Tuesday, August 29, 2006

"Five Wierd things about me"

நம்ம வலையுலுக பிஞ்சுக் கைக்குழந்தை, அகில உலக கப்தான் ரசிகர் மன்ற தலைவர், நண்பர் அர்ஜுன் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த சங்கிலி பதிவில் நானும் இணைந்துக் கொள்கிறேன். அவர் கொடுத்த தலைப்பு "Five Wierd things about me" நான் நல்லவ, வல்லவ, பல பேரை வாழ வைத்த தெய்வம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் என் குறை நிறைகளை இங்கே ஒளிவு மறைவின்றி பட்டியிலிடுகிறேன், வழக்கம் போல எல்லாரும் வந்து உங்க பொன்னான பின்னூட்டங்களை இட்டுச் செல்லவும்(இந்த தடவை முதல் பின்னூட்டத்திற்கு அம்பி கேசரியும், ச்யாம் புளியோதரையும் என் சார்பில் பரிசளிப்பார்கள், அப்படி பரிசை தராமல் அவங்களே ஒரு flowல்ல சாப்பிட்டுட்டா நான் அதுக்கு பொறுப்பு இல்லை:)

மறதி: ஒரு முறை என் சித்தப்பாவும், சித்தியும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, சித்தியை எங்கள் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வெளியே எங்கேயோ போனவர் ரொம்ப நேரமா வரவேயில்லை. நாங்கள் எல்லாம் பயந்துவிட்டோம், திடீரென்று போன் வருகிறது என் சித்தப்பாவிடமிருந்து, வீட்டுக்கு போய் விட்டேன் என்று. அதாவது சித்தியுடன் வந்ததையே மறந்து விட்டு அவர் வீட்டுக்கு போயிருக்கிறார். அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க பரம்பரையில் வந்த நான் மட்டும் மறதிக்கு விதிவிலக்கல்ல. ஒரு முறை என் அம்மாவை சைக்கிளில் பின்னாடி அமர வைத்து நான் வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன். போகும் வழியில் மழை பெய்ததால் தண்ணீர் குட்டையாக தேங்கி இருந்தது. என் அம்மா கீழே இறங்கிக் கொண்டு என்னை மட்டும் சைக்கிளில் அந்த குட்டையை தாண்டி வர சொன்னார், அவர் சுற்றிக் கொண்டு வந்து ஏறிக் கொள்கிறேன் என்றார். நான் என்ன பண்ணினேன், தண்ணீரை தாண்டி சைக்கிளை நிறுத்தாமல் என் அம்மாவை அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதையே மறந்து வீட்டுக்கு சென்று விட்டேன். இத்தனை வருடம் கழித்தும் என் அம்மா இதை சொல்லி காட்டுவார்கள். இது பரவாயில்லை, இப்பொழுதும் தினமும் நடக்கிற ஒரு விஷயத்தைக் கேட்டீங்கன்னா என் மறதியின் மகாத்மியம் புரியும், தினமும் நான் கடைக்கோ அல்லது கோவிலுக்கோ செல்வதற்காக கீழே இறங்கி போகும் போது மோட்டார் ஸ்விட்சைப் போடும் படி என் அப்பா கூறுவார். அவர் தொடர்ந்து 10 நாள் சொன்னால், ஒரு நாள் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொண்டு போட்டு விட்டு போவேன். அது என்னமோ தெரியல மாடியிலிருந்து இறங்கும் வரை ஞாபகம் இருக்கும், ஆனால் கீழே வந்தவுடன் யாருடனாவது பேசிக் கொண்டு மறந்து விடுவேன். இது எப்படி இருக்கு?:)

கோபம் : சாதாரணமாக விருச்சிக ராசியினருக்கு கோபம் அதிகம் என்று கூறுவர். எங்கள் வீட்டில் நான், என் அப்பா ரெண்டு பேருமே விருச்சிக ராசி. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் கோபம் வந்தது என்றால் அவ்வளவு தான் என் அம்மா தான் அரண்டு போய் விடுவார்கள். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்குமென்றும் சொல்வார்கள்:)(சரி சரி உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்றது என் கடமை அல்லவா?) இப்பொழுதெல்லாம் கோபத்தை மிகவும் குறைத்துள்ளேன்.
சாதாரணமாக எனக்கு யாராவது தவறு செய்தால் அவரிடமே அதை சொல்லி விடுவேன், நீங்கள் செய்வது தவறென்று. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே அது தான் என் கொள்கை

தயக்கம்: சில பேர் உண்டு, எப்படியென்றால் அந்த நிமிடம் வரைக்கும் யாரென்று தெரியாது, ஆனால் நம் கிட்ட வந்து அவங்க நதிமூலம், ரிஷிமூலம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நாமும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனக்கு எப்பவுமே கொஞ்சம் தயக்கம் அதிகம், முதன் முதலாக யாரையாவது பார்த்தால் கூட ரொம்ப தயங்கிக் கொண்டே தான் பேசுவேன். என் கல்லூரி நண்பர்கள் கூட 'உன்னை முதல் முதலில் பார்த்த பொழுது சரியான அழுத்தக்காரி என்று நினைத்தேன்' எனக் கூறுவார்கள். எனக்கு ஒருவரை பிடிக்கும் வரை தான் தயங்குவேன். பழகி விட்டால், அவளா இவள் என்று வியக்கற அளவுக்கு மாறிடுவேன். அதனால் தான் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிக குறைவு. என்னை புரிந்துக் கொண்டவர்கள் மட்டுமே என்னுடன் நன்றாக பழகமுடியும்.

பிடிவாதம் : என் வீட்டில் எனக்கு பெயரே வணங்கா முடி என்பது தான். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் அவ்வளவு தான் அதை மாற்றவே மாட்டேன். ஆனால் முடிவு எடுக்க தான் நேரமாகும், ரொம்ப யோசித்து தான் எதையும் செய்வேன். மற்றவர் யாரும் என்னை கட்டுப்படுத்துவது எனக்கு பிடிக்காது, எங்க வீட்டுல கூட என்னால ஏதாவது காரியம் ஆகனும்னா அப்படியே அன்பை பொழிவாங்க, ஏன்னா அதிகாரத்துக்கு கட்டுப்படாத என்னிடம் வந்து ப்ளீஸ் எனக்காக இதை செய் என்று அன்புடன் கேட்டால் உடனே சரி என்று சொல்லி விடுவேன். அன்புக்கு நான் அடிமை:)

பயம்: சாதாரணமாக எதற்கும் பயப்படாத நான் இரண்டு விஷயங்களுக்கு ரொம்ப பயப்படுவேன்,

1. உயரம். : எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து கூட எட்டிப் பார்க்க பயம்.
2. கரப்பான்பூச்சி : அப்புறம் இந்த கரப்பான் பூச்சி இருக்கு பாருங்க , சொல்லும் போதே அருவெருப்பாக இருக்கு, வீட்டுக்குள்ள வந்தச்சுன்னா அவ்வளவு தான் நான் போட்டது போட்ட படி வெளியில் ஓடி விடுவேன், என் அண்ணனை தேடி. அவன் தான் இந்த கரப்பு பிடிப்பதில் அசகாய சூரன், அது எங்கு பறந்தாலும், பின்னாடியே போய் பிடிச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பான்.


இதை தொடர்ந்து பதிய நான் அழைக்கும் வலைப்பதிவர்கள்

1.'அன்பு சிஷ்யை' சுபா

2.'கலியுக நாரதர்' அம்பி

3.'மொக்கை பதிவு' கீதா

Sunday, August 27, 2006

முதல்வன்
"மாற்ற முடிந்ததை மாற்றும் ஆற்றலையும்
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்
இவ்விரண்டையும் வேறுபடுத்தி புரிந்துக் கொள்ளும் அறிவையும் தா"

பி.கு.: இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், முதலில் பின்னூட்டம் இடுபவருக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கு பதில் கொழுக்கட்டை பார்சல். இந்த முறை முந்த போவது அம்பியா? ச்யாமா? எங்க எல்லாரும் லைன் கட்டி க்யூல வாங்க பார்ப்போம் :)


Monday, August 21, 2006

படித்ததில் பிடித்தது


இன்பக் கோட்டையின்
பூட்டைத் திறக்க
சாவி கொண்டு வந்தார்கள்
சரித்திர புருஷர்கள்!
ஏசுபிரான் ஒரு சாவி செய்தார்- அன்பு
வள்ளுவர் ஒரு சாவி செய்தார் - அறம்
நபிகள் ஒருசாவி செய்தார் - சகோதரத்துவம்
சங்கரர் ஒரு சாவி செய்தார் - அத்வைதம்
கார்ல்மார்க்ஸ் ஒரு சாவி தந்தார் - பொதுவுடைமை
அண்ணல் காந்தி ஒரு சாவி கண்டார் - அஹிம்சை
பெரியார் ஒரு சாவி தந்தார் - பகுத்தறிவு
சும்மா இருக்குமா சுயநலம்?
ஈயம் பித்தளை பேரீச்சம்பழத்திற்கு
எல்லா சாவிகளையும் விற்றுவிட்டது!

இந்த கவிதையை நான் பல வருடங்களுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். இதை எழுதியது யார் என தெரியவில்லை,ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விட்ட ஒன்று.

Thursday, August 17, 2006

வேதாளத்திற்கு அபயம் தந்த வேதா

கடந்த நான்கு நாட்களாக இணையத் தொடர்பு சரியாக இல்லை, பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் பிள்ளையைப் போல பாதியிலேயே தொடர்பு போய் விடுகிறது. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்து, ஹெல்ப்லைனுக்கு போன் போட்டு கேட்டால், அவங்க எங்க பக்கம் எல்லாம் சரியாத் தான் இருக்கு உங்க கணிணியில் தான் ஏதோ குறை என்று சொன்னார்கள். அட இது என்னடா வலைப்பதிவுலகத்திற்கு வந்த சோதனை. என் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டவர்கள் எல்லாம் பதிலைக் காணாமல் திண்டாடி போய் விடுவார்களே, என்ன ஆகிவிட்டது என்று யோசிக்கும் போது ஒரு அபயக் குரல்,

'வேதா, நீங்கள் தான் என்னைக் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும்'

'யாருப்பா நீ?"

'ஏங்க என்னை தெரியல? நான் தான் வேதாளம்'

'என்னது வேதாளமா? உன் இடம் இது இல்லையே இங்க எப்படி வந்த?'

'அத ஏன் கேக்கறீங்க? சங்கத்து நிரந்தர தலைவி(வலி) பண்ற வேலை இது, என்னைய கூப்பிட்டு
இந்த நிரந்தர பின்னூட்டாளர், அதான்பா இந்த வேதா, என் எல்லா பதிவுக்கும் வந்து என் வயசை பத்தி கேக்கறாங்க, எங்க என் உண்மையான வயச கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு, என்னத் தான் அவங்கள சாதான்னு சொன்னாலும் அவங்க பெரிய தாதாவா இருப்பாங்க போல இருக்கு அதனால் நீ போய் உன் வேலைய காமிச்சுட்டு வான்னு என்ன அனுப்பினாங்க'

'அப்ப என் இணையத் தொடர்பை தடை செய்தது நீ தானா?'

'ஆமாம் தலைவியே, ஆனால் உங்க பதிவெல்லாம் படித்த பிறகு ரொம்ப பீலிங்க்ஸ் ஆகிப் போச்சு, இப்படிப் பட்ட ஒரு நல்லவங்க,வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க, பல பேர வாழ வைத்த தெய்வம், உங்க பதிவைப் போய் தடை செய்யலாமோ?,அதனால் தான் உங்க கிட்ட சரணடைந்து விட்டேன்'

'ஆஹா, சதி சதி இந்த வேதாவிற்கு எதிராக சதி, என் அருமை ப்ளாக் நண்பர்களே, உங்கள் ஆருயிர் தோழியின் பதிவுக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த சதியை முறியடிக்க அலைக் கடல் போல் திரண்டு வாரீர். ஏற்கனவே கோணி ஊசியுடன் தயாராக இருக்கும் அண்ணன் ச்யாம், நண்பர்கள் அம்பி, சிவா மற்றும் ப்ளாக் உலக நண்பர்கள் எல்லாரும் என் பக்கம் வந்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'(ஆதரவாளர்கள் அனைவருக்கும் நான் அளிக்கும் பரிசு உங்கள் பதிவிற்கெல்லாம் நிரந்தர பின்னூட்டாளராக பணி செய்வேன்)

'அப்ப என் கதி? எனக்கு மன்னிப்பு உண்டா? உங்கள் காலடியில் இருந்து காலமெல்லாம் பணி செய்வேன்'

'அய்யோ வேண்டாம், உன் மேல் குற்றமில்லை, எய்தவர் எங்கோ இருக்க உன் மேல் குறை சொல்லி என்ன பயன்? நீ என் காலடியில் இருந்தால் பழக்க தோஷத்தில் என் காலையே வாரி விட்டு விடுவாய், அதனால் உன்னை அனுப்பினவங்க கிட்டயே போய்டு'

'அய்யகோ எனக்கு இப்படி ஒரு தண்டனையா? ஏன், என், ஏன் மறுபடியும் அவர்களிடமா? அவங்க மொக்கை தாங்க முடியல:('

'பரவாயில்லை என்னை சாதா என்று கூறியவர்களிடம் போய் சொல், என் மகிமையைப் பற்றி. அவர் புதிதாக இன்றிலிருந்து 'மொக்கை பதிவு கீதா' (மொ.ப.கீ) என பெயரில் அழைக்கப்படுவார் என்றும் தெரிவித்துவிடு'

தன் விதியை நொந்தபடியே வேதாளம் வந்த இடத்திற்கே பறந்து சென்று விட்டது, எனவே மக்களே வேதா எங்கும் சென்றுவிடவில்லையென்றும், மனம் தளரா விக்கரமாதித்தன் போல் எத்தனை வேதாளம் வந்தாலும் வெற்றிக் கொண்டு கொடியை நாட்டுவாள் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்:)

Tuesday, August 15, 2006

59வது சுதந்திர தின வாழ்த்துக்கள்
எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்தது மிந்நாடே - அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து


சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

Sunday, August 06, 2006

"HAPPY FRIENDSHIP DAY"

இன்று நண்பர்கள் தினமாகையால் நட்பை பற்றி நாலு வார்த்தை எழுதலாம் என நினைத்தேன். ஆனால் ஏற்கனவே நட்பைப் பற்றியும், சமீப கால ப்ளாகர் நண்பர்கள் பற்றியும் பதிவுகள் எழுதியாகிவிட்டதால் என்ன செய்யலாம் என யோசித்தேன். ஏற்கனவே போன பதிவில் நான் ரொம்ப பீல் பண்ணிவிட்டதாக எல்லோரும் ரொம்ப பீல் பண்ணியதால் புதுசாக எதுவும் பீல் பண்ண வேண்டாம் என முடிவு பண்ணி போன வருடம் நண்பர்கள் தினத்துக்கு நான் பீல் பண்ணி எழுதியதையே இங்கே திரும்பவும் பதிவு செய்து பீல் பண்ணுகிறேன்.( வேதா, உண்மை அதுவா? போன வருடம் நீ எழுதியதியதெல்லாம் யாராவது படிச்சாங்களா? அத சொல்லிட்டு போறத விட்டுட்டு ரொம்பத் தான் சீன் போடுறியே அப்படீன்னு நம்ம நாட்டாமை சொல்றதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். உண்மை அது தான் யாரும் அத படிச்சிருக்க மாட்டீங்க)

The word "friend",means a lot to me. friends are the only people who care more about us apart from the fact that they are not related to us. i am so lucky to have a friend like that. we come across many friends in our life, the friend during our first day in school, friends in our middle school, high school and friends in our locality.

friends are always there in all parts of our life. but mostly as we grow, we jus lose touch with them,and in due course we find a new friend and life goes on. but there is always a friend, who jus come into life like magic,spread her/his love in our life and is always there when we want them the most. such a friend is there in everyones life and such a friend is there for me.she is a distant cousin,but we grew together.

we are of same age, we did different schooling and different colleges. but she is the one who knows everything abt me the goods and the bads, the joys and sorrows. she is there in every part of my life and she is in my heart forever. we share our views abt everything under the sun.

when a friend becomes something more than a friend, such as a mother when we are under emotional pressure, as a sister, as a philosopher ,as everything in our life, then she is the one for us. thats what friendship is . i luv my cousin who is more than a friend to me. the thought that she is there for me, when nobody is, gives me the strength to overcome any kind of obstacles in life. i hope everyone out there has a friend like i have.

"HAPPY FRIENDSHIP DAY"

Tuesday, August 01, 2006

நினைவுகளும் நிஜங்களும்

இன்று காலை என் அப்பாவை அலுவலத்தில் விடுவதற்காக வண்டியில் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் புத்தகம் வாங்க ஒரு கடையில் நின்றோம். வாங்கி விட்டு வண்டியை எடுக்கலாம் என நினைத்த பொழுது தான் என் நண்பனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி, துக்கம் ரெண்டும் தோன்றியது. என்னை அவன் நினைவு வைத்திருப்பானோ? என சந்தேகித்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கண்கள் என்னை ஒரு முறைப் பார்த்து பின் தாழ்ந்தன. வண்டியருகில் வந்தவன் எங்கோ பார்த்துக் கொண்டு 'உம் உம் உஷா, வண்டி எடு' என்று சொல்லிக் கொண்டே சென்று விட்டான். என் அப்பாவோ அவன் என்னைக் கிண்டல் செய்கிறான் என நினைத்து அவனை ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் அவன் அதற்குள் எப்பவும் போல் தனக்குத் தானே பேசிக் கொண்டே வெகு தூரம் சென்று விட்டான்.

அவன் என்னுடன் பள்ளியில் படித்தவன். அவனுடைய அம்மா எங்களுக்கு பாட்டு டீச்சர். அவன் சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன். என்னுடன் 5வது வரை தான் படித்தான் என நினைக்கிறேன். தான் உண்டு தன் வேலையுண்டு என எப்பொழுதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பான். பாட்டு சொல்லிக் கொடுக்கும் நேரத்தில் அவன் தனியாக ஒரு சுருதியில் பாடிக் கொண்டிருப்பான். ஒரு விதத்துல தானும் மகிழ்ந்து எங்களையும் சிரிப்பால் மகிழ்வித்தவன். எங்கள் வகுப்பில் அவன் பேசுவது என்னிடம் மட்டும் தான். அவன் அழுது நான் பார்த்ததில்லை. யாராவது திட்டினாலோ அடித்தாலோ என்னிடம் தான் வந்து சொல்வான். அவன் அம்மாவிற்கு அடுத்து என்னிடம் தான் நன்றாக பழகுவான்.

திடீரென்று ஒரு நாள் அவன் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டான். அவன் 5வது வரை வந்ததே பெரிய விஷயம் தான். அதன் பின் என் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் தான் நான் அவனைப் பார்த்தேன். ஆனால் பேசும் வாய்ப்பு கிடைக்க வில்லை. பின் ஒரு நாள் அவன் அம்மா இறந்து விட்டதாகவும், அவன் குடும்ப சூழ்நிலைக் காரணமாக வேலைக்கு செல்வதாக தெரிய வந்தது. அதன் பின் சுமார் 10 வருடங்களுக்கு பின் இன்று தான் பார்த்தேன். அவன் கொஞ்சம் கூட மாறாமல் அதே சிரிப்புடன் ஆனால் , இளைத்துப் போய்.

அவன் என்னை மறக்காமல் என் பெயரை சொன்னது ஒரு புறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், என்னிடம் பேசாமல் சென்றது மனதை வருத்தியது. ஆனாலும் அவன் மூளையில் எதோ ஒரு மூலையில் என் பெயரும் உருவமும் பதிந்து விட்டது என்பது மட்டும் புரிந்தது. அது வரை மகிழ்ச்சி அடைந்தேன்.