Wednesday, December 27, 2006

நான் ஒரு படிப்பாளி!


டிஸ்கி: இது நாட்டாமைக்கு, தலைப்பை பார்த்துட்டு இதுவும் அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி ஓடக்கூடாது,முழுசா படிச்சு பாருங்க, நம்ம குடும்ப மானத்தை கதை புத்தகம் படிச்சு தான் காப்பாத்தறேன், பாடப்புத்தகம் இல்லை:)

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறதே அது ஒரு போதை என்றே சொல்லலாம். அந்த வகையில் நான் புத்தக போதையில் உழன்றுக் கொண்டிருப்பவள், சாலையில் நடந்து போகும் போது நம் காலில் வந்து உரசும் சிறு காகிதத்துண்டிலிருந்து, கடையில் சாமான் வாங்கினால் சுற்றிக் கொடுக்கும் காகிதம்,வேர்க்கடலை பொட்டல காகிதம் என்று எது கிடைத்தாலும் படிக்கும் பழக்கம் உண்டு.

இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துக்கொண்டு வருகிறது என்று சிலர் சொன்னாலும் கடந்த சில வருடங்களாய் இருந்த தொய்வு நிலையிலிருந்து இப்பொழுது புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து பல வருடங்களாக சென்னையில் நடக்கும் வருடாந்திர புத்தக கண்காட்சிக்கு செல்வதால் என்னால் இதை உறுதியாக சொல்ல முடிகிறது.

சின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. 7, 8 வயதிலிருந்தே வீட்டுக்கு வரும் கல்கி,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதில் என்ன தான் படிச்சு புரிஞ்சுக்கிட்டேன்னு தெரியலை, ஒரு வேளை, வெறும் படங்கள் மட்டும் தான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். சிறிய வயதில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன்.

முதலில் நிறைய படங்கள் போட்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து ராணி முத்து காமிக்ஸ் ,அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி என்று ஆரம்பித்து நிறைய வார இதழ்கள், தொடர்கதைகள், பின் நாவல்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் மானாவாரியாக வீட்டுக்கு வரும் எல்லா புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தேன்(என்னிக்காவது உன் பாடப்புத்தகத்தை இப்படி படிச்சிருக்கியான்னு அசட்டுத்தனமா கேட்கக்கூடாது)பள்ளியில் படிக்கும் போது தொடர்கதை படிக்க வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். நான் மெதுவாக நழுவி வீட்டினருக்கு தெரியாமல் எல்லாம் படித்த காலம் உண்டு.

தமிழில் ராஜேஷ்குமார்,தேவிபாலா,சுபா போன்ற எழுத்தாளர்கள் தான் முதலில் எனக்கு தெரியும். அவர்களை தாண்டி படித்ததில்லை, ஆங்கிலத்தில் archies,asterix and obelix,tintin போன்ற காமிக்ஸ் ஒன்று விட்டதில்லை.

இப்படி ஒரு பாகுபாடும் இல்லாமல் படித்த நான் கல்லூரி காலத்திலும் அதற்கு பின்னும் தான் எனக்கு எந்த விதமான எழுத்துக்கள் பிடிக்கிறது என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். தமிழில் அறிவியல் கலந்த சுஜாதாவின் நாவல்கள், ஆண்பெண் சமத்துவம், பெண்ணியம்,சமூகம் சார்ந்த பிரபஞ்சனின்,வாஸந்தியின் நாவல்கள் என்று தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.இவர்களின் எழுத்துக்கள் என் எண்ணங்களை,இயல்புகளை மாற்றினவை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் காமிக்ஸ் மட்டுமே படித்து வந்த நான், கல்லூரியில் தான் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். மருத்துவம் சார்ந்து எழுதும் ராபின் குக்,அறிவியல் சார்ந்து எழுதும் மைக்கேல் கிரிக்டன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

ஒவ்வொரு புத்தகமும் நமக்கு புது உலகத்தை காட்டுகிறது.புத்தகத்தில் ஓடும் வரிகள் நம் மனக்கண்ணில் படமாக விரியும் போது நம் கற்பனை திறன் அதிகரிக்கிறது.

என்ன தான் அறிவியல் முன்னேற்றம் வந்து கணினியில் புத்தக்கங்கள் படிக்கும் வசதி வந்தாலும், ஒரு அமைதியான இடத்தில் அருமையான தேநீரை ருசித்துக்கொண்டே நமக்கு பிடித்த எழுத்தை நம் வசதிக்கேற்ப படிப்பது என்பது எதற்கும் ஈடாகாது.

பி.கு : விடுமுறை சமயம் என்பதால் எல்லாரும் காணாம போயிட்டாங்க, நாட்டாமை பழைய பஞ்சாயத்து நிறைய இருக்குன்னு பார்க்க போயிட்டார், மொ.ப. தலைவி(வலி) கீதா திடீர்னு வராங்க திடீர்னு போறாங்க, நாரதர் அம்பி சென்னையில் மழை பெய்யுதான்னு பார்க்கறேன்னு சொல்லி பாதி நாள் எஸ்கேப்,அவருக்கு பஜ்ஜி சொஜ்ஜி ஏற்பாடு பண்றதுல திராச பிஸி,சுகாதார துறை அமைச்சர் ப்ரியா மத்த மாகாணத்துல எல்லாம் சுத்தபத்தமா இருக்காங்களான்னு பார்க்க போயிட்டாங்க, தலைவர் கடலை கார்த்திகேயன் அமைச்சரவை மாற்றத்துல மும்முரமா இருக்கார். அதனால் நானும் நம்ம கட்சி மானத்தை(!) காப்பாத்த தென்மாவட்ட சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொள்கிறேன். எனவே அடுத்த வருடம் திரும்பி வந்து பட்டையை கிளப்பி விடலாம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பி.கு.கு: புதன்(27/12/2006) முதல் திங்கள்(1/1/2007)வரைக்குமான திருப்பாவை பாடல்களை ஒரே பதிவாக இன்று போட்டுள்ளேன். அதையும் படித்து விடுங்கள், வந்தவுடன் கண்டிப்பாக சர்க்கரை பொங்கல் உண்டு. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலருடைய வலைப்பக்கங்களுக்கு வர முடியவில்லை, என் வலைப்பக்கமே போக முடியவில்லை, ஊரிலிருந்து திரும்ப வந்தவுடன் எல்லார் வீட்டுப்பக்கமும் வந்து அட்டெண்டஸ் கொடுத்து விடுகிறேன் :)

திருப்பாவை பாடல் (12-17)

திருப்பாவை பாடல் - 12

"கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:


இளங்கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றை நினைத்து வருந்துகையில் மடியில் தானாக பால் வடிய அதனால் வீடே சேறாகும் செல்வனின் தங்கையே எங்கள் தலையில் பனி விழ உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறோம். சினம் கொண்டு அந்த இராவணனை(தென்னிலங்கை கோமானை) கொன்ற மனதுக்கினிய இராமனை நாங்கள் பாடி புகழ, நீயோ வாய் திறவாமல் இருக்கிறாய். பெண்ணே எழுந்திராய்! இது என்ன பெரும் உறக்கம்? நீ இப்படி உறங்குவதைப் பற்றி அனைத்து இல்லத்தினருக்கும் தெரிந்து விட்டது.


திருப்பாவை பாடல் -13

"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகாசுரன் என்னும் அரக்கனின் வாயை இரண்டாக பிளந்தவனும், மற்ற பொல்லாத அரக்கர்களை அழித்தவனும், இராவணின் பத்து தலைகளையும் புல்லை கிள்ளி எறிவது போல் எறிந்தவனுமானவனின் புகழைப் பாட நாங்கள் எல்லாரும் கூடி இருக்கிறோம். விடியற்காலையான இப்பொழுதில் சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்)உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது. பறவைகள் எல்லாம் இரை தேட புறப்பட்டு விட்டன, அழகிய தாமரை மலரில் மீது வண்டுகள் உறங்குவது போன்ற கண்களை உடையவளே! இந்த நல்ல நாளிலே நன்கு முழுகி நீராடாமல் இன்னும் படுக்கையில் கிடக்கிறாயே, தனியே இருந்து கபடம் நினைக்காமல் எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!


திருப்பாவை பாடல் - 14"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்"

பொருள்:

உங்கள் புழக்கடை தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் விரிந்து ஆம்பல் மலர்கள் குவிந்து விட்டன. காவி நிறத்தில் தோய்ந்த ஆடைகளை உடுத்துபவரும், வெண்மையான பற்களை உடையவருமான தவம் செய்யும் துறவிகள் தங்கள் திருக்கோயில்களில் ஆராதனை செய்ய புறப்பட்டு விட்டனர். நீராடுவதற்கு எங்களை 'எழுப்பி விடுவேன்' என்று சொல்லி வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொண்ட நங்கையே!எழுந்திராய்! சொன்னதை செய்யவில்லையே என்ற நாணம் சிறிதும் இல்லாதவளே ,நீ விரைவில் எழுந்து சங்கையும், சக்கரத்தையும் ஏந்தியுள்ளவனும், முழங்காலளவு நீண்ட கைகளை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை கொண்டவனுமான கண்ணனின் புகழ் பாடுவாயாக!


திருப்பாவை பாடல் - 15


"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இளமை கொண்ட கிளியின் இனிமையான சொல்லுடையவளே இன்னும் உறங்குகிறாயோ? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு 'சிலுகு சிலுகு என்று கூச்சலிட்டு ஏன் எழுப்புகிறீர்கள் இதோ வருகிறேன்' என்று நீ சொல்லவும் 'சாமர்த்தியமான உன் பேச்சுகளையும் உன் கட்டுக்கதைகளையும் நாங்கள் அறிவோம்'என்று நாங்கள் சொல்ல, 'நீங்கள் தான் பேசும் திறனில் வல்லவர்கள் நானும் அப்படியே இருந்து விட்டு போகிறேன்' என்று சொல்லி உடனே எங்களோடு வந்து சேர்ந்துக்கொள். உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எல்லாரும் வந்து விட்டார்களா? என்று கேட்கிறாயே, இதோ நீயே வந்து எண்ணிக் கொள். வலிமை மிக்க குவலயப்பீடமென்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களின் புகழை அழிக்க வல்லவனுமாகிய அந்த மாயவனை புகழை நாம் பாட நீயும் வருவாயாக!


திருப்பாவை பாடல் - 16

"நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாசல்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மாநீ
நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இடைக்குலத்தை சேர்ந்த எங்களுக்கு தலைவனாய் இருக்கும் நந்தகோபரின் வீட்டைக் காப்பவனே, அழகிய கொடிகள் தோரணங்கள் அலங்கரிக்கும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளை திறவாய்! அந்த மாயம் புரிபவன்,மணிவண்ணன் ஆயர்குல(இடைக்குலம்) சிறுமிகளான எங்களுக்கு வேண்டுவன தருவதாய் சொல்லியிருக்கிறான், அதனால் நாங்கள் தூய்மையாய் வந்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன்முதலில் நாங்கள் வந்துள்ள இந்த நேரத்தில் உன் வாயால் மறுக்காதிருந்து இந்த நிலைக்கதவின் தாள் நீக்குவீர்!

(முந்தின பாடல் வரையில் தன் தோழியை எழுப்பும் ஆண்டாள் இப்பாடலில் ஆயர்பாடியில் இருக்கும் இடையர்குல தலைவனான நந்தகோபனின் மாளிகையில் வாயில் காப்போனை எழுப்புகிறாள்)திருப்பாவை பாடல் - 17


"அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்.
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"

பொருள்:

அழகிய ஆடைகளும் தண்ணீரும் சோறும் தானம் கொடுக்கும் பெருமானே எங்கள் தலைவரே நந்தகோபாலா எழுந்திராய்! கொம்பை ஒத்த வதனத்தையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே! எங்கள் குலவிளக்கே யசோதையே எழுந்திராய்!ஆகாயத்தையும் தாண்டி வளர்நது அனைத்துலகையும் அளந்தவனே எழுந்திராய்! செம்மையான பொன்னால் செய்த கழலை அணிந்த பலதேவரே நீரும் உம் தம்பியும் உறக்கத்திலிருந்து எழுந்திரும்!

(இப்பாடலில் யசோதையையும்,கண்ணனையும்,அவன் சகோதரன் பலதேவனையும் எழுப்புகிறாள்)

Thursday, December 21, 2006

திருப்பாவை பாடல் (6-11)

திருப்பாவை பாடல் - 6

"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ் சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:

அதிகாலை நேரம் பறவைகளும் இரை தேட புறப்பட்டன. கருடனின்(புள்ளரையன்) தலைவனான இறைவனின் கோவிலில் வெண்மையான நிறம் கொண்ட சங்கின் ஒலி(பேரரவம்) கேட்கவில்லையோ? பெண்ணே எழுந்திரு! முலைப் பால் கொடுத்து தன்னை கொல்ல வந்த பூதனையை மடித்து திருப்பாற்கடலில் துயிலில் அமர்ந்தவனை உள்ளத்தில் கொண்டு எழுந்து 'அரி,அரி' என்று முனிவர்களும்,யோகிகளும் அழைக்கும் அரவம் நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது.

திருப்பாவை பாடல் - 7

"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப்பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அதிகாலையில் ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் கீசுகீசு என்று தமக்குள்ளே பேசும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ பெண்ணே? கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கலகலவென்று ஒலியெழுப்ப, நறுமணமுள்ள கூந்தலை உடைய இடையக்குல(ஆய்ச்சியர்) பெண்கள் மத்தினால் தயிர்கடையும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ? நாராயணனான கேசவனின் புகழ் பாடுவதை கேட்டும் நீ இன்னும் உறங்குகிறாயோ பெண்ணே? நீயே எழுந்து வந்து கதவை திறவாய்!திருப்பாவை பாடல் - 8

"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:


காலை புலர்ந்து விட்டது,கீழ்வானம் வெளுத்து விட்டது. புல் மேய்வதற்காக எருமைகள் செல்வதை காண்பாயாக! உன்னை தவிர பாவை நோன்பை மேற்கொள்ள போகின்றவர்களையும் போகாமல் தடுத்து உன்னை அழைக்க உன் வாசலிலே நிற்கின்றோம்! பெண்ணே எழுந்திராய்! குதிரை வடிவில் வந்த ஒரு அசுரனை இரண்டாய் பிளந்தவனை, மல்லர்களை கொன்றவனை அந்த தேவாதி தேவனின் புகழ் பாடி நாம் அவனை சேவித்தால் அவன் நம் மீது 'ஐயோ' என்றிரங்கி நம் குறைகளை கேட்டு அருள் செய்வான்.

திருப்பாவை பாடல் - 9


"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:


அழகான குறையற்ற மாணிக்கங்கள் அலங்கரிக்கும் மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, நறுமணத்துடன் எங்கும் தூபம் கமழ அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.திருப்பாவை பாடல் - 10

"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். "

பொருள்:

பாவை நோன்பிருந்து சுவர்க்கம் அடைய உன்னை எழுப்பினால் வாசல் கதவை திறக்காதவளே நீ பேசவும் மாட்டாயோ? மணங்கமழும்(நாற்றம்) துளசி(துழாய்) மாலையை அணிந்திருக்கும் நாராயணின் புகழை நாம் போற்றினால் அவன் நமக்கு வேண்டியன தருவான். அன்றொரு(பண்டொரு) நாள் எமனின்(கூற்றத்தின்) வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் ,உன்னிடம் உறங்கும் போட்டியில் தோற்று பெரும் உறக்கத்தை உனக்கு தந்தானோ? என்று சொல்லும் படி உறங்குபவளே, எங்களுக்கு அணியாய் இருப்பவளே தடுமாறாமல் தெளிவாய் வந்து கதவை திறப்பாயாக.திருப்பாவை பாடல் - 11

"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:


கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து, பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள் ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில் திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டு முற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்ட கண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும் அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?

Saturday, December 16, 2006

மாதங்களில் நான் மார்கழி(பாடல் 1- 5)மார்கழி மாதம் என்றதும் நினைவுக்கு வருவது வண்ணக்கோலங்கள், அதில் புள்ளி வைத்து தன் பங்குக்கு அழகு சேர்க்கும் அதிகாலை பனித்துளிகள், வீதி வழியே உலா வரும் மார்கழி பஜனை கூட்டங்கள், இனிமையினும் இனிமையாக ஆண்டாளின் அழகிய கவிதைகளான திருப்பாவை பாடல்கள், மாலையில் இன்னிசை கச்சேரிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கீதையில் கண்ணனே 'நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறான். மார்கழியில் மட்டும் என்ன அப்படி விசேஷம்?

பக்தி மார்க்கமாக பார்த்தால் எனக்கு தெரிந்த ஒரு விளக்கம். மனிதர்களான நம்முடைய ஒரு வருடம் என்னும் கால இடைவெளி தேவர்களுக்கு ஒரு நாள் எனவும் அதில் மார்கழி மாதம் அதிகாலை பொழுதை குறிக்கும் எனவும் பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த மார்கழி மாதத்தில தான் பாவை நோன்பிருந்து ஆண்டாள் அரங்கனை அடைந்தாள்.


கலை மார்க்கமாக பார்த்தால் மார்கழியில் விடியற்காலையில் எல்லார் வீட்டிலும் பூக்கும் அழகிய வண்ணப்பூக்களான கோலங்கள். இப்பொழுதெல்லாம் இரவிலேயே கோலங்களை போட்டு விடுகின்றனர். ஆனால் விடியற்காலையில் கோலம் போடுவது அதுவும் மார்கழி மாதத்தில் அந்த நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்று மாசற்றதாக இருக்கும் எனவே தான் விடியற்காலையில் கோலம் போடும் பழக்கம் வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டிலும் இரவில் தான் கோலம் போடுவது வழக்கம். சிறு வயதில் பெரிய தெருவில் இருக்கும் போது வீட்டு வாசலில் எல்லைக்கோடுகள் எல்லாம் வரைந்து பக்கத்து வீட்டு தோழி அதை தாண்டி கோலம் போடக்கூடாது என்றெல்லாம் சின்ன சின்ன சண்டைகள் போட்டிருக்கிறேன். மார்கழி மாதத்தில் பள்ளிக்கூடத்திலும் சரி கல்லூரி படிக்கும் காலத்திலும் சரி புத்தகங்களில், காகிதங்களில் எல்லாம் கோலம் போட்டுக்கொண்டே இருப்போம். அதிலும் வண்ணக்கோலங்கள் போடுவதென்றால் போதும் வண்ணங்களை கலந்து அது சரிவிகிதமாக இருக்கிறதா என்று ஆராய்ச்சியெல்லாம் பண்ணுவேன். கோலம் போடுவது ஒரு வித தியானம் தான். புள்ளியை நேராக வைத்து அழகிய கோடுகளை இழுத்து வளைந்து நெளிந்து இறுதியில் அழகிய ஓவியமாக வளரும் கோலங்கள் நம் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகின்றன.

மார்கழி மாதத்தில் களைகட்டுவது இசை கச்சேரிகளும் தான். சபாக்களுக்கு போய் அமர்ந்து கச்சேரிகளை கேட்பது போய் இப்பொழுதெல்லாம் நம் வீட்டின் வரவேற்பரையில் தொலைக்காட்சியின் மூலம் மிகவும் அமைதியாக அமர்ந்து ரசிக்க முடிகிறது.

இன்றிலிருந்து மார்கழி ஆரம்பம் என்பதால் வீட்டில் தினமும் திருப்பாவை படிப்போம். என் வலைப்பக்கத்திலும் தினம் ஒரு பாடல் என எழுத நினைத்திருக்கிறேன். அதற்கு முன் ஆண்டாளை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்' என்ற புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருப்பதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.


"ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஆண்டாள் நிஜமானவர் என்பதை அவருடைய பெண்மை மிளிரும் பாசுரங்களே
அறிவிக்கின்றன. இவர் தமிழில் மிகவும் புலமை பெற்றவர். திருப்பாவையின் யாப்பு மிகவும் கடினமானது. இன்று திருப்பாவையின் யாப்பமைதியில் பாடல் ஒன்றை நம் சிறந்த கவிஞர்கள் எழுதினால் கூட அத்தனை எளிமையாக,அழகாக அமைப்பது கடினம். ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் 'சங்கத்தமிழ் மாலை' என்று போற்றப்படுகின்றன். திருப்பாவை என்பது பின் வைத்த பெயராக இருக்கலாம். பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தைத் தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான் அகநானூறு, நற்றினை,பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலும் குறிப்பிடப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகக் கொண்டு வட பெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும், அதில் உள்ள தெய்வத்தைக் கிருஷ்ணனாகவும் பாவித்து செய்த பாவை நோன்பை விளக்குகிறது திருப்பாவை."

திருப்பாவை பாடல் - 1

"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்."
பொருள்:
மார்கழி மாதமும் முழு நிலா நாளுமான இன்று செல்வப் பெருக்கையுடைய ஆய்ப்பாடியில் செல்வம் நிறைந்த இளம்பருவ பெண்களே நீராட வருவீர். கூர்மையான வேலும், கண்ணனுக்கு தீங்கு நினைப்பவருக்கு கொடியவனுமான நந்தகோபனுடைய குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளம் சிங்கம், மேகம் போல உடல், செந்தாமரையை ஒத்த கண்கள், கதிரவன் போன்ற ஒளியையும் சந்திரனை போன்ற முகம் கொண்டவனான நாராயணன் நாம் விரும்பியதைக் கொடுப்பான்(பறை தருவான்). எனவே உலகோர் புகழ இந்நோன்பில் ஈடுபடுவோம்.திருப்பாவை பாடல் - 2

"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
இந்த வையத்தில்(உலகத்தில்) வாழ்பவர்களே,நாம் பாவை நோன்புக்கு செய்யும் செயல்களை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல துயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை பாடுவோம். விடியற்காலை(நாட்காலே) நீராடுவோம். நெய்,பால் போன்றவற்றை உண்ணாமல் இருப்போம். கண்களுக்கு மையிடாமல், மலர்கள் சூடாமல் இருப்போம். செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்போம். பிறரை கோள்(தீக்குறள்) சொல்லாமல் இருப்போம். தகுதியுள்ளவர்களுக்கு பொருளும்,பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு(ஆந்தனையும்) கொடுப்போம்.

திருப்பாவை பாடல் - 3

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய நெய்தல் மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி இடையர்கள் குடம் குடமாக பால் கறக்கும் பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க வேண்டும்.

திருப்பாவை பாடல் - 4

"ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்"


பொருள்:

மழைக்கு அதிபதியான வருணனே, நீ சிறிதும் ஒளிக்காமல்(கைகரவேல்) நடுக்கடலில்(ஆழியுள்)புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு(முகந்து) ,மேலே ஆகாயத்தில் ஏறி எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான இறைவனின் உருவம் போல் கறுத்து, அழகிய தோள்களையுடைய பத்மநாபன் கையில் மின்னும் சக்கரம்(ஆழி) போல் மின்னலடித்து, சங்கு(வலம்புரி) போல் ஒலித்து, சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல், உலகினர் மகிழ நாங்களும் மார்கழி நீராடி மகிழ மழை பொழிவாயாக.

திருப்பாவை பாடல் - 5

"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மாயங்கள் புரிபவனை வட திசையில் உள்ள துவாரகையின் அரசனானவனை, தூய்மையான நீர் விளங்கும் யமுனை நதிக்கரையில் இருப்பவனை, இடையர் குலத்தினில் தோன்றிய மணி விளக்கினை, யசோதையின் வயிற்றில் தோன்றி அவள் வயிற்றை பிரகாசிக்க செய்த தாமோதரனை, நாம் தூய்மையோடு மலர் தூவி தொழுது, அவன் பெயரினை பாடி, மனதினால் அவனையே சிந்தித்தால் இது வரை செய்த பிழைகளும் இனி வரப் போகும் பாவங்களும் தீயிலிட்ட தூசியாய் அழிந்துவிடும்

பி.கு.: அடுத்த பதிவு எழுதும் வரை தினமும் ஒரு திருப்பாவை பாடலை இந்த பதிவிலேயே சேர்க்கின்றேன்.

Tuesday, December 12, 2006

இது ட்ரெயிலர் இல்ல நிஜம்! அடிச்சாச்சு சதம்!

இது போன வாரம் ஓட்டின ட்ரெய்லர்:

சென்ற வாரம் களப்பணிக்கு சென்ற இடத்தில் சிறிது ஓவர்டோஸ் ஆகி(வேலையை தாங்க சொல்றேன்) தற்போது ஃபுல் அடிச்சு மப்புல ஆடற குடிமகன் ரேஞ்சுக்கு ஆகிட்டேன். வங்கக்கடலில் குடிக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா இல்லை அப்டியே ஓடிப்போயிடுமா என்பது போல் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என் உடல்நிலை சரியாகுமா இல்லை தொடர்ந்து நீடிக்குமா என்ற தெரியாததால், இன்னும் இரண்டோர் நாட்களுக்கு வலைப்பக்கங்களில் மேயமுடியுமா? என்ற சந்தேகமாக இருப்பதால் இப்போதைக்கு இது ஒரு ட்ரெய்லர் பதிவு, மீண்டும் வந்து இப்பதிவை நிறைவு செய்கிறேன். ரொம்ப கண்பட்டு விட்டதால் தான் இப்படி இருக்கிறது என்று என் அம்மா பீல் பண்ணுவதால் ட்ரெய்னிங்(!) சென்றுள்ள அண்ணன் நாட்டாமை வந்து சுத்தி போட்ட பின் மீண்டும் வருவேன்:)

இனி மெயின் சினிமா:

எல்லாம் 100வது பதிவு போடறதுக்கு ஒரு பில்டப் தான்:) ஆனா உண்மையிலேயே உடம்பு சரியில்லையாதலால் கொஞ்சம் தாமதமாயிடுச்சு:)

எப்படியோ தட்டு தடுமாறி 100வது பதிவை போட்டாச்சு. அடிதடி,டூயட்,தத்துவம் எல்லாம் கலந்த ஒரு சுமாரான மசாலா படத்தை 100 நாட்கள் ஓட்டின மாதிரி இந்த வலைப்பக்கத்துல சதம் போட்டாச்சு. சில சமயம் கடமைக்காக எழுதற மாதிரி இருந்தாலும் ஒரு விதத்துல இந்த ஒன்றரை வருடத்துல எனக்குள் பல மாற்றங்கள்,சிந்தனைகள் ஏற்பட்டதற்கு காரணம் இந்த வலைப்பூக்கள் தான், பல புதிய நட்புகளின் அறிமுகங்கள் உட்பட.ஆனா பாருங்க 100வது பதிவு போடறதுக்கு ஏகப்பட்ட தடங்கல், எல்லாம் எதிர்கட்சியின் சதி தான் வேறென்ன சொல்ல:)

தலைவர் கடலை கார்த்தியின் சொற்படி களப்பணிக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கணினியின் முன் உட்காரவே முடியாத நிலை, சரி இன்றாவது ட்ரெய்லரை எடுத்துட்டு முழு சினிமா ஓட்டலாம்னு பார்த்தா காலையிலிருந்து இணையத்தொடர்பில் பிரச்னை, சே நாட்டுல ஒருத்தரை முன்னேறவிட மாட்டேங்கறாங்க:)அப்பாடி இப்ப தான் இணையத் தொடர்பு கிடைச்சது, இப்ப மேட்டருக்கு வருவோம்.

இந்த டிசம்பர் மாதத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் அப்படி ஒரு ராசிங்க முக்கியமா என் பாட்டி விஷயத்துல, ஒவ்வொரு டிசம்பர் மாசமும் ஏதாவது நடந்துடும். இப்படி தான் ரெண்டு வருஷம் முன்னாடி திடீர்னு 'என்னால நடக்கவே முடியலை' அப்படின்னு சொல்லி ஒரு மாசம் முழுக்க படுக்கையிலேயே இருந்தாங்க. சாப்பாடு முதற்கொண்டு எல்லாம் படுக்கையில தான்.வீட்டுல ஒருத்தருக்கு உடம்புக்கு முடியலேன்னா அவ்வளவு தான் மத்தவங்களும் அப்டியே நோயில அடிப்பட்டவங்க மாதிரி ஆகிடும், அது தான் நாங்க கொஞ்சம் ஆடிப்போயிட்டோம்:)

அப்புறம் டிசம்பர் முடிஞ்சவுடன் எழுந்து நடமாட ஆரம்பிச்சிட்டாங்க. போன டிசம்பரில் கீழ விழுந்து இடுப்புல எலும்பு முறிவாகி அறுவை சிகிச்சை செய்து(அப்ப அவங்களுக்கு 85 வயசு) வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்தவமனையில் தான் கழிந்தது, விளைவு எங்க பாட்டியை தவிர எங்க எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போச்சு.

அதே டிசம்பர் மாதம் இந்த வருடமும் விதி விளையாட ஆரம்பிச்சுது, இந்த முறை மாரடைப்பு. போன வாரம் திங்கட்கிழமை இரவு 7 மணி அளவில் மூச்சு விட முடியாமல் இழுக்க ஆரம்பித்து விட்டது, எங்க குடும்ப மருத்தவருக்கு தொலைபேசியில் தெரிவித்த போது அது மாரடைப்பாக தான் இருக்கும்,உடனே மருத்தவமனைக்கு எடுத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார். சரி என்று காருக்கு ஏற்பாடு செய்த பிறகு தான் உறைத்தது நிலைமையின் தீவிரம்.

என் பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ததால் வாக்கர்(walker) இல்லாமல் நடக்க முடியாது, நாங்கள் இருப்பது முதல் மாடியில். என் தம்பி வேலையிலிருந்து வரவில்லை, என் அப்பா, சித்தப்பா ரெண்டு பேருமே என் பாட்டியை தாங்கிச் செல்லும் அளவு உடல் நலம் படைத்தவர்கள் அல்ல. உண்மையிலேயே அடுக்குமாடியில் குடியிருப்பதால் உள்ள லாப,நட்டங்கள் எல்லாம் அப்பொழுது தான் புரிந்தது. என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் அத்தனை பேரும் வந்து விட்டார்கள். தெருமுனையில் சென்று காரை சரியாக அழைத்து வர ஒருவர் சென்று விட்டார், கார் வந்தவுடன் என்ன நடக்கிறது என்ற்றறியும் முன் பாட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே காரில் கிடத்தினர் சிலர், எங்கிருந்தோ ப்ளாஸ்க்கும்,வெந்நீரும் வந்தன. விரைந்தோம் மருத்தமனைக்கு, கூடவே குடியிருப்பில் இருப்போர் சிலரும் வந்தனர்.

ஏனடா இப்படி ஒரு குடியிருப்பில் வந்து மாட்டிக்கொண்டோம் எல்லா விஷய்த்திலும் மூக்கை மட்டுமா தலையே நுழைக்கிறார்கள் என்று நான் நினைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவம், என் எண்ணத்தை மாற்றியது. எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நாம் மற்றவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ அதை தான் மற்றவரும் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்றனர் இல்லையா? ஒரு வேளை நாங்கள் தனித்து வசித்திருந்தால் இவ்வளவு வேகமாக உதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். நம்மள சுத்தி நாலு பேர் இருந்தா கூப்பிட்ட குரலுக்கு உதவி கிடைக்கும்னு சும்மாவா சொன்னாங்க. அதை அன்னிக்கு தான் பூரணமா அனுபவிச்சோம். இதை தான் நம்ம முண்டாசு கவிஞர் சொன்னார், 'அன்பென்று கொட்டு முரசே' என்று:)

பி.கு: இது நூறாவது பதிவு என்பதால் எல்லாரும் ஸ்பெஷலா கவனிப்பீங்கன்னு தெரியும்(அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா துப்பிட்டு போவீங்க) ஆனாலும் இன்னொரு விஷயமும் சொல்றேன், என் இன்னொரு வலைப்பக்கத்துல இப்பதான் 25வது பதிவு(அதாவது 25வது கவிதை) எழுதியிருக்கேன், அதையும் படிச்சு கொஞ்சம் உங்க கருத்துக்களை அங்கன சொல்லுங்க,ஹிஹி:)

Friday, December 01, 2006

கொடுமை கொடுமையோ...


"என்ன இது மசமசன்னு?சீக்கிரம் வாங்க செல்வியில ராதிகா இன்னிக்கு தாலியை கழட்டிக் கொடுக்கறாங்களான்னு பார்க்கணும் இல்ல"


ரெண்டு நாளா சீரியல பார்க்குற கொடுமையில மாட்டிக்கிட்டேன். எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி ஒருத்தங்க காலைல நாலு,மாலைல நாலு சீரியல்னு டைம்டேபிள் போட்டு சீரியல் பார்க்கறவங்க,அவங்களுக்கு கம்பெனி கொடுக்க நாமளும் பார்க்க வேண்டியதா போயிடுச்சு. பாருங்க எதுக்கெல்லாம் கம்பெனி கொடுக்க வேண்டியதா இருக்கு:(

ஆனா நான் கோலங்கள்,செல்வி மட்டும் தான் பார்த்தேன்,அதுக்கே மண்டை காஞ்சுப்போச்சு. இதுல கோலங்கள் சீரியல் நானும் ஆரம்பத்துல பார்த்துக்கிட்டுருந்தேன். ஆனா அபி,பாஸ்கர்(அவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியலேன்னா தமிழ்நாட்டுல இருக்கற்து வேஸ்ட்) பிரிஞ்சுப் போய் அப்புறம் பாஸ்கருக்கு வேற கல்யாணம் நடக்குதுன்னு காமிச்ச வரைக்கும் பார்த்தேன்,அந்த டைரக்டர் அதுக்கப்பறம் அபிக்கு நிறைய இடங்கள் அமைந்தும் அந்தம்மா கல்யாணம் பண்ணிக்காம அப்டியே தியாகச்சுடர் ரேஞ்சுக்கு போனவுடன் சீரியல் பாக்கறத நிறுத்திட்டேன். எல்லா சீரியலிலும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதை தான். இதுல கோலங்கள் நேத்து மகா கேவலமா இருந்தது, கல்யாணம் நிச்சயிக்கப்பட்டவுடன் மாப்பிள்ளை ரொம்ப கர்மசிரத்தையா நண்பர்களோட உட்கார்ந்து தண்ணியடிக்கறாரு. எனக்கு வந்த கோபத்துல நாலு அறை அறையணும் போல இருந்தது ஆனா என்ன பண்றது டிவிக்குள்ள போக முடியல:)
நாட்டாமை நீங்க தீர்ப்பு சொன்ன மாதிரி அடுத்த பதிவை போட்டாச்சு:) இன்னும் ரெண்டு நாளைக்கு ஊருல இருக்க மாட்டேன்,அதுனால கார்த்திகை தீப வாழ்த்துக்களை இப்பவே சொல்லிடறேன். கார்த்திகை தீபம் ஸ்பெஷலா இந்த பதிவுக்கு பொறிஉருண்டை தான் முதல் கமெண்டுக்கு:)