நாம் போனவுடனே சரியாக ஆஜராகிவிடுகிறார்கள் குதிரைக்காரர்கள். கேதார்நாத்தை தரிசிக்க 14 கிலோமீட்டர் குதிரையில் பயணம் செய்ய வேண்டும். இவர்களிடம் முதல் நாளே குதிரை புக் பண்ணிவிட வேண்டும். குதிரை என்றவுடன் எனக்கும், என் தம்பிக்கும் ஒரே சந்தோஷம், ராணி மங்கம்மா, ராஜா தேசிங்கு ஃபீலிங் வேற:) குதிரைக் கனவுகளுடன் உறங்க சென்றோம்.


தொடரும்........

Monday, September 04, 2006

தமிழில் பேசுங்கள்

விஜய் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் தாக்கமே இந்த பதிவு. ஏர்டெல் சூப்பர் சிங்கரின் பெரு வெற்றிக்கு பிறகு அதை தக்க வைக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புது நிகழ்ச்சி 'Eq'. இதில் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்குக் கொள்ள முடியும். அவர்களுக்கு கொடுக்கப்படும் கால அவகாசத்தில் அவர்கள் திறமையை பாட்டு,நடனம்,நாடகம், கூத்து என பல விதங்களில் நிருபிக்க வேண்டும்.

இது வரை நடந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் மாணவர்களின் திறமை மிக அற்புதமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருப்பவர்கள் பாடகர் மால்குடி சுபா மற்றும் ஒரு நடன இயக்குனர்(அவர் பெயர் சமயத்திற்க்கு மறந்து விட்டது). இருவருமே மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தான் பேசுகிறார்கள். குறிப்பாக சுபா ஒவ்வொரு முறையும் நல்ல பாடகர்களை எதிர்கொள்ளும் போது தமிழ்நாட்டில் தனி இசைக்குழுக்களாக வர வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார். ஆனால் இவர் பாதி நேரங்களில் ஆங்கிலம் கலந்துப் பேசுகிறார்.

இவராவது பரவாயில்லை கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக பங்குப் பெற்றவர், பிரபல நடன கலைஞரும், சினிமா நடிகையுமான ஷோபனா, ஒவ்வொருவருரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி அவர்களின் நிறை குறைகளை அழகாக எடுத்துக் கூறிய அவருக்கு தான் பங்குக் கொள்வது ஒரு தமிழ் நிகழ்ச்சி என தெரியவில்லை போலும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் பேசினார்.(எனக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வேறு இவர் தமிழர் தானா என்று?, அப்படியே அவர் தாய்மொழி தமிழில்லை என்றாலும், இவ்வளவு வருடங்களாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவருக்கு தமிழ் குறைந்தபட்சம் பேசக் கூட வராதா?)

எனக்கு அதைப் பார்த்து எரிச்சல் தான் அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கலைஞர், தமிழ் படங்களில் நடித்தவர் என பல பரிமாணங்கள் கொண்ட இவர் ஏன் ஒரு தமிழ் நிகழ்ச்சி எனத் தெரிந்தும் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே முழுக்க முழுக்க பேசுகிறார் என புரியவில்லை. சமீப காலங்களில் இவ்விதமான போக்கு அதிகரித்துள்ளது. இவர் என்று இல்லை, இது போல் பல பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கிறது என எனக்கு தோன்றுகிறது.

Tuesday, August 29, 2006

"Five Wierd things about me"

நம்ம வலையுலுக பிஞ்சுக் கைக்குழந்தை, அகில உலக கப்தான் ரசிகர் மன்ற தலைவர், நண்பர் அர்ஜுன் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த சங்கிலி பதிவில் நானும் இணைந்துக் கொள்கிறேன். அவர் கொடுத்த தலைப்பு "Five Wierd things about me" நான் நல்லவ, வல்லவ, பல பேரை வாழ வைத்த தெய்வம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் என் குறை நிறைகளை இங்கே ஒளிவு மறைவின்றி பட்டியிலிடுகிறேன், வழக்கம் போல எல்லாரும் வந்து உங்க பொன்னான பின்னூட்டங்களை இட்டுச் செல்லவும்(இந்த தடவை முதல் பின்னூட்டத்திற்கு அம்பி கேசரியும், ச்யாம் புளியோதரையும் என் சார்பில் பரிசளிப்பார்கள், அப்படி பரிசை தராமல் அவங்களே ஒரு flowல்ல சாப்பிட்டுட்டா நான் அதுக்கு பொறுப்பு இல்லை:)

மறதி: ஒரு முறை என் சித்தப்பாவும், சித்தியும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, சித்தியை எங்கள் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வெளியே எங்கேயோ போனவர் ரொம்ப நேரமா வரவேயில்லை. நாங்கள் எல்லாம் பயந்துவிட்டோம், திடீரென்று போன் வருகிறது என் சித்தப்பாவிடமிருந்து, வீட்டுக்கு போய் விட்டேன் என்று. அதாவது சித்தியுடன் வந்ததையே மறந்து விட்டு அவர் வீட்டுக்கு போயிருக்கிறார். அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க பரம்பரையில் வந்த நான் மட்டும் மறதிக்கு விதிவிலக்கல்ல. ஒரு முறை என் அம்மாவை சைக்கிளில் பின்னாடி அமர வைத்து நான் வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன். போகும் வழியில் மழை பெய்ததால் தண்ணீர் குட்டையாக தேங்கி இருந்தது. என் அம்மா கீழே இறங்கிக் கொண்டு என்னை மட்டும் சைக்கிளில் அந்த குட்டையை தாண்டி வர சொன்னார், அவர் சுற்றிக் கொண்டு வந்து ஏறிக் கொள்கிறேன் என்றார். நான் என்ன பண்ணினேன், தண்ணீரை தாண்டி சைக்கிளை நிறுத்தாமல் என் அம்மாவை அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதையே மறந்து வீட்டுக்கு சென்று விட்டேன். இத்தனை வருடம் கழித்தும் என் அம்மா இதை சொல்லி காட்டுவார்கள். இது பரவாயில்லை, இப்பொழுதும் தினமும் நடக்கிற ஒரு விஷயத்தைக் கேட்டீங்கன்னா என் மறதியின் மகாத்மியம் புரியும், தினமும் நான் கடைக்கோ அல்லது கோவிலுக்கோ செல்வதற்காக கீழே இறங்கி போகும் போது மோட்டார் ஸ்விட்சைப் போடும் படி என் அப்பா கூறுவார். அவர் தொடர்ந்து 10 நாள் சொன்னால், ஒரு நாள் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொண்டு போட்டு விட்டு போவேன். அது என்னமோ தெரியல மாடியிலிருந்து இறங்கும் வரை ஞாபகம் இருக்கும், ஆனால் கீழே வந்தவுடன் யாருடனாவது பேசிக் கொண்டு மறந்து விடுவேன். இது எப்படி இருக்கு?:)

கோபம் : சாதாரணமாக விருச்சிக ராசியினருக்கு கோபம் அதிகம் என்று கூறுவர். எங்கள் வீட்டில் நான், என் அப்பா ரெண்டு பேருமே விருச்சிக ராசி. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் கோபம் வந்தது என்றால் அவ்வளவு தான் என் அம்மா தான் அரண்டு போய் விடுவார்கள். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்குமென்றும் சொல்வார்கள்:)(சரி சரி உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்றது என் கடமை அல்லவா?) இப்பொழுதெல்லாம் கோபத்தை மிகவும் குறைத்துள்ளேன்.
சாதாரணமாக எனக்கு யாராவது தவறு செய்தால் அவரிடமே அதை சொல்லி விடுவேன், நீங்கள் செய்வது தவறென்று. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே அது தான் என் கொள்கை

தயக்கம்: சில பேர் உண்டு, எப்படியென்றால் அந்த நிமிடம் வரைக்கும் யாரென்று தெரியாது, ஆனால் நம் கிட்ட வந்து அவங்க நதிமூலம், ரிஷிமூலம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நாமும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனக்கு எப்பவுமே கொஞ்சம் தயக்கம் அதிகம், முதன் முதலாக யாரையாவது பார்த்தால் கூட ரொம்ப தயங்கிக் கொண்டே தான் பேசுவேன். என் கல்லூரி நண்பர்கள் கூட 'உன்னை முதல் முதலில் பார்த்த பொழுது சரியான அழுத்தக்காரி என்று நினைத்தேன்' எனக் கூறுவார்கள். எனக்கு ஒருவரை பிடிக்கும் வரை தான் தயங்குவேன். பழகி விட்டால், அவளா இவள் என்று வியக்கற அளவுக்கு மாறிடுவேன். அதனால் தான் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிக குறைவு. என்னை புரிந்துக் கொண்டவர்கள் மட்டுமே என்னுடன் நன்றாக பழகமுடியும்.

பிடிவாதம் : என் வீட்டில் எனக்கு பெயரே வணங்கா முடி என்பது தான். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் அவ்வளவு தான் அதை மாற்றவே மாட்டேன். ஆனால் முடிவு எடுக்க தான் நேரமாகும், ரொம்ப யோசித்து தான் எதையும் செய்வேன். மற்றவர் யாரும் என்னை கட்டுப்படுத்துவது எனக்கு பிடிக்காது, எங்க வீட்டுல கூட என்னால ஏதாவது காரியம் ஆகனும்னா அப்படியே அன்பை பொழிவாங்க, ஏன்னா அதிகாரத்துக்கு கட்டுப்படாத என்னிடம் வந்து ப்ளீஸ் எனக்காக இதை செய் என்று அன்புடன் கேட்டால் உடனே சரி என்று சொல்லி விடுவேன். அன்புக்கு நான் அடிமை:)

பயம்: சாதாரணமாக எதற்கும் பயப்படாத நான் இரண்டு விஷயங்களுக்கு ரொம்ப பயப்படுவேன்,

1. உயரம். : எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து கூட எட்டிப் பார்க்க பயம்.
2. கரப்பான்பூச்சி : அப்புறம் இந்த கரப்பான் பூச்சி இருக்கு பாருங்க , சொல்லும் போதே அருவெருப்பாக இருக்கு, வீட்டுக்குள்ள வந்தச்சுன்னா அவ்வளவு தான் நான் போட்டது போட்ட படி வெளியில் ஓடி விடுவேன், என் அண்ணனை தேடி. அவன் தான் இந்த கரப்பு பிடிப்பதில் அசகாய சூரன், அது எங்கு பறந்தாலும், பின்னாடியே போய் பிடிச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பான்.


இதை தொடர்ந்து பதிய நான் அழைக்கும் வலைப்பதிவர்கள்

1.'அன்பு சிஷ்யை' சுபா

2.'கலியுக நாரதர்' அம்பி

3.'மொக்கை பதிவு' கீதா

Sunday, August 27, 2006

முதல்வன்
"மாற்ற முடிந்ததை மாற்றும் ஆற்றலையும்
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்
இவ்விரண்டையும் வேறுபடுத்தி புரிந்துக் கொள்ளும் அறிவையும் தா"

பி.கு.: இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், முதலில் பின்னூட்டம் இடுபவருக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கு பதில் கொழுக்கட்டை பார்சல். இந்த முறை முந்த போவது அம்பியா? ச்யாமா? எங்க எல்லாரும் லைன் கட்டி க்யூல வாங்க பார்ப்போம் :)


Monday, August 21, 2006

படித்ததில் பிடித்தது


இன்பக் கோட்டையின்
பூட்டைத் திறக்க
சாவி கொண்டு வந்தார்கள்
சரித்திர புருஷர்கள்!
ஏசுபிரான் ஒரு சாவி செய்தார்- அன்பு
வள்ளுவர் ஒரு சாவி செய்தார் - அறம்
நபிகள் ஒருசாவி செய்தார் - சகோதரத்துவம்
சங்கரர் ஒரு சாவி செய்தார் - அத்வைதம்
கார்ல்மார்க்ஸ் ஒரு சாவி தந்தார் - பொதுவுடைமை
அண்ணல் காந்தி ஒரு சாவி கண்டார் - அஹிம்சை
பெரியார் ஒரு சாவி தந்தார் - பகுத்தறிவு
சும்மா இருக்குமா சுயநலம்?
ஈயம் பித்தளை பேரீச்சம்பழத்திற்கு
எல்லா சாவிகளையும் விற்றுவிட்டது!

இந்த கவிதையை நான் பல வருடங்களுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். இதை எழுதியது யார் என தெரியவில்லை,ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விட்ட ஒன்று.