Wednesday, September 27, 2006

காதலின் முரண்பாடுகள்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பி.கு: இதை படித்தவுடன் உங்க கற்பனை வளத்தை அப்படியே உரம் போட்டு வளர்க்க வேண்டாம். சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை.

Wednesday, September 20, 2006

தமிழ் சங்கம் கவிதைப் போட்டி - 1

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் சங்கத்தின் முதல் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு நான் அனுப்பிய கவிதைகள்(தலைப்பு - இன்னும் இருக்கிறது ஆகாயம்),
கவிதை - 1
கவிதை - 2

இந்த வாய்ப்பை தந்த தமிழ்சங்கத்துக்கும், எனக்கு இதைப் பற்றி முதலில் தெரியப்படுத்திய நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி(சிவா நன்றி சொன்னா உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், ஆனாலும் அவை மரபுன்னு ஒண்ணு இருக்குல்ல, அதனால இந்த நன்றியை இப்ப வாங்கிக்கங்க, வேண்டாம்னா அப்புறம் திருப்பி அனுப்பிடுங்க:) )


Friday, September 15, 2006

கேதார்நாத்தில் நான் - 2

மு.கு: குதிரையைப் பத்தி குறிப்பிட்டதும் நான் குதிரையிலிருந்து விழுந்துட்டதா சந்தோஷப்பட்ட என் பாசக் கட்சிகளே அது மாதிரி எதுவும் நடக்கலை:)


மறுநாள் காலையில் நாங்கள் தங்கியிருந்த மலைக்கிராமமான ராம்பூரிலிருந்து இன்னும் மேலே கெளரிகுண்ட் என்னும் இடத்திற்கு பேருந்தில் சென்றோம். இந்த இடத்தில் இயற்கையாகவே பூமியிலிருந்து வெந்நீர் ஊற்றுகள் வருகின்றன. குளிருக்கு சுகமாக வெந்நீரில் குளித்து குதிரைப் பயணத்துக்கு தயாரானோம். குதிரைகள் கட்டி வைத்திருக்கும் இடத்திலிருந்து ஒரு மலைப்பாதை துவங்குகிறது, மலையை சுற்றி சென்று சுமார் 14 கிமீ பயணித்தால் கேதார்நாத் கோவில் சென்றடையலாம். ஏற்கனவே குதிரை குஷியில் இருந்த எங்களுக்கு முன் குதிரை என்று சொல்லி ஒன்றை கொண்டு வந்து நிறுத்தினார்கள்(pony).


எனக்கு கறுப்பு நிறத்தில் ஒரு குதிரை, என் தம்பிக்கு வெள்ளை நிறம், என் அம்மாவிற்கு ப்ரவுன் நிறம். அடப்பாவிகளா, இது எங்களையும் சுமந்துண்டு 14 கிமீ ஏறுமா? அப்படின்னு நான் யோசிக்க அதுக்குள்ள என் தம்பி குதிரை மேல ஜம்மென்று ஏறி அமர்ந்து விட்டான். குதிரைக்கார பையன்(நிஜமாவே சின்ன பையன், 15 ,16 வயசு தான் இருக்கும் ஏற்கனவே குதிரை ஒழுங்கா கொண்டுபோய் சேர்க்குமான்னு பயம், இதுல வேற துணைக்கு இவனுங்களான்னு பயம் அதிகமாயிடுச்சு)'தீதீ(அக்கா), ஜல்தி ஜல்தி(சீக்கிரம்)' என்றான்.


எனக்கு ஏற தெரியலை, என்னனென்னமோ செய்றேன், முடியவே இல்லை, என் தம்பி என்னைப் பார்த்து சிரிக்கிறான். அடப்பாவி துரோகி நீயெல்லாம் ஒரு தம்பியா?ன்னு நினைச்சுண்டே என் அம்மாவைப் பார்த்தா அவங்களும் குதிரை மேல இருக்காங்க, ஆஹா நம்ம மானம் இப்படித் தான் போகணுமான்னு நினைச்சுண்டே திரும்ப ட்ரை பண்றேன், திடிர்னு அந்த குதிரைக்கார பையன் என்னை அப்படியே தூக்கி உக்கார வச்சுட்டான்.


என் அம்மாவும், தம்பியும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னுது. அடப்பாவி மவனே நீ என்ன தீதீன்னு கூப்டதுனால தப்பிச்சுட்ட,இல்லேன்னா உனக்கு இன்னிக்கு சங்கு தான் அப்படின்னு அந்த பையனைப் பார்த்து முணுமுணுத்தேன். அவன் எதுவும் புரியாம விகல்பமா சிரிச்சுண்டே க்யா தீதீ? ஆப் ரெடி? என்றான் என்னைப் பார்த்து.


சரி கிளம்பலாம் என்று முடிவெடுத்தவுடன் இன்னொரு குண்டைத் தூக்கி போட்டான் . நாங்க ஒவ்வொரு குதிரையையும் பிடித்துக் கொண்டு கூட ஒருவன் வருவான் என்று நினைத்திருந்தோம், ஆனால் ரெண்டு குதிரைக்கு ஒரு ஆள் என்று அந்த பையன் சொன்னதும் என் அம்மாவிற்கு பயம் வந்து விட்டது. அவர் பயந்ததுக்கு காரணம் அந்த மலைப்பாதை மிக குறுகலானது. ஒரு பத்தடி அகலம் தான் இருக்கும், ஒரு பக்கம் குதிரையில் ஏறி செல்வர்கள், அதே பாதையில் தான் இறங்கியும் வர வேண்டும் இது தவிர கோவிலுக்கு கால்நடையாக செல்பவர்கள் கூட்டம் வேறு, இதையெல்லாம் விட ஒவ்வொரு திருப்பத்திலும் அகலபாதாளத்தில் கங்கை நதி. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அந்த மாதிரி ஆபத்தான ஆனால் மிக அழகான பயணம். கடவுளை வேண்டிக் கொண்டு மலையேற ஆரம்பித்தோம்.


தொடரும்.......

Monday, September 11, 2006

கேதார்நாத்தில் நான்..

இரண்டு வருடங்களுக்கு முன் நாங்கள் பத்ரிநாத், கேதார்நாத் போகலாம் என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்த பிறகு தான் தெரிந்த்து பத்ரிநாத் போகும் வழியில் எல்லாம் மணல்சரிவு ஏற்பட்டு பல பேர் இறந்துவிட்டனர் என்று. ஆனாலும் மனந்தளராமல் நாங்கள் ஏற்பாடு செய்தபடி கிளம்பிவிட்டோம்.

டெல்லியில் போய் இறங்கியவுடன் அங்கிருந்து ரிஷிகேஷுக்கு பேருந்தில் சென்றோம். டெல்லியில் இருந்து ரிஷிகேஷ், ஹரித்வார் செல்வது சுலபம், நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. ரிஷிகேஷ் சென்றவுடன் அப்போதைய நிலவரப்படி மணல்சரிவுகள் தொடர்ந்துக் கொண்டிருப்பதாகவும், ராணுவம் உதவிக்கு வரவழைக்கப்பட்டு பத்ரிநாத் செல்லும் பாதை சீரமைக்கப்படுவதாகவும் தெரியவந்தது. முதலில் போட்ட திட்டப்படி பத்ரிநாத் செல்லாமல், கேதார்நாத் பார்த்துவிட்டு வரலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.


உடனே எங்கள் குழுவில் வந்த சில மனிதருள் மாணிக்கங்கள்" நாம் பத்ரிநாராயணனை தான் முதலில் தரிசிக்க வேண்டும், உயிர் போனால் என்ன? பத்ரியில் போவது புண்ணியம் தான்" என்றனர். இப்படி பேசும் பெரிசுகளோடு மாட்டிக்கொண்ட என்னைப் போல் சில பேருக்கு இதயமே நின்றுவிட்டது. ஆஹா நீங்களெல்லாம் நல்லா 50 ,60 வருஷம் வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சுட்டு இப்படி பேசறீங்க, நாங்கெல்லாம் இப்பதான்யா வாழ்க்கையையே எட்டிப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம்னு மனசுக்குள்ள ஃபீல் பண்ணிக்கிட்டு நின்னோம். நல்லவேளை எங்க டூர் நிர்வாகி பத்ரிக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு அனுமதி கிடைக்காது என்று சொன்னப்புறம் தான் புலம்பல் நின்றது.


இப்படியாக எங்கள் பயணம் கேதார்நாத் நோக்கி துவங்கியது. கேதார்நாத் சிவன் ஸ்தலம், மலை மீது அமைந்துள்ளது. முதலில் தேவப்ரயாக் சென்றடைந்தோம், நாங்கள் போகும் இடமெல்லாம் மலைப்பிரதேசம் தான் கூடவே கங்கையும், வெவ்வெறு பெயரில். தேவப்ராயகையில் தான் பாகிரதி நதியும், அலகாநந்தா நதியும் இணைகின்றன(ஆனால் இரண்டுமே கங்கை தான்).இங்கிருந்து தான் மலைப்பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கேதார்நாத்தை நோக்கி, மற்றொன்று பத்ரிநாத்தை நோக்கி.


எங்கள் பேருந்து கேதார்நாத்தை நோக்கி சென்றது. போகும் வழியில் ராம்பூர் என்னும் மலைகிராமத்தில் அறை எடுத்து தங்கினோம். கடும் குளிரோடு அருமையான இயற்கைக் காட்சிகள். நாம் போனவுடனே சரியாக ஆஜராகிவிடுகிறார்கள் குதிரைக்காரர்கள். கேதார்நாத்தை தரிசிக்க 14 கிலோமீட்டர் குதிரையில் பயணம் செய்ய வேண்டும். இவர்களிடம் முதல் நாளே குதிரை புக் பண்ணிவிட வேண்டும். குதிரை என்றவுடன் எனக்கும், என் தம்பிக்கும் ஒரே சந்தோஷம், ராணி மங்கம்மா, ராஜா தேசிங்கு ஃபீலிங் வேற:) குதிரைக் கனவுகளுடன் உறங்க சென்றோம்.


தொடரும்........

Monday, September 04, 2006

தமிழில் பேசுங்கள்

விஜய் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் தாக்கமே இந்த பதிவு. ஏர்டெல் சூப்பர் சிங்கரின் பெரு வெற்றிக்கு பிறகு அதை தக்க வைக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புது நிகழ்ச்சி 'Eq'. இதில் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்குக் கொள்ள முடியும். அவர்களுக்கு கொடுக்கப்படும் கால அவகாசத்தில் அவர்கள் திறமையை பாட்டு,நடனம்,நாடகம், கூத்து என பல விதங்களில் நிருபிக்க வேண்டும்.

இது வரை நடந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் மாணவர்களின் திறமை மிக அற்புதமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருப்பவர்கள் பாடகர் மால்குடி சுபா மற்றும் ஒரு நடன இயக்குனர்(அவர் பெயர் சமயத்திற்க்கு மறந்து விட்டது). இருவருமே மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தான் பேசுகிறார்கள். குறிப்பாக சுபா ஒவ்வொரு முறையும் நல்ல பாடகர்களை எதிர்கொள்ளும் போது தமிழ்நாட்டில் தனி இசைக்குழுக்களாக வர வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார். ஆனால் இவர் பாதி நேரங்களில் ஆங்கிலம் கலந்துப் பேசுகிறார்.

இவராவது பரவாயில்லை கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக பங்குப் பெற்றவர், பிரபல நடன கலைஞரும், சினிமா நடிகையுமான ஷோபனா, ஒவ்வொருவருரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி அவர்களின் நிறை குறைகளை அழகாக எடுத்துக் கூறிய அவருக்கு தான் பங்குக் கொள்வது ஒரு தமிழ் நிகழ்ச்சி என தெரியவில்லை போலும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் பேசினார்.(எனக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வேறு இவர் தமிழர் தானா என்று?, அப்படியே அவர் தாய்மொழி தமிழில்லை என்றாலும், இவ்வளவு வருடங்களாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவருக்கு தமிழ் குறைந்தபட்சம் பேசக் கூட வராதா?)

எனக்கு அதைப் பார்த்து எரிச்சல் தான் அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கலைஞர், தமிழ் படங்களில் நடித்தவர் என பல பரிமாணங்கள் கொண்ட இவர் ஏன் ஒரு தமிழ் நிகழ்ச்சி எனத் தெரிந்தும் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே முழுக்க முழுக்க பேசுகிறார் என புரியவில்லை. சமீப காலங்களில் இவ்விதமான போக்கு அதிகரித்துள்ளது. இவர் என்று இல்லை, இது போல் பல பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கிறது என எனக்கு தோன்றுகிறது.