Thursday, April 27, 2006

கிருஷ்ண துளசி


"எனக்கு வரப் போற மனைவி எப்படி இருக்கணும்னு நெனச்சேனோ அப்படியே தான் நீ இருக்க, துளசி"

சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்த துளசி, " ஆனா எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க க்ருஷ்" என்றாள்.

உடனே அவன், "இல்ல, நான் உன்ன போலன்னு தான் சொன்னேன், துளசி" என்றான்.

க்ருஷ்ணாவும் துளசியும் ஒரே கல்லூரியில் ஒரே பிரிவில் படிக்கும் நண்பர்கள். க்ருஷ்ணா படித்தது எல்லாம் கிராமத்தில் என்பதால், பெண்களோடு அதிகம் பழகப் பயப்படுவான். அதுவும் தவிர தான் கருப்பாக இருப்பதாக ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுக்கு. ஆனால், மிகவும் அருமையான கவிதைகள் எழுதுவான். இந்த ஒரு விஷயத்தில் தான் அவனுக்கு துளசியோடு சினேகம் ஏற்பட்டது, அதுவும் துளசி தான் முதலில் அவனோடு பேசினாள்.


தன்னோடு கூட ஒரு பெண் பேசுவாளா என்று நினைத்திருந்த க்ருஷ்ணன், மெல்ல மெல்ல துளசியின் அருமை நண்பனாகி விட்டான். எல்லா நண்பர்களுக்கும் நடுவில் வரும் ஒரு சலனமான ஒரு கட்டத்தை அடைந்தான் அவன். அதன் எதிரொலி தான், துளசியைப் பார்த்து அவன் கூறிய வார்த்தைகள்.

"இந்த வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவன் அப்படி கூறிய போது நான் ஏன் இப்படி ஒரு பதிலைச் சொன்னேன். நான் அவனை விரும்புகிறேனா? என்னால் அவனை கணவன் என்னும் இடத்தில் வைத்துப் பார்க்க முடியுமா?" இரவெல்லாம் யோசித்த துளசி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாள்.

மறுநாள், க்ருஷ்ணன் அவளைப் பார்க்க வந்தான்.


"துளசி,நான் சொன்னதை நெனச்சு குழம்பிட்டியா?, நான் உன்ன அப்படி நெனைக்கல துளசி" ( நான் இவளை விரும்புகிறேன் என்று தெரிந்தால்,என் நட்பை சந்தேகிப்பாளோ? அப்போ ஏன் நேத்து "ஆனா எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க க்ருஷ்" என்று சொன்னா, அப்படியென்றால்,அவள் வீட்ல ஒத்துக்க மாட்டாங்க,ஆனா அவளுக்கு ஓகே என்று அர்த்தமா?)

துளசி, "இல்ல க்ருஷ், நீ என்னை விரும்பற. அது எனக்கு புரியுது, என்னோட குழப்பமெல்லாம் நான் ஏன் அப்படி ஒரு பதில சொன்னேன் என்பது தான்"

க்ருஷ், "
அப்ப, நீயும் என்ன விரும்புகிறாய்?"

துளசி, "
இல்ல க்ருஷ், என்னால உன்ன அப்படி நினைக்க முடியல"

க்ருஷ், "அப்ப நீ சொன்னதுக்கு அர்த்தம்?"

துளசி, "
நீ எப்படி உன் மனைவி என்ன போல இருக்கணும்னு ஆசைப்பட்டியோ, அதே மாதிரி என் கணவன் உன்னைப் போல இருக்கணும்னு நான் நெனச்சேன், ஆனா அது நீயா இருக்கனும்னு நெனைக்கல, இருக்கவும் முடியாது. அந்த உண்மையை சொல்ற தைரியம் எனக்கு நேத்து இல்ல, அதனால தான் அப்படி சொன்னேன்"

க்ருஷ், "இது என்ன இப்படி ஒரு வாதம், என்ன போல இருக்கணும்னு நெனைக்கற, ஆனா அது நானா இருக்க கூடாதா? நட்புக் காதலா மாற கூடாதா?"

துளசி, "
மாறலாம், அதில் தவறில்லை. முதல் தடவை சந்திக்கும் போதே அவர்கள் மனதில் காதல் ஒரு விதையாக விழுந்திருக்கும், அந்த விதை நட்பு என்னும் ஒரு போர்வையில் மறைந்திருக்கும், உண்மையைச் சொல்லனும்னா அவங்க முதலில் இருந்தே மனசுக்குள்ளே காதலிக்க அரம்பித்திருப்பார்கள், ஆனா என் மனசில் அப்படி எந்த விதையும் விழல, க்ருஷ். பாரதத்தில், கர்ணனுக்கும் துரியோதனனின் மனைவிக்கும் இருந்த நட்பைப் போல நம் நட்பை நான் கருதறேன். ஆனா உனக்கு எப்பவோ விழுந்த காதல் என்ற விதை தான் என்னப் பார்த்து இப்படி பேச வச்சிருக்கு"

க்ருஷ், "
சரி நான் உண்மையை ஒத்துக்கறேன், உன்னைப் பார்த்த கணத்திலிருந்தே என் மனதில் விழுந்த விதை தான் இது, இப்போ விருட்சமா வளர்ந்திருக்கு. அப்ப, நான் நட்பு என்னும் போர்வையில் உன்ன ஏமாத்திட்டேனா?"

துளசி, "
இல்ல க்ருஷ், நீ என்ன ஏமாத்தல, உன்ன நீயே ஏமாத்திகிட்ட. இந்த விஷயத்த முன்னாடியே சொல்லி இருந்தா கூட நான் உன்ன புரிஞ்சுகிட்டு இருப்பேன். கவலைப் படாத"

க்ருஷ், "
அப்ப, என்னோட உன் நட்பு தொடருமா?"

துளசி, "
யுகம் யுகமா அது தொடர்ந்து வர்றதா தான் எனக்கு தோணுது.
க்ருஷ், நீ என் நண்பன், அத யாராலயும் மாத்த முடியாது"

க்ருஷ், "
ரொம்ப நன்றி துளசி, நீ என்ன தப்பா நினைக்கல இல்ல? ஒரு விதத்துல இதப் பத்தி நாம் பேசினது எனக்கு ஒரு நிம்மதிய தருது"

துளசி,
"க்ருஷ், இதனால நீ மனசு ஒடஞ்சு போய்டாத, உன் வாழ்க்கையில் கண்டிப்பா காதல் மலரணும்"

க்ருஷ், "கண்டிப்பா, உன்ன விட அழகா, அறிவுள்ள ஒருத்தி கிடைக்காம போய்டுவாளா என்ன?" என்றான் குறும்புடன் சிரித்தபடி.

Tuesday, April 25, 2006

பயணங்கள் முடிவதில்லை - II

முந்தையப் பதிவின் தொடர்ச்சி

வெள்ளி இரவு திருச்சியில் தங்கிய பின், மறுநாள் காலை 7 மணிக்கு திருச்சியிலிருந்து கிளம்பினோம். திருச்சியிலிருந்து சமயபுரம் போகும் வழியில் ஒரு கோவிலில் நவக்கிரக, தன்வந்திரி ஹோமங்கள் நடைப்பெற இருந்ததால், அங்கே செல்ல சமயபுரம் போகும் பஸ்ஸில் ஏறினோம். இருக்கையில் அமர்ந்தவுடன் வந்தது குரல், 'எவ்ளோ சீட்டு'? நமக்கு கூட யாரோ சீட்டு தராங்கன்னு பார்த்தா, இந்த ஊர்ல டிக்கட்ட தான் சீட்டுன்னு சொல்றாங்க. பஸ் கிளம்பினது தான் தெரியும், எதிர் சீட்டுல இருந்த என் அப்பாவைக் காணும், சுத்தி முத்தி பார்த்தா, 'நான் இங்கே இருக்கேன்'னு குரல் வருது(கீழே விழுந்து விட்டார்). அவரோட நல்ல வேளை, பஸ்சிலிருந்து கீழே விழல. அவ்வளவு வேகமா பஸ் ஓட்றாங்க இங்க(ரோலர் கோஸ்டர்ல ஏறின மாதிரி). உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு டிரைவரோட சண்டை போடலாம்னு எழுந்தா இன்னொரு ஆச்சரியம், நான் திட்றதுக்கு முன்னாடியே கண்டக்டர் அவர திட்ட தொடங்கிட்டார். இதே நம்ம ஊரா இருந்தா நெலமையே தலகீழ ஆகியிருக்கும் ('பெரிசு! ஒழுங்கா உக்கார மாட்ட நீ' என்று என் அப்பாவுக்கு ஒரு அர்ச்சனை நடந்திருக்கும்) ஒரு வழியா கோவிலுக்கு சென்று ஹோமங்களில் கலந்துக் கொண்டு பின் சாப்பிட்டு முடிக்க மதியம் 3 மணியாகி விட்டது.

அன்று இரவு 10 மணிக்கு தான் சென்னைக்கு வண்டி அது வரைக்கும் எங்கே போவது? என்று யோசித்தோம். சமயபுரம் போகலாம் என்று முடிவெடுத்த போது தான், அங்கே வந்திருந்த என் பெரியப்பா உறையூர் போகலாம் என்று கூறினார். உறையூர் 108 திவ்ய ஷேத்திரங்களில் ஒன்று, நானும் அங்கே சென்றதில்லை என்பதால் அங்கே செல்ல முடிவெடுத்தோம். உறையூர், அங்கேயிருந்து மிகவும் அருகில், 20 நிமிடங்களில் போய் விடலாம். அங்கே சென்ற பின் தான் தெரியும், அன்று அந்த கோவிலில் மிகவும் விசேஷம் என்று. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் அன்று அரங்கநாதர், இக்கோவிலின் தாயார் கமல நாச்சியாரைப் பார்ப்பதர்க்காக இங்கே நடந்தே(பல்லக்கில் தான்) வருவாராம். அது மட்டுமில்லாமல், தாயாருடன் ஏக சிம்மாசனத்தில்(பெருமாளும் தாயாரும் ஒன்றாக) அன்று ஒரு நாள் மட்டும் காட்சி தருகிறார். அதனால், அன்று ஒரு விசேஷமான நாள். நாங்கள் போனது மதிய நேரம் என்பதால், அரை மணி நேரத்தில் தரிசனம் பண்ண முடிந்தது. நேரம் ஆக,ஆக மிகவும் கூட்டம் சேரும் என்று பேசிக்கொண்டார்கள். எனவே ஒரே நாளில், ஒரே இடத்தில், அரங்கநாதரையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்.

உறையூரில் மற்றொரு விசேஷம் வெக்காளியம்மன் கோவில், நாச்சியார் கோவிலில் இருந்து ஆட்டோவில் போனால் 5 நிமிடங்களில் போய் விடலாம். இந்த கோவிலின் தனித்தன்மை என்னவென்றால், இங்கே வீற்றிருக்கும் வெக்காளியம்மனுக்கு சன்னதியில் கூரை கிடையாது, எவ்வளவு வெயில் அடித்தாலும், இடி மழையாக இருந்தாலும் கூரை போட்டு மூடுவதில்லை. இங்கேயும் நன்றாக தரிசனம் ஆனது. மறுபடியும் பஸ் பிடித்து திருச்சி வந்தோம் (இந்த ஊர் பஸ்ஸில் இரண்டு கண்டக்டர்கள் இருக்காங்க:). அன்று இரவு 10 மணிக்கு மறுபடியும் மலைக்கோட்டை விரைவு வண்டியில் சிங்கார சென்னை நோக்கி பயணம். சென்னையில் கால் வைத்து பேரம் பேசி, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்த பிறகு தான், வீட்டுக்கு வந்த உணர்வே வந்தது :)

Friday, April 21, 2006

பயணங்கள் முடிவதில்லை - 1

ரொம்ப நாளாகவே ஒரு பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அதை இப்பொழுது இந்த பதிவின் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு வியாழன் இரவு மலைக்கோட்டை விரைவு வண்டியில் தொடங்கியது எங்கள் பயணம்(நான்,என் அப்பா, அம்மா மட்டும் தான், என் தம்பியெல்லாம் வரவில்லை). மறுநாள் 7.30 மணிக்கு கும்பகோணம் வந்தடைந்த நாங்கள்,முதலில் சக்தி முற்றம் செல்லத் திட்டமிட்டிருந்தோம். ரயில் நிலையத்திலிருந்து 15 ரூபாய் கொடுத்தால், பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் போய் விடலாம். அங்கேயிருந்து பட்டீஸ்வரம் செல்லும் பேருந்தில் ஏறினோம். கும்பகோணத்தில் எங்கு திரும்பினாலும் கோவில்கள். அது மட்டும் இல்லை, இங்கே சந்து பொந்துக்குள்ளே எல்லாம் பஸ்சை விடுகிறார்கள். சில இடங்களில் பேருந்து ஜன்னலில் இருந்து கையை வெளியே நீட்டினால் தெருவில்(தெருவா அது? சந்து!) உள்ள வீட்டுக் கதவுகளைத் தட்டலாம், அவ்வளவு சிறிய தெருக்களில் எல்லாம் வண்டியை விடுகிறார்கள். சிறிது நேரத்திலேயே பட்டீஸ்வரம் வந்தடைந்தோம். அங்கேயிருந்து 5 நிமிட தூரத்தில் தான் சக்தி முற்றம். பல பேருக்கு அந்த கோவில் பற்றி தெரியவில்லை. 'பூமியில் அவதரித்த சக்தி, சிவனை வேண்டித் தவம் இருக்கும் பொழுது, சிவன் அக்னி பிழம்பாய் தோன்ற, வந்திருப்பது சிவன் என்று உணர்ந்த சக்தி அக்னியைத் தழுவுகிறார். உடனே அக்னி, சிவலிங்கமாக மாறி விடுகிறது.' இது தான் ஸ்தல புராணம். எனவே இந்த கோவிலில் சிவலிங்கத்தை தழுவிக் கொண்டு நிற்கும் சக்தியே மூலவர் . இதைத் தவிர ஒரு சிவன் சன்னிதியும், அம்பாள் சன்னிதியும் தனியாக உள்ளன. இந்த ஸ்தலத்திற்கு அகத்தியரே வருகை தந்ததாக வரலாறு, எனவே மிக பழமை வாய்ந்த கோவில். இங்கே அபிஷேகம் ஏற்பாடு ஆகி இருந்ததால் அதை முடித்துக் கொண்டு பட்டீஸ்வரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

பட்டீஸ்வரம் கோவிலில் விஷ்ணு துர்க்கைக்கு அப்பொழுது ராகு கால அபிஷேகம் நடந்துக் கொண்டிருந்தது. விஷ்ணு துர்க்கை சுமார் 10 அடி உயரமாய், விஷ்ணுவைப் போல், கையில் சங்கு,சக்கரம் மற்றும் வாசலில் துவார பாலகர்களோடு ஆஜானுபாகுவாக உள்ளார். இந்த கோவிலின் ஸ்தல புராணம் தெரியவில்லை. அங்கிருந்து திரும்பவும் கும்பகோணம் வந்து,அங்கிருந்து திருச்சி நோக்கி பயணித்தோம். மூன்றரை மணி நேரப் பயணம் ,அதுவும் சுட்டெரிக்கும் 12 மணி வெயிலில். ஒரு வழியாக மதியம் மூன்றரை மணிக்கு திருச்சி போய் சேர்ந்த நாங்கள், பயணக் களைப்பால் மலைக்கோட்டையை பார்க்க முடியவில்லை.(ஏற்கனவே பல முறை பார்த்துவிட்டாலும், இந்த முறை பார்க்க முடியாதது வருத்தமே, என்ன பண்றது?). அன்று இரவு திருச்சியில் தங்கிவிட்டோம்.

தொடரும்.....

Tuesday, April 18, 2006


Friday, April 14, 2006

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்்அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Wednesday, April 12, 2006

'ஓ(ட்டு) போடு'இந்த தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ சினிமா செய்தி என்று நினைத்து விடாதீர்கள். இது தேர்தல் செய்தி. நம் எல்லோருக்கும் 'ஓ போடு' தெரியும், ஆனா '49-ஓ போடு' தெரியுமா? 49-ஓ என்பது பஸ் ரூட் அல்ல. அது 1961-ம் ஆண்டு சட்டமான தேர்தல் விதியில் ஒரு பிரிவு.

ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன?எல்லாம் ஒன்னு தான்னு நினைத்து ஓட்டு போடாமல் இருக்கும் மகா ஜனங்களே, உங்க ஓட்டு எல்லாம் கள்ள ஓட்டா போக ஏன் விடணும்? இந்த சட்டத்தின் படி, நீங்கள் வாக்குச்சாவடிக்குப் போய், 49-ஓ படி யாருக்கும் ஓட்டளிக்க போவதில்லை என்று கூறினால், அதற்கென்று இருக்கும் ஒரு படிவத்தை உங்களுக்குத் தருவார்கள். அதை பூர்த்தி செய்து கொடுத்து விட்டால்,வேலை முடிந்தது. இந்த சட்டத்தைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. இதைப் பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த 'ஓ' போடு என்ற இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் உள்ள எழுத்தாளர் ஞாநி அவர்கள், ஒரு பத்திரிக்கையில் இதை பற்றி கூறியுள்ளார்.

இந்த சட்டத்தில் உள்ள மிக முக்கியமான பயனையும் இவர் பின் வருமாறு விளக்குகிறார், "ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை விட அதிகமான ஓட்டு 49-ஓவுக்கு விழுந்தால், அந்த தேர்தல் செல்லாது, அதனால் மறு தேர்தலில் முதலில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் மறுபடியும் போட்டியிட முடியாது." இத்தனை நாளாக இருந்த இந்த சட்டத்தை பற்றி எந்த அரசியல்வாதியும் வாயே திறக்கவில்லை. இந்த சட்டத்தை பயன்படுத்தும் வகையில் ஓட்டு இயந்திரத்திலேயே ஒரு பொத்தானை வைக்குமாறு தொடுக்கப்பட்ட வழக்குகள், இரண்டு வருடமாக நிலுவையில் உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாவது இந்த வசதி வந்து விட்டால், கண்டிப்பாக வோட்டு போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதைப் பற்றி மேலும் அறிய இந்த இணையதளத்துக்குச் செல்லுங்கள். எனவே எல்லோரும் ஓட்டு போடுங்கள், நம் உரிமையை நிலைநாட்டுங்கள்.

Thursday, April 06, 2006

காரணப் பெயர்கள்!


பட்டங்கள் வாங்குகிறோமோ இல்லையோ, பட்டப்பெயர்கள் வைக்காம

இருக்கமுடியுமோ? நான் காலேஜ்ல சேரும் போது எங்க க்ளாஸ்ல 70 பேர் இருந்தாங்க(ரெண்டு மாசம் கழிச்சுப் பார்த்தா, அதுல பாதிய காணும்). எல்லாரும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதிட்டு எதுக்கும் இருக்கட்டும்னு காலேஜ்ல சேர்ந்துட்டாங்க. அதனால ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுகம் அறிமுகம். இப்டியா ஒரு மாசத்துக்கு திருவிழால தொலஞ்சுப் போன கொழந்தப் போல, பேந்த பேந்த முழிச்ச எனக்கு ஒரு வழியா பிரண்ட்ஸ் செட் ஆனாங்க. எங்க செட்ல மொத்தம் ஏழு பேரு. நாங்க பண்ணின அட்டகாசம் பத்தி சொல்லனும்னா அதுக்கு தனியா ஒரு ப்ளாகே போடனும். எங்க எல்லாருக்கும் பட்டப்பெயர்கள் உண்டு.

1. மிஸ் சுறுசுறுவர்த்தி:


எப்போ வருவா, எப்போ போறான்னே தெரியாது, அப்டியே மின்னல் மாதிரி வந்துட்டு போய்டுவா. காலேஜ்ல கடைசி பீரியட் ஆரம்பிக்கும்போதே மூட்டை முடிச்சு கட்ட ஆரம்பிச்சிடுவா:) கிளாஸ் முடிஞ்ச அடுத்த செகண்ட் காலேஜ் வாசல்ல இருப்பா. ஒரு வாட்டி கிளாஸ் முடிஞ்சு லெக்சரர் போறதுக்கு முன்னாடியே வெளியில போய் சாதனை படைச்சவ. இவள் தான் எங்க கிளாஸ் சுறுசுறுவர்த்தி.


2. மிஸ். கேணை கிறுக்கி:


இவ கிட்ட போய் நம்ம காலேஜ்க்கு பில் கிளிண்டன் வரார்னு சொன்னா கூட, அப்பிடியா, நமக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருவாரான்னு கேட்கும். அவளை போட்டு பயங்கரமா வாருவது தான் எங்க பொழுதுபோக்கே. ஆனா ரொம்ப நல்ல பொண்ணு, எங்க ரவுசு எல்லாத்தையும் தாங்கும் ரவுசு தாங்கி இவள். இப்ப ஒரு டீச்சரம்மா இவங்க.

3. மிஸ் சொபிஸ்டிக்கேடட்:


இவங்க எல்லா விஷயத்தையும் ஒரு நாசூக்காக தான் அணுகுவாங்க. லோக்கல் பாஷைல பேசிக்கிட்டே இருக்கும் போது திடீர்னு பீட்டர் விடுவா.என்னடான்னு பார்த்தா, யாராவது பசங்க தாண்டிப் போயிருப்பாங்க, இல்லேன்னா யாராவது வேற கிளாஸ் பொண்ணுங்க போயிருப்பாங்க. ஆக மொத்தத்தில் ஏரியாக்குத் தகுந்தபடி பாஷை மாற்றும் திறமை படைத்த சகலகலாவல்லி இவங்க.இவங்களும் டீச்சரம்மா தான்.


4. மிஸ் நெகட்டிவ்:


இன்னிக்கு திங்ககிழமைன்னு நாங்க சொன்னா, நல்லா தெரியுமா, அப்ப நேத்திக்கு சண்டேவா? நல்லா தெரியுமான்னு? போட்டு எங்களை கொழப்பிடுவா. ஏதாவது ஒரு தியரம்க்கு நாங்க ஆன்சர் கண்டுபிடிச்சா, இது தான் அதுவா? இல்ல, அது தான் இதுவா? அப்டீனு விசு மாதிரி குழப்பி, எப்பவுமே நெகட்டிவா திங்க் பண்ணி தானும் குழம்பி, எங்களையும் கதிகலங்க வைத்து புண்ணியம்
கட்டிக்கொள்வாள்.நன்றாக கவிதை எழுதுவாள், அதனால் அந்த விஷயத்தில் எனக்கு ரொம்ப தோஸ்த்து.

5. மிஸ் நோ டர்னிங் பேக்:

எங்க க்ரூப்லேயே ரொம்ப பாவம் இவங்க தான். ஏதோ 'ஒரே எரியா 'பாசத்துல கண்மூடித்தனமா எங்களோட சேர்ந்துட்டா இவ. பாவம் ரொம்ப வருத்தப்பட்ருப்பா, எங்க ரவுச தாங்க முடியாம. காலேஜ் முடிஞ்சு நாங்க எல்லாம் ஒன்னா தான் கெளம்புவோம். நாங்க எல்லாம் "ஆமா வீட்டுக்கு போய் என்ன கிழிக்கப்போறோம்"னு மெதுவா நடப்போம். ஆனா இவ மட்டும் நடக்க ஆரம்பிச்சா போதும், நோ டர்னிங் பேக் தான். ஸ்டாப்பிங் போய் தான் திரும்பிப் பார்ப்பாள்.

6. மிஸ் பங்ச்சுவாலிட்டி:

எட்டு மணிக்கு வா'ன்னு சொன்னா, அடுத்த நாள் எட்டு மணிக்கு வந்து நிப்பாங்க இந்த மேடம். அதனால் எங்கயாவது போகணும்னா, நாங்க இவளுக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடியே வரச் சொல்வோம், அப்ப தான் ஒரிஜினல் நேரத்துக்கு வந்து நிப்பா. இவ கல்யாணத்துக்காவது ஒழுங்கான நேரத்துக்கு வராளா பாக்கலாம்னு நாங்க பெட் கட்டியிருக்கோம்னா பார்த்துக்கோங்க இவ நேரம் தவறாமையின் மகிமையை. அந்த மாதிரி ஏதாவது நடந்தால் உலகத்தின் எட்டாவது அதிசயம் அது தான்.


7. மிஸ் தமிழ்த்துறை:

வேற யாரு? அடியேன் தான். யாராவது வந்து என் கிட்ட 'எனக்கு டமில் அவ்லவா வராது' சொன்னா போதும் எனக்கு அப்டியே கோவம் வரும் பாருங்க, அவ்வளவு தான், அன்னிக்கு என் கிட்ட மாட்டினவ காலி, அப்புறம் என்ன எங்கயாவது பார்த்தா, அப்பிடியே எஸ்கேப் தான். அப்பப்ப கவிதை எழுதறேன்,கட்டுரை எழுதறேன்னு சொல்லி தமிழ்த் துறைக்கு போய் விடுவேன். அவங்க என் தொல்லை தாங்காம , என் கவிதை ரெண்ட காலேஜ் மாகஸின்ல போட்டாங்க. தமிழ் எக்ஸாம் போது மட்டும் எல்லாருக்கும் என் மேல ஒரு பாசம் பொங்கும் பாருங்க,அப்டியே பொங்கி வழியும். எப்பப் பாரு தமிழைத் தாங்க வந்தவ மாதிரி பேசும் காரணத்தால் இந்த காரணப் பெயர்.

இதெல்லாம் படிச்சுட்டு எங்கள பத்தி தப்பா நெனச்சுடாதீங்க. எங்க ஆட்டம் எல்லாம் காலேஜ் உள்ள தான். பொது இடங்களில் எல்லாம் நாங்க ரொம்ப நல்ல பொண்ணுங்க :) எங்க சமத்த பத்தி 27D பஸ் பத்தி பத்தியா சொல்லும், ஏன்னா நாங்க கிளாஸ்ல இருந்த நேரத்தை விட 27Dல பயணித்த நேரம் தான் அதிகம்.


note: i am going on a short trip to trichy and sorrounding places. so meet u on sunday.bye......................................................:)

Wednesday, April 05, 2006

NARMADA BACHAO

Raising the height of the Narmada dam in Gujarat, has been facing a lot of difficulties and controversies for a long time. The dam has been raised from 110 metres to 113 metres. The narmada bachao andolan(NBA) which is headed by Medha Patkar for the rehabilition of the people affected by this project has pointed out that more than 35,000 families still remain to be rehabilitated. now, the leader of NBA and two others have gone on fasting for a week. As per supreme court orders, the displaced families should be resettled atleast six months in advance of raising the dam height. but the interim report of the monitoring agency set by the maharashtra govt, has stated that a considerable number of people have not been rehabilitated. people lives really gets devastated when they are thrown out of their land, that too without any proper rehabilition or resettlement.Ms.Patkar has rightly said that "You cannot have handful of people take decisions without the participation of those affected and those asked to sacrifice their all."