Friday, October 27, 2006

எதை தொலைத்தாள் அதை தேடுவதற்கு? - 1

மு.கு. : எல்லாரும் கதை எழுதறாங்களே நாமளும் முயற்சி செய்யலாமேன்னு தான் இந்த கதையை இங்கே எழுதுகிறேன். ஏதோ ஒரு முயற்சி அவ்வளவு தான் அதனால படிச்சுட்டு உங்க விமர்சனங்களை சொல்லுங்க. இப்ப முதல் பகுதி தான் பதிக்க போகிறேன், எனென்றால் எப்படி முடிப்பது என்று இன்னும் யோசிக்கவில்லை:) சரி கதை கேட்க ரெடியா?

அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள் அவள் அலங்கோலமாக. எங்கோ மிதப்பது போலவும், முள் படுக்கையில் படுத்திருப்பது போலவும் அவளின் ஒவ்வொரு அணுவும் வலித்தது. 'இல்லை எனக்கு நினைவே வரக் கூடாது எழக் கூடாது' என நினைத்துக் கொண்டே நினைவுக்கு வர மறுப்பவள் போல் பிடிவாதமாக மரணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் அவள் உயிரின் கதறல் தீனமாய் விழுந்தது.

நழுவ விட்ட நினைவை பிடித்திழுத்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். இன்னொரு மூலையில் தூளியில் இருந்து எட்டிப்பார்த்து அவள் உயிரின் ஒரு துளி அழுதுக் கொண்டிருந்தது. ஓடிச் சென்று அள்ளி அணைக்க கால்கள் பரபரத்தாலும், எழ முடியவில்லை.

அதற்குள் சத்தம் கேட்டு குடிசையின் வாசலில் வந்து நின்றான் அவள் கணவன் ராமு, அந்த பெயருக்கே உள்ள எந்த குணாதியசமும் இல்லாதவனாய்.(ராமன் என்றால் அனைத்து உயிருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று பொருள்)

அவனைப் பார்த்த கணம் எங்கோ பறந்துக் கொண்டிருந்த தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி தட்டுதடுமாறி எழுந்து அவன் தூளியின் அருகில் செல்லும் முன் தன் குழந்தையை எடுத்து வாரி அணைத்தாள்.

குடிபோதையில் ராமு, 'ஏண்டி நான் குழந்தையை தொடக் கூடாதா' எனக் கத்தினான்.
கண்களில் வழியும் குரோதத்துடன் அவனைப் பார்த்துக், 'ஏன்?' என்றாள்.

அவள் கண்களின் தீவிரம் தன்னை ஒன்றும் செய்யாதது போல 'என்ன கேக்குற? ஓ நேத்து நடந்தது பத்தியா? ஆமா பின்ன நான் என்ன தியாகம் செய்யவா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? உங்க அம்மா செஞ்சுக்கிட்டுருந்த தொழிலை கொஞ்சம் நாகரீகமா செய்யலாம்னு தான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். முதல்ல சொன்ன நீ ஒத்துக்க மாட்டேன்னு தான் இத்தன நாள் சொல்ல. அதான் என்னோட கொஞ்ச நாள் வாழ்ந்துட்ட இல்ல ஒரு குழந்தையும் வந்துருச்சு. இனிமே நான் சொல்றபடி தான் கேக்கணும். பாரு நீ நேத்து நான் சொன்னதுக்கு ஒத்துக்கல. அதான் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். காலைல அவன் போயிட்டான் எனக்கு பணம் கொடுத்துட்டு' என்றான் விகாரமாய்.

தன்னிடம் ஏதோ ஒன்று குறைவது போன்று உணர்ந்திருந்த அவள் அது உண்மையென்று அறிந்ததை விட, தன் கணவனே அதற்கு காரணம் என தெரிந்தவுடன் கதறி அழ ஆரம்பித்தாள். அவள் குழந்தையும் ஏதோ புரிந்ததுப் போல சேர்ந்து அழுதது.
'ஏய் இதுக்கு இப்படி சீன் போடற? இதெல்லாம் உனக்கு சகஜம் தான? உங்க அம்மா இதை தான் செஞ்சுக்கிட்டுருந்தா? பெரிசா பத்தினி போல் அழற' என்றான்.

[அவள் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி. தான் படும் அவலங்கள் தன் மகளும் படக்கூடாது என்று அவளை படிக்க வைத்து ராமனுக்கு கட்டி வைத்தாள். ராமனும் ரொம்ப நல்லவன் என்று சொல்ல முடியாது என அவள் தாய்க்கு தெரிந்தும், தன் மகளுக்கு திருமணம் என்று நடந்தால் போதும் என்று தான் நினைத்தாள். அதை செய்தும் காட்டினாள். சிறிது நாட்களில் உயிர் துறந்தாள். அது வரை அமைதியாக இருந்தவன் தன் சுயரூபத்தை காட்டத் துவங்கினான்]

பத்தினித்தனம் பெண்ணுலகிற்கே உரிய சொத்து என்பது போல் அவன் பேசியதைக் கேட்டவுடன் கோபம் அதிகமாகி சுற்றும்முற்றும் பார்த்தாள். முதல் நாளிரவு அவன் குடித்துவிட்டு உருட்டி விட்டிருந்த சாராய பாட்டிலை எடுத்து அவனை நோக்கி விட்டெறிந்தாள்.

அவள் கோபங்களை தாங்கிச் சென்ற அந்த பாட்டில் அவன் தலையில் பட்டு உடைந்தது. அய்யோ என்று கதறியவாறு கீழே விழுந்தவன், அங்கிருந்த உரலின் நுனியில் இடித்துக் கொண்டான். அவன் தலையிலிருந்து புறப்பட்ட ரத்த ஆறு புண்ணியம் தேடி ஓடுவது போல் அறையெங்கும் பரவி அவள் கால்களை நனைத்தது. ரத்தத்தால் நனைந்த கால்களை துடைத்துக் கொண்டு அவள் புறப்பட்டாள் குடிசையை விட்டு.

தொடரும்..

Wednesday, October 18, 2006

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று...

அருமை நண்பர் பொது அறிவின் களஞ்சியம் ஜீவ், சுகாதார துறை அமைச்சர் ப்ரியா, தலைவர் கார்த்திஆகியோரின் tags யை மொத்தமாக கலந்து ஒரு த்ரி -இன் -ஒன் பதிவு இது, நீண்.......................ட பதிவு கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோங்க:)

இது ஜீவ் டேகியது,

1. Which is the single best post you have read on any blog, post the link?
ஒன்றா இரண்டா சொல்வதற்கு...:)

2. Which is the best post you have written and which is the worst. Explain why?
என்னுடைய சிறந்த பதிவையும் மொக்கை பதிவையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகிறேன் :) எல்லாமே மொக்கைன்னு சொல்லி காறித் துப்புவர்களும், எல்லாமே சிறந்தது என்று கூறும் அரிச்சந்திரர்களும் உங்கள் கருத்துகளை பின்னூட்ட பகுதியில் பதியவும் :) கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு பிரியாணி பொட்டலம் கட்சி சார்பாக வழங்கப்படும்:)

3. How about a place you have never been to, but would very much like to see?
பத்ரிநாத். இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் போய்விடலாம் எனும் பொழுது மணல்சரிவு ஏற்பட்டு ராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டோம்.

4. If you were a member of the opposite sex, what would you do differently?
நட்டநடு நிசியில் எந்த கவலையும் இல்லாமல் நிலவை ரசித்தப்படி நடந்து செல்வேன்.

5. Do you remember a recurrent childhood dream or nightmare, tell us about it?
அதை பற்றி தான் கார்த்திக் எழுத சொல்லியிருக்கிறார், இந்த பதிவின் இறுதியில் எழுதியுள்ளேன்

6. Make me laugh or make me cry, put your words to use?
இடுக்கண் வருங்கால் நகுக:)

7. Do you regret unfulfilled dreams, the inaccessible roads and the
uncharted lands?

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் போது நடந்ததை பற்றி வருந்தி என்ன பயன்?

8.What is a friend to you and what are you to a friend?
இதை முன்பே இந்த பதிவில் சொல்லிவிட்டேன்(ஒரு ப்ளாஷ்பேக் எடுத்து படிச்சுட்டு வாங்க)

9.T.S.Elliot measured his life with coffee spoons, how about you?
என் கிட்ட அவ்ளோ spoons இல்லை:)

10.Write your own Epitaph, or if it is too hard, how would you like
your Epitaph to read?

அப்டின்னா என்னங்க? என்னமோ சொல்றீங்க புரியலை:)

இது ப்ரியா டேகியது,

1.The best thing to do - மற்றவருக்கு உதவுவது
2.The best gift - உண்மையான அன்போடு எனக்கு கிடைத்த எல்லாம்.
3.The best thing I've ever heard - இன்னும் இல்லை(என் குழந்தை என்னை அம்மா என்றழைக்கும் கணம் தான்)
4.The best thing I've said - மன்னிப்பு கேட்பது தான்(அது தாங்க கஷ்டம்)
5.The best thing that happened to me - என் அம்மா
6.The best person I've met - வாழ்க்கையில் பல கட்டங்களில் பல நல்ல மனிதர்களை கண்டுள்ளேன்.
7.The best friend - அனாமிகா
8.The best moment - ஒவ்வொரு கணத்தையும் சிறந்ததாக கருத தான் முயற்சிக்கிறேன்.
9.The best book - பிரபஞ்சனின் வானம் வசப்படும், வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசம், மைக்கேல் கிரிக்டனின்(michael crichton) டைம்லைன்(timeline).
10The best blog - அவரவர் பாணியில் அவரவர் சிறந்து விளங்கும் போது சிறந்தது என்று எதையும் தனியாக சுட்டிக் காட்ட முடியவில்லை
11.The best place - என் வீடு
12.The best food - தயிர்சாதமும் வினைத்தொகையும். தமிழ் இலக்கணத்தில் வரும் வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக என் அம்மா சொல்லிக்கொடுத்தது 'ஊறுகாய்'. எனவே எங்கள் வீட்டில் 'ஊறுகாய்' 'வினைத்தொகை'யாகிவிட்டது:)
13.The best song - குறையொன்றுமில்லை எம்.எஸ்ஸின் குரலில், என் மேல் விழுந்த மழைத்துளியே(மே மாதம்)
14.The best hangout - டிநகரும்,புரசைவாக்கமும்(கல்லூரி நாட்களில் ஒன்றுமே வாங்காமல் வெட்டியாக இந்த இடங்களில் சுற்றியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது)
15.The best eatout - என் கல்லூரி காண்டீன்
16.The best hobby - படிப்பது தவிர இப்பொழுது ப்ளாக்குவது
17.The best TV show ever - சஹானா
18.The best manager - நான் தான்:)
19.The best musician - இளையராஜா
20.The best gang - பள்ளியிலும், கல்லூரியிலும் தற்போது இங்கேயும் கிடைத்த நண்பர் குழாம் தான்
21.The best drink - பில்டர் காப்பி
22.The best quote - நடப்பதெல்லாம் நன்மைக்கே
23.The best woman - என் அம்மா
24.The best kid - எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே..
25.The best poem - நான் எழுதுவதெல்லாம் எனக்கு பெஸ்ட் தான் என்றால் அடிக்க வருவீர்கள்:) கனிமொழி,வைரமுத்து,கண்ணதாசன் கவிதைகள் பிடிக்கும்
26.The best dancer - பத்மினியும் என் கசினும்.
27.The best movie - அன்பே சிவம்
28.The best actor - கமல்ஹாசன்
29.The best vehicle - என் கரும்பச்சை நிற ஸ்கூட்டி
30.The best scene in a movie - அன்பே சிவம் படத்தில் ரயில் விபத்தில் அடிப்பட்ட சிறுவனுக்கு ரத்தம் கொடுத்து மாதவன் காப்பாற்றியும் அந்த சிறுவன் இறந்தவிடுவான். அதிர்ச்சியடையும் மாதவன் கமலிடம் பேசும் ஒரு காட்சி,

மாதவன்: எனக்கு புரியவேயில்லை என்ன மாதிரி டிசைன் இது? ஒரு ரயிலை கவிழ்க்க வச்சு ஒரு சின்ன பையனை சிக்க வச்சு சாகற நிலைக்கு கொண்டு போய் அப்புறம் என் மூலமா ரத்தம் கொடுக்க வச்சு அப்புறம் வழியில சாக வச்சி சே என்ன மாதிரி கடவுள் இது? (கடவுள் நம்பிக்கையில்லாத கமல் தன்னை பார்ப்பது தெரிந்தவுடன்)சே கடவுளை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது i am sorry. உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே?

கமல்: எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லேன்னு யார் சொன்னா?
மாதவன்: ஓ! இப்ப திடீர்னு கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?
கமல்: ரொம்ப நாளாவே இருக்கு
மாதவன்: யார் அந்த கடவுள்?


கமல் மாதவனை சுட்டிக்காட்டுகிறார்.

மாதவன்: look i dont understand ur jokes
கமல்: bcos its is not a joke, முன்னபின்ன தெரியாத ஒரு உயிருக்காக கண்ணீர் விடற மனசு இருக்கே அது தான் கடவுள்.
மாதவன்:thankyou என்ன திடீர்னு இந்த முடிவு?
கமல்: ஏன்னா நானும் கடவுள்
மாதவன்: அதானே பார்த்தேன் ஏதாவது ஒரு hook இருக்கணுமே? சரி நீங்க கடவுள்னு யார் சொன்னது?
கமல்: மலை மேல பொட்டிக்கடை வச்சுருந்த ஒரு அம்மா சொன்னாங்க.
மாதவன் : !!!
கமல்: என்ன புரியலையா?
மாதவன்: இல்லை
கமல்: புரியக்கூடாதது தான் கடவுள்.
மாதவன்: :):)
அன்பே கடவுள் என்பதை உணர்த்தும் இந்த காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்தது :)


இது தலைவர் டேகியது,(கனவுகள் பற்றி)

என் குழந்தை பருவத்திலே(14வயது வரை) நாங்கள் இருந்த வீடு மிக பெரியது. நீண்..........ட ஹால் அதில் இருபுறமும் நிறைய அறைகள் உண்டு. எனக்கு எங்கள் வீட்டு இருண்ட ஸ்டோர் ரூம் கண்டால் ரொம்ப பயம். இந்த பயத்தை அதிகரிக்கிற முறையில் ஒரு கனவு கண்டேன் என் 10வது வயதில். அந்த அறை வாசலில் கறுப்பு புடவை அணிந்த ஒரு பெண்ணின் சடலம் இருக்கிறது. முகம் சரியாக தெரியவில்லை, யாரும் எந்த கவலையும் படாமல் பிணத்தை எடுக்க ஏற்பாடு செய்கிறோம், கனவில் நான் பயப்படாமல் அந்த சடலத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறேன். கனவு அதோடு முடிந்தது. அவ்வளவு தான் ஏற்கனவே அந்த அறையைக் கண்டால் எனக்கு பயம் இப்போ கேட்கவே வேண்டாம், ஒவ்வோரு முறையும் அந்த அறையை தாண்டி செல்லும்போது கண்ணை மூடிக் கொண்டு ஓடுவேன். என்னை பயமுறுத்திய அந்த அறை தான் எனக்கு தைரியத்தையும் கொடுத்தது. நாம் எதற்காக இல்லாத ஒன்றுக்காக பயப்படவேண்டும் என்றெண்ணி அடிக்கடி அந்த அறை பக்கம் போக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில பயமாக தான் இருந்தது, ஆனால் என் பயத்தை என் மன உறுதியால் வென்றேன். ஆகவே என் வரையில் எனக்கு பயத்தையும் கொடுத்து பின் அதன் மூலமாகவே பயத்தை போக்கிய கனவு இது.

இதை தவிர எனக்கு அடிக்கடி வரும் கனவு ஒன்றும் உள்ளது. படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பேன், திடீரென்று படிகள் காணாமல் போய்விடும் கீழே விழும்முன்னே கனவு கலைந்து விடும். இன்று வரை அந்த கனவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு தூரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றியும் கூடவே தீபாவளி சிறப்பு பரிசாக என் நல்வாழ்த்துக்களையும் வாங்கிக்கோங்க:)

Friday, October 13, 2006

புது வரவு

செல்லம், புஜ்ஜு, தங்கம், வைரம் என வார்த்தைகள் சிதறிக் கிடக்கின்றன எங்கள் வீடெங்கும். காரணம் எங்கள் வீட்டின் புது வரவு என் கஸின் ப்ரதரின் இரண்டாவது குழந்தை:) தற்போது அதற்கு மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. ஒரு குழந்தையின் வரவால் தான் வீட்டின் சூழல்களில் எவ்வளவு மாற்றம். தொலைக்காட்சியின் குரல் ஓய்ந்து குழந்தையின் சிணுங்கல் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது. எல்லார் முகத்திலும் சிரிப்பு. வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குழந்தையை தான் தேடுகின்றது எல்லார் மனமும். என் கஸின் ப்ரதர் வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்து இருப்பதால் நான் போய் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விடுவேன். குழந்தையுடன் நேரம் கழிவதால் புது பதிவுகள் கூட போடுவதில்லை, அவ்வளவு பிஸி:) ஒரு வயதாகும் வரை குழந்தையை புகைப்படம் எடுக்க வீட்டில் தடா போட்டுவிட்டதால் இங்கே குழந்தையின் படம் போடவில்லை.

பி.கு: அம்பி, நான் கஸின் ப்ரதர் என்று தான் எழுதியிருக்கிறேன், அன்று கேட்ட மாதிரி அஸின் ப்ரதரா என்று கேட்காதீர்கள்:)

பி.கு.கு:
ஜீவ், ப்ரியா, கார்த்திக் உங்கள் மூவரின் டேகையும்(tag) சேர்த்து அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன் :)

Monday, October 09, 2006

அழுவதா? சிரிப்பதா?

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என கூறி தமிழ் வளர்த்த(!) நம் தமிழக முதல்வருக்கு விழா எடுத்தனர் தமிழ் சினிமா துறையினர். அதை தமிழ் வளர்க்கும் சன்(!) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர். அதில் நடிகர் சிம்பு சில நடிகர்களை பேட்டி எடுத்தார்,

சிம்பு: த்ரிஷா உங்களுக்கு யாருடைய நடனம் பிடிக்கும?

த்ரிஷா: நடனமா? அப்டினா ஆக்டிங்கா?

சிம்பு: !!!

பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு அழுவதா? சிரிப்பதா? என புரியவில்லை:)

Tuesday, October 03, 2006

கேதார்நாத்தில் நான் - 3


கேதாரம் என்றால் கவலை நீக்குதல் என்று பொருள். மகாபாரத போர் முடிந்த பின் பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். இமயமலையை அடைந்த அவர்களுக்கு சிவன் ஒரு எருது வடிவில் காட்சி தரவும் பாண்டவர்கள் பின் தொடர, எருது வடிவில் இருந்த சிவபெருமான் பூமியை தோண்டி உள்ளே நுழைய ஆரம்பித்தார். அதற்குள் பாண்டவர்கள் வாலை பிடித்து நிறுத்தி விட்டனர். அதற்கேற்றாற் போல் இந்த கோவிலின் சிவலிங்க அமைப்பு எருதின் பின்பாகம் போல் இருக்கும்.

சூடுவேன் பூங்கொன்றைச் சூடிச்
சிவன் திரள்தோள் கூடுவேன்
கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன்
செவ்வாய்க்கு உருகுவேன்
உள்ளுருகித் தேடுவேன் தேடிச்
சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன்
அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதும் காண்
அம்மானாய். (திருவாசகம்)

என்று பராசக்தியே இங்கு வந்து தவம் புரிந்து சிவனை திருமணம் செய்துகொண்டதாகவும் புராணம் கூறுகிறது.

ஜோராக குதிரையில் ஏறி அமர்ந்த எங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரமும் மிக அருமையானதாக அமைந்தது. எங்கெங்கு காணினும் இயற்கையின் கைவண்ணம். அதுவும் என் தம்பி ஏறி அமர்ந்த பஞ்சகல்யாணிக்கு(நாங்கள் வைத்த பெயர்) தன்னை தாண்டி யாரும் போக கூடாது, அவ்வளவு தான் நம்மூரில் சைக்கிள் கேப்பில் ஓடும் ஆட்டோக்களைப் போல உடனே ஓவர்டேக் பண்ணிவிடும். நான் அமர்ந்து வந்த குதிரையோ என்னை தள்ளிவிட்டு தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டதைப் போல்(இதை இதை தானே நீங்க எல்லாரும் எதிர்பார்த்தீங்க) ஒவ்வொரு முறையும் மலைப்பாதையின் வளைவுகளில் ஓரமாக தான் போகும்,. ஒவ்வொரும் வளைவு திரும்பும்போதும் என் இதயம் தொண்டை வரை வந்துப் போகும்.

என் அம்மாவோ என் நிலையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் குதிரைக்காரன் அதைப் பத்தியெல்லாம் கவலையே படாமல் என்னைப் பார்த்து 'நீங்க பயந்து குதிரையைப் பார்த்து ஏதாவது கத்தினீங்கன்னா அப்புறம் அது வேற ஏதாவது புரிஞ்சுக்கும்' என்றான். உடனே நானும், என் அம்மாவும் வாயை மூடியவர்கள் தான் அப்புறம் மலை மேல போற வரைக்கும் வாயே திறக்கலை. பின்ன நாம ஏதாவது சொல்லி அதை தான் திட்றோம்னு அது எங்கயாவது தள்ளிவிட்டுதுனா? இப்படியாக மூன்று மணி நேரம் பயணித்து (நடுவில் அரை மணி நேரம் ரெஸ்ட் எங்களுக்கில்ல குதிரைகளுக்கு) கேதாரம் வந்து சேர்ந்தோம்.

கோவிலின் வாசல் வரை குதிரை போகாததால் சிறிது தூரம் முன்பே இறங்கிவிட்டோம். இறங்கிய பிறகு தான் தெரிந்தது குதிரையில் பயணிக்கும் போது தோன்றும் வலி என்னவென்று சும்மா சொல்லக்கூடாது இடுப்பு கழன்று விட்டது. அப்படியே விந்தி விந்தி தான் நடந்து சென்றோம் கோவிலுக்கு. இங்கு சுயம்பு வடிவான கேதார்நாத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம். இதை பார்த்தவுடன் என் அம்மா வாய்ப்பை விடாமல் பயன்படுத்த வேண்டுமென்று சிறிது நேரம் காத்திருந்து பணம் கட்டி அபிஷேகம் செய்தார். நம் ஊரை போல் அல்லாமல் வடநாட்டில் கர்ப்பக்கிருகத்தில் நுழைந்து சாமியை தொட்டு வணங்கலாம். நாங்களும் சிவனை தொட்டு வணங்கினோம்.

என்ன தான் இருந்தாலும், நம்மூரில் இருண்ட சுவாமி சன்னிதியில் இயற்கையான விளக்கொளியில் முண்டியடித்துக் கொண்டு சுவாமியை தரிசிக்கும் போது உண்டாகும் அந்த அற்புத உணர்ச்சி இங்கே கிடைப்பதில்லை. தரிசனம் முடிந்ததும் வெளியில் உள்ள சின்ன சன்னதிகளையும் தரிசித்து ப்ரகாரத்தை சுற்றி வந்தோம். எங்களுக்கு மலைப்பு தான் மிஞ்சியது, போக்குவரத்து வசதியே இல்லாமல் இவ்வளவு உயரத்தில் வந்து கோவிலை அமைத்தது பெரிய சாதனை தான். இது கூட பரவாயில்லை, பத்ரிக்கு செல்வது இன்னும் கடினம் என்றார்கள் என் தாத்தா பல வருடங்களுக்கு முன் இந்த இடங்களுக்கு நடந்தே வந்தார் என்று என் அம்மா சொன்னதை கேட்டு இன்னும் ஆச்சரியம் அடைந்தோம்.

பின் அங்கிருந்து மீண்டும் குதிரை வாகனத்தில் அமர்ந்து கீழே இறங்கி வந்தோம். ஏற்கனவே ஊசலாடிக் கொண்டிருந்த எங்கள் இடுப்பு சுத்தமாக கழன்று விழுந்து விட்டது, அந்த அளவுக்கு வலி. கேதார்நாத் செல்பவர்களுக்கு நான் கூறும் ஒரே ஒரு அட்வைஸ் என்னவென்றால், முடிந்த வரை கீழே இறங்கும் போது குதிரையை தவிர்த்து நடந்தே வந்து விடுங்கள்.:)


பி.கு: இந்த முறை சில தவிர்க்க முடியாத காரணங்களால் கொலு வைக்க வில்லை, ஆனாலும் வழக்கம்விட்டுப் போகாமல் இருக்க சரஸ்வதி பூஜையன்று அவசர அவசரமாக வைத்த அலமாரி கொலு இது,