நான் ஒரு படிப்பாளி!
டிஸ்கி: இது நாட்டாமைக்கு, தலைப்பை பார்த்துட்டு இதுவும் அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி ஓடக்கூடாது,முழுசா படிச்சு பாருங்க, நம்ம குடும்ப மானத்தை கதை புத்தகம் படிச்சு தான் காப்பாத்தறேன், பாடப்புத்தகம் இல்லை:)
புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறதே அது ஒரு போதை என்றே சொல்லலாம். அந்த வகையில் நான் புத்தக போதையில் உழன்றுக் கொண்டிருப்பவள், சாலையில் நடந்து போகும் போது நம் காலில் வந்து உரசும் சிறு காகிதத்துண்டிலிருந்து, கடையில் சாமான் வாங்கினால் சுற்றிக் கொடுக்கும் காகிதம்,வேர்க்கடலை பொட்டல காகிதம் என்று எது கிடைத்தாலும் படிக்கும் பழக்கம் உண்டு.
இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துக்கொண்டு வருகிறது என்று சிலர் சொன்னாலும் கடந்த சில வருடங்களாய் இருந்த தொய்வு நிலையிலிருந்து இப்பொழுது புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து பல வருடங்களாக சென்னையில் நடக்கும் வருடாந்திர புத்தக கண்காட்சிக்கு செல்வதால் என்னால் இதை உறுதியாக சொல்ல முடிகிறது.
சின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. 7, 8 வயதிலிருந்தே வீட்டுக்கு வரும் கல்கி,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதில் என்ன தான் படிச்சு புரிஞ்சுக்கிட்டேன்னு தெரியலை, ஒரு வேளை, வெறும் படங்கள் மட்டும் தான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். சிறிய வயதில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன்.
முதலில் நிறைய படங்கள் போட்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து ராணி முத்து காமிக்ஸ் ,அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி என்று ஆரம்பித்து நிறைய வார இதழ்கள், தொடர்கதைகள், பின் நாவல்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் மானாவாரியாக வீட்டுக்கு வரும் எல்லா புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தேன்(என்னிக்காவது உன் பாடப்புத்தகத்தை இப்படி படிச்சிருக்கியான்னு அசட்டுத்தனமா கேட்கக்கூடாது)பள்ளியில் படிக்கும் போது தொடர்கதை படிக்க வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். நான் மெதுவாக நழுவி வீட்டினருக்கு தெரியாமல் எல்லாம் படித்த காலம் உண்டு.
தமிழில் ராஜேஷ்குமார்,தேவிபாலா,சுபா போன்ற எழுத்தாளர்கள் தான் முதலில் எனக்கு தெரியும். அவர்களை தாண்டி படித்ததில்லை, ஆங்கிலத்தில் archies,asterix and obelix,tintin போன்ற காமிக்ஸ் ஒன்று விட்டதில்லை.
இப்படி ஒரு பாகுபாடும் இல்லாமல் படித்த நான் கல்லூரி காலத்திலும் அதற்கு பின்னும் தான் எனக்கு எந்த விதமான எழுத்துக்கள் பிடிக்கிறது என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். தமிழில் அறிவியல் கலந்த சுஜாதாவின் நாவல்கள், ஆண்பெண் சமத்துவம், பெண்ணியம்,சமூகம் சார்ந்த பிரபஞ்சனின்,வாஸந்தியின் நாவல்கள் என்று தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.இவர்களின் எழுத்துக்கள் என் எண்ணங்களை,இயல்புகளை மாற்றினவை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் காமிக்ஸ் மட்டுமே படித்து வந்த நான், கல்லூரியில் தான் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். மருத்துவம் சார்ந்து எழுதும் ராபின் குக்,அறிவியல் சார்ந்து எழுதும் மைக்கேல் கிரிக்டன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.
ஒவ்வொரு புத்தகமும் நமக்கு புது உலகத்தை காட்டுகிறது.புத்தகத்தில் ஓடும் வரிகள் நம் மனக்கண்ணில் படமாக விரியும் போது நம் கற்பனை திறன் அதிகரிக்கிறது.
என்ன தான் அறிவியல் முன்னேற்றம் வந்து கணினியில் புத்தக்கங்கள் படிக்கும் வசதி வந்தாலும், ஒரு அமைதியான இடத்தில் அருமையான தேநீரை ருசித்துக்கொண்டே நமக்கு பிடித்த எழுத்தை நம் வசதிக்கேற்ப படிப்பது என்பது எதற்கும் ஈடாகாது.
பி.கு : விடுமுறை சமயம் என்பதால் எல்லாரும் காணாம போயிட்டாங்க, நாட்டாமை பழைய பஞ்சாயத்து நிறைய இருக்குன்னு பார்க்க போயிட்டார், மொ.ப. தலைவி(வலி) கீதா திடீர்னு வராங்க திடீர்னு போறாங்க, நாரதர் அம்பி சென்னையில் மழை பெய்யுதான்னு பார்க்கறேன்னு சொல்லி பாதி நாள் எஸ்கேப்,அவருக்கு பஜ்ஜி சொஜ்ஜி ஏற்பாடு பண்றதுல திராச பிஸி,சுகாதார துறை அமைச்சர் ப்ரியா மத்த மாகாணத்துல எல்லாம் சுத்தபத்தமா இருக்காங்களான்னு பார்க்க போயிட்டாங்க, தலைவர் கடலை கார்த்திகேயன் அமைச்சரவை மாற்றத்துல மும்முரமா இருக்கார். அதனால் நானும் நம்ம கட்சி மானத்தை(!) காப்பாத்த தென்மாவட்ட சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொள்கிறேன். எனவே அடுத்த வருடம் திரும்பி வந்து பட்டையை கிளப்பி விடலாம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பி.கு.கு: புதன்(27/12/2006) முதல் திங்கள்(1/1/2007)வரைக்குமான திருப்பாவை பாடல்களை ஒரே பதிவாக இன்று போட்டுள்ளேன். அதையும் படித்து விடுங்கள், வந்தவுடன் கண்டிப்பாக சர்க்கரை பொங்கல் உண்டு. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலருடைய வலைப்பக்கங்களுக்கு வர முடியவில்லை, என் வலைப்பக்கமே போக முடியவில்லை, ஊரிலிருந்து திரும்ப வந்தவுடன் எல்லார் வீட்டுப்பக்கமும் வந்து அட்டெண்டஸ் கொடுத்து விடுகிறேன் :)



