Thursday, July 27, 2006

ஆறு மனமே ஆறு

அம்பியை அசினுக்குத் தம்பியாக்கி அகில உலகப் புகழடைந்து, தற்போது அம்பிக்கு தங்கையாக ஆஞ்சலினாவை டிக்ளேர் செய்யலாமா? என ஆழ்ந்து ஆராய்ந்துக் கொண்டிருக்கும் அருமை நண்பர் கோபாலன் மிகவும் அடக்கத்துடன்(!) கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பதிவு.


ஆறு கேள்விகள்

1. கொளுத்தும் வெயிலில் கச்சேரி செய்யும்போது கூட எப்படி இவர்களால் பட்டுப் புடவையும்(அதுவும் புடவை முழுக்க சரிகையோடு கிப்ட் பேப்பர் மாதிரி), கழுத்து தொங்கிவிடும் அளவிற்கு கனமான நகைகளும் போட்டுக் கொண்டு கச்சேரி செய்ய முடிகிறது? காட்டன் புடவையும், எளிமையான அலங்காரமும் கூடாதா என்ன?


2. 'உம்' 'அப்புறம்' 'நீ தான் சொல்லணும்' 'அய்யோ நான் மாட்டேன்பா' இப்படி ஸ்டாண்டர்ட் டயலாக்குளையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாறி மாறி இந்த காதலர்களும், வுட்பி காதலர்களும் மாத்தி மாத்தி எத்தனை நாளைக்கு சொ(ஜொ)ல்லிக்கிட்டே இருப்பாங்க?


3.யார் யாரை பழிவாங்கறாங்க?, யார் யாரோட ஓடிப் போறாங்க?, எவருக்கு ரெண்டு பொண்டாட்டி?,அந்த ரெண்டாவது பொண்டாடிக்கு பிறந்த குழந்தை யாரோடது? இப்படி தான் எல்லா சீரியலும் இருக்கு. அதுவும் வாரத்துக்கு ஒரு முறை பார்த்தாலே கதை புரிஞ்சுடும். இந்த கண்றாவியெல்லாம் எப்படி நம்ம மக்கள் தினமும் பாக்கறாங்க?


4.ஒரு நாளைக்கு எத்தனை பேரு ஆக்சிடெண்டில் தலைகவசம் அணியாததால் பலியாகிறார்கள் என்று என்னத் தான் தொண்டைத் தண்ணி வத்த கத்தினாலும் சரி, விளம்பரங்கள் கொடுத்தாலும் சரி, எனக்கு என் தலையை விட என் தலைமுடி தான் முக்கியம் எனக் கூறி ஹெல்மட் அணியாமல் செல்பவர்களை என்ன செய்வது?


5.'அந்த பொண்ணு கறுப்பா இருந்தாலும் களையாக இருப்பாள்'. இது நான் அடிக்கடி கேள்விப்படுகிற ஒரு வாசகம். அதென்ன கறுப்பாக இருந்தாலும்? கறுப்பு என்றால் களையாக இருக்க கூடாதா? இல்லை களையாக இருப்பவர்கள் எல்லாம் சிவப்பானவர்களாகத் தான் இருக்க வேண்டுமா? (உண்மையைச் சொல்லப் போனால் என்னையறியாமல் நானே சிலரை வர்ணிக்க இப்படி சொல்லியிருக்கிறேன். இதை தற்போது தவிர்த்து வருகிறேன்)


6. நம் சினிமாக்களில் ஏன் ஒரு கதாநாயகி திருமணமானவுடன் கதாநாயகி பதிவியிலிருந்து ஒதுக்கப்படுகிறார்?(சில விதிவிலக்குகள் உண்டு) ஆனால் கதாநாயகர்கள் வயசாகி தாத்தா ஆனா கூட கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.


எனக்கு பிடித்த ஆறு பேர்.(இதில் எந்த விதமான வரிசைப்படுத்தலும் இல்லை. எல்லாரையும் சமமாகப் பிடிக்கும்)


1.இளையராஜா

இவர் இசையின் ராஜா. படித்தவர் முதல் பாமரர் வரை இவருக்கு ரசிகர்கள் உண்டு. இன்றும் இசையுலகில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருப்பவர். இவருடைய பாடல்கள் அருமை என்றால் என்னைப் பொறுத்தவரைக்கும் அருமையோ அருமை இவருடைய குரல். இவர் பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்தவை,

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ - தாய் மூகாம்பிகை
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட - மெட்டி
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல - அவதாரம்.2. சுஜாதா

நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் எல்லா விதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்துபவர். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறும், அதே சமயத்தில் ஆழ்வார்கள் , சிலப்பதிகாரம், பிரம்ம சூத்திரம் இவற்றைப் பற்றியும் எழுதுபவர். எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுத தெரிந்தவர். இவர் எழுதிய 'எப்பொழுதும் பெண்' என்ற நாவலைப் படிக்கும் போது, எப்படி ஒரு ஆணாக இருந்து இவரால் இப்படி எழுத முடிந்தது என நான் வியந்ததுண்டு.3.வாஸந்தி : இவரும் ஒரு எழுத்தாளர். இவருடைய எழுத்துக்களை கடந்த ஒரு வருடமாகத் தான் படிக்க ஆரம்பித்தேன். சமூக சிந்தனை மிக்க கதைகளை எழுதுபவர். இவர் கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் பற்றித் தான் இருக்கும். மொத்தத்தில் என்னை யோசிக்க வைக்கும் எழுத்துக்கள் இவருடையது. இவருடைய எழுத்துக்களில் பிடித்தது 'வேர்களைத் தேடி', 'யுகசந்தி' என்று சொல்லிக்கொண்டே போகலாம்.4.ஜெயலலிதா

இவருடைய எல்லா அரசியல் கருத்துக்களையும் ஒத்துக் கொள்ளமுடியாவிட்டாலும், இவருடைய கட்சித் தொண்டர்களை அடிமைகள் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும், இந்த பாழாய்போன அரசியலில் பழம் தின்னு கொட்டைப் போட்ட அரசியல்வாதிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இவருடைய தைரியம் ஒன்று தான் என்னைக் கவர்ந்தது.5. பாரதியார்

இவரைப் பிடிக்காதவரும் படிக்காதவரும் எவரும் இல்லை என்பதே என் கருத்து. இவருடைய எல்லா பாடல்களையும் படித்து கரைத்து குடித்துவிட்டேன் என்று பொய் எல்லாம் சொல்லப்போவதில்லை. என்னுடைய கடினமான நேரங்களில் நான் துணைக்கழைப்பது பாரதியின் 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லேயே' என்ற வரிகள் தான்.6.கமல்ஹாசன்
இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இந்த பதிவு பத்தாது. ஆரம்ப காலத்தில் எல்லா தமிழ் பட ஹீரோக்கள் மாதிரி மரத்தைச் சுத்தி டூயட் ஆடி பாடிக்கிட்டு இருந்தவர், ஆனால் பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்களின் படங்களின் மூலம் ஒரு தனித்துவத்தை அடைந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் நடித்ததில் பிடித்தது, அன்பே சிவம், ஹேராம், மகாநதி, நிழல் நிஜமாகிறது..................................நீளமான லிஸ்ட்

Sunday, July 16, 2006

அப்தபூர்த்தி

சென்ற வருடம் ஒரு சுபயோக சுப தினத்தில் துவக்கப்பட்ட இந்த ப்ளாக் இன்று முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது. ஜூன் 2005இல் நாங்கள் இணையத் தொடர்பு பெற்றோம். முதலில் என் தம்பியைத் தவிர வேறு யாருக்கும் இதில் ஆர்வம் இல்லை. எனக்கும் தான், ஏனென்றால் சாட்டிங் செய்ய எனக்குப் பிடிக்காது, ஈ-மெயில் அனுப்பும் அளவுக்கு நண்பர்களும் கிடையாது. அப்பொழுது தான் ஹிந்து நாளிதழில் ப்ளாக் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதைப் படித்தவுடன், ப்ளாக்கரில் நுழைந்து நிறைய பதிவுகளைப் படித்தேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன், தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று.

என் தமிழ் ப்ளாக்கிற்கு மனம் - ஓர் உண்மை முகம் என்று ஏன் பெயர் வைத்தேன் என்று இன்று வரை புரியவில்லை. ஆங்கிலப் பதிவுக்கு என் இன்னொரு பெயரான வேதவல்லி என்பதைச் சுருக்கி வேதா என்று வைத்தேன்.

என் முதல் பதிவு அப்பொழுது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு
வழக்கைப் பற்றியது. என் முதல் பதிவுக்கு பின்னூட்டம் ஒரே நபர் ஒரு வெளிநாட்டவர்.

யாரும் பின்னூட்டம் இடவில்லையென்றாலும் என் ஆர்வம் காரணமாக அந்த மாதம் முழுவதும் தொடர்ந்து எழுதினேன். ஆர்வம் மிகவும் அதிகமாகிப் ப்ளாகரில் முழுகி முத்தெடுத்த எனக்கு ஜூலை மாதத்தின் தொலைப்பேசி பில் வச்சது ஆப்பு.

அதாவது நாங்கள் dataone connection குடுத்தப் போது ஆரம்பக் கால சலுகையாக, ஜுன் மாதம் முழுவதும் downloading free என்று சொன்னதை நான் ஜூலை மாதம் எனத் தவறாகப் புரிந்துக் கொண்டதால் வந்த வினை, அதுவும் எவ்வளவு தெரியுமா? இண்டெர்நெட்டுக்கு மட்டும் 1500 ரூபாய். ஆனால் அந்த பில்லை தனியாக அனுப்பி புண்ணியம் கட்டிக் கொண்டது bsnl. இன்று வரை என் அப்பாவுக்குத் தெரியாது, அப்போ பில் யார் கட்டினது யார்? வேறு யார்? இதுக்காகவே சம்பாதிக்கற என் தம்பி தான்:)

இதிலெல்லாம் மனம் தளராத நான்(ஆமா நாமளா பில் கட்டப் போறோம்?) மற்றவர்கள் பிளாக்கிற்கு நாம போனாத் தான், நம்ம ப்ளாகிற்கு யாராவது வருவாங்கன்னு புரிஞ்சது, பலன் முதல் முதலாக வெளி நாட்டில் வாழும் நம் நாட்டவர் kaps,balaji(இவர் திரு.நாராயணன் அவர்களின் ப்ளாக் மூலம் எனக்கு அறிமுகமானவர்) பின்னூட்டம் இட ஆரம்பித்தனர்.

இப்படியாக ஈ ஓட்டிக் கொண்டிருந்த என் ப்ளாகிற்கும் இந்த
பதிவைப் படித்து அதை தன் பதிவில் லிங்க் குடுத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் ரவி(எல்லாம் எனக்கு ஒரு ஓசி விளம்பரம் தான்)

இதுற்கு பிறகு என் ப்ளாகிற்கு வரவு அதிகரித்தாலும் நிறைய forwarded mails பதிவா போட ஆரம்பிச்சேன். அப்புறம் அதுவும் போரடிச்சுப் போச்சு. நான் கல்லூரியில் படித்த போது எழுதின ஒரு
கவிதையையும், ப்ளாக் ஆரம்பித்த பின் எழுதிய ஒரு கவிதையையும்ஆங்கில ப்ளாகிலேயே பதிவு செய்தேன். அதன் பின் எல்லா கவிதைகளையும் என் தமிழ் ப்ளாகில் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

அதன் பிறகு பொது விஷயங்களுடன் என்
அனுபவங்களையும் எழுத ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்களாக என் பதிவுகளைத் தமிழில் எழுத ஆரம்பித்துள்ளேன்.

ப்ளாக் மூலம் கிடைத்த நட்புகள்(என் ப்ளாகர்ரோல் லிஸ்ட்படி வரிசைப்படுத்துகிறேன்)

அம்பி : நகைச்சுவையாக எழுதுபவர்(நினைப்பு தான்). தற்போது சிஷ்யனால் 'அசினின் தம்பி 'என நாமகரணம் சூட்டப்பட்டு அதற்காக துக்க சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருப்பவர்.

அம்மு : அருமையான கவிதைகள் எழுதுபவர். இவருடைய கவிதைகள் என்னைக் கவிதை எழுத தூண்டின எனக் கூறலாம்.

அஷோக் : இவர் ஒரு ஆர்க்கிடெக்சர். அப்கானிஸ்தானில் தைரியமாக வேலைச் செய்துக் கொண்டு தன் ப்ளாகில் கவிதைகள் எழுதி தள்ளுபவர்(ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான்)

அனாமிகா : என்னுடைய கசின், ப்ளாகரில் நான் தான் அறிமுகப்படுத்தினேன். தற்போது குடும்ப சாகரத்தில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறாள், அதனால் ரொம்ப எழுதவதில்லை(இவள் கணினியை ஆன் செய்தவுடன் இவளுடைய பையன்(9 மாதம்) வந்து அணைத்துவிடுவானாம்)

அர்ஜுன் : இவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், ஞானக்கிறுக்கன். விரைவில் திருமணம் என்பதால் தற்போது ப்ளாகில் கொஞ்சம் அடக்கி வாசிப்பவர்.(அண்ணே, எப்ப கல்யாணச் சாப்பாடு?)

பாலா : ப்ளாகில் புதிதாக நுழைந்திருப்பவர், பாண்டிசேரிக்காரர். சென்னை தமிழில் தடுமாறிய இவருக்கு எங்கள் பின்னூட்டங்களில் வாயிலாக இலவச ட்யூஷன் எல்லாம் எடுத்தோம். தற்போது இவர் தங்கியிருக்கும் நாட்டின் விழாவைப் பற்றியும், முக்கியமாக குட்டைப் பாவாடைகள் அணிந்த குட்டிகள் பற்றியும் எழுதி பிரபலமானவர்.

பாலாஜி : நான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் வந்து என் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டவர். சமூக சிந்தனையுடன் எழுதுபவர்.

டெல்லி தமிழன் : லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இது நாள் வரைக்கும் நான் எழுதியப் பதிவுகளுக்கு சளைக்காமல்(ஒரே நாளில்) பின்னூட்டம் போட்டவர். நல்ல கதை எழுதுவரும் கூட. கொஞ்ச நாளாக ஆளைக் காணவில்லை(லீவ் லெட்டர் வேற எழுதி வைத்துள்ளார்)

கீதா : தனக்கு வயதாகி விட்டதே என்று கொஞ்சம் கூட மனம் தளராமல் 'நான் சின்னப் பொண்ணு' எனக் கூறிக் கொண்டு சளைக்காமல் எழுதுபவர். இப்பொழுது கூட ஒரு ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

கோபாலன்: குருவை 'அசினின் தம்பி' எனக் கூறி குரு துரோகம் செய்தவர். ஆனாலும் கூட இந்த 'குரு சிஷ்யன்' கூட்டணி ரொம்ப கேடியான ஒரு கூட்டணி, சமயத்துல ஒருத்தர ஒருத்தர் கால வாரிக்கிட்டாலும், திடீர்னு குருவுடன் ஒன்னு சேர்ந்து நமக்கு ஆப்பு வச்சுடுவார் இவர்.

ஜீவன் : அன்புத் தம்பி ஜீவனின் ப்ளாகைப் படித்தால் போதும் நாட்டு நடப்பு அத்தனையும் தெரிந்து விடும். சமூக சிந்தனை மிக்க ஒரு இளைஞர்.

கார்த்திகேயன் : கனவு தேசத்தில் வாழ்பவர், அதுவும் அசினுடன். சமீபத்தில் நடந்த குரு துரோகத்தினால் மிகவும் மகிழ்ந்தவர். கீதாக்கா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டில் என் தலைமையில்(என் தலை மேலே ஆடாம இருந்தா சரி தான்)அம்பியுடன் மோதப் போகிறவர்.

வைஷ்ணவ்: ஆங்கிலத்தில் கவிதை எழுதி கலக்குபவர். என்னுடைய கவிதைகளைத் தவறாமல் படித்து விமர்சிப்பவர்.

கார்த்திக் : இவருடைய கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. என் கவிதைகளை மிகவும் மனம் திறந்து பாராட்டுபவர்.

நாகை சிவா: அப்பப்ப வந்து ஆப்பு வைத்துவிட்டுப் போவார், சிட்டுக் குருவியையெல்லாம் வைத்து பதிவு போட்டு அதுக்கும் 100 பின்னூட்டங்களுக்கு மேலே வாங்குபவர்.

நெய்பர்: ரொம்ப நாட்களாக எழுதிக் கொண்டிருந்தவரைக் காணவில்லை. என்னுடைய கவிதைகளை ரசிப்பதோடு மட்டுமில்லாமல் பல முறை சண்டைப் போட்டிருக்கிறோம்(என் கவிதைகளில் அவரால் ஒத்துக் கொள்ள முடியாத கருத்துக்களை முன் வைத்து போடும் ஆராக்கியமான சிந்தனைச் சண்டைத் தான்)

ராம் :முதலில் இருந்தே என் பதிவுகளைப் படிப்பவர். இவரும் சமூக சிந்தனைக் கொண்ட பதிவுகளை எழுதியவர்.

ராஜு,பெளர்ணா: ஆரம்பத்தில் என் பளாகிற்கு வந்து பின்னூட்டம் போட்டவர்கள். இப்பொழுது அதிகம் வருவதில்லை.

ரவி : மாதா மாதம் ஒரு பதிவை தவறாமல் போட்டு விடுவார், அதுவும் இவருக்கு யாராவது ஞாபகப்படுத்துவார்கள். ஒரு பதிவென்றாலும் நச்சென்று எழுதுபவர்.

சச்சின் கோப்ஸ்: பேப்பர், பேனா, ரப்பர் என்று எது பற்றி வேண்டுமானாலும் எழுதுவார். இவரால் மட்டும் தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என எனக்குத் தோணும்:0 அடுத்து என்னவோ;)

ஷ்ரீ : என்னத்த சொல்ல? கொலு சீசனெல்லாம் முடிஞ்சப்புறம் தான் இவருக்கு கொலுப் பத்தி பதிவு போடணும்னு தோணும், இவரும் குடும்ப (இ)ஸ்திரி ஆகிவிட்டதால் ஒன்னும் சொல்றதுக்கில்ல:)

ஸ்மைலி: ரொம்ப நாளாகவே இவர் பெயரைப் பார்த்து ஒரு பெண் என்றே நினைத்தேன். அப்புறம் ஒரு பதிவுக்கு இவருடையப் பின்னூட்டதைப் பார்த்தவுடன் தான் என் தவறுப் புரிந்தது. இதை அவரிடமே சொன்னேன்(மனதில் என்னைத் திட்டியிருப்பார் என நினைக்கிறேன்)

சுபா: ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் என்ற ரீதியில் போட்டுத் தள்ளுபவர், முதல் போஸ்ட் படித்து பின்னூட்டம் கொடுப்பதற்குள் அடுத்த போஸ்ட் போட்டு அசத்துபவர். சமீப கால நண்பி.

லாஜிக் : இவர் எழுதும் கதைகள் எனக்குப் பிடிக்கும். என் கவிதைகளை மிக அழகாக விமர்சனம் பண்ணுபவர். கொஞ்ச நாட்களாக என் ப்ளாக் பக்கம் வரவில்லை:(

ச்யாம் : அன்பு தங்காச்சி எனக்காக அரங்கம் கட்டப் போவதாக சொல்லியிருக்கும் அருமை அண்ணாச்சி.(சீக்கிரம் முடிச்சிடுங்க அண்ணே, நம்ம மாநாட்ட கூட்ட வேண்டாமா?)

உஷா : அருமை நண்பி, கொடுமைகளின் உறைவிடம். தற்போது கையில் கொடுமைக் கதைகள் எதுவும் இல்லாததால், கொடுமைக்கே கொடுமையா? என்று சக ப்ளாகர்கள் எல்லோரும் இவருக்கு கொடுமைக் கதைகள் கிடைக்க வேண்டும் என வேண்ட ஆரம்பித்துவிட்டார்கள்:)

வத்சன் : இவர் தற்போது தீவிரமாக சமூக சிந்தனைகளில் மூழ்கி விட்டதால், அவர் ப்ளாகுக்கு இப்பொழுதெல்லாம் போவதில்லை(பின்ன நமக்கும் சமூக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்)

விஷி : இவரும் ரொம்ப நாளாக என் ப்ளாகிற்கு வருபவர். கொஞ்ச நாளா காணாம போயிட்டார்(ஏங்க உங்க ப்ளாக் தான் திடீர்னு காணாமப் போகும்னு பாத்தா நீங்களும் காணாம போய்ட்டீங்க?).இப்ப பேக் டூ பெவிலியன்:)

பி.கு: மேற்சொன்ன விஷயங்கள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், தயவு கூர்ந்து மன்னிக்கவும். யாராவது விட்டுப் போயிருந்தால், அவர்களும் மன்னிக்கவும்.

பி.கு.கு.: ஒரு ஆண்டு நிறைவு செய்ததிற்கே இவ்வளவு பில்டப்பா என நினைக்க வேண்டாம்.
நாளை என்ன நடக்கும் என யாமறியோம் பராபரமே. அதனால் இருக்கறவரைக்கும் நாமளும் சந்தோஷப் பட்டு மத்தவங்கள பத்தி நல்லதா(?) நாலு வார்த்தை சொல்லலாமேன்னு தான்:)

Monday, July 10, 2006

கிராமத்தை நோக்கி - II

மு.கு. : இது முன்பு போட்ட பதிவின் தொடர்ச்சி, முதல் பதிவைப் இங்கே பார்க்கலாம்.


திரெளபதி அம்மன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வரும் போது, முருகன் கோவிலில்அடுத்த கட்ட ப்ரார்த்தனை ஆரம்பம் ஆகி விட்டது. நாங்கள் அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.முத்லில் காவடி எடுத்துக் கொண்டு நிறைய சிறுவர்கள் ஆட ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக, மேள இசை உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த சிறுவர்கள் ஆடியதைப் பார்த்து நாங்களே ஆடிப் போய் விட்டோம்.

இசையின் வேகமும் சப்தமும் அதிகரிக்க அதிகரிக்க நம்மை அறியாமலே நாம் ஆட அரம்பித்து விடுவோம். கோவில் விழாக்களில் பெண்கள் சாமி ஆடுவதின் காரணம் இப்பொழுது தான் நன்றாக புரிந்தது. அடுத்து நடந்த நிகழ்ச்சி தான் இன்னும் சுவாரசியம். நாங்கள் ஊருக்குள் நுழையும் போது பார்த்த புது வண்டிகளைப் பூஜைப் போடத் தான் எடுத்து வந்திருக்கிறார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்பொழுது பார்த்தால் கார், வேன், டிராக்டர், என்று ஒன்று விடாமல் எல்லாவற்றையும் முதுகில் கொக்கியை மாட்டிக் கொண்டு இழுத்து வந்தார்கள்.

இதுவும் பிரார்த்தனை தானாம். இதை விட ஆச்சரியம், அந்த வண்டிகளை இழுக்கும் பொழுது உள்ளே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். இப்படியாக பூஜைக்குப் போன இடத்தில் ஒரு அழகான கிராமத் திருவிழாவைக் கண்டு களித்த நாங்கள் அடுத்து சென்ற இடம், என் இஷ்ட தெய்வமான நரசிம்மரின் திருத்தலங்கள்.

விழுப்புரம் வழியாக சென்னைக்கு வரும் வழியில் அமைந்துள்ள கோவில்கள் சிங்கிரி , பரிக்கல், பூவரசன் குப்பம். இந்த கோவில்கள் எல்லாம் மிக பழமை வாய்ந்தவை, ஆனால் சமீபகாலமாக இந்த கோவில்களைப் பற்றி பலரும் அறியும் வண்ணம் குமுதம் ஜோதிடத்தில் திரு ராஜகோபாலன் எழுதி வருவதால், பாழடைந்து இருந்த இவை புனர்நிர்மாணம் செயப்பட்டுள்ளன.

சிங்கிரி கோவில் நாஙள் போயிருந்த பொழுது மூடியிருந்தது. எனவே நேராக பூவரசன்குப்பம் சென்றோம். இது ஒரு சிறிய கோவில் தான். ஆனால் இங்கே வீற்றிருக்கும் நரசிம்மர் சக்தி வாய்ந்தவர். எனக்கு எந்த கோவிலுக்குப் போனலும் உடனே அதன் ஸ்தல புராணத்தை தெரிந்து கொள்வதில் தான் ஆர்வம். கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், நரசிம்மரின் மடியில் வீற்றிருக்கும் தாயார் எப்பொழுதும் பக்தர்களைப் பார்த்திருக்குமாறு தான் எல்லா கோவில்களிலும் சிலை அமைந்திருக்கும்.

ஆனால் இந்த கோவிலில் தாயார் ஒரு பக்கமாக அமர்ந்து, ஒரு கண் பெருமாளையும், மறு கண் நம்மையும் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். அது மட்டுமில்லாமல் பெருமாளுடைய சிலை உயரமும், தாயருடைய சிலை உயரமும் சரிசமமாக அமைந்து ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை வலியுறுத்துமாறு இருக்கிறது.

அங்கிருந்து நேராக பரிக்கல் சென்றோம். இந்த மூன்று கோவில்களுக்கும் போகும் வழி மிக மோசமாகத் தான் உள்ளது. பேருந்து வசதி எல்லாம் இல்லை. நாம் தான் வண்டி அமர்த்திக் கொண்டு செல்ல வேன்டும். பரிக்கல் கோவிலும் பழமை வாய்ந்ததாகவும், அதே சமயத்தில் மிக பெரியதாகவும் உள்ளது. நாங்கள் போன சமயம் கோவிலில் மின்சாரம் இல்லை, மாலை மங்கும் நேரத்தில், அழகிய தீப வெளிச்சத்தில், நரசிம்மரின் அருமையான தரிசனம்.

இந்த கோவிலில் உள்ள அஞ்சனேயர் சந்நிதியில் ஆஜானுபாகுவாக ரெட்டை ஆஞ்சனேயர் சிலைகள். இங்கே நவதானியம் பரப்பி நம் மனதில் எதையாவது வேண்டிக்கொண்டு அதை எழுதினால் பலன் உண்டு என ஒரு நம்பிக்கை. எல்லாரும் வேண்டிக்கொண்டு எழுத என் அண்ணன் மகளுக்கு வந்ததே ஒரு சந்தேகம், "அத்தை, தமிழ்ல எழுதணுமா? இங்கலீஷ்ல எழுதணுமா?" என்று கேட்டாள் (அவளுக்கென்று புதுசு புதுசா எதவது சந்தேகம் வரும்,அவளுக்கு நாங்க வைத்த பேர், கேள்வியின் நாயகி).

அப்புறம் அவளே ஒரு முடிவுக்கு வந்து தமிழிலேயே எழுதினாள். இப்படியாக கிராமத்தை நோக்கி ஆரம்பித்த எங்கள் பயணம், இனிதே முடிந்து சென்னையை நோக்கி பயணித்தோம்.

பி.கு. : இந்த பதிவு என் 75வது பதிவு, முதலில் ஒரு விழா எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நம்மை விட பழம் தின்னு கொட்டைப் போட்ட கேஸ்கள் நிறைய இருப்பதால், விட்டு விட்டேன். எனவே இங்கே வந்து பின்னூட்டம் இடும் ப்ளாக் கழக கண்மணிகளிடம் எந்த விழாவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்(ல்)கிறேன்:) (எல்லாம் ஒரு தன்னடக்கம் தானுங்கோவ்)

பி.பி.கு : என் அடுத்த பதிவு இன்னொரு ஸ்பெஷல் பதிவு, அது என்னன்னு யோசிச்சிண்டு இருங்க, 16ஆம் தேதி நெக்ஸ்டு மீட் பண்றேன்.:)


Tuesday, July 04, 2006

இரு வேறு துருவங்கள்

நேற்று திருவள்ளூர் செல்வதற்காக நான், என் அம்மா, என் தம்பி, ஆகியோர் ரயிலில்
ஏறினோம். எங்கள் பின் சீட்டில் நான்கு இளைஞர்கள் பார்ப்பதர்க்கு கல்லூரி மாணவர்களைப் போலிருந்தனர். அது வரை அமைதியாயிருந்த இடம் ஒரே சத்தமயமாகியது. அவர்கள் பேசியதிலிருந்து சமீபத்தில் தான் படிப்பைப் முடித்தவர்கள் போலிருந்தது. அவரவர் தேர்வில் வைத்திருந்த அரியர் பத்தி மிகப் பெருமையாக பேசிக் கொண்டார்கள். பின் சத்தமாகப் பாட்டுப் பாட ஆரம்பித்தனர். எங்களுக்கோ பயங்கர தொல்லை, அவர்கள் பேசியது, கம்பார்ட்மெண்ட் முழுக்க கேட்டது. பிறகு திடீரென்று பேச்சு அவர்களுடைய பெண் நண்பர்கள் பற்றித் திரும்பியது. அது வரை சாதாரணமாக இளைஞர்கள் அடிக்கும் அரட்டையாக இருந்தது, நாராசமாக ஆயிற்று. தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சர்வ சாதாரணமாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கோ ரொம்ப தர்மசங்கடமான நிலைமை. நான் தனியாக இருந்தால் கூட பரவாயில்லை, என் அம்மாவும் கூட வந்திருந்தார். நான் கம்மென்றிருந்தால், இந்த நாராசத்தையெல்லாம் கேட்க நேரும் என்பதால், என் அம்மாவிடம் பேசிக் கொண்டே வந்தேன். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் வேறு வழியில்லாமல் இந்த பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களின் அம்மாக்கள் மட்டும் இவர்களுடைய பேச்சைக் கேட்டிருந்தால், ஒரு லிட்டர் பினாயில் வாங்கி அவர்கள் வாயில் ஊற்றிக் கழுவியிருப்பார்கள். நானும் மாணவியாக இருக்கும் கால்த்தில் பேருந்தில நிறைய லூட்டி அடிக்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட பொறுப்பில்லாத்தனம் மிக்க கூட்டத்தை இப்ப தான் பார்க்கிறேன். ஒரு பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்னும் அடிப்படை விஷயம் கூடத் தெரியாத மாணவர்கள் எப்படி ஒரு பொறுப்பான குடிமகனாக முடியும்?(குடிக்கும் மகனாகத் தான் ஆக முடியும்) இவர்கள் நாராசமானப் பேச்சை வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. பொறுப்பில்லாத்தனத்தின் உச்சக் கட்டமான இந்த இளைஞர்களைச் சகித்துக் கொண்ட எங்களுக்கு, திருவள்ளூர் சென்றுத் திரும்பும் போது, வேறு அனுபவம் கிட்டியது.

இந்த முறையும் ஒரு இளைஞர் கூட்டம், ஆனால் காலையில் வந்தவர்கள் போல் இல்லாமல், அவர்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் வந்தார்கள். சிறிது நேரம் கழித்து வந்த ஒரு ஸ்டேஷனில் இரு இளைஞர்கள் ஏறினர். அவர்கள் கையில் உண்டியலும், சில அச்சடித்த காகிதங்களும் இருந்தன, சரி ஏதோ நன்கொடைத் தான் கேட்க போகிறார்கள் என புரிந்துக் கொண்ட நம் மக்கள் அவர்களைக் கண்டுக் கொள்ளாமலும், தூங்குவது போலவும் ஆக்ட் குடுத்தார்கள். எனக்கு எப்பவுமே ஆர்வ கோளாறு கொஞ்சம் ஜாஸ்தி, அவர்கள் என்னத் தான் பண்ணப்போகிறார்கள் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்குள் கண் ஜாடைக் காட்டிக் கொண்டு அந்த ரயில் பெட்டியின் நடுவில் வந்து நின்று பேச ஆரம்பித்தார் ஒரு இளைஞர்.

அவர்கள் ஒரு மாணவர் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் கல்வி, அதுவும் இலவச கல்வி என்ற கோட்பாடை ஆதரிக்கும் அந்த இயக்கத்தினர், பணம் வாங்கிக் கொண்டு சீட்டுகளை விற்கும் பள்ளிகள், கல்லூரிகள், அவற்றை பணத்துக்காக ஆதரிக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இவர்களையெலாம் சரமாரியாகத் திட்டினர். எனக்கோ ஆச்சரியம், அதிர்ச்சி . ஆச்சரியம் என்னவென்றால், நமெக்கன்ன வந்தது என்றெண்ணாமல் சில நல்ல விஷயங்களை சமூக அக்கறையோடு எடுத்துச் சொல்லும் அந்த இளைஞர்ளைக் கண்டு. அதிர்ச்சி என்னவென்றால், சமூகத்தில் கல்வியாளர்கள் என்ற பெயரோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் பலரைப் பற்றி அவர்களுடைய உண்மையான முகத்தினைப் பற்றி கொஞ்சம் கூட பயமில்லாமல் அந்த இளைஞர் பேசிக் கொண்டிருந்தார்.

அது வரை பாடிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் வந்த அந்த இளைஞர் பட்டாளமும், இந்த திடீர் பேச்சால் கவரப்பட்டு, அவர்கள் பேசி முடிக்கும் வரை அமைதி காத்து, பின் கை தட்டி வரவேற்றது. அந்த இயக்கம் சார்பாக நடத்தவிருக்கும் போராட்டத்திற்காக, நன்கொடையும் திரட்டினர். இப்படி ஒரே நாளில் எதிர்கால இந்தியாவின் இரு வேறு துருவங்களாக வாழப் போகும் இளைஞர்களைக் கண்டேன்.