Wednesday, December 27, 2006

திருப்பாவை பாடல் (12-17)

திருப்பாவை பாடல் - 12

"கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:


இளங்கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றை நினைத்து வருந்துகையில் மடியில் தானாக பால் வடிய அதனால் வீடே சேறாகும் செல்வனின் தங்கையே எங்கள் தலையில் பனி விழ உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறோம். சினம் கொண்டு அந்த இராவணனை(தென்னிலங்கை கோமானை) கொன்ற மனதுக்கினிய இராமனை நாங்கள் பாடி புகழ, நீயோ வாய் திறவாமல் இருக்கிறாய். பெண்ணே எழுந்திராய்! இது என்ன பெரும் உறக்கம்? நீ இப்படி உறங்குவதைப் பற்றி அனைத்து இல்லத்தினருக்கும் தெரிந்து விட்டது.


திருப்பாவை பாடல் -13

"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகாசுரன் என்னும் அரக்கனின் வாயை இரண்டாக பிளந்தவனும், மற்ற பொல்லாத அரக்கர்களை அழித்தவனும், இராவணின் பத்து தலைகளையும் புல்லை கிள்ளி எறிவது போல் எறிந்தவனுமானவனின் புகழைப் பாட நாங்கள் எல்லாரும் கூடி இருக்கிறோம். விடியற்காலையான இப்பொழுதில் சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்)உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது. பறவைகள் எல்லாம் இரை தேட புறப்பட்டு விட்டன, அழகிய தாமரை மலரில் மீது வண்டுகள் உறங்குவது போன்ற கண்களை உடையவளே! இந்த நல்ல நாளிலே நன்கு முழுகி நீராடாமல் இன்னும் படுக்கையில் கிடக்கிறாயே, தனியே இருந்து கபடம் நினைக்காமல் எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!


திருப்பாவை பாடல் - 14"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்"

பொருள்:

உங்கள் புழக்கடை தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் விரிந்து ஆம்பல் மலர்கள் குவிந்து விட்டன. காவி நிறத்தில் தோய்ந்த ஆடைகளை உடுத்துபவரும், வெண்மையான பற்களை உடையவருமான தவம் செய்யும் துறவிகள் தங்கள் திருக்கோயில்களில் ஆராதனை செய்ய புறப்பட்டு விட்டனர். நீராடுவதற்கு எங்களை 'எழுப்பி விடுவேன்' என்று சொல்லி வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொண்ட நங்கையே!எழுந்திராய்! சொன்னதை செய்யவில்லையே என்ற நாணம் சிறிதும் இல்லாதவளே ,நீ விரைவில் எழுந்து சங்கையும், சக்கரத்தையும் ஏந்தியுள்ளவனும், முழங்காலளவு நீண்ட கைகளை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை கொண்டவனுமான கண்ணனின் புகழ் பாடுவாயாக!


திருப்பாவை பாடல் - 15


"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இளமை கொண்ட கிளியின் இனிமையான சொல்லுடையவளே இன்னும் உறங்குகிறாயோ? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு 'சிலுகு சிலுகு என்று கூச்சலிட்டு ஏன் எழுப்புகிறீர்கள் இதோ வருகிறேன்' என்று நீ சொல்லவும் 'சாமர்த்தியமான உன் பேச்சுகளையும் உன் கட்டுக்கதைகளையும் நாங்கள் அறிவோம்'என்று நாங்கள் சொல்ல, 'நீங்கள் தான் பேசும் திறனில் வல்லவர்கள் நானும் அப்படியே இருந்து விட்டு போகிறேன்' என்று சொல்லி உடனே எங்களோடு வந்து சேர்ந்துக்கொள். உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எல்லாரும் வந்து விட்டார்களா? என்று கேட்கிறாயே, இதோ நீயே வந்து எண்ணிக் கொள். வலிமை மிக்க குவலயப்பீடமென்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களின் புகழை அழிக்க வல்லவனுமாகிய அந்த மாயவனை புகழை நாம் பாட நீயும் வருவாயாக!


திருப்பாவை பாடல் - 16

"நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாசல்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மாநீ
நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இடைக்குலத்தை சேர்ந்த எங்களுக்கு தலைவனாய் இருக்கும் நந்தகோபரின் வீட்டைக் காப்பவனே, அழகிய கொடிகள் தோரணங்கள் அலங்கரிக்கும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளை திறவாய்! அந்த மாயம் புரிபவன்,மணிவண்ணன் ஆயர்குல(இடைக்குலம்) சிறுமிகளான எங்களுக்கு வேண்டுவன தருவதாய் சொல்லியிருக்கிறான், அதனால் நாங்கள் தூய்மையாய் வந்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன்முதலில் நாங்கள் வந்துள்ள இந்த நேரத்தில் உன் வாயால் மறுக்காதிருந்து இந்த நிலைக்கதவின் தாள் நீக்குவீர்!

(முந்தின பாடல் வரையில் தன் தோழியை எழுப்பும் ஆண்டாள் இப்பாடலில் ஆயர்பாடியில் இருக்கும் இடையர்குல தலைவனான நந்தகோபனின் மாளிகையில் வாயில் காப்போனை எழுப்புகிறாள்)திருப்பாவை பாடல் - 17


"அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்.
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"

பொருள்:

அழகிய ஆடைகளும் தண்ணீரும் சோறும் தானம் கொடுக்கும் பெருமானே எங்கள் தலைவரே நந்தகோபாலா எழுந்திராய்! கொம்பை ஒத்த வதனத்தையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே! எங்கள் குலவிளக்கே யசோதையே எழுந்திராய்!ஆகாயத்தையும் தாண்டி வளர்நது அனைத்துலகையும் அளந்தவனே எழுந்திராய்! செம்மையான பொன்னால் செய்த கழலை அணிந்த பலதேவரே நீரும் உம் தம்பியும் உறக்கத்திலிருந்து எழுந்திரும்!

(இப்பாடலில் யசோதையையும்,கண்ணனையும்,அவன் சகோதரன் பலதேவனையும் எழுப்புகிறாள்)

2 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
ஓங்கி உலகளந்தவன் என்று ஒரு இடத்தில் சொன்ன ஆண்டாள் எப்படி அளந்தான் என்பதை இங்கே அழகாக ஆகாயம் வரைக் காலைத் தூக்கி அளந்தான் என்கிறாள். திருப்பாவை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புது அர்த்தம் புலப்படுகின்றது. புண்ணியம் உங்களுக்கு. முதல் ஆளாக வந்தாகி விட்டது. இனிமெ திட்டக்கூடாது.

Tamil Home Recipes said...

மிகவும் அருமை