Wednesday, December 26, 2007

போட்டிக்கு அனுப்பாத கவிதை..

நண்பர்களே ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :) தலைவி ஊருக்கு போகும் போது அவங்க இணைய ராசியை எனக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க போல, அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :)

சிறில் அலெக்ஸின் கவிதைப் போட்டிக்கு நான் எழுதிய கவிதை என் கவிதைப் பக்கத்தில் உள்ளது, அதே தலைப்பிற்கு நான் இன்னொரு கவிதையும் எழுதினேன் அதை இங்கே கொடுத்திருக்கிறேன். ஏற்கனவே நிறைய ஆட்டோக்கள் படையெடுத்து வருவதால் எங்க வீட்டு கிட்ட ஒரே ட்ராபிக் ஜாம், அதனால நான் கொஞ்ச நாளைக்கு எஸ்கேப். அனைவரையும் அடுத்த வருடம் மீண்டும் சந்திக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)பூக்களில் உறங்கும் மெளனங்கள் :
வேரோடு பிடுங்கிய
வலியின் சுவடு தெரியாமல்
பூக்கத் தொடங்குகின்றன
சில செடிகள்..

மாற்றம் மண்ணில் தானே
மனதில் இல்லையென
புன்னகையாய் மலருகின்றன
சில மொட்டுக்கள்..

அங்கு தழுவிய தென்றல்
இங்கேயும் தான்
என சுகிக்கின்றன
சில இலைகள்..

எனினும் ஆசையாய் தடவிப் பார்த்து
சிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்
ஏக்கத்தோடு
பூக்களில் உறங்கும் மெளனங்கள்..

சர்வேசனின் சிறுகதை போட்டிக்கான வாக்கெடுப்பும் ஆரம்பாகிவிட்டது, எல்லா கதைகளையும் படித்துப் பார்த்து வாக்களிக்கவும் :)

Friday, December 14, 2007

கலியுக பாஞ்சாலிகள்...

வறுமையின் வண்ணம் பூசிய பஞ்ச நிலங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு வட மாநில குக்கிராமத்தின் எல்லையில் மாலை மடியும் நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க யாரும் காணா வண்ணம் வந்துக்கொண்டிருந்தாள் 16 வயதான குல்ஷன்.

பஞ்சத்தில் அடிபட்ட பல நூறு விவசாய குடும்பங்களில் அவள் குடும்பமும் ஒன்று, வயிற்றை கழுவ கூலி தொழிலுக்கு செல்லும் தந்தை, வீட்டில் இரு மகள்களை வைத்துக்கொண்டு அவர்களை கட்டி காப்பாற்றும் பொறுப்பில் தாய், 10 வயது தங்கை என்று ஏழ்மையில் உழலும் குடும்பத்தை சேர்ந்த குல்ஷன் தன் தந்தை ஊரில் இல்லாத இந்த நேரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாள்.

தூரத்து மறையும் சூரியனை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கிருந்த ஒரு பாழும் மண்டபத்தில் தன் காதலனுக்காக காத்துக்கொண்டிருக்கும் குல்ஷன் வீட்டை விட்டு ஏன் வந்தாள்? அவள் காத்திருக்கும் நேரத்தில் நாம் சற்று பின்னோக்கி செல்வோம்..

அன்று காலை எப்பவும் போல கூலி வேலைக்கு போன குல்ஷனோட தந்தை மதியம் வெகு சீக்கிரமே வீடு திரும்பினார்

'என்னாச்சு இவ்ளோ சீக்கிரம் வேலை முடிஞ்சுடுச்சா'? இது குல்ஷனின் தாய்.

'இல்லம்மா இன்னிக்கு முழு நாள் வேலை இல்லை, பாதி நாள் கூலி தான் கிடைச்சுது'

'ரெண்டு நாள் கழிச்சு இன்னிக்கு தான் கூலிக்கு ஆள் எடுத்தாங்க, அதுக்குள்ள இப்டி பண்ணிட்டாங்களே ? பசங்க சாப்டு ரெண்டு நாள் ஆகுது' என்று கண்ணீருடன் கூறிய குல்ஷனின் தாய் கணவர் ஏதோ நினைவில் அமர்ந்திருப்பதை பார்த்தாள்.

'என்னாச்சு ஏன் இவ்ளோ அமைதியா இருக்கீங்க உடம்பு சரியில்லையா?'

'இல்ல அப்டியெல்லாம் இல்ல, நம்ம கிஷன் இல்ல? அவனை இன்னிக்கு பார்த்தேன்'

'அப்டியா என்ன சொன்னாரு உங்க நண்பரு?'

'வந்து வந்து நான் சொன்னா நீ கோபிச்சுக்கூடாது அவன் அதை பத்தி சொல்லும்போதே எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு முடியாதுன்னு சொல்லிட்டு தான் வந்தேன், ஆனா வர்ர வழியெல்லாம் யோசிச்சேன், அவன் சொன்னது சரின்னு தான் தோணுது,நமக்கும் கொஞ்சம் வழி பொறக்கும்..' என்றார் தயங்கியபடி.

'என்ன விசயம் அதை சொல்லுங்க முதல்ல'

'நம்ம குல்ஷனை கிஷனோட நண்பனுக்கு தெரிஞ்சு இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு...'

தன் குழந்தைகளுக்கு திருமணம் என்ற வைபவமே நடக்காது என நினைத்திருந்த குல்ஷனின் அம்மாவுக்கு இந்த செய்தி பெரு மகிழ்ச்சியை தந்தது, ஆனாலும் கணவர் முகத்தில் இருந்த கவலை,பயம்,தயக்கம் எல்லாம் குழப்பத்தை தர,

'நல்ல விஷயம் தான? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? செலவுக்கு பயமா?'

'இல்லம்மா நமக்கு செலவே இல்ல, அவங்களே கல்யாணத்தையும் பண்ணி, நமக்கு கையில் 5,000 பணமும் கொடுத்துடுவாங்க, நம்ம கடனை பாதியாவது அடைச்சுடலாம் இல்ல?'

'என்னது அவங்க பணம் கொடுப்பாங்களா? நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு பயமா இருக்கு நீங்க சொல்றதை பார்த்தா நம்ம பக்கத்து வீட்டு அமன் தங்கச்சிக்கு நடந்த கல்யாணம் மாதிரியில்ல இருக்கு..... இல்ல இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்... என் பொண்ணு என்ன பொம்மையா வச்சு வெளையாட...' என கதற தொடங்கினாள்.

'நமக்கு வேற வழியே இல்ல, பொண்ணை நாம செலவழிச்சு நல்லபடியா கல்யாணம் செஞ்சு கொடுக்க முடியாது..'

'என் பொண்ணுக்கே கல்யாணமே வேண்டாம் இப்டியே இருந்துட்டு போகட்டும்..'

'நல்லா யோசிச்சு தான் சொல்றியா? அவ வயசு இப்பவே 16, அவளை வீட்டுக்கு வெளில கூட அனுப்ப முடியாத நிலைமை தான் நம்ம கிராமத்துல, ஏன் சுத்தி இருக்கற நிறைய கிராமங்களில் பொண்ணுங்க நிலைமை இப்டி தான இருக்கு, எப்ப என்ன நடக்கும்னே தெரியல, தெரிஞ்ச ஆம்பளைங்கள கூட நம்ப முடியல, அதுக்கு நான் சொன்ன வழி எவ்வளவோ பரவாயில்ல, அவங்க வேற கிராமத்தை சேர்ந்தவங்க,நம்ம கடனும் அடையும் நம்ம ரெண்டாவது பொண்ணோட வாழ்க்கையாவது ஒழுங்கா அமையும். இன்னும் கொஞ்ச நேரத்துல கிஷன் வந்து என்னை கூட்டிக்கிட்டு அவங்க வீட்டுக்கு போவான், எந்த கிராமம்னு கூட தெரியாது கிஷன் விசாரிச்சுட்டு வருவான், நான் கிளம்ப போறேன்..' என்றார் குல்ஷனின் தந்தை.

இத்தனையும் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த குல்ஷன் அதிர்ச்சியில் உறைந்து போனாள், எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அது நடக்கப் போகிறது. அப்படியென்ன அதிர்ச்சி இருக்கிறது பக்கத்து வீட்டு அமனின் தங்கை கல்யாண வாழ்க்கையில் என்கிறீர்களா?

அமனின் தங்கை இப்ப கர்ப்பமா இருக்கா, ஆனா அவள் யாரோட குழந்தைக்கு அம்மாவாக போகிறாள் என்று அவளுக்கே தெரியாது, ஏனென்றால் மூன்று சகோதர்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் மூத்த மகனுக்கு அவளை கல்யாணம் எனும் பேரில் விற்று விட்டனர், ஆனா மனைவியானதோ மூன்று பேருக்கும், காரணம் இந்த சுற்றுவட்டாரத்தில் வெகுவாக குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்.

இப்ப புரிகிறதா குல்ஷன் ஏன் தன் காதலனை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டு அவங்க ஊருக்கு தப்பிச்சு போகப் போகிறாள் என்று?

பாவம் அவளுக்கு தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது ஊர் விட்டு ஊர் வந்து இங்கு கூலித் தொழிலாளியாக இருக்கும் அவள் காதலனின் வீட்டுக்கு தான் திருமணம் என்ற பெயரில் மூன்று சகோதரர்களுக்கு தன்னை விலை பேச தந்தை சென்றிருக்கிறார் என்று...


பி.கு : இந்த கதையை சர்வேசன் நடத்தும் சிறுகதை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்

Friday, November 30, 2007

எங்கே புத்தன்?...

பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.

முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.

அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்.

"மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.

வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.

இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.

மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

நன்றி : இந்த மாத " மங்கையர் மலர் "('பெண்ணே நீ வாழ்க'- சுகி.சிவம்)


தாயின் சிறப்பை பற்றி இவ்வாறு எத்தனையோ கதைகளை நாம் படித்திருக்கிறோம். தாய் தெய்வத்திற்கு சமம், குடும்பத்தை தாங்குபவள் தாய் என்று பல பட்டங்களை நம் தாயின் மீது சுமத்தும் நாம் கூடவே சுமையையும் தானே சுமத்துகிறோம். ஒரு உயிரை உலகுக்கு தருபவள் தாய் என்பதால் இயல்பிலேயே ஒரு பெண்ணிற்கான சில குணங்களாக இவை அமைவதுண்டு. இதையும் தாண்டி நம் தாயும் ஒரு சக மனுஷி அவருக்கும் விருப்பு வெறுப்பு எல்லாம் உண்டு என்பதை நாம் பல சமயங்களில் மறந்து விடுகிறோம்.


சில நேரங்களில் நான் என் அம்மாவோடு பேசும்போது தான் அவருக்குள்ளே இருக்கும் திறமைகள், அவருடைய மறைத்து வைக்கப்பட்ட சில கனவுகள் எல்லாம் தெரிய வரும். இது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பதுண்டு. ஆண்களும் குடும்பத்தலைவன் என்ற முறையில் பல தியாகங்கள் செய்வதுண்டு அதை மறுப்பதிற்கில்லை, ஆனா பெண் மீது சுமத்தப்படும் தியாகி, குலவிளக்கு போன்ற சமூக கட்டுபாடுகள் ஆண்களை விட அதிகமாக உள்ளன.

எந்த நேரத்திலும் எந்த நெருக்கடியிலும் எந்த விதத்திலும் நம்மை ஏற்றுக்கொள்பவள் தாய் தான். இதை நமக்கு அனுகூலமாக்கி கொள்ள நாம தவறாத நேரத்தில் அவர்களுடைய விருப்பு,வெறுப்புகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். தெய்வமாய் வணங்குதலோடு கொஞ்சம் தோழமையும் காட்டுவோம். இதே கருத்தை நம்ம வலையுலக நண்பர் ரவி முன்பே எழுதிய இந்த பதிவில ரொம்ப எளிமையா சொல்லியிருக்கார் பாருங்க :)

Monday, November 26, 2007

நினைத்தேன் எழுதுகிறேன்!..

நம் வாழ்க்கையெனும் சாலையை செப்பனிட்டு இருமருங்கிலும் நல்விதைகளை தூவி நன்னடத்தையை தழைத்தோங்க செய்யும் முக்கிய பணி குடும்பமெனும் கட்டமைப்பில் பெற்றோரிடமும், சமுதாயம் எனும் அமைப்பில் ஆசிரியரிடமும் தான் இருக்கின்றது. நம்முடைய பள்ளி,கல்லூரி வாழ்க்கையில் நம்மை செம்மைப்படுத்திய ஆசிரியர்களும் உண்டு, வெறுப்பை வளர்த்த ஆசிரியர்களும் கண்டிப்பாக உண்டு. என்னுடைய அம்மாவும் ஆசிரியப் பணியில் இருப்பவர் தான், என் அம்மா பணிபுரியும் பள்ளியில் தான் நான் படித்தேன்.

பள்ளியை பொறுத்தவரையில் என் அம்மா மிகவும் கண்டிப்பானவர், அதே சமயத்தில் மிகவும் அன்பானவர், இது வரை என் அம்மாவிடம் பயின்றவர் ஒருவர் கூட என் அம்மா தன்னை அடித்ததாகவோ அல்லது சரியாக படிக்கவில்லையென்று அலட்சியப்படித்தியதாகவோ புகார் சொன்னதேயில்லை. நாம் வகுப்பில் கூறும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செய்கையும் மாணவர்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விடும் என்று என் அம்மா சொல்வார்.

சரியாக படிப்பவரை பாராட்டி உற்சாகப்படுத்தும் அதே நேரம் படிக்காதவரை மற்றவர் எதிரில் மனம்நோக கிண்டல் செய்வது என்பது மிகவும் தவறான ஒரு விடயம், அதை விட தவறானது படிக்காத மாணவர்களை அலட்சியப்படுத்துவது. சில ஆசிரியர்கள் அது மாதிரி இருப்பதுண்டு அவர்களை பற்றி தான் இந்த பதிவு. இவர்கள் எப்படியென்றால் நன்றாக படிக்கும் சில மாணவர்களை தங்கள் செல்லப்பிள்ளைகளாக தத்து எடுத்துக்கொண்டு அவர்களுக்கு மட்டும் தனியாக குறிப்புகள் தருவது, வகுப்பில் அவர்களை மட்டுமே பார்த்து பாடமெடுப்பது, அவர்களை மட்டுமே கேள்விகள் கேட்டு மேலும் மேலும் உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களை மேற்கொள்வார்கள்.

ஏங்க படிக்காதவனை படிக்க வைக்கறதுல தாங்க ஒரு ஆசிரியரோட வெற்றியே இருக்கு, நல்லா படிக்கறவனை மேலும் நல்லா படிக்க வைக்கறது ஒன்னும் பெரிய விடயம் இல்லை, ஒன்னுமே தெரியாதவனை படிக்க வைக்கறது தான் சாதனை, ஆனா இப்ப இருக்கற பள்ளிகள் அப்டியா இருக்கு, எல்.கே.ஜி சேர்க்கறதுக்கு கூட நுழைவு தேர்வு வைக்கறாங்க. சரி பதிவோட நோக்கம் அது இல்ல, குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் உற்சாகப்படுத்தி மத்தவங்களை எப்டியோ போகட்டும்னு விடற ஒரு சில ஆசிரியர்களை பத்தி தான்(இதையெல்லாம் அவங்க எங்க படிக்கபோறாங்கன்னு நீங்க நினைச்சாலும் என்னோட ஆதங்கத்தை தான் இப்டி பதிவா போட்டு புலம்பறேன், அதனால கண்டுக்காம மேல படிங்க:))

நான் கல்லூரியில படிக்கும் போது ஒரு கஷ்டமான பாடப்பிரிவை எடுக்கறதுக்கு ஒரு அருமையான பேராசிரியை வந்தாங்க. அவங்களோட திறமையை பத்தி ஏற்கனவே எங்க சீனியர்ஸ் சொல்லியிருந்தாங்க, அவங்க பாடம் எடுக்க ஆரம்பிச்ச சில வகுப்புகளுக்குள் நாங்களும் அதை கண்டுக்கொண்டோம். ஒவ்வொரு வகுப்பிலும் மிகவும் அழகாக முன்பே திட்டமிட்டு அன்றைக்கான பாடத்தை ஒரு குழந்தைக்கு சொல்லித் தருவது போல் சொல்லித்தருவார், தங்களுக்கு தான் எல்லாம் தெரியும், தவறாக சொல்லிக்கொடுத்தாலும் தான் சொல்றது தான் சரி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சில ஆசிரியர்களுக்கிடையே தனக்கு தெரியாத விடயங்களை எங்களிடையே வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுடன், அடுத்த வகுப்பிலேயே அதை தெரிந்துக்கொண்டு வந்து எங்களுக்கு விளக்கி சொல்வார்.

இவ்வளவு அருமையான ஆசிரியரிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம் சில நாட்களிலேயே வெட்டவெளிச்சமாகி விட்டது. மிக நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் என்று ஒரு சிலர் கண்டிப்பாக ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பார்கள், இவங்களுக்கெல்லாம் ஒரு முறை மேலோட்டமாக சொல்லிக்கொடுத்தாலே புரிந்து விடும். அந்த மாதிரி சில தோழிகள் எங்க வகுப்பிலும் இருந்தாங்க(சில பேர் மதிப்பெண் மட்டும் வாங்கிடுவாங்க ஆனா ஏதேனும் சந்தேகம் கேட்டா சொல்ல தெரியாது, அந்த மாதிரி இல்லாம உண்மையிலேயே புத்திசாலிங்கள தான் நான் இங்க குறிப்பிடறேன்).

இந்த பேராசிரியை இந்த மாணவியர் அமரும் திசை பார்த்து மட்டும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க நாங்களெல்லாம் ரொம்ப மட்டம் இல்லையென்றாலும் ரொம்ப அறிவாளியெல்லாம் இல்லை, இதனால கஷ்டப்பட்டது மத்த எல்லா மாணவர்களும் தான். (வகுப்பில நம்மள பார்த்து பாடம் நடத்தினாலே சில சமயத்தில சுகமா தூங்கற வம்சம் நாம:) இதுல நம்மள கண்டுக்கவேயில்லேன்னா எப்டி இருக்கும்? சுத்தமா போர் அடிக்கும்:)). வகுப்பில் அவர்கள் இருக்கும் திசை பார்த்து பாடம் நடத்துவது, வகுப்பு முடிந்தவுடன் அவர்களிடம் பேசி சந்தேகங்கள் தீர்ப்பது, அவர்களுக்கு மட்டும் சில குறிப்புகள் தருவது என்று நாளடைவில் மற்ற எல்லாரையும் புறக்கணிப்பது போல் இது தொடர்ந்து நடந்து வந்தது. இது எங்களுக்கு சங்கடமாக இருந்தது, அதை எப்படி அவரிடம் சொல்வது என நாங்க யோசிக்கும் சமயத்தில் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.

எங்கள் துறையின் அந்த வருடத்திற்கான பட்டறை வகுப்பு மற்றும் கண்காட்சியில் எங்க வகுப்பிலிருந்து சில மாணவர்களை தெரிவு செய்து இரண்டு,மூன்று பிரிவுகளாக அவர்களை பிரித்து ஏதேனும் ஒரு தலைப்பில் செயல்முறை விளக்கம் மேற்கொள்ள சொல்லியிருந்தனர். அதில் ஒரு பிரிவில் நானும், என் தோழிகள் மூன்று பேரும் இருந்தோம். இன்னொரு பிரிவில நாங்க குறிப்பிட்டிருந்த பேராசிரியரின் தத்துப்பிள்ளைகள் இருந்தனர்(இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் அந்த குறிப்பிட்ட தோழியர் மீது எங்களுக்கு எந்தவிதமான காழ்ப்புணர்சியும் இருந்ததில்லை, அவர்களை பார்த்து வியந்ததுண்டு இப்படியும் அறிவாளிகள் இருக்க முடியுமா என்று, அவங்களும் எங்களோட ரொம்ப நல்லா தான் பழகினாங்க)இந்த செயல்முறை விளக்கத்துக்கு நாங்களே தலைப்பு தேர்ந்தெடுத்துக்கொண்டு ஒரு பேராசிரியரின் துணையோடு இயங்க வேண்டியிருந்தது.

எங்க தோழியருக்கு அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அந்த ஆசிரியர் உதவி செய்ய முன் வந்து விட்டார். நாங்க வேற பேராசிரியரின் உதவியை பெற்று கொள்ள எங்க துறைத் தலைவரின் அறைக்குச் சென்றோம். அங்கே அமர்ந்திருந்த இன்னொரு பேராசிரியரிடம் புத்தகத்தை கொடுத்து அதில் குறிப்பிட்டுள்ள ஒரு தலைப்புக்கு செயல்முறை விளக்கம் கொடுக்க உதவ முடியுமா என்று நான் கேட்டேன்.

அப்பொழுது பக்கத்திலேயே அமர்ந்திருந்த இவங்க என்னிடமிருந்து புத்தகத்தைப் பிடுங்காத குறையாக வாங்கி பார்த்து விட்டு சக ஆசிரியரிடம், "இதோ பாருங்க இந்த தலைப்பை நான் ஏற்கனவே தேர்வு செஞ்சுட்டேன் இதை என் பிள்ளைங்க தான் செய்யப்போறாங்க, அருமையா பண்ணப்போறோம் பாருங்க" என்று மிக பெருமையாக கூறினார். அவங்க சாதாரணமாக 'இல்லம்மா, இதை எனக்கு கீழ வர்ர மாணவர்கள் பண்ணப்போறாங்க' அப்டின்னு சொல்லியிருந்தா கூட நாங்க வருத்தப்பட்டிருக்க மாட்டோம். ஆனா அந்த மாணவர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் போலவும், நாங்க ஒன்றுக்கும் உதவாத ஜென்மங்கள் போன்ற தொனியிலும் அவர் பேசியது ஏற்கனவே கடுப்பில் இருந்த எனக்கு இன்னும் வருத்தத்தை தான் அதிகரிச்சது.

நேரே அவங்க எதிரில் போய் நின்று, " என்னது உங்க பிள்ளைகளா? மேடம் நாங்களும் உங்க வகுப்பில தான் இருக்கோம், அப்ப நாங்கெல்லாம் யாரு?உங்க மாணவர்கள் இல்லியா? சரி பரவாயில்ல நீங்க இந்த தலைப்பை உங்க பிள்ளைகளுக்கு எடுத்துக்கோங்க நாங்க வேற தலைப்பு எடுத்துக்கறோம் ரொம்ப நன்றி மேடம் " என்று சொன்னவுடன் அதை எதிர்ப்பார்க்காத அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தார். இத்தனையும் எங்க துறை தலைவர் எதிரிலேயே நடந்தது, ஏற்கனவே அவங்களுக்கு நாங்க வச்ச பேரு டெரர், அவ்ளோ பயம் அவங்கள கண்டா.

நான் ரொம்ப வேகமா சொல்லி முடிச்சப்புறம் தான் அவங்க இருந்ததை கவனிச்சேன், ஆகா நம்ம பொழப்பு இன்னிக்கு அவ்ளோ தான்னு நினைச்சேன், என் தோழிகளும் அப்டியே ஒரு பயத்தோட பார்த்தாங்க. ஆனா நல்ல வேளை அவங்க அதிசயமா ஒன்னுமே சொல்லல , என்னை பார்த்து லேசா புன்னகைத்த மாதிரி இருந்தது. சரி சொல்ல வந்ததை சொல்லிட்டோம் இனி வர்ரறத பார்த்துக்கலாம்னு வேற தலைப்பை தேர்வு செஞ்சு எப்டியோ ஒப்பேத்திட்டோம்(தமிழ் சினிமாவுல வர்ர மாதிரி வெறியோட படிச்சு பரிசெல்லாம் வாங்கல;) சுமாரா தான் செஞ்சு முடிச்சோம்).

இந்த சம்பவம் நடந்தப்புறம் அவங்க கிட்ட நிறைய மாற்றங்கள் தன்னுடைய தவறை புரிஞ்சுக்கிட்டு மாறிட்டாங்க. ஏதோ இவங்க நல்லவங்களா இருந்ததால நான் சொன்னதை பெரிய பிரச்னையாக்காம(நான் அப்படி சொன்னது கூட ப்ரச்னை இல்ல, எல்லா பேராசிரியர்கள் முன்பும் அப்படி அவங்க இயல்பை வெளிச்சம் போட்டு காட்டியது தான் ப்ரச்னை அதுக்கு தான் நான் பயந்தேன்) புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிட்டாங்க. இந்த மாதிரி பல பேர் இருக்காங்க என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் இப்படி நடந்துக்கொள்ளும் ஆசிரியர்களை கண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு வாழும் உதாரணமாக தான் இருக்கணும், இந்த மாதிரி ஒரு பதிவை எழுத வைக்கற அளவுக்கு இருக்க கூடாது என்பது என் கருத்து(எதுக்கு இந்த பதிவுன்னு கேக்கறவுங்களுக்கு இங்கன ஒன்னு சொல்லிக்கறேன் " நாங்களும் கருத்து சொல்லுவோமில்ல;)")

Monday, November 19, 2007

150 - ஒரு விமர்சனம்..

சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக என் எண்ணங்களை வார்த்தைகளாய் செதுக்கி வரும் என் வலைப்புத்தகத்தில் 150வது தாள் இந்த பதிவு , அதாவது என்னுடைய 150வது பதிவு :) இந்த பதிவில் என்னுடைய வலைப்பக்கத்தின் நிறை குறைகளை ஆராய்ந்து எழுதியிருப்பவர் நம் சக வலைப்பதிவர். அவர் யாரென்று பிறகு பார்ப்போம், இப்ப விமர்சனத்துக்கு போகலாமா? :)


*****************


வேதாவின் எழுத்துக்களைப் பற்றிய ஒரு சிறு விமரிசனம்!

ஆரம்பத்தில் ஆங்கிலம் கலந்த தங்கிலீஷில் ஆரம்பித்திருக்கிறார் வேதா! என்றாலும் அதிலேயே சுரதா.காம் பற்றியும், தமிழில் எழுதுவது பற்றியும் குறிப்பிடுகிறார், ஆனாலும் ஆங்கிலமும், தங்கிலீஷுமே தொடர்ந்திருக்கிறது சில பதிவுகள் வரை. இம்ரானா என்ற முஸ்லீம் பெண்ணிற்கு அவள் மாமனாரால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து, சானியா மிர்ஸாவின் மினி ஸ்கர்ட் வரையிலும் தன்னுடைய எண்ணங்களைப் பதிந்திருக்கும் இவரின் கருத்துக்கள் ஒரேயடியாகப் புரட்சியைச் சார்ந்தது எனச் சொல்ல முடியாவிட்டாலும், மாறுபட்ட அதே சமயம் பெண்கள் ஏற்கும், அவர்களுக்குச் சாதகமான கருத்துக்களையே சொல்லி இருக்கிறார், நடுநிலையான பார்வையுடனேயே! பெண்களின் அதீதமான சுதந்திரப் போக்கையும் கண்டிக்கும் அதே சமயம், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப் படவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றார்.வாசந்தியின் "குற்றவாளி" என்ற கதையைப் பற்றி விமரிசித்து இருக்கும் இவரின் கேள்வி "எது பூரணத்துவம்?" என்பதே ஆகும். அந்தக் குறிப்பிட்ட கதையை நான் இன்னும் படிக்கலை என்றாலும் பூரணத்துவம் என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும் என்றே நினைக்கிறேன். இது வேதாவின் பதிவுகளைப் பற்றிய விமரிசனம் என்பதால் இதை இங்கேயே நிறுத்திக் கொள்ளுகிறேன்.

2005-ல் பெய்த அதீத மழையின் விளைவுகளும் இவர் கண்களுக்குத் தப்பவில்லை, அதே சமயம் கணினியின் அதீதத் தாக்கத்தையும் மெல்லிய நகைச்சுவையுடன் சாடுகிறார். அவரின் வயதுக்கே உரிய கனவுகளைக் கவிதைகளாய்த் தன்னுடைய கவிதைப் பக்கங்களில் "மனம் உண்மை முகம்" என்ற பெயரில் பதிந்து வைக்கும் வேதா அத்துடன் சமூக அவலங்களையும், தன் கவிதைகள் மூலம் சாடுகின்றார். சில குறிப்பிட்ட கவிதைகளை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறார்.

நட்பு என்பதற்கும் நண்பர்கள் என்பவர்களுக்கும் அதிக மதிப்புக் கொடுக்கிறார் என்பதை இவரின் இந்தப் பதிவின் மூலம் காண முடிகிறது. நாட்டின் மேலும் அபாரப் பற்றுடன் வாய்ந்த சுதந்திரநாள் பதிவுகள், குடியரசு தினப் பதிவுகளோடு, நண்பர்களுக்காகப் போடும் "மொக்கைப் பதிவுகளும்" சேர்ந்தது. பக்திக்கும் குறைச்சல் இல்லை. தான் சென்று வந்த கேதார்நாத், பத்ரிநாத், சோளிங்கர், ராமேஸ்வரம், மற்றும் பாண்டிச்சேரி அருகே உள்ள அவர்களின் குலதெய்வக் கோயில் என்று அனைத்துக் கோயில்களின்
முக்கிய வரலாறும், பிரயாணச் செய்திகளுமாக ஒரு அழகான சங்கிலி போல் கோர்க்கப் பட்டு, நம் கண் முன்னே பிரகாசிக்கும்.

வ.வா.சங்கத்தின் மூலம் ஆரம்பிக்கப் பட்ட தமிழ்ச்சங்கத்தின் முதல் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு அதில் பரிசும் வென்றிருக்கிறார். மற்றவர்களால் கொடுக்கப் பட்டத் தலைப்புக்களில் கவிதைத் தொடர் சங்கிலியிலும் கலந்து கொண்டு மிகத் திறமையாகவும், சவாலாகவும் கவிதைகள் படைத்திருக்கிறார். சங்கிலிப் பதிவுகளிலும் கலந்து கொண்டு, தன்னைப் பற்றிய "சுய மதிப்பீடு" செய்து கொண்டிருக்கின்றார். குடிபோதையில் ஒரு ஆண் எந்த அளவுக்கு மோசமாய்ச் செல்லுவான் என்பதை விளக்கி ஒரு கதை அவர் எழுதியதையும், அதன் முடிவு, என்னாலும், இன்னொருவராலும் விவாதிக்கப் பட்டது, தன் வீட்டில் வேலைகளில் உதவிக்கு வரும் பணிப் பெண்ணிடம் இருந்து தன் சேவையை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இந்த தன்னுடைய கனவை ஒரு அழகிய கவிதையாகவும் பதிந்திருக்கின்றார்.

திருப்பாவை போன்ற பக்தி இலக்கியத்திலும் ஈடுபாட்டுடன் அதைப் பற்றிய விளக்கங்களும், விமரிசனங்களும் காண முடிகின்றது. பாவை நோன்பையும், ஆண்டாள் அதைப் பத்தி எழுதி இருப்பதையும் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அல்லாமல், மற்றவர்க்கும் அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார். அது போல ஒவ்வொரு பண்டிகைகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதன் தன்மைக்கு ஏற்பக் கவிதையாகவோ, கட்டுரையாகவோ தன் கருத்தைத் தெரிவிக்கிறார். அதற்காகப் பழமை விரும்பி எனவும் சொல்ல முடியாது. திருமணம் என்று வரும்போது மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்பப் பெற்றோர் தங்களை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்து விட்டது எனவும் சொல்லுகின்றார். நண்பர்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம்,குழந்தைகள் தினம் என்று வரும் ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் ஏதாவது ஒரு முக்கியச் செய்தியை மென்மையாக அறிவுறுத்தும் இவர் பதிவைக் காண முடியும். சொல்ல வந்த விஷயத்தை மென்மையாகவும், தெளிவாகவும் அதே சமயம் உறுதிபடவும் அடுத்தவர் மனம் நோகாமல் எடுத்துரைக்கும் இவர் பாங்கு என் மனதைக் கவர்ந்தது

நண்பர்களைக் கலாய்த்தலா? அதற்கும் இடம் உண்டு இவரிடம். இது தவிர, தன்னைவிட வயதில் மூத்த தோழியின் இழப்பைக் கூடப் பதிவு செய்திருக்கும் இவர் நட்பு என்பது மறக்க முடியாத ஒன்று எனச் சொல்லாமல் சொல்லுகிறார்.நண்பர்களின் பிறந்த தினத்தை மறவாமல் வாழ்த்துக் கூறும் இவரின் பிறந்த தினத்திலும் நண்பர்களின் அன்பு மழையில் நனைந்துள்ளார். சமூக அக்கறையுடன் அரவாணியான "ரோஸ்" பற்றிய செய்திக் குறிப்பைத் தன் பதிவில் வெளியிட்டிருக்கும் இவர் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டே இத்தனையும் செய்கின்றார் என்றால் வியப்பாக இருக்கிறது. வீட்டு வேலைகளிலும் எவ்விதக் குறையும் வைக்காமல், பதிவுகளும் அழகாகவும், தேவைக்கு ஏற்பவும் போடுவது என்பது கம்பியின் மேல் நடப்பது போன்ற வித்தை.

சும்மாப் பக்கம் நிரப்பவோ, அல்லவோ ஏதோ எழுதணும் என்பதற்கோ எழுதாமல், விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதை நன்கு யோசித்துப் பின்னர் அதன் தாக்கம் அனைவரிடமும் போகும்படி எழுதுவது என்பது அனைவருக்கும் வராது. இவருக்கு வந்திருக்கிறது. 150 பதிவுகளை இம்மாதிரி எழுதுவது என்பது உண்மையிலேயே ஒரு சாதனை தான். இவருடைய கவிதைகள் மிக அருமையாக இருப்பதோடு கூட உள் மனதின் வெளிப்பாடும் நன்கு அமைந்திருக்கிறது. ஒரு முறை கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் கவிதையைப் படிச்ச திரு மாலன் அவர்கள் அதைப் புகழ்ந்து எழுதி இருப்பதே சான்று. "வலைச்சரம்" மின்னிதழில் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் பொறுப்பை வகித்த திரு மஞ்சூரும் அந்த இதழின் முதல் பதிவிலேயே குறிப்பிட்ட கவிதாயினிகளுடன் இவரின் கவிதையைப் பற்றியும் வெகுவாகச் சிலாகித்து உள்ளார். பன்முகம் கொண்ட இவரின் எழுத்து மேன்மேலும் சிறக்கவும், நல்ல இனிமையான வாழ்க்கை அமையவும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.


"என் இனிய தோழனே! அந்த கணநேரத்தில் கண்டுக்கொண்டேன் உன் விழிகளில் என் மீதான உன் நேசத்தை. நான் இழந்தது நட்பா? நேசமா? எதுவென்று புரியாமல் இருந்துவிட்டாலும், நீயும் என் கண நேர அதிர்ச்சி அலைகளில் உணர்ந்துக்கொண்டாய் நான் உன்னை நட்பின் உருவாய் வடித்திருப்பதை. சில நொடிகளில் இடம் மாறிய நம் எண்ணங்கள் நாம் பேசிக்கொள்ளாமலே நம்மை நமக்கு உரைத்தன, உன்னிடம் என் நட்பெனும் நிலையையும், என்னிடம் உன் நேசத்தையும். "

இரு நண்பர்களுக்கு இடையே உள்ள நட்பு என்னும் உறவு, அந்த நண்பனின் "காதல்" என்ற உணர்வால் முற்றிலும் மாறிப் போனதை ஒரு பெண்ணின் நோக்கோடு மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கும் இந்தக் கவிட்டுரை, ஆணின் பார்வை என்ன என்பதையும் சொல்லப் போகிறது, அதற்காக நம்மைக் காத்திருக்கவும் வைக்கிறது. எதிர்பார்ப்புடன், வந்திருக்கும் பின்னூட்டங்களோ என்றால், இது அனைவர் வாழ்விலும் நடந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறு என்று சத்தியமே செய்கிறது. அந்த அளவுக்கு இன்றைய இளைஞர்களின், இளைஞிகளின் அன்றாட நடைமுறை வாழ்வைத் தன் பார்வையினால் பிரதிபலிக்கிறார். இவருடைய மனம் இவருடைய உண்மை முகத்தை எல்லா இடத்திலுமே காட்டுகிறது.

இதோ ஒரு ஆணின் பார்வையில் நட்பு காதலாக மாறியதைப் பற்றிய அவரின் எண்ணக் கோவையில் எழுந்த சில முத்துக்கள்:

"நட்பாய் பூத்த மலர் நேச மழையில் நனைவதைக் கண்டு சிலிர்த்த என் மனம் சிந்திக்க மறுத்தது உன் நிலையை. மீண்டும் தொடர்ந்த நம் பயணத்தில் நீ என்றும் கேட்கவேயில்லை என் தயக்கத்தின் காரணத்தை. நீ கேட்காமலே புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆயினும் குற்ற உணர்வுடன் தொடர முடியா நான் கேட்டேன் உன்னிடம், உன் கைகள் ஏந்தி உன் விழிகள் நோக்கி. நோக்கிய என் விழிகளிடம் பேசியவை உன் விழிகள் அல்ல, கண்ணீர் துளிகள். தூய்மையான பனித்துளிகளென அவை உணர்த்தின என் நிலைக்கு எதிரான உன் நிலையை. உன் அதரங்கள் அசையாமலே உன் நிலையை உணர்ந்தேன் நான் ஏந்தி நின்ற உன் கரங்கள் வழி. என் புரிதலை உணர்ந்துக்கொண்ட நீ மெல்ல புன்சிரிப்புடன் பயணத்தை தொடர்ந்தாய் அதே நிமிர்ந்த நன்னடையுடன்,நானும் தான். "


ஒரு ஆணாக ஆணின் பார்வையில் இது எழுதப் பட்டிருக்கிறது, ஆனாலும் மென்மையாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இம்மாதிரி மறுப்பை எல்லா ஆண்களும் ஏற்பார்களா? நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா? இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்.

இதுவரையில் வேதாவின் ஆரம்ப காலப்பதிவுகளில் இருந்து, இன்று வரை உள்ள அனைத்தையும் பார்த்தால், எந்த இடத்திலேயும் அவர் ஒரு நளினமான போக்கைக் கையாண்டிருக்கிறார் என்பதையும், சொல்ல வரும் விஷயத்தை மிக மிக உறுதியாகவும், தன்னம்பிக்கையுடனும், ஆணித்தரமாகவும் சொல்லுகிறார் என்பதோடு அல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவுமே இருக்கிறது. எல்லா வயதினரும் அவருக்கு இடும் பின்னூட்டங்களில் இருந்து இதை அறியவும் முடிகிறது.


ஹிஹிஹி, இப்போ கொஞ்சம் வழக்கமான மொக்கை! இந்த விமரிசனக் கட்டுரை நான் எழுதும்போது எனக்கு நேர்ந்த ஒரு அதிசயமான சம்பவத்தைப் பற்றிப் படிக்க என்னோட வலைப்பதிவுக்கு வாருங்கள், எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான், அத்தோடு இல்லாமல் இந்த அநியாயம் வேறே எங்கேயும் நடந்திருக்கானும் பார்த்துச் சொல்லுங்க!!!!!!!

******************


பி.கு : பல சிரமங்களுக்கு இடையேயும் இவ்வளவு பொறுமையுடன் என்னுடைய பதிவுகளை படித்து மிக அழகான ஒரு தொகுப்பாக கொடுத்திருக்கும் இந்த வலைப்பதிவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் :)

Thursday, November 15, 2007

என்றும் நேசமுடன்...

என் இனிய தோழியே,

அது வரையில் பெண்களுக்கு இடமேயில்லாத என் நட்புவட்டத்தில், மலரிலும் பிறக்கும் சூறாவளியாய், விழிகளில் வீரம் ஏந்தி, மனம் உரைப்பதை நேருக்கு நேர் சொல்லும் வேங்கையாய் வந்தவள் நீ. அன்று மேடையில் நான் உரையை முடித்த வேளையில் என்னை அறிமுகமில்லாத தருணத்தில் சிறிதும் தயக்கமில்லாமல் புயலாய் எதிரில் வந்து நின்று பாராட்டிய கணங்கள் நம் நட்பின் உன்னத கணங்கள். ஆண்டாண்டு காலமாய் புற உலகில் நான் தேடியலைந்த ஒருமித்த அகத்தின் முழு உருவமாய் என் எதிர் நின்றாய் நீ. பெண்களின் அருகாமை சிறிதும் அறியாத என் மனம் புரிந்து, மெல்ல புன்சிரிப்புடன் நீ சொன்ன முதல் வார்த்தைகள், 'நாம் இனி நண்பர்கள்'. ஆண்களின் உலகில் மட்டுமே திரிந்துக்கொண்டு ஆணின் பார்வையில் மட்டுமே விரிந்திருந்த என் உலகம், உன் விழி வழியே பெண்ணுலகை ரகசியமாய் எட்டிப்பார்த்தது. நட்பெனும் பாலம் மெல்ல உருவெடுத்தது நம்மிடையே.

எனக்கென தனியேயான நண்பர்களாக சில ஆண்களும், உனக்கென தனியேயான தோழிகளாக சில பெண்களும் சூழ்ந்திருந்த வேளையிலும் நமக்கேயென தனியாக உனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமே என முதிர்ச்சியடைந்தது நம் நட்பு. நமக்கிடையே இரகசியங்கள் ஏதுமில்லையெனும் நிலையில், நானே அறியாத வகையில் புதையலாய் ஒரு இரகசியம் புதையுண்டு கிடந்தது என் மனப்பரப்பில். காலப்போக்கில் நீண்ட நெடும்பாதையில் மெல்லிய பூங்காற்றை சுவாசித்துக்கொண்டு காலாற நாம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் எங்கிருந்து வந்ததென்று புரியாமலே உள்நுழைந்தது உன் மீதான நட்பையும் மீறிய ஒரு வரையறுத்து சொல்லமுடியா ஒன்று. சட்டென பின்வாங்கின என் கால்கள். வியப்பை சுமந்த உன் விழிகள் கேட்டன ஆயிரம் கேள்விகள். நீ பார்த்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல பின்னடைந்தேன், நாம் கடந்து வந்த வழியில் உன் காலடிச்சுவடுகள் தேடி. நம் நட்பு தொடங்கிய இடத்தில் நிமிர்ந்த நன்னடையின் பிம்பமாய் அழுந்த பதிந்த உன் காலடிகள் பயணம் முழுவதிலும் எங்கும் தயங்கி திசை மாறவில்லை, என்னுடையவை போல்.

நட்பாய் பூத்த மலர் நேச மழையில் நனைவதைக் கண்டு சிலிர்த்த என் மனம் சிந்திக்க மறுத்தது உன் நிலையை. மீண்டும் தொடர்ந்த நம் பயணத்தில் நீ என்றும் கேட்கவேயில்லை என் தயக்கத்தின் காரணத்தை. நீ கேட்காமலே புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆயினும் குற்ற உணர்வுடன் தொடர முடியா நான் கேட்டேன் உன்னிடம், உன் கைகள் ஏந்தி உன் விழிகள் நோக்கி. நோக்கிய என் விழிகளிடம் பேசியவை உன் விழிகள் அல்ல, கண்ணீர் துளிகள். தூய்மையான பனித்துளிகளென அவை உணர்த்தின என் நிலைக்கு எதிரான உன் நிலையை. உன் அதரங்கள் அசையாமலே உன் நிலையை உணர்ந்தேன் நான் ஏந்தி நின்ற உன் கரங்கள் வழி. என் புரிதலை உணர்ந்துக்கொண்ட நீ மெல்ல புன்சிரிப்புடன் பயணத்தை தொடர்ந்தாய் அதே நிமிர்ந்த நன்னடையுடன்,நானும் தான்.

வாழ்க்கை பயணத்தில் கல்லூரி சாலை முடிவுக்கு வந்துவிட்டாலும், நட்பின் பாதை என்றும் நேர் கோடுகளால் ஆனதல்ல வளைந்து நெளிந்து செல்லும் சாலையாகவே அது செப்பனிடப்படுகின்றது, எதிரெதிர் திசையில் பயணித்த போதிலும் பாதையின் ஏதாவது ஒரு திருப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.

என்றும் நேசமுடன்,
நான்..

Monday, November 12, 2007

என்றும் நட்புடன்..

என் இனிய தோழனே,

மின்னலாய் நுழைந்து, மேடையில் மழையாய் சொற்களை பொழிந்து, இடியாய் கைத்தட்டல்களை நீ அள்ளிக் கொண்ட தருணத்தில் தான் உன்னை நான் முதன்முதலாய் கண்டேன் . நட்புகளின் முகமறிந்து, அகமறியா குழப்பத்தில் நான் உழன்று கொண்டிருந்த பொழுது, பார்த்த முதல் நொடியே உன் முகத்தில் தெரிந்தது அகம். கருத்த நிறத்தில், உயரமாய், ஒரு வீரனை போன்ற தைரியத்துடனும், நெடுங்காலம் பழகிய தோழமையுடனும் பரிச்சயமற்ற கூட்டத்தினரிடையே நீ பேசிய கணங்களில் உணர்ந்தேன் ஒரு நட்பின் பிறப்பை. கல்லூரி தொடங்கி பல நாட்கள் ஆயினும் இதுவரை உன் இருப்பை நான் உணரவில்லை என்று வியப்புடன் நண்பர்களிடம் உரைத்த போது தான் எனக்கு உறைத்தது, கல்லூரியின் முதல் நாளுக்கு பிறகு இன்று தான் நீ வருகிறாய் என்று. நம் துறையின் இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபசார விழா நம் நட்பின் தொடக்க விழாவாக ஆயிற்று.

கரும்பலகையில் நான் எழுதி வைத்த கவிதையை வியந்து என்னை பரிச்சயமில்லாத போதும் மேடையில் நீ பாராட்டியது நம் நட்பின் அச்சாரமாயிற்று. உன்னிடம் பேசிய முதல் வார்த்தைகள் நினைவில் இல்லை, தொடங்கி வைத்தது நீயா இல்லை நானா என்றும் தெரியவில்லை. தொடங்கி வைத்தது யாராயினும் சரிதான், அதன் பின் தொடர்ந்த பல சந்திப்புகள் நம் மன ஒற்றுமையை வியந்தன, சில சமயங்களில் பொறாமை தீயில் கழன்றன. ஆயினும் மெல்ல ஒரு செடியாய் உருவெடுத்து விருட்சமாய் உயர்ந்து நின்றது நம் நட்பு. அந்த சமயங்களில் தான் விருட்சத்தின் வேரில் கொதிக்கும் நீரை ஊற்றியது நம் நட்புவட்டாரத்தின் சில துருப்பிடித்த மனங்கள். வகுப்பில் நுழைந்தவுடன் உன்னைத் தேடும் என் விழிகளில் நட்பைத் தாண்டி காதலை கண்டனர் நம் தோழர்கள். இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி அதற்கு மாலையுமிட்டு ஊர்வலம் நடத்தினர் கல்லூரி சாலையெங்கும்.

ஊர்வலத்தில் கப்பல் ஏறிய நம் நட்பின் மானத்தை மீட்டெடுக்க மனம் உடைந்துப் போய் உன்னை சந்திக்க வந்த அந்த மாலைப் பொழுதில் தான் மெல்லிய ரகசியமாய் நீ என் கைப்பிடித்து உன் காதலை சொன்னாய் ஒரு கவிதையாய். கண நேர அதிர்ச்சியில் நான் உன் கண்களை சந்தித்த பொழுது சட்டென்று விழிகள் தாழ்த்தி, முன்னெழுப்பொழுதும் நான் கேட்டிராத தயங்கிய குரலில் 'எப்படியிருக்கிறது நான் எழுதிய போட்டிக்கவிதை?' என புன்முறுவலுடன் கேட்டாய்.

என் இனிய தோழனே! அந்த கணநேரத்தில் கண்டுக்கொண்டேன் உன் விழிகளில் என் மீதான உன் நேசத்தை. நான் இழந்தது நட்பா? நேசமா? எதுவென்று புரியாமல் இருந்துவிட்டாலும், நீயும் என் கண நேர அதிர்ச்சி அலைகளில் உணர்ந்துக்கொண்டாய் நான் உன்னை நட்பின் உருவாய் வடித்திருப்பதை. சில நொடிகளில் இடம் மாறிய நம் எண்ணங்கள் நாம் பேசிக்கொள்ளாமலே நம்மை நமக்கு உரைத்தன, உன்னிடம் என் நட்பெனும் நிலையையும், என்னிடம் உன் நேசத்தையும்.

பின் வந்த நாட்களில் அதன் பிறகு என்றுமே என் செவிகள் கேட்கவில்லை அன்று தயக்கத்தை பூசியிருந்த உன் குரலை. நம் நட்பின் மிக நுட்பமான நிமிடங்களை நாம் தாண்டிவிட்டோம். அவை என்றும் நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன நம் நட்புத்தோட்டத்தில் உனக்கேயான சில பிரத்யேக மலர்களையும் எனக்கேயான சில தூய்மையான பனித்துளிகளையும்.

என்றும் நட்புடன்,
நான்..


பி.கு : நட்பென்னும் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் அதை காதலுக்கு நகர்த்திச் செல்லும் போது அதில் ஒப்புமை இல்லாத பெண்ணானவள் எதிர்க்கொள்ளும் ஒரு நிலையை கவிதையாக எழுத நினைத்தேன். அது கட்டுரையாக வந்து விட்டது. அதனால இதை கவிதையாய் ஒரு கட்டுரை இல்ல கவிதையாய் ஒரு கதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க அடுத்த பதிவில் அந்த ஆணின் நிலையை எழுதலாம்னு ஒரு எண்ணம் :)

Friday, November 09, 2007

ரசிக்க, சிரிக்க, சிந்திக்க...

சமீபத்தில் படித்து ரசித்தது:

நினைவில் இருப்பது...

எத்தனை முழமென்று
நினைவில் இல்லை
பின்னிரவில் சாலையோரம் அன்று
பேரம் பேசிய மல்லிகைப் பூச்சரம்

பத்து ரூபாய் சொன்னாள்
வாங்கும் எண்ணமில்லை இருந்தும்
தூரத்துக் கூடைக்காரி
எட்டு ரூபாய் சொன்னதைச்
சொன்னேன்.

சட்டென
சரி எட்டு ரூபாய்க்கே வாங்கிக்கம்மா
என்றவளின் மறுப்பற்ற கீழ்ப்படிதல்
கடைசி நேர இயலாமையாலா
கடைசிப் பேருந்தைப் பிடிக்கும்
அவசரத்தாலா..

எந்தக் கடைசியாலோ
அந்தக் கடைசிக்குக்
கொண்டு நிறுத்திய பேரம்
உறுத்தியது

பதினைந்தைக் கொடுத்தேன்
சில்லறை தேடியவளின் கை பிடித்து
இருக்கட்டும் என்றதற்கு
அவள் நிமிர்ந்து பார்த்தபோது
எங்களிடையே பூத்தவை
எத்தனை மல்லிகைகள்...
நினைவில் இல்லை!

நன்றி : சிவஸ்ரீ கவிதைகள், ஆனந்த விகடன்.

சமீபத்தில் படித்து சிரித்தது:

An English teacher wrote the words, "Woman without her man is nothing" and directed the students to punctuate it correctly.
The Young men wrote: "Woman, without her man, is nothing."
The Young women wrote : "Woman! Without her, man is nothing."


******************


Two college seniors had an exam coming up. They opted to party instead, and missed the exam. "Our car broke down due to a flat tyre." they told the professor. "Can we write the exam tomorrow?". The professor agreed.

Both boys crammed all night until they were sure they knew just about everything. Arriving the next morning, each was told to go to a seperate classroom to take the exam.

As they sat down, they read the first question : "For five marks, explain the contents of an atom." The boys answered the question with ease.

Then, the test continued, "For 95 marks, tell me which tyre it was."

நன்றி : ஓசியில் கிடைத்த ரீடர்ஸ் டைஜஸ்ட் :)

சமீபத்தில் படித்து சிந்தித்தது :


சர்ச்சுக்கு பிரார்த்தனை செய்ய வரும் ஒரு முதியவரிடம் பாதிரியார் கேட்கிறார், "பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக் கூடப் பார்த்ததில்லை, பின் எதற்காக வருகிறீர்கள்?"

"நான் கடவுளீடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்.

"ஓ, கடவுள் உங்க காதில் மட்டும் பேசுகிறாராக்கும்? அப்படி என்ன தான் சொல்கிறார்?"

"அவரும் என்னைப் போல்தான், பேசவருவதில்லை, கவனிக்கத்தான் வருகிறார்!"

வாழ்க்கை அப்படித்தான்,வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்.. நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும்.

கடவுள் சன்னிதியில் சொல்வது மட்டும் தான் பிரார்த்தனை என்பது அல்ல; இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்வதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என் ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்!

"வாழ்க்கையே பிரார்த்தனை போல் நடத்திச் செலவது தான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனை செய்கிறேன்" இதை வாழ்க்கையின் ஆழமான அனுபவமாக ஏற்றுப் பாருங்கள். அதன் பலனாக உங்களுக்கு அமுதம் கிடைக்கும்.

நன்றி : கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம், ஆனந்த விகடன்

Wednesday, November 07, 2007

கொண்டாடுவோம்...

Send this free eCard
Send this eCard !


தீபவரிசைகளின் ஒளி புவியெங்கும் பரவ,
மத்தாப்பு பூச்சிதறல்களாய்
மனமெங்கும் மகிழ்ச்சி பூக்க,
இனிப்புச் சுவை இதழோடு
மனதையும் தழுவ,
கொண்டாடுவோம் தித்திக்கும் தீபாவளி...புவியெங்கும் பரவி இருக்கும் வலைநண்பர்களுக்கு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

Monday, November 05, 2007

இப்படிக்கு..
இந்தியாவில் சின்னத்திரையில் முதல்முறையாக நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கும் 'இப்படிக்கு ரோஸ்' எனும் நிகழ்ச்சியை ரோஸ் எனும் திருநங்கை நடத்தவிருக்கிறார். அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்திருக்கும் இவர் இந்தியாவில் இருந்தவரை மனதளவில் பெண்ணாகவும் தோற்றத்தில் ஒரு ஆணாகவும் இருந்தவர் இந்தியா திரும்பும்பொழுது முழுமையான பெண்ணாக மாறி வந்துள்ளார்.

சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தம் குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் இந்த இனத்தினரை சினிமா போன்ற ஊடகங்கள் பெரும்பான்மையாக மோசமாகவே சித்தரித்து வரும் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்யப் போவதாக இவர் கூறுகிறார். வார இறுதிகளின் இரவுகளில் ஒளிப்பரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியை பார்க்காமல் விமர்சனம் செய்யமுடியாது என்றாலும் இது கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய முயற்சியே ஆகும்.

இந்நிகழ்ச்சியை பற்றி 'இந்து' நாளிதழில் வந்துள்ள செய்தியை இங்கு காணலாம்.

Thursday, November 01, 2007

மீண்டும் ஒரு பயணம் -4 (இறுதிப் பகுதி)

இராமேசுவரத்தில் இராமநாதசுவாமி கோவில் மட்டுமில்லாமல் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்கள், புராணம் சம்பந்தப்பட்ட இடங்கள் அமைந்துள்ளன. அவற்றை சுற்றி பார்க்க சிறந்த வழி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்துக்கொள்வது தான். கோவிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் விசாரித்த போது 200ரூ ஆகும் என்றும் சொன்னார்கள். எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் ஒரே மாதிரி தான் வசூலிக்கிறார்கள், எனவே பேரம் பேச முடியாது, அதுவும் தவிர நாங்க சுற்றி பார்த்த பிறகு தான் தெரிந்தது 200ரூ நியாயம் தான் என்று. என்னென்ன இடங்கள் பார்க்க போகிறோம் என்று அவர்களே ஒரு அட்டையில் அச்சடித்து வைத்திருக்கிறார்கள் அவர்களே தான் கைடும்.


(கோதண்டராமர் திருக்கோவில்)முதலில் நாங்க போனது கோதண்டராமர் கோவில். தனுஷ்கோடிக்கு போகும் பிரதான சாலையில் தனுஷ்கோடிக்கு ஆறு கிலோமீட்டர் முன்பாக இடது பக்கத்தில் ஒரு கிளைச்சாலை இருக்கிறது, இதில் சிறிது தூரம் பயணித்தால் இந்த கோவில் வருகிறது. இந்த இடத்தில் தான் விபீஷணன் இராமரிடம் சரணாகதி அடைந்ததாக கூறப்படுகிறது. தனுஷ்கோடியை கடல் கொண்ட போது இந்த கோவிலும் முழுகிவிட்டதாம், அதற்கு சாட்சியாக பழைய கோவிலின் இரண்டு கற்தூண்கள் இங்கு நிற்கின்றன, தற்போது புதிதாக அதே இடத்தில் கோவிலை சிறிது உயரத்தில் நிர்மாணித்துள்ளனர்.

இரண்டாவதாக நாங்க சென்ற இடம் ராமர் பாதம் அமைந்துள்ள கோவில் இதுவும் சற்று உயரத்தில் தான் அமைந்திருக்கிறது, இராமர் சீதையை மீட்க இலங்கைக்கு செல்வதற்கான வழியை ஆலோசித்த இடம் எனக் கூறப்படுகின்றது. அளவில் சின்ன கோவில் தான் ஒரே ஒரு சன்னிதி அங்கு இராமர் பாதம் அமைந்துள்ளது. அதை தரிசித்து விட்டு அதே கோவிலில் மேல் கூரைக்கு செல்ல படிகள் உண்டு, இங்கு ஏறிப்பார்த்தால் இராமேசுவரம் முழுவதும் தெரிகிறது, ரொம்ப அருமையான காட்சி கண்டிப்பா பார்க்க வேண்டியது. இந்த கோவிலுக்கு போகும் வழியிலேயே அமைந்துள்ளது சாட்சி ஆஞ்சநேயர் கோவில், ரொம்ப சின்ன இடம் தான். இதில் புராண விசேஷம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியல ஆனா இது இவங்களோட பட்டியலில் மூணாவது இடம்.

அதற்கடுத்து நாங்க பார்த்த மூன்று இடங்கள் இராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம். இராமர் தீர்த்தம் என்பது ஒரு குளம், இராவண வதத்தையடுத்து ஏற்பட்ட தோஷம் நீங்க இங்கு குளித்ததால் இது இராமர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது, இங்கு ஒரு கோவிலும் உள்ளது. ஆனா நாங்க போன போது மூடியிருந்தது அதனால இந்த கோவிலை பற்றி அதிகம் தகவல் தெரியல. லட்சுண தீர்த்தம் என்பது இராவணனின் மகனை இலட்சுணனன் கொன்ற பாவம் நீங்க குளித்த இடம் என்று சொன்னார்கள் இங்கேயும் ஒரு சின்ன சிவன் கோவில் இருக்கிறது. சீதா தீர்த்தம் சிதிலிமடைந்து உள்ளது இப்ப புணரமைப்பு நடந்து வருகின்றது. இந்த மூன்று இடத்திலும் மக்களை கவர்வது என்னவென்றால் மிதக்கும் கல் என்று சொல்லி ஒரு தொட்டியில் பெரிய கற்களை விட்டிருக்கிறார்கள் நாம் தொட்டு தூக்கி பார்க்கலாம், நல்ல கனமாக தான் இருக்கிறது.

இம்மூன்று தீர்த்தங்களையும் பார்த்த பிறகு அருகிலேயே பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது, இது சின்ன வீடு போன்ற அமைப்பில் உள்ளது, பெரிய பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கே பல வருடங்களாக ஒளிர்ந்து வரும் ஒரு அணையா தீபம் இருக்கிறது, இங்கேயும் மிதக்கும் கல் வைத்திருக்கிறார்கள், ராமர் பாலம் கட்ட இந்த வகை கற்களை தான் உபயோகித்தார் என்று அங்கிருந்த அர்ச்சக கூறினார். பாண்டிச்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ள பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் தான் இந்த மாதிரி கல்லை நான் முதன்முதலில் பார்த்தேன். அதை பற்றி சொல்லும் போது இங்கிருந்து தான் அங்கே எடுத்துச்செல்லப்பட்டது என்று சொன்னார், மேலும் இராமர் தீர்த்தம், லட்சுண தீர்த்தம் போன்ற இடங்களில் வைத்திருக்கும் கற்கள் இவையல்ல என்றும் அங்கு காசுக்காக ஏமாற்றுகிறார்கள் என்று ஆட்டோ ஓட்டுனர் சொன்னார். இந்த கோவிலுடன் இந்த சின்ன சுற்றுப்பயணம் முடிகின்றது, இந்த இடங்களையெல்லாம் சுற்று பார்க்க கிட்டத்தட்ட குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும், எல்லா இடங்களையும் பற்றி சொல்வதோடு மட்டுமல்லாமல் பொறுமையாக காத்திருந்து அழைத்து போகிறார்கள். எனவே இதையெல்லாம் சுற்று பார்க்க ஆட்டோ தான் நல்ல தேர்வு. முக்கியமாக நம் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமின் வீட்டுக்கும் அழைத்து சென்றார். இப்பொழுது அங்கு அருகிலேயே அவருடைய சகோதரர் கடை வைத்திருக்கிறார். இங்கு முத்துக்கள் நன்றாக இருக்குமென என் சித்தப்பா சொல்லி அனுப்பியிருந்தார், ஆனால் நாங்க போயிருந்த நாள் வெள்ளிக்கிழமையானதால் எல்லாரும் தொழுகைக்கு சென்றிருந்தனர். அதனால் கடை மூடியிருந்தது.

இதன் பிறகு திரும்பவும் கோவில் அருகிலேயே இறங்கிக்கொண்டோம். மாலை 5 மணி அளவில் திரும்பவும் கோவிலருகே அமைந்துள்ள கடைகளை சுற்றி பார்க்க வந்தோம், பொதுவாக விலை அதிகமாக தான் சொல்கிறார்கள். காலையில் தான் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது அதுவும் தவிர தரிசனம் முடித்தவுடன் சரியாக சுற்றி பார்க்கவில்லை என்று என் அம்மாவிற்கு குறை. அதனால திரும்ப கோவிலுக்கு போனோம், ஆச்சரியமாக கூட்டமே இல்லை இலவச தரிசன வரிசையிலேயே சிறிது நேரம் நின்று தரிசனம் செய்ய முடிந்தது. கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் காலையில் ஊருக்கு வரும் பேருந்துகள்,ரயில்களில் வருவதால் காலையில் தரிசன கூட்டம் அதிகமாக இருக்கின்றது, நன்றாக தரிசிக்க வேண்டுமென்றால் மாலையில் செல்வது உத்தமம்.


(அக்னி தீர்த்தம்)சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு அழகிய உதாரணமாக திகழும் இராமேசுவரம் நிச்சயம் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய இடம். இந்த பகுதியோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன். இராமேசுவரத்திலிருந்து திருப்புல்லாணி,சேதுக்கரை ஆகிய இடங்களுக்கு சென்றோம். தற்போது அதை பற்றி எழுதும் மனநிலையில் இல்லை எனவே பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் :)

Tuesday, October 23, 2007

மீண்டும் ஒரு பயணம் - 3

மீண்டும் ஒரு பயணம்
மீண்டும் ஒரு பயணம் - 2

இராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் செல்லும் முன் அதன் தலபுராணத்தை சற்று பார்ப்போம், இலங்கை வேந்தனை கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க இராமேசுவர கடற்கரையில் இராமர் சிவனை பூஜிக்க முனைகிறார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வருவதற்காக அனுமன் கைலாயம் செல்கிறார், அதற்குள் பூசைக்கான நேரம் நெருங்கிவிடுவதால் இராமர் சீதையை மணலில் ஒரு சிவலிங்கம் செய்ய சொல்லி அதற்கு பூசை செய்கிறார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் எடுத்து வரும் அனுமன் இராமர் தான் வருவதற்குள் சீதை மணலில் செய்த சிவலிங்கத்திற்கு பூசை செய்ததினால் வருத்தமடைகிறார்.

இதை கண்ட ஸ்ரீஇராமபிரான் 'சீதை மணலால் செய்த சிவலிங்கத்தை எடுத்துவிட்டு அங்கே நீ கொண்ட வந்த லிங்கத்தை வைத்துப்பார்' என கூறுகிறார். சீதை செய்து வைத்த மணற்லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுக்க முயற்சி செய்யும் அனுமனால் அது முடியவில்லை, அவரின் மனவருத்தத்தை புரிந்துக்கொள்ளும் இராமர், சீதை செய்து வைத்த லிங்கத்திற்கு அருகிலேயே அனுமன் கொண்டு வந்ததை பிரதிஷ்டை செய்கிறார். அதோடு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு தான் முதலில் பூசை இனி நடக்கும் என கூறுகிறார். இராமரால் பூசை செய்யப்பட்ட மணற்லிங்கமே இராமலிங்கம் எனவும், அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் காசிவிசுவநாதர் எனவும் பெயர்ப்பெற்றது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாதாரண கட்டமைப்பு கொண்டிருந்த இந்த கோவில் பின் வந்த மன்னர்களால் மிக பெரிய வளர்ச்சி அடைந்து தற்போது பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதில் உலகப் புகழ்பெற்ற பிரகாரங்களை வடிவமைத்த பெருமை சேதுபதி மன்னர்களையே சாரும். அதோடு பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும் என்பது கூடுதல் சிறப்பு.

காலையில் கோவிலுக்குள்ளே அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின் அறைக்கு சென்று திரும்பிய நாங்கள், கடற்கரை நோக்கி சுமார் 126 அடி உயரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் வழியே உள்ளே சென்றோம். உள்ளே நுழைந்ததும் வலது புறத்தில் ஒரு ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. இதை தாண்டி உள்ளே சென்றால் உலக புகழ்பெற்ற முறையே மூன்றாம், இரண்டாம் பிரகாரங்கள் தாண்டி உள் பிரகாரத்தில் அமைந்துள்ளது இராமநாதசுவாமியின் சன்னதி. நாங்கள் போயிருந்த போது இலவச தரிசன வரிசையில் நல்ல கூட்டம், ஆனா துரிதமாக நகர்ந்துக்கொண்டிருந்தது, என் பெற்றோரின் வசதிகருதி 50ரூ வரிசையில் போய் நின்றுக்கொண்டோம். சீக்கிரம் தரிசனம் செய்துவிடலாம் நினைச்சுக்கிட்டு தான் போனோம். ஆனா நாம எங்கப்போனாலும் அங்க பிரச்னை தான், ஒரு மணிநேரம் அந்த வரிசையை நிறுத்தியே வச்சுட்டாங்க, எங்களுக்கு அப்புறம் வந்தவங்க எல்லாம் இலவச தரிசன வரிசையில் சீக்கிரமா தரிசனம் முடிச்சுட்டு வந்துட்டாங்க. சரி இன்னிக்கு இவ்வளவு நேரம் நிற்கணும்னு நம்ம விதியா இருந்தா அதை என்ன செய்யமுடியும்னு நின்னுக்கிட்டு இருந்தப்போ தான் அங்க ஓவியங்களா வரைஞ்சு வச்சிருந்த கோவிலின் புராணத்தை பார்க்க முடிஞ்சது, அதனால இங்க எழுதறதுல கொஞ்சம் வசதியா போச்சு.

சிறிது நேரத்தில் நகர தொடங்கிய எங்கள் வரிசையில் இருக்கும் ஒரே ஒரு வசதி என்னவென்றால் சன்னிதியின் முன் சிறிது நேரம் அமர விடுகிறார்கள். அப்படியிருந்தும் சுவாமி மிகவும் உள்தங்கியிருப்பதால் அவ்வளவு தெளிவாக பார்க்கமுடியவில்லை(அனுமன் லிங்கத்தை கட்டி இழுத்த போது பதிந்த வாலின் சுவடு கூட தெரியும்னு சொன்னாங்க, அதுவும் சரியா தெரியல). அங்கு தரிசனம் முடிஞ்சதும் அதே பிரகாரத்தில் வலம் வந்தால் சுவாமி சன்னிதியின் வலதுப்புறத்தில் அம்பாள் பர்வதவர்த்தினி சன்னிதி. அம்பாளின் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இங்கு தரிசனம் முடிந்தப்பின் மறுபடியும் சுவாமி சன்னிதி அருகில் வந்தால் அதே பிரகாரத்தில் அனுமனால் கொண்டு வரப்பட்ட காசிவிசுவநாதரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். காசி விசாலாட்சி சன்னிதியும் உள்ளது. அதை தவிர சாரதா பீடத்தினால் கோவிலுக்கு அளிக்கப்பட்ட ஸ்படிக லிங்கமும் உள்ளது, ஆனால் விடியற்காலையில் மட்டும் தான் அதை தரிசிக்க முடியுமென்பதால் எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் தஞ்சாவூர் நந்தியை நினைவுப்படுத்தும் விதமாக ஆனால அதை விட உருவத்தில் சிறியதான, ஒரு பெரிய நந்தியும் அமைந்துள்ளது. உலகத்திலியே மிக நீளமான பிரகாரம் என பெயர் பெற்றுள்ள இந்த கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் மிக உயரமாக சுமார் 4000 தூண்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இந்த பிரகாரத்தின் வழி சுற்றி வரும் போது மேற்கு வாயிலில் நிறைய கடைகள் உள்ளன. இதை தாண்டியதும் மீண்டும் கிழக்கு கோபுரம் வரும் வழியில் அதே பிரகாரத்தில் ஒரு நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதி முழுவதும் ருத்ராட்ச மாலைகளால் அலங்கரித்திருந்தனர். ரொம்ப அழகாக அமைந்துள்ளதை நாங்க பாராட்டி அங்கிருந்த அர்ச்சகரிடம் விசாரித்த போது ஒரு பக்தர் கோவிலுக்கு இலவசமாக அத்தனை ருத்ராட்சங்களையும் அளித்ததாக கூறினார். இவ்வாறாக தரிசனம் முடிந்து அறைக்கு திரும்பிய நாங்க அங்கிருந்து இராமேசுவரத்தை சுற்றி அமைந்துள்ள இடங்களுக்கு செல்வது என முடிவெடுத்தோம்.


தொடரும்..

பி.கு : கோவிலை பற்றிய இன்னும் நிறைய தகவல்களை திரட்ட முடியவில்லை, நான் சென்ற போது கேள்விப்பட்டவையும் சில தகவல்கள் புத்தகங்களிலிருந்தும் எடுத்துள்ளேன், விட்டுப்போன தகவல்களை தெரிந்தவர்கள் பகிர்ந்துக்கொள்ளலாம், காமிரா இல்லாததால் நிறைய அரிய படங்களும் எடுக்க முடியவில்லை. இங்கு போடும் படங்கள் எல்லாமே இணையத்திலிருந்து எடுத்தவை.

Saturday, October 13, 2007

படிப்படியாய் சில படங்கள் :)

மக்கள்ஸ் நவராத்திரி கொண்டாட்டங்களில் தற்போது மிக பிஸியாக இருப்பதால் (ஹிஹி வேறென்ன சுண்டல் விநியோகமும், கலெக்ஷனும் தான்:)) போன பதிவு பின்னூட்டங்களுக்கு பதில் இன்னும் போடல மன்னிச்சு விட்ருங்க :) ராமேஸ்வர பயணத்தின் அடுத்த பாகம் போடறவரைக்கும் எங்க வீட்டு கொலுவை பார்த்து ரசிங்க. இந்த முறை என் தம்பிக்கு நேரம் கிடைக்காததால் நான் தான் பரணிலிருந்து பொம்மைகளை இறக்கி, துடைத்து,படிகளில் வைத்தது எல்லாம். பார்க் செட் பண்ணவேண்டுமென்று ஆசை தான் ஆனா இடமில்லை. இவையெல்லாம் அலைபேசியில் எடுத்த படங்கள் ரொம்ப தெளிவா இருக்காது, அதனால தயவு செய்து பெரிதாக்கி பார்க்காதீங்க :)

முதல் இரண்டு படிகள் :

அடுத்த இரண்டு படிகள்:கடைசி படி :எங்க வீட்டு கொலு :

Wednesday, October 10, 2007

மீண்டும் ஒரு பயணம் - 2
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இராமேசுவரம் வங்காளக் விரிகுடா கடலில் உள்ள ஒரு சிறிய தீவு. ரயில் வழி இங்கு செல்வதற்கு , கடல் மேல் கட்டப்பட்ட புகழ் பெற்ற பாம்பன் பாலத்தில் வழியாக தான் செல்ல வேண்டும். ரயில் பாதை தவிர தனியாக வாகனங்கள் செல்லவும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ரயில் பாலத்தை விட வாகனங்கள் செல்லும் பாலத்தின் உயரம் அதிகம். பாம்பன் பாலத்தின் மீது செல்லும் போது மிக மெதுவாக தான் ரயில் செல்கிறது, கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகிறது பாலத்தை கடக்க. 1914இல் கட்டப்பட்ட இந்த ரயில் பாலம் கப்பல்கள் அந்த வழியாக கடக்கும் போது இரண்டாக பிரிந்து மேலெழும்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு காலையில் வரும் இந்த விரைவு ரயில் அன்று முழுவதும் பாசஞ்சராக மதுரைக்கு சென்று வருகிறது என்று கூறினார்கள். இந்துக்களுக்கு காசியோடு இராமேசுவரமும் மிக முக்கியமான புனிதத் தலமாக கருதப்படுவதால் இங்கு வட இந்தியர்களின் கூட்டமும் அதிகம் வருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநில மக்களையும் இங்கு காணலாம், அதனால் இங்கு மாநில வாரியாகவும் அந்தந்த இனத்தவருக்கு ஏற்ற மாதிரி சங்கர மடத்தில் தொடங்கி குஜராத்திகளின் மடம் வரை நிறைய மடங்கள் இருக்கின்றன. கோவில் அருகிலேயே சாரதா பீடத்தின் மடமும் அமைந்துள்ளது. அதை தவிர தேவஸ்தான அறைகளும் உண்டு.

கோவிலுக்கு எதிர் வரிசையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அறைக்கு ஏற்பாடு செய்துக்கொள்ளலாம். நாங்க போயிருந்தது வாரநாட்களில் என்பதால் தங்குமறை எளிதாக கிடைத்தது. கோவில் அருகிலேயே அறை, ஒரு நாளைக்கு வாடகை 200 ரூபாய். அறை வசதியாக இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆகா இதுக்கும் ஒரு சண்டை போடணுமா? நாம எங்க போனாலும் அது ப்ரச்னை பூமியா மாறிடுதேன்னு நினைச்சுக்கிட்டு அறையை கொஞ்சம் சரி பண்ணுங்க, படுக்கை விரிப்பை மாத்துங்கன்னு சொல்லிட்டு வந்தோம், நாங்க கிளம்பற வரைக்கும் அது நடக்கவேயில்ல :) குளியலறையில் இருந்த வாளியில் ஒரு அங்குலத்திற்கு அழுக்கு மண்டி கிடக்கு, நல்ல வேளை அங்க தங்கியிருந்த ரெண்டு நாளும் கடலில் தான் குளித்தோம் அதனால தப்பிச்சோம்.

இதையெல்லாம் நாங்க பொறுத்துக்கிட்டதுக்கு காரணம் வேற அறை தேட அவகாசம் இல்லை , அதை தவிர எனக்கு அங்கு பிடித்திருந்த ஒரே விடயம், அறை கதவை திறந்து பால்கனிக்கு வந்தால் கண் எட்டும் தூரம் வரை கடல் தான். இங்கு மட்டும் கடல் மிக அமைதியாக, அலைகள் என்றால் என்ன என கேட்கும்விதமாக இருக்கும், எனக்கு அதை பார்க்கும் போது உள்ளே குமைந்துக்கொண்டு எப்பொழுது வேண்டுமானால் வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு எரிமலையை போல் தோன்றியது :)

இங்கு அமைத்துள்ள கடல் நீரை அக்னிதீர்த்தம் என்று கூறுவார்கள், ராமர் சீதையை மீட்டு வந்து அக்னிபிரவேசம் செய்ய வைத்த போது சீதையின் நெருப்பை போன்ற தூய்மையை தாங்கவியலாத அக்னிபகவானே தகிப்பை தணிக்க இங்கு குளித்ததால் இப்பெயர் அமைந்தது என ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். இங்கு நீராடிய பின் இராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்கள் மருத்துவ தன்மை கொண்டுள்ளவையாகும். ஈர உடையுடன் கோவிலுக்குள் சென்றால் உள்ளே அமைந்துள்ள 22 கிணறுகளிலிருந்து தண்ணீர் ஊற்றுவார்கள், இதற்கென்றே ஒருவருக்கு தனியாக 17ரூ கட்டணம் உண்டு. நம் கூடவே வந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து ஊற்ற ஒருவர் வருவார். ஆனா இங்கேயும் எல்லாம் காசு தான்.

கடலில் குளிச்சுட்டு வரும்போதே இடைத்தரகர்கள் வந்துடறாங்க, அவங்க ஒருத்தருக்கு கேட்ட பணத்தை கேட்டுட்டு பேசாம நாமளே இந்த தொழில்ல இறங்கிடலாம்னு தோணும். என் அப்பாவும் பேசி பார்த்துட்டு ஒத்து வராததனால நேரடியா டிக்கட் வாங்கி தான் போய் பார்ப்போம்னு தீர்மானிச்சோம். 3 பேருக்கும் டிக்கட் வாங்கிட்டு உள்ள போனதும் ஒவ்வொரு கிணற்றிலும் இருந்து தண்ணீர் எடுத்து யாரெல்லாம் காசு முன்னாடியே கொடுத்தாங்களோ அவங்களுக்கு மட்டும் சரியா ஊத்தறாங்க, எங்கள மாதிரி டிக்கட் மட்டும் வாங்கிட்டு போனவங்க சும்மா மேல கொஞ்சமா தெளிக்கறாங்க அவ்வளவு தான் அது கூட நாம கொஞ்சம் சண்டை போட்டா தான் நடக்கும்.

எங்க கூடவே வந்த ஒரு வடநாட்டு கும்பலில் இரண்டு வயசானவங்க காசு கொடுக்காம தண்ணீர் ஊத்தும் போது நடுவுல வந்துட்டாங்கன்னு அவங்கள பிடிச்சு தள்ளி விட்டுட்டாங்க, நல்ல வேளை அவங்க கீழ விழல. பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த நானும் என் அப்பாவும் வயசானவங்க தான ஏன் இப்டி தள்ளி விடறீங்கன்னு கேட்கவும், அவனுக்கு நாங்க காசு கொடுக்காத கோபம் அதனால அவங்க தான் என்னை கிணத்துல தள்ளி விட பார்த்தாங்கன்னு அப்டியே ப்ளேட்டை மாத்திட்டான்.

அதுக்குள்ள இங்க நடக்கற பிரச்னையை பார்த்துட்டு இன்னொரு ஆள் வந்து நீங்க ஏன் அவன் கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க, என் கூட ஒரு க்ரூப் வருது அவங்களோட நீங்களும் சேர்ந்துக்கோங்க உங்களுக்கு எவ்ளோ கொடுக்கனும்னு தோணுதோ அத கொடுங்க போதும்னு எங்கள கூட்டிக்கிட்டு போயிட்டாரு. சரின்னு அவங்க கூடவே போய் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் குளிச்சுட்டு(!) வந்தோம். இதுல கடைசி கிணறு கோடி தீர்த்தம் எனப்படுகிறது, ராமர் விட்ட பாணத்திலிருந்து தோன்றிய சுனை என நம்பப்படுகிறது. ஈர உடையுடன் சன்னிதியில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அறைக்கு வந்து உடை மாற்றி கொண்டு கோவிலுக்கு வந்தோம்.

தொடரும்...

பி.கு : மீண்டும் ஒரு பயணம் என்று எழுத ஆரம்பித்ததுமே இன்னொரு பயணம் போக வேண்டியதா போச்சு அதான் இந்த பதிவு எழுத தாமதமாகிடுச்சு(ஹிஹி ஆவலா படிக்கறவங்க கொஞ்ச பேர் தான் என்றாலும் அவங்களுக்காவது விளக்கம் சொல்லனும்ல:)) அதுவும் தவிர நவராத்திரி ஏற்பாடுகளில் கொஞ்சம் பிஸி கொஞ்சம் பொறுத்துக்கோங்க :) மேற்கூறிய சில தகவல்களும், படமும் இணையத்திலிருந்து ஜி3 செய்தது.

Friday, October 05, 2007

மீண்டும் ஒரு பயணம்..

நான் 3 வருடங்கள் முன்பு என் சித்தப்பா குடும்பத்துடன் காசிக்கு போயிருந்தேன் :) காசிக்கு போனா மட்டும் போதாது ராமேசுவரமும் போய்ட்டு வந்தா தான் நம்ம பாவ மூட்டையெல்லாம் முழுசா கரையும்னு யாரோ சொல்லிட்டாங்க. அதனால காசிக்கு போயிட்டு வந்த அதே குரூப் ராமேசுவரம் சென்று வந்தார்கள், ஆனால் உடல்நிலை சரியில்லாததால் என் அம்மா எவ்வளவு வற்புறுத்தியும் நான் போகவில்லை. உனக்கு ரொம்ப பிடிவாதம் அதிகமாப்போச்சுன்னு அன்னியிலிருந்து என்னை திட்டி திட்டி ஒரு வழியா சமீபத்துல தான் போக வாய்ப்பு வந்தது. அது என்னமோ கடந்த 2,3 வருடங்களில் நான் குடும்பத்தோட போன பயணங்கள் எல்லாமே ஆன்மிக பயணங்களாகவே அமைஞ்சுடுச்சு(பாருங்க இவ்ளோ சின்ன வயசுல என்னைய கோவில் கோவிலா கூட்டிக்கிட்டு போறாங்க;)).

ஊருக்கு போறதுனா எங்க வீட்டுல ஒரு வாரம் முன்னாடியிலிருந்தே எங்கம்மா துணிமணிகள், தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பிச்சுடுவாங்க. என்னையும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ஆனா எனக்கு ரயிலேறுவதற்கு முதல் நாள் வரை எதுவும் எடுத்து வைக்க பிடிக்காது, அதுக்குன்னு கடைசி நிமிஷம் வரைக்கும் எடுத்து வைச்சு பதட்டமும் பட மாட்டேன். எங்கம்மா தான் நான் செய்யறத பார்த்து பதட்டப்படுவாங்க :) அடிப்படையில் நான் ஒரு சோம்பேறி ஹிஹி :) ஒவ்வொரு முறையும் எங்கம்மா நான் செய்யறத பார்த்து பதட்டப்பட்டாலும் எல்லாத்தையும் நான் சரியா எடுத்து வைச்சுப்பேன்னு எங்கம்மாவுக்கு நம்பிக்கை இருக்கு :)என்னடா இவ போன இடத்தை பத்தி சொல்லுவான்னு பார்த்தா சுயபுராணம் படிக்கறான்னு பார்க்கறீங்களா? என்ன பண்றது ஏதாவது எழுதலாம்னு பார்த்தா கவிதையை தவிர எதுவும் தோணமாட்டேங்குது. ஏற்கனவே நான் கவிதை பக்கத்துல எழுதறது போதாதா என்று சில பல இடங்களிலிருந்து கற்களும், வீட்டுக்கு ஆட்டோவும் வர வாய்ப்பிருப்பதால் இன்னும் 2,3 பதிவுகளுக்கு இப்டி தான் பயணக்கட்டுரை எழுதி மொக்கை போட போறேன் :) உடனே உலா வரும் ஒளிக்கதிர் ஆரம்பிச்சிடியான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது அம்பி ;) என்ன பண்றது? விதி வலியது நீங்க படிச்சு தான் ஆகனும் :)

சென்ற வியாழன் மாலை இராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸில் ஏறிய எங்களுக்கு அங்கேயும் சுவாரஸ்யதுக்கு பஞ்சமில்லை தான். நான், என் அப்பா, அம்மா தவிர எங்கள் கூபேயில் இன்னொரு குடும்பமும் இருந்தார்கள். அவர்களுடைய பெண்ணுக்கு மட்டும் மட்டும் எங்க கூபேயில் இல்லாமல் எதிரில் சைட் பெர்த்தில் மேல் பெர்த் கொடுக்கப்பட்டிருந்தது. இது மாதிரி சைட் பெர்த்களில் பெரும்பாலும் கீழ் பெர்த்தில் RAC பயணச்சீட்டு வைத்திருக்கும் இருவருக்கு அலாட் ஆகும். அதாவது கீழே இருக்கும் இரண்டு இருக்கைகளில் ஒன்று கன்பர்ம்டு டிக்கெட் வைத்திருப்பவரும் மற்றொன்றை RAC டிக்கெட் வைத்திருக்கும் இருவருக்கு கொடுப்பார்கள், அவர்கள் இருவரும் கீழே அமர்ந்து வரலாம், மேல் பெர்த் கன்பர்ம்டு டிக்கட் வைத்திருப்பவருக்கு தான். அப்படி ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் வந்ததுமே கீழே இருக்கும் பெர்த் முழுவதும் அவர்களுக்கு தான் என்றும் மேல் பெர்த் தான் உங்களுக்கு அதனால் நீங்க எழுந்துக்கோங்க என்று அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் கூறினர்.

ஆனா சட்டப்படி பார்த்தா இரவு 9 மணி வரை கீழே அமருவதற்கு அந்த பொண்ணுக்கு உரிமை இருக்கு. என் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பொண்ணோட அம்மாவும் அதையே சொல்லி, கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கோங்க இப்ப மணி 6 தான் ஆகுது அப்புறமா அவங்க மேலே போவாங்கன்னு சொன்னா அந்த ஆள் ஒத்துக்கவேயில்ல. உடனே நான் அவரை கூப்பிட்டு உங்களுக்கு சரியா புரியலேன்னு நினைக்கறேன்னு சொல்லி திரும்ப அவருக்கு பொறுமையா எடுத்து சொன்னேன். எல்லாத்தையும் சிரிச்சிக்கிட்டே கேட்டுக்கிட்டு என் மனைவிக்கு தான் கீழ சீட் அலாட் ஆகியிருக்கு, அவங்களுக்கு மேல் பெர்த் தான் அதனால அவங்களை போக சொல்லுங்க அப்டின்னு திரும்ப ராமாயணத்தை ஆரம்பிச்சிட்டாரு. அடப்பாவி மக்கா நீ எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டே தான் தகராறு பண்றியா? என்று மனசுல நினைச்சுக்கிட்டு சரி உங்க பயணச்சீட்டை காமிங்கன்னு கேட்டா நான் ஏன் உங்களுக்கு காமிக்கனும் அப்டின்னு சொல்றாரு. சரி ஒரு முடிவோட தான் இவரு வந்துருக்காருன்னு தெரிஞ்சுப்போச்சு, நீங்க TTR வருவாரு அவரு கிட்ட கேளுங்க அவரும் நாங்க சொன்னத தான் சொல்வாருன்னு சொல்லிட்டு அமைதியாகிட்டோம் (பின்ன எங்கம்மா வேற நான் ஏதோ சண்டை போடறதா நினைச்சுக்கிட்டு என்ன பார்த்து முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க:))

ஆனாலும் அவரு விடாம சொன்னதையே சொல்லி சொல்லி , அந்த பொண்ணு டார்ச்சர் தாங்கமுடியாம எங்க கூபேயில் இருந்த அவங்க அம்மா பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க. நீங்க ஏன் எழுந்து வந்தீங்க? நானாயிருந்தா வந்தேயிருக்க மாட்டேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு டிடிஆர் வந்தப்புறம் அவங்க பயணச்சீட்டை பார்த்துட்டு அவர் ஏதோ சொல்ல அந்த தம்பதி எழுந்துப்போயிட்டாங்க. சரி அவங்களுக்கு தனியா பெர்த் கிடைச்சுடுச்சுன்னு நாங்க நினைச்சுக்கிட்டோம். சாப்பிட்டு விட்டு கைகழுவ போன என் அப்பா அவங்க ரெண்டு பேரும் கை கழுவற இடத்துக்கிட்ட நிக்கறாங்க அவங்களுக்கு இங்க சீட்டே இல்ல போலிருக்கு, இந்த அழகுல நம்மளோட சண்டை வேற போட்ருக்காங்கன்னு சொன்னாரு. கொஞ்ச நேரம் கழிச்சு நான் போனப்ப அந்த ஆள் என் முகத்தை கூட பார்க்கல, அவர் மனைவியோ பாவம் அங்க நின்னுக்கிட்டு சாப்டுட்டு இருந்தாங்க, நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கலாம்னு பார்த்தேன் அவரு மனைவியின் முகத்துக்காக விட்டுட்டு வந்துட்டேன். இப்டியும் மக்கள் இருக்காங்க பாருங்க அப்டின்னு நினைச்சுக்கிட்டே அன்னிக்கு பொழுது ஓட்டிட்டோம். மறுநாள் காலை 7:30 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தோம்.

தொடரும்....

Monday, September 24, 2007

பார்க்க.. ரசிக்க..

குழந்தைகளை படமெடுக்கறது அப்டிங்கறது ஒரு கலை. அவங்க செய்யற சேட்டையெல்லாம் பதிவு செய்யனும்னு நினைக்கும் போது தான் நம்மள அழ வச்சுடுங்க, அவங்களுக்கே தெரியாம எடுத்தா தான் படங்கள் இயற்கையா வரும். பாருங்க, என் அண்ணன் பொண்ணை படமெடுக்க நான் முயற்சி செஞ்சப்ப அவ செஞ்ச சேட்டைகளை(இதெல்லாம் பழைய படங்கள் 5,6 மாதங்களுக்கு முன் எடுத்தது, இப்ப மேடத்துக்கு ஒரு வயசு முடிஞ்சுப்போச்சு, படமெடுக்க அழகா போஸ் கொடுப்பாங்க:))

பார்த்து ரசிக்க :
( ஒரு வயசு ஆகறதுக்கு முன்னாடி படமெடுக்க கூடாதுன்னு பாட்டி சொல்லியிருக்காங்க அதனால் நான் முகத்தை காட்ட மாட்டேன் போ..)(சொல்ல சொல்ல படமெடுக்கறியா நீ ? இரு உன் காமிரா பொட்டிய உடைக்கறேன்..)

(இது தான் கடைசி வார்னிங் சொல்டேன்..)(ஹிஹி இந்த படம் எடுத்ததுக்கப்புறம் காமிராவை என் கையிலிருந்து பிடுங்கிக்கிட்டா, நாமளே ஊரான் வூட்டு காமிராவை வச்சுட்டு படம் காமிச்சுட்டு இருந்தோம், எதுக்கு ரிஸ்க்குன்னு நானும் படமெடுக்கறத நிறுத்திட்டேன்:))(என் தம்பியோட அலைபேசியில எடுத்தது, கொஞ்சம் சிரிடி செல்லம்னு சொன்னதுக்கு கொடுத்த போஸை பாருங்க:))


(அவங்க ரெம்ப கோபமா இருந்த போது எடுத்த படம்)


படித்து ரசிக்க :

இந்த கவிதை போன வருடம் என் அண்ணன் மகள் பிறந்த பொழுதில் எழுதியது, இங்கு மீள் பதிவு செய்கிறேன்..

சிரிக்கும் உன் விழிகளில்
வழியும் அன்பு;
சிறு சிணுங்கலிலும்
தெறித்து விழும் நேசம்;
கைகட்டி நிற்பவரையும்
தொடத் தூண்டும் மென்மை;
மனம் கனமாகி
விழிகள் குளமாகி
எண்ணங்கள் உறையும் பொழுது,
உன்னை ஆரத் தழுவி
உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.


Thursday, September 20, 2007

போய் வா!

எதுவும் படிக்க தோணாமல், எழுத தோணாமல் அசுவாரஸ்யமாய் தொலைக்காட்சியில் முழுகி இருந்த பொழுது வந்தது அந்த மரணச் செய்தி. 'என்னது? அப்படியா? எப்ப? என்ன இப்டி சொல்றடா?' என்று என் தந்தை பேசும் போதே கண்டுப்பிடித்து விட்டேன், அவர் உன் தந்தையிடம் தான் பேசுகிறார் என்றும் உன் குடும்பத்தில் தான் மரணம் என்றும். மனம் அவசர அவசரமாக எல்லாரையும் வரிசையில் நிறுத்தி பார்த்தது, என்றோ இறந்து போன உன் தம்பியும், சில வருடங்களுக்கு முன் இறந்துப் போன உன் பாட்டியையும் தவிர்த்து வேறு யாரையும் நினைக்க தோணவில்லை. அதனால் தான் என் தந்தை சொன்ன போது நம்ப முடியவில்லை இறந்தது நீ தான் என்று. உன் மரணச்செய்தியை விட அதிர்ச்சி தந்தது உன் மரணம் எதிர்ப்பார்க்கப்பட்டது தான் என்ற செய்தி.

உன்னை பார்த்து பல வருடங்கள் ஆயினும் உன் தந்தையை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தது. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் உன்னை பற்றி விசாரிப்பேன். நீ என்னை விட 4,5 வருடங்கள் மூத்தவள் என்றாலும் உன்னை என் வயதை ஒத்தவளாக தான் நினைத்து பழகியிருக்கிறேன். உன் பெயரை சொன்னவுடன் எனக்கு நினைவுக்கு வரும் விடயம் உன் கால் கொலுசு சத்தம் தான். என்னுடைய சிறு வயதில் தான் உன் குடும்பம் எங்கள் வீட்டில் குடித்தனம் வந்தது. அப்பொழுது உன் கொலுசு சத்தம் கலீரென்று கேட்க நீ எங்கள் வீட்டில் வலம் வருவாய், உண்மையை சொல்லப்போனால் இரவில் நீ நடக்கும் பொழுது நான் பயந்துப்போய் உன் பெயரை சொல்லி அழைப்பேன் நீ தானென்று உறுதி செய்ய. சில சமயங்களில் பதில் சொல்வாய், பல சமயங்களில் என்னை பயமுறத்த பதில் சொல்லாமல் கொலுசு சத்தத்தை அதிகமாக்கி புன்சிரிப்புடன் ஓடுவாய். இப்பொழுதும் யாராவது நிறைய முத்துக்களோடு கூடிய கொலுசுகள் அணிந்துச் செல்லும் பொழுது உன் நினைவு தான் வருமெனக்கு.

உன்னுடன் நெருங்கி பழகவில்லையென்றாலும் உன் மீதான அக்கறை ஏதோ ஒன்று என் மனதின் மூலையில் இருந்திருக்கிறது அதனால் தான் தொடர்பு அறுந்து பல வருடங்கள் ஆயினும் உன் தந்தையிடம் உன்னை பற்றி விசாரிக்க எனக்கு தோன்றியது. இத்தனை வருடங்களில் இந்த விசாரிப்பின் பதில்கள் ,'இருக்கிறாள் அம்மா', 'திருமணம் ஆகிவிட்டது','மருமகன் சரியில்ல',பையன் பொறந்திருக்கான்', 'பேரன் நல்லா படிக்கிறான், 'நாங்க தான் வளர்க்கறோம்' என்ற ரீதியில் தான் இருந்திருக்கின்றன. சமீபத்தில் அவரை சந்தித்த போது கூட உன்னை பற்றி கேட்டேன், 'நல்லா இருக்கா' என்ற உன் தந்தையின் பதிலை மட்டும் காதில் வாங்கிக்கொண்ட நான் அவர் கண்களை கவனிக்காமல் விட்டு விட்டேன், அதில் தெரிந்திருக்கும் உன் மரண வலி.

உன் குழந்தை பருவத்திலேயே இருந்து வந்த மூச்சிரைப்பு நோய் படிப்படியாய் அதிகமாகி மிக தீவிர சிகிச்சையில் நீ இருந்திருக்கிறாய் என்று தெரிந்துக்கொள்ளாமலே விட்டுவிட்டேனடி தோழி. இனி அடுத்து உன் தந்தையை பார்க்கும் பொழுது நானறியமாலே உன்னை பற்றி விசாரித்து விடுவேனோ என அச்சமாக இருக்கிறது, ஒரு வேளை உன் மரணத்தை நானும் எதிர்ப்பார்த்திருந்தால் இப்படி எனக்கு தோணாது என நினைக்கிறேன். வாழ்க்கையில் எல்லா வழித்தடங்களிலும் மரணம் நமக்காக காத்துக்கொண்டு தான் இருக்கிறது நாம் தான் அதை எதிர்பாராதது என்று கூறுகிறோம். இன்று நீ சென்று விட்டாய் மரணத்தின் வாசலுக்கு, போய் வா தோழி!

-உன் ஆன்மாவின் அமைதிக்காக வேண்டிக்கொள்வதை தவிர வேறெதுவும் செய்ய இயலாமல் நான்...

Sunday, September 16, 2007

முதல்வன்... அவன் தாள் பணிவோம்..


குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் தங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாய், தோழனாய், தம்மில் ஒருவராய் கருதும் கடவுளர்கள் என்றால் பிள்ளையாரும், கிருஷ்ணரும் தான் என்பது என் கருத்து. குழந்தைகளுக்கு மிகவும் எளிதாய் பிடித்துவிடும் ஒரு தோற்றத்துடன் இருப்பது பிள்ளையார் தான். பிள்ளையார் சதுர்த்தி விழாக்களை இப்பொழுது கொண்டாடுவது போல் பிரம்மாண்டமாக பல வருடங்களுக்கு முன் பார்த்ததில்லை என்று என் அம்மா சொல்வதுண்டு. திருமணத்திற்கு முன்பு அவங்க அம்மா வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் வாங்கி தனியாக பூசையெல்லாம் செய்யும் வழக்கமெல்லாம் கூட இல்லை என்று சொல்லியிருக்கிறார். இதற்கும் என் அம்மாவின் அம்மா ஒரு பிள்ளையார் பக்தை :) எதற்கெடுத்தாலும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொள்வார், எங்க கஷ்டத்துக்கு மட்டுமல்ல பிறருடைய கஷ்டத்துக்கும் சேர்த்து தான். எங்கு விநாயகர் சிலை கண்டாலும் அங்கு நின்று விடுவார். 'போச்சுடா உங்க ப்ரெண்ட் கூட பேச ஆரம்பிச்சுட்டீங்களா? இனி அரை மணி நேரத்துக்கு நகர மாட்டிங்க' என்று நாங்க கூட அலுத்துக்கொள்வோம்:) அவருக்கும் பிள்ளையாருக்குமான அந்த அழகான நட்புணர்வு அவருடைய கடைசி காலம் வரை நீண்டது, பிள்ளையார் என்றாலே என் பாட்டி நினைவு வரும் அளவுக்கு :)தம்முடைய பிறந்த வீட்டில் இல்லாத பழக்கம் அதாவது பிள்ளையார் சதுர்த்தியன்று பிள்ளையார் சிலை வாங்கி வைத்து பூசை செய்து தண்ணீரில் கரைப்பது எல்லாம் திருமணத்திற்கு பிறகு என் அம்மாவிற்கு மிகவும் புதியதாக இருந்தது. பின் அதுவே வழக்கமாகி விட்டது. பிள்ளையார் சதுர்த்தி அன்று காலையில் தலைக்கு குளித்து விட்டு நானும் என் தம்பியும் தான் பிள்ளையார் வாங்க செல்வோம். செயற்கை வண்ணப்பூச்சுகள் இல்லாத களிமண் பொம்மை தான் எப்போதும் எங்க விருப்பம். அதுவும் மிக சிறிய அளவிலானது தான், கூடவே அன்று பிள்ளையாருக்கு அணிவிக்க எருக்கம்பூ மாலையும், அழகான வண்ண காகிதத்தில் செய்யப்பட்ட ஒரு குட்டி குடையும் வாங்குவோம்((அதை அப்படியே வைத்திருந்து நவராத்திரியில் அலங்கரிக்க பயன்படுத்துவோம்). சாதாரணமாக அந்த எருக்கம்பூவை யாரும் சீந்தக்கூட மாட்டார்கள். ஆனால் அன்று ஒரு நாள் மட்டும் அந்த பூவுக்கு அவ்வளவு கிராக்கி. ரயில் தண்டவாளங்களின் ஓரம் நிறைய பூத்து இருக்கும் அந்த பூக்களை விற்று அதில் சிறிது காசு பார்க்கும் நிறைய சின்ன பசங்க/பொண்ணுங்க, அக்கா அக்கா என்கிட்ட வாங்கிக்கோங்க என்று சுற்றி சுற்றி வருவார்கள். அன்று ஒரு நாளில் பெரிய வருமானம் அவர்களுக்கு இல்லையென்றாலும் நாம் வாங்குவதால் அவர்களுக்கு சிறிதளவேனும் பலன் இருப்பதில் ஒரு மன திருப்தி தான் இல்லையா?

பிள்ளையாரை வாங்கி முடித்தவுடன்(!) அவரை பூசையறையில் கோலம் இட்ட ஒரு மணைப்பலகையில் வைத்து என் பாட்டி(அப்பாவின் அம்மா) செய்யும் முதல் வேலை அவருக்கு ஒரு நாமத்தை போட்டு தும்பிக்கையாழ்வாராக மாற்றுவது தான். நானும் என் தம்பியும் கூட எங்களுக்குள் சொல்லி சிரித்துக்கொள்வோம், விபூதி பட்டை பூச வேண்டிய பிள்ளையாருக்கு நாமத்தை போடறாங்களே என்று:) ஆனாலும் அது அவங்க விருப்பம் என்பதாலும் தெய்வத்தை தம் மனதிற்கு நெருக்கம் தரும் அடையாளத்தோடு அவர் பார்க்க விரும்புவதை தடை சொல்ல முடியாது என்பதாலும், நமக்கு ஒழுங்கா சுண்டல், வடை, பாயசம் வந்தால் போதும் என்பதாலும் ஹிஹி நாங்க எதுவும் வெளிய சொல்லிக்க மாட்டோம்:) அப்புறம் விநாயகர் அகவல் படித்து எங்க பாட்டி பூஜை செய்வார். நானும் என் தம்பியும் மட்டும் அருகில் அமர்ந்து சுண்டல் எப்ப தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருப்போம், எங்க வீட்டுல கொழுக்கட்டை செய்யும் வழக்கமில்லாததால் இங்க சுண்டல் வேட்டை முடிச்சுட்டு எங்க பெரியம்மா வீட்டுக்கு போனா கொழுக்கட்டை கிடைக்கும்னு ரொம்ப ஆவலோட உட்கார்ந்திருப்போம் :) பூசை முடிந்து நைவேத்தியம் ஆன அடுத்த நொடி என் தம்பி சுண்டலை எடுத்துக்கொண்டு ஓடி விடுவான், என்னை மட்டும் ஒரு பாட்டு பாடுன்னு சொல்லி எங்கம்மா தடுத்துடுவாங்க, நானும் சரி அம்மா சொல்றாங்களேன்னு பாடுவேன், (ஹிஹி இது வரைக்கும் பிள்ளையார் எழுந்து ஓடல:)) இந்த வருடம் என் தம்பியும் ஊரில் இல்லை, என் பாட்டியும் கடந்த சில வருடங்களாக பூசை செய்யும் நிலைமையில் இல்லாததால் நான் தனியாக சென்று பேரம் பேசி களிமண்ணில் செய்த சிறிய அழகான பிள்ளையார் வாங்கி நானே பூசையும் செய்தேன்:)


பிள்ளையார் சதுர்த்தி வந்தாலே அடுத்தடுத்து பண்டிகைகள் தான். அடுத்து வரும் நவராத்திரி பண்டிகை எனக்கு மிகவும் பிடித்த பண்டிகையும் கூட, நம்ம காயத்ரி கூட வலையுலகத்துல நவராத்திரி கொண்டாடலாம்னு சொல்லியிருக்கா யார் யாருக்கு என்னென்ன வேடம் பொருந்தும்னு நம்ம மக்கள் அங்க போய் தங்கள் கருத்துக்களை சொல்லலாம்:) சீக்கிரம் முடிவு பண்ணிட்டா வர்ர கொலுவில் உங்க எல்லாரையும் உட்கார வைக்க வெயிட்டா படிகள் ஏற்பாடுகள் பண்ணிடலாம் :)

பி.கு : நேத்தே முடிஞ்சு போன பிள்ளையார் சதுர்த்திக்கு இவ்ளோ மொக்கையா ஒரு பதிவான்னு நீங்க பீல் பண்ணினா பிள்ளையார் மகத்துவத்தை பத்தி அழகா நம்ம சங்க தலைவலி கீதா எழுதியிருக்கறதை படிச்சுப்பாருங்க :)

பி.கு.கு : தாமதமாக பதிவு போட காரணம் என் தம்பி ஊரில் இல்லாததால் அவன் பங்கு சுண்டல், வடை, கொழுக்கட்டை எல்லாவற்றையும் சாப்பிடும் முக்கிய வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது தான் :)

Friday, September 07, 2007

அந்த நொடி..


படப்படத்த இதயத்தின்
வாசலை அடைத்து
ஊசி முனை தவமாய்
காத்திருந்தேன்
அந்த நொடியின்
வரவிற்கு..


கையில் ஏந்திய
புத்தகத்தின் தாள்கள்
எள்ளி நகையாடின
வார்த்தைகளை விடுத்து
வரிகளினூடே ஓடும் வெற்றிடத்தை
மட்டுமே என் கண்கள் தழுவியதை அறிந்து..

அர்த்தமிலா வார்த்தைகள்
சுமந்த என் மொழி
எதிரில் அமர்ந்தவரின்
எண்ணத்தை உறுதி செய்தது
என் மனபிறழ்வை பற்றி..

பாசாங்குகள் நிறைந்த
கணங்கள் தேயத் தேய
எதிர்பார்த்த நொடியின் அருகாமை
என் காத்திருப்பின்
மதிப்பை கேலி செய்தது..

அந்த நொடியும்
வந்தது
.
.
.
.
.
.
சென்றது..

Tuesday, September 04, 2007

நின்னை சரணடைந்தேன்...


ஆதியும் நீயே
அந்தமும் நீயே

குழல் கொண்டு நீ இசைக்கும் நாதம்
என் உயிர் கொண்டு போவதென்ன?
என் கவலைகள்
சரண் கொண்டது உன்னடியில்
இனி என் கவலைகள் தானென்ன?

சர்வமும் நீயே
சதா உன் நினைவில் நானே..

Friday, August 31, 2007

நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்

அடுத்து எதை பத்தி எழுதி நாட்டுக்கு சேவை செய்யலாம்னு ரொம்ப தீவிரமா சாப்பிட்டுக்கொண்டே யோசிக்கும் போது நம்ம குருகுலத்தில் ஒரே பரபரப்பு எல்லாரும் அங்கங்க கூட்டம் போட்டு பேசிக்கறாங்க. நம்ம சிஷ்யக்கேடி ஒருத்தனை நிறுத்தி கேட்டேன்

'என்னப்பா விசேஷம்? நம்ம குருகுலத்துக்கு யாராவது சினிஸ்டார் வர்ராங்களா? ஹிஹி மாதவனை கூப்படனும்னு நானே ரொம்ப நாளா நினைச்சேன் :)'

'குரு இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல? அவனவன் பாவனா,அசின்,நயந்தாரான்னு கனவு காண்றோம் நீங்க என்னடான்னா மாதவனை சொல்றீங்க?'

'சரி இதெல்லாம் வெளில போய் சொல்டாத நம்ம குருகுலம் மானம் போயிடும் :) கூட்டத்துக்கு என்ன காரணம் அத சொல்லு'

'குரு நம்ம காயத்ரிக்கு நாளைக்கு பொறந்த நாளு அதான் எப்டி கொண்டாடலாம்னு டிஸ்கஸ் பண்றோம்'

அந்த நேரம் பார்த்து அங்க வந்த நம்ம சிஷ்யன் பில்லு பரணி காயத்ரி,பொறந்தநாள்,ட்ரீட் இந்த வார்த்தைகளை கேட்டவுடன பயந்து போய் மெதுவா நழுவராரு, நான் விடுவேனா?:)

'ஏய் பில்லு எங்க போற?'

'ஹிஹி குரு ஒரு முக்கியமான வேலை இருக்கு இதோ போயிட்டு வந்துரேன்'

'உன் முக்கியமான வேலை என்னன்னு தெரியும் அந்த மஞ்சக்காட்டு மைனாவை தான கரெக்ட் பண்ணப்போற? அது அப்புறம் பார்க்கலாம் நம்ம காயத்ரிக்கு நாளைக்கு பொறந்தநாளாம் தெரியுமா?'

'அத கேட்டுட்டு தான் எஸ்கேப் ஆக ட்ரை பண்ணினேன் குரு என்னால பில்லு கட்டி மாளலை, என் க்ரெடிட் கார்டெல்லாம் தேய்ஞ்சே போச்சு என்ன விட்ருங்க :('

'நோ டென்சன் இந்த முறை நம்ம குருகுலத்துல தான கொண்டாடப்போறோம் நீ பில் கட்ட வேணாம் பொழச்சுப்போ'

'ரொம்ப நன்றி குரு அப்ப நாம அழைப்பிதழ் அடிச்சுடலாமா?'

'என் பொறந்தநாளைக்கே இப்டி தடபுடல் பண்ணல இந்த காயத்ரிக்கு வந்த வாழ்வை பாரு' என்று மனசுக்குள் புகைந்தபடி 'சரி அதுக்கு முன்னாடி நம்ம பரமார்த்த குருகிட்ட சீசீ பரம குரு கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு'

'அய்யோ குரு அவரு கிட்ட போனாலே உறுமராரு'

'அவரு நிஷ்டையில் ஆழ்ந்து போயி எந்த பிகர் கூடவாவது டூயட்ல இருந்துருப்பாரு அப்ப போயி நீ அவரை தொல்லை பண்ணியிருப்ப சரி விடு நம்ம தலை(வலி)வி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு இல்லேன்னா 'தலைவிக்கு தெரியாம சதி' அப்டின்னு ஒரு பதிவு போட்ருவாங்க, அப்புறம் பி.மு.க தலைவர் கார்த்தி தலைமையில் நடத்தலாம்னு பார்த்தா அவரு சைலண்டா கல்யாணம் காட்சி ஏதோ பண்ணிக்கிட்டாரு போல அதான் ஆளையே காணோம். சரி நீயே பார்த்து அழைப்பிதழ் அடிச்சு எடுத்துக்கிட்டு வா ஷ்யப்பா இதுக்கே கண்ணக்கட்டுது நான் போய் சாப்டுட்டு வரேன் ஒரு மணி நேரம் முன்னாடி சாப்டது அதுக்கப்புறம் எதுவுமே சாப்பிடல'

இப்டியாக கூடி முடிவெடுத்து நம்ம காயத்ரியோட பொறந்தநாளை குருகுலத்துல சிறப்பா கொண்டாட நம்ம சிஷ்யக்கேடிகள் அடிச்ச அழைப்பிதழை பாருங்க (பார்க்கறதோட சரி அதுல இருக்கறதை நம்பி சாப்ட வந்துராதீங்க ஏன்னா பில்லு கட்ட வேண்டிய பரணி எங்கேயோ தலைமறைவா போயிட்டாரு)

"உலகமெங்கும் புகழ்பெற்ற எங்கள் குரு வேதா அவர்களின் தலைமையில் இயங்கும் குருகுலத்தின் பிரதம சிஷ்யை, பதிவுலகத்தின் சொர்ணாக்கா, பி.மு.க வின் செயலாளர், 3000 பின்னூட்டங்கள் வாங்கி ப்ளாக்கரை கதறடிச்ச வீராங்கனை, பின்னூட்ட சூறாவளி, ஜி3 என்று செல்லமாக அழைக்கப்படும் காயத்ரியின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பிக்கு ஆப்பு வைப்பதையே முழு நேர தொழிலாக ஏற்றுக்கொண்டு அதை இன்று வரை கடைப்பிடுத்து வரும் எங்கள் தானை தலைவலி கீதா அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க, பி.மு.க முதல்வர் நம்ம நாட்டாமை தலைமையில் தலைவாழை இலை போட்டு விருந்து நடைப்பெற உள்ளதால் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்"

காயத்ரிய தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது(பின்ன, யாரு புதுசா ப்ளாக் ஆரம்பிச்சாலும் நாட்டாமைக்கு போட்டியா புளியோதரைக்கு போய் முதல்ல நிப்பா:))ஆனாலும் நம்ம குமுதம் பாணியில ஒரு சின்ன அறிமுகம், • பெயர் : காயத்ரி என்கிற ஜி3 என்கிற சொர்ணாக்கா என்கிற.......................

  வயது : நாளைக்கு தான் பொறக்கவே போறா

  நிரந்தர தொழில் : இதெல்லாம் ஒரு கேள்வியா? வேறென்ன? உண்பதும்,
  உறங்குவதுமேயல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே

  உபதொழில் : ப்ளாக்குவது, ஆர்குட்டுவது, சேட்டுவது, போன் பேசுவது இதெல்லாம் போக நேரம் இருந்ததுனா கொஞ்சம் ஆபிஸ் வேலையும் செய்வது

  திடீர் தொழில் : சென்னை வரும் வலைப்பதிவர்களிடம் ட்ரீட் கேட்டு கிலி ஏற்படுத்துவது

  நண்பர்கள் : நாம எல்லாரும் தான், இருந்தாலும் உங்க செலவுல ட்ரீட் கொடுத்தா நீங்க தான் பெஸ்ட் ப்ரண்ட்

  எதிரிகள் : அவளிடம் ட்ரீட் கேட்பவர்கள்

  பிடித்த பொருள் : சாப்பிட முடிந்த எதுவும்

  பிடிக்காத பொருள் : சாப்பிட முடியாத எதுவும்

  பிடித்த இடம் : அவள் வீட்டில் சமையலறை, அலுவலகத்தில் ஃபுட் கோர்ட் :)

  பிடிக்காத இடம் : அவள வேலை வாங்குற இடம்

  ஒரே பொழுதுபோக்கு : ஹையோ ஹையோ எத்தன வாட்டி தான் சொல்றது?
பி.கு: "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி :)"

Wednesday, August 22, 2007

அன்பு மழையில் நனைந்தேன் நான்...

ஆவணி மாதத்தில் நிறைய விசேஷம் வந்தாலும் ரொம்ப விசேஷமானது இன்று தான், ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் நள்ளிரவு 12:15 மணிக்கு இந்த பூமியில் நான் அவதரித்தேன் :) நான் பிறந்த போதே குடும்பத்துல பெரிய கலவரத்தை உண்டாக்கிட்டு தான் பிறந்தேன். நான் பிறந்த சிறிது நேரத்திலேயே என் அம்மாவிற்கு ரொம்ப உடல்நிலை மோசமாகி கிட்டத்தட்ட உயிருக்கே ஆபத்தான நிலைமை உருவாகிவிட்டது, உடலை எங்கு கொண்டு போகலாம்னு எல்லாரும் பேசிக்கற அளவுக்கு. ஆனா அப்புறம் சரியா போச்சு. இன்னிக்கும் என் தம்பி என்ன வெறுப்பேத்த சொல்லுவான், பொறக்கும் போதே அம்மாவுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டன்னு, டேய் என்னைய மாதிரி ஒரு நல்லவள பெத்தெடுக்க இப்டியெல்லாம் கஷ்டப்படனும்னு நான் சொல்லுவேன் :) அதுக்கப்புறம் அது மாதிரி பேசறத விட்டுட்டான் :) எங்க வீட்டுல எப்பவும் தமிழ் பிறந்த நாளன்னிக்கு தான் கொண்டாடுவோம் அன்னிக்கு தான் ஏதாவது இனிப்பு செஞ்சு எல்லாருக்கும் கொடுத்து, கோவிலுக்கு போவோம். ஆனா எனக்கு மட்டும் வருஷத்துக்கு மூணு பொறந்த நாள் வரும் ;) என்னை பள்ளியில் சேர்க்கும் போது வேற தேதி கொடுத்துட்டாங்க, அப்புறம் ஆங்கில தேதிப்படி ஆகஸ்ட் 21 அதாவது நேத்திக்கு, அப்புறம் தமிழ் மாத கணக்குப்படி ஒரு நாள் :) நானும் ஒவ்வொரு வருடமும் சொல்வேன் மூணு பிறந்தநாளுக்கும் புது துணி எடுக்கலாம்னு ஒத்துக்கமாட்டேங்கறாங்க ;)

கல்லூரி நாட்களுக்கு பிறகு எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், என்றும் மறக்காத நினைவுகளையும் பரிசாக கொடுத்தது இந்த வருட பிறந்த நாள் தான்(அவ்வ்வ்வ் இப்டி பீல் பண்ண வச்சுட்டீங்களே:)). முதல் நாள் இரவே நம்ம மக்கள் கண்டிப்பா போன் பண்ணுவாங்கன்னு தெரியும் அதனால் செல்பேசியை ஊமையாக்கி விட்டு சைலண்டா படுத்துவிட்டேன் :) விடியக்காலையில் தூக்கம் கலைஞ்சு செல்பேசியை எடுத்து பார்த்தா ரெண்டு மிஸ்டு கால், ரெண்டு மெசேஜ் வந்துருக்கு. மிஸ்டு கால் ரெண்டுமே யார்னு தெரியல ஆனாலும் காயத்ரி மேல ஒரு சந்தேகம் இருந்தது :) மெசேஜ் காயத்ரியும், பரணியும் அனுப்பியிருந்தாங்க. இதுல வேற பரணி உங்களுக்கு கண்டிப்பா ஆதித்யன் கிடைச்சுடுவாருன்னு வாழ்த்து (ஹிஹி இது காயத்ரிக்கு தெரிஞ்சது இங்கன ஒரு கொல விழும், ஏன்னா ஆதித்யன் காயத்ரியோட கனவு நாயகன் அவன எனக்கு இப்டி தாரை வார்த்து கொடுத்துட்டீங்களே பரணி :))

மெசெஜ் படிச்சுட்டு திரும்ப தூங்கின என்னை 6 மணிக்கே போன் பண்ணி எழுப்பி விட்டுட்டா காயத்ரி, வாழ்த்து சொல்லிட்டு பேச ஆரம்பிச்ச அவள, தாயே நான் அப்புறம் போன் பண்ணி உன் கிட்ட பேசறேன் காலையிலேயே ஆரம்பிச்சுடாத நான் இன்னும் நிறைய பேர் கிட்ட பேசணும் அதுக்கு என் காது கேட்கணும் அப்டின்னு சொல்லிட்டு திரும்ப தூங்கலாம்னு பார்த்தா, பிறந்த நாள் அதுவுமா என்ன திட்ட வைக்காத மரியாதையா எழுந்திருன்னு சொல்லி எங்கம்மா நிம்மதியா தூங்க விடாம சதி பண்ணிட்டாங்க :(

இப்டியே கள கட்ட ஆரம்பிச்ச என் பிறந்தநாள் தொடர்ந்து என் தோழர்கள், வலையுலக நண்பர்கள் என நிறைய பேரிடமிருந்து தொலைப்பேசியில்(காயத்ரி,சிபி,சிவா,ட்ரீம்ஸ்)தனிமெயிலில்( கீதா,ட்ரீம்ஸ்,அருண்,ராம்,ஜேகே,பரணி,சிவா),ப்ளாக் யூனியன் மெயிலில், வலைப்பக்கங்களில்(பரணி,காயத்ரி ரெண்டு பேரும் தனி பதிவு போட்டு அசத்திட்டாங்க),வாழ்த்துக்கள் சங்கத்தில என எல்லாரும் அசத்திட்டாங்க. எல்லாருக்கும் என் நன்றியை தெரிவிச்சுக்க தான் இந்த பதிவு. அதோட மட்டுமில்ல என் பிறந்தநாளுக்கு போன மாசமே தவறுதலா வாழ்த்து அனுப்பிய சுமதி அக்காவுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் ;)

சில விஷயங்களை சொல்லனும்னு அவசியமில்ல ஆனா சொல்றதுல தப்பில்ல அதனால வாழ்த்தின நண்பர்கள் அனைவருக்கும் நன்றி(யார் பெயரையாவது விட்டிருந்தால் மன்னிச்சு விட்டுருங்க:))நட்பு வானத்தில்
அன்பு மேகங்கள் சொரிந்த
அபிரிதமான நேசம் நிறைந்த வார்த்தைகளின்
அன்பு மழையில் நனைந்தேன் நான்..

என் இதய வாசலில்
பட்டுத் தெரித்த
மழைத் துளியின்
தூய்மையாய் பிரதிபலித்தது
உங்கள் நேசம்..

Monday, August 13, 2007

குறையொன்றுமில்லை..

வரவர புது பதிவு எழுதறதுக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு நமக்கு சரக்கு கம்மியாகிடுச்சா?(ஹலோ சரக்குன்னு சொன்னவுடன பக்கார்டி கனவுகளுக்கு போக வேணாம்:)) இல்ல ஆர்வம் கம்மியாகிடுச்சான்னு நம்ம நாட்டாமை தலைமையில் ஒரு பட்டிமன்றம் தான் வைக்கணும் போல :)

போன வாரம் திருப்பதி போறோம் வர்ரியான்னு என் சித்தப்பா கேட்டாரு, எனக்கோ ஒரு வாரமா மூட் அவுட், எங்கேயும் போற ஆர்வமில்ல, ஆனாலும் எங்க அம்மா வற்புறுத்திதனால வெள்ளிக்கிழமை எங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டேன். அங்க போனா தான் சொல்றாங்க சனிக்கிழமை நாலு மணிக்கே எழுந்தக்கனும்னு. ஆகா நமக்கெல்லாம் நாலு மணி நடுச்சாமம் ஆச்சே:) (நாமெல்லாம் முன் தூங்கி பின் எழும் இனமாச்சே) என்ன பண்றது? சாமி காரியமாச்சேன்னு யோசிச்சு, அப்டியும் விடாம கெஞ்சினதுல ஒரு மணி நேரம் க்ரேஸ் டைம் கொடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக போலாம்னு முடிவு பண்ணி 6 மணிக்கு கிளம்பினோம். ரெண்டு நாள் நாம இல்லாம இந்த பதிவுலகம் ஸ்தம்பிச்சு போயிடுமேன்னு ரொம்ப வருத்தத்தோட தான் கிளம்பினேன் :) 11 மணிக்கா கீழ் திருப்பதி போயாச்சு , போற வழியிலேயே சொன்னா எங்க நான் எஸ்கேப் ஆகிடுவேனோன்னு பயந்து அங்க போனவுடன, மலையடிவாரத்திலிருந்து மேல நடந்து தான் போகப்போறோம்னு சொல்லி அடுத்த குண்டை தூக்கி போட்டாரு :)

நான் உங்க பையெல்லாம் தூக்கிக்கிட்டு பஸ் புடிச்சு மேலப்போறேன், நீ சித்தியோட நடந்து வந்துருன்னு சொல்லிட்டு அவரு எஸ்கேப். நானும், சித்தியும் டிபன் கடையை முடிச்சுக்கிட்டு சுமார் 12:30 மணிக்கு நடக்க ஆரம்பிச்சோம். என் சித்தி ஏற்கனவே பல முறை மேலே கோவிலுக்கு நடந்து சென்று பழக்கமுள்ளதால் விடுவிடுவென்று ஏறத்தொடங்கினார். இதுல வேற, உஷா உனக்கு முடியலேன்னா சொல்லு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு என்னய பார்த்து சொல்றாங்க. நமக்கா அவமானமா போச்சு(!) என்னோட வயசுல பெரியவங்க அவங்களே சுறுசுறுப்பா ஏறும் போது நாம நின்னுட்டா அசிங்கம்னு அந்த வேங்கடவனை மனதில் நினைத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தேன். தொடர்ந்து ஒரு மணி நேரம் என் சித்தி எங்கேயும் அமராமல் ஏறினார், எனக்கு சிறிது நேரத்திலேயே மூச்சிரைக்க ஆரம்பித்தாலும் மனதுக்குள் 'சித்தி சீக்கிரம் எங்கேயாவது உட்காருங்க'ன்னு நினைச்சாலும் விடாம உறுதியுடன்(ஹிஹி இதை திமிருன்னு கூட சொல்லிக்கலாம்:)) ஏறினேன்.


அப்புறம் அங்கே இங்கே நின்னு இயற்கையை ரசிக்கிட்டே மூணு மணிக்கு போய் சேர்ந்தோம். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அறையில் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம்னு நினைச்சா, இல்ல 4 மணிக்கெல்லாம் கிளம்பி போய் வரிசையில் உட்கார்ந்தா தான் அங்கப்பிரதட்சணம் செய்ய டிக்கட் வாங்க முடியும்னு என் சித்தப்பா சொல்லிட்டாரு. உடனே அவசர அவசரமா கிளம்பி 8 மணிக்கு திறக்கப்போற விஜயா வங்கி கவுண்டர்ல 4 மணிக்கே போய் உட்கார்ந்தாச்சு, அங்க போய் பார்த்தா நமக்கு முன்னாடி 15, 20 பேர் இருக்காங்க. இன்னும் 4 மணிநேரம் தள்ளணுமேன்னு புத்தகத்தை விரிச்சா கண்கள் மட்டும் தான் அங்க பதியுது, புத்தி அங்க போக மாட்டேங்குது. அப்புறம் புத்தகத்தை மூடி வச்சுட்டு போற வர்ர கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு, பக்கத்துல இருக்கறவங்க கிட்ட அரட்டை அடிச்சுக்கிட்டு, இந்து கியூ எதுக்குன்னு தெலுங்குல விசாரிச்சவங்க கிட்ட தமிழ்ல பதில் சொல்லி வெறுப்பேத்திக்கிட்டு, அடுத்து நம்ம ப்ளாகுல புதுசா என்ன எழுதறதுன்னு யோசிச்சுக்கிட்டு, அப்டியே மனசுல தோன்றிய ஒரு கவிதையை நினைவுல பூட்டி வச்சுக்கிட்டு இப்டியே 4 மணிநேரத்தை ஓட்டி டிக்கெட் வாங்கிட்டோம். அப்புறம் சாப்டுட்டு அறைக்கு போக 10 மணியாகிடுச்சு.


இரவு 2 மணிக்கு அங்கப்பிரதட்சணம் என்பதால் உடனே 1 மணிக்கு எழுந்தக்கணும். நமக்கெல்லாம் தூக்கமே 1 மணிக்கு தான் வரும், அதுவும் படுத்த மூணு மணி நேரத்திலேயே எழுந்தக்கணும்னு சொன்னா எப்டி தூக்கம் வரும்? புரண்டு புரண்டு படுத்துக்கிட்டு 1 மணிக்கு எழுந்தாச்சு(!). குளத்துல போய் குளிச்சு அப்டியே ஈர உடையோட தான் கோவிலுக்கு போகணும், அங்க போய் பார்த்தா புஷ்கரணில சொட்டுத் தண்ணி இல்ல, சுத்தம் செய்ய எல்லாத்தையும் வடிச்சு எடுத்துட்டாங்க. அப்புறம் பக்கத்துல இருந்த ஒரு குளியலறை வசதி செய்யப்பட்ட இடத்தில் ஷவருக்கு அடியில போய் நின்னா ரொம்ப குளிர்ச்சியா இல்லாம அருமையா கொஞ்சம் வெப்பத்தோட தான் தண்ணீர் வந்தது. பரவாயில்ல குளிரலையேன்னு நினைச்சுக்கிட்டு வெளிய வந்தா சும்மா சிலுசிலுன்னு காத்து அடிக்க நமக்கு பல்லு டைப்படிக்க ஆரம்பிச்சுடுச்சு. இப்டியே நின்னா இன்னும் குளிரும்னு வேகமா நடந்து வரிசையில் போய் நின்னோம்.


சரியா ரெண்டு மணிக்கு திறந்து விட்டாங்க, அப்புறம் அரை மணிநேரத்துக்கு மேல வெயிட் பண்ணி மூணு மணி சுமாருக்கு அங்கப்பிரதட்சணம் செய்தோம். தரையில் விழுந்தது தான் தெரியும், அன்று கூட்டம் அதிகமென்பதால் ஒரு சுத்து முடிக்கவே 20 நிமிடங்கள் ஆகி விட்டன. பின் மறுபடி பெருமாளை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டும், அதுக்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகிவிட்டன. பல சோதனைகள், வேதனைகள் தாண்டி அவன் சந்நிதி வாசலில் நிற்கும் அந்த ஒரு சில நொடிகளில் என்ன நினைத்து வந்தேனோ அத்தனையும் மறைந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று தான் சொல்ல முடிந்தது :) இப்டியாக திடீரென்று புறப்பட்ட திருப்பதி பயணம் திவ்யமாக முடிந்தது. கதையும் முடிஞ்சுப்போச்சு :) நான் அங்கப்பிரதட்சணம் செய்தேன்னு சொன்னதுக்கு 'நீ அவ்வளவு நல்லவளா?' அப்டின்னு கேட்ட நம்ம காயத்ரி கிட்ட நான் சொன்னது 'நான் எவ்வளவு நல்லவள்னா திருப்பதி போற வழியில யோசிச்சு, அங்க போய் எழுதி வச்ச கவிதையை படிச்சு பாரு தெரியும்'. பக்தி கவிதைன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல, அங்க போய் படிச்சு தான் பாருங்களேன்

Friday, August 03, 2007

என்னத்த சொல்லி?...

என்னமோ திடீர்னு வார்த்தைகளுக்கும் கற்பனைக்கும் பஞ்சம் வந்த மாதிரி எதுவும் எழுத தோணல, தொண்டை குழியில் சிக்கிக்கொண்ட வார்த்தைகள் எழுத்தில் வரவில்லை, சில பல வேலைகள், தேவையற்ற எண்ணங்கள், தவிர்த்திருக்க கூடிய சிறு பிரச்னைகள், சின்ன சின்ன மனவருத்தங்கள் என இந்த வாரம் மேகங்கள் சூழ்ந்த வானம் போல தெளிவில்லாமல் நகர்ந்து விட்டது. நம்ம மக்களும் எதுவும் எழுதற மாதிரி தெரியல சரி வழக்கம் போல மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு தோணிச்சு அதான் இந்த பதிவு(சொல்ற விதம் தான் மொக்கையா இருக்கும், சொல்ற விஷயம் நல்ல விஷயம் அதனால தொடர்ந்து படிங்க)

சமீபத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி செய்திதாளில் படித்தேன். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஒரு வேளை அன்னமிடும் செய்கையே சிறந்தது என்று கருதும் போது நாம் இறந்தபின் நம் உறுப்புகளை தானமாக விட்டுச்செல்லும் போது சில உயிர்கள் காப்பாற்றப்படுகின்றனவே அது அதை விட சிறந்தது அல்லவா? நான் கல்லூரியில் படிக்கும் பொழுதில் உடல் உறுப்பு தானம் பற்றி ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுவரை இரத்ததானம் மட்டும் தான் கேள்விப்பட்டிருந்த நிலையில், இது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது. MOHAN FOUNDATION என்ற தன்னார்வு அமைப்பு தான் இந்த கருத்தரங்கம் நடத்தியது. பின் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் அதை முறைப்படி பதிவு செய்து DONOR CARD பெற்று கொள்ளவும் அங்கேயே ஏற்பாடு செய்தனர். நானும் பதிவு செய்ய முடிவு செய்தேன். இந்த டோனர் கார்ட் பெற்றுவிட்டால் மட்டுமே உறுப்பு தானம் செய்து விட முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால் உறுப்பு தானம் என்பது இறப்புக்கு பின் செய்வது, எனவே இறப்பிற்கு பின் இறந்தவருடைய நெருங்கிய இரத்த சொந்தங்கள் அதாவது கணவன்,மனைவி யாராவது ஆட்சேபித்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த டோனர் கார்டில் இரண்டு பேர் சாட்சியாக கையெழுத்துப்போட வேண்டும். நம் இரத்த சொந்தங்களிடன் கையெழுத்து வாங்குவது நல்லது. எனவே நான் என் பெற்றோரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். என்ன சொல்வார்களோ என்று தயங்கி தான் இதை செய்தேன், ஏனென்றால் சுமார் 7 வருடங்கள் முன் இதை பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லை,

{இதற்கிடையில் என் தோழியர் கூட்டத்தில் ஒருத்தி மட்டும் கொஞ்சம் தயங்கினாள்,

'என்னடி உங்க வீட்டுல ஏதாவது சொல்வாங்கன்னு பயப்படறியா?' அப்டின்னு நான் கேட்க,

'இல்லடி வலிக்குமேன்னு பயமா இருக்கு' என்றாள்.

'என்னது வலிக்குமா? நீ செத்தப்புறம் தான் எடுப்பாங்க'.

'ஆனாலும் பயமா இருக்குடி' என்று சொன்னாள்.

'விவிசி :):)'

இதுல அவளை கிண்டல் செய்வதா யாரும் நினைக்க வேண்டாம் அந்த நேரத்துல சிரிப்பு வந்தது அவ்ளோ தான், ஏதோ உடல் உறுப்பு தானத்துக்கு பதிவு செஞ்சுக்கிட்டதனால நான் ரொம்ப அலட்டறேன்னு நினைக்கறவங்களுக்கு நான் இரத்த தானம் செய்ய போய் பதட்டத்துல பல்ஸ் எகிறி என்னைய திருப்பி அனுப்பிட்ட கதையை சொன்னா நீங்க விவிசி :):) }

இதை நினைத்து சிரிப்பதா ? அழுவதா? என்று புரியாமல் முழித்த நாங்க, சரி உயிரோட இருக்கும் போது தான் இது வரைக்கும் உருப்படியா எதுவும் பண்ணல செத்தப்புறம் ஏதாவது விட்டுட்டு போகலாம்னு நானும், என் தோழியர் சிலரும் பதிவு செய்துக்கொண்டோம்.

ஆனால் நல்லவேளை என் பெற்றோர் எதுவும் கூறாமல் கையெழுத்து இட்டனர். அதோடு மட்டுமில்லாமல் நம் நெருங்கிய சொந்தங்களிடம் நாம் டோனார் கார்ட் வைத்திருக்கிறோம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதோடு நாம் எங்கே வெளியே சென்றாலும் அதையும் மறக்காமல் பர்ஸில் வைத்துக்கொள்ள வேண்டும். என் வீட்டில் என் பெற்றோர், சகோதரனுக்கு ஏற்கனவே சொல்லி வைத்து விட்டேன். (இனி தெரிவிக்க வேண்டியது ரங்கமணிக்கு மட்டும் தான் அதற்கான சரியான ஆளும் நேரமும் வந்தபின் ;))

இந்த உடல் உறுப்பு தானம் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளவும், சந்தேகங்கள் தீர்த்துக்கொள்ளவும் இங்கு சென்று படித்தறியவும்.

இப்போதைக்கு இதுக்கு மேல எழுத தோணல, அடுத்த வாரத்துல மீண்டும் சந்திக்கறேன். விடைபெறுவதற்கு முன் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் :)


இந்த கவிதை விரைவில் வெளிநாடு செல்லவிருக்கும் என் ஆருயிர் தோழிக்கு :) இது அன்புடன் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை அவளை மனதில் வைத்து வடித்த கவிதை :)


"நட்பென்னும் கவிதை"

நிலாச் சோற்றில்
நிலவையே சாட்சியாக்கி
எழுதப்பட்டது,
நம் நட்பென்னும் கவிதை.

நம் பாவாடை சரசரக்க,
தெருவில் புழுதி மேகங்களுக்கு நடுவில்,
மின்னலாய் விளையாடி,
சேர்த்து வைத்தோம்
நமக்கான சந்தோஷ கணங்களை.

தலையணையாய்
புத்தகங்கள் தாலாட்டுப் பாட,
ஓர் அன்னையாய்
நீ ஊட்டினாய் பாடங்களை.

பருவத்தில் மலர்ந்ததும்,
கண்களே பாலமாகி,
கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,
நமக்கே நமக்கான,விடயங்கள்.

மலர்ந்ததும்,
மலர்ந்தது
காதல்.

மணப்பந்தலில்,
கண்ணீரை அச்சாரமாக்கி,
நம் பிரிவைக்
கடன்வாங்கினேன்,
மீண்டும் மீட்டு விடவே.

இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்,
என் காட்சிகள்
என்னவோ நீயாகவே..
என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,
நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி
காத்திருக்கிறேன்
உன் வரவிற்காக.

சொல்லாய் நானும்
பொருளாய் நீயும் இருக்க,
காலமே காலனாய் வந்து
நம் உறவு பிரித்தாலும்
இனி கிடையாது,
நம் நட்பென்னும் கவிதைக்கு "."

பி.கு : அப்டியே என் கவிதை பக்கத்துல நான் புதுசா எழுதின கவிதையை படிச்சுட்டு போங்க :)

Wednesday, July 25, 2007

வாழ்த்துகிறேன் இன்று...

இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர் 'பில்லு பரணி' அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கு கூறிக்கொள்கிறேன். பரணி நீங்க ரொம்ப நாளாக எழுதி வந்தாலும் கிட்டத்தட்ட உங்க 100வது பதிவுல தான் உங்க அறிமுகம் எனக்கு கிடைச்சது.

ஆரம்பத்தில் படித்தேன் என்று கூறிக்கொள்வதற்காக மட்டுமே என் பின்னூட்டங்களை பதிய ஆரம்பித்த நான் கடந்த சில மாதங்களாக தான் தொடர்ந்து உங்க பதிவுகளை ஆழமாக(!) படித்து வருகிறேன். உங்க நகைச்சுவை உணர்வு(அதுவும் உங்க டைமிங் சென்ஸ் சூப்பர்:))அழகிய ஹைக்கூ கவிதைகள், பீலிங்க்ஸ் பதிவுகள், சமயத்தில் சில மொக்கைகள் என எல்லாமே எனக்கு பிடித்தவை தான் :) இன்னும் சொல்லப்போனால் நான் எழுதும் கவிதைகளை படித்து தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கும் , சமயத்தில் பின்னூட்ட புயலாக மாறி என் பின்னூட்ட பெட்டியை நிறைத்ததற்கும் என் நன்றிகள்.

என்னையும் குருவாக ஏற்று பணியும் அன்பு சிஷ்யனே தொடரட்டும் உன் பதிவெழுதும் பணி. இன்று மட்டுமல்லாமல்,என்றும் பல சிறப்புகள் பெற்று நீ வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
"இன்னும் வார்த்தை தேடுகின்றேன் உன்னை வாழ்த்துவதற்கு! "

ம்மாவின் அன்பும்
ன்றோரின் நட்பும்
தழோரத்து புன்னகையும்
தல் குணமும்
ண்மையான மனமும்
ரறியும் பெருமையும்
ன்றும் மகிழ்வும்
ற்றமிகு வாழ்வும்
யமில்லா வாக்கும்
ருமித்த கருத்தும்
கோவென்ற புகழும்
ஒளவையின் சொல்லும்

(என்றும் உன்னோடு திகழ)
'ஃ' போல்,
ஒன்று இரண்டாகி
பின் மூன்றாகவும்
வாழ்த்துக்கள் :)
உன் பழைய பதிவுகளை புரட்டிப் பார்த்ததில் சில வரிகளை மேற்கோள் காட்டி "I want a life like that….Is that a dream?" என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தாய். "கறுப்பா சிவப்பா தெரியவில்லை கவலைகள் இது வரை முளைத்ததில்லை" என்ற பாடல் வரிகளின் படி, நீ நினைக்கும் அந்த வாழ்க்கை உனக்கு கண்டிப்பாக அமைய கடவுளை வேண்டுகிறேன் பரணி :) இதுவே உன் பிறந்த நாளுக்கு என் எளிய பரிசு :)

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"
Monday, July 23, 2007

தெய்வத்தின் தரிசனம் !

ரொம்ப நாளா எழுதறேன்னு சொல்லி இழுத்தடிச்சு இனி ஏமாத்த முடியாதுன்னு தெரிஞ்சுப்போச்சு :) காயத்ரி வேற அவ வலைப்பக்கத்துல என் கவிதைய போட்டு எனக்கு ஓசில வெளம்பரம் கொடுத்துட்டா, அப்புறமும் அவ கொடுத்த கவிதை(!) டேகை எழுதாம விட்டா அது கேவலமா போயிடும், அதனால் இதோ, நம்ம தத்துவ ஞானி தொடங்கி வைத்த "தேவதை கனவுகள்", அடுத்த அத்தியாயமாய் காயத்ரியிடம் "மன்னவன் வந்தானடி தோழி" என மலர்ந்து இங்கு "தெய்வத்தின் தரிசனம்" எனத் தொடர்கிறது. இதையடுத்து எங்கு இக்கவிதை மலரப்போகிறது என பிறகு பார்க்கலாம் :)இப்ப கவிதைக்கு போகலாமா? :)

(இது காயத்ரி எழுதிய கவிதையின்(!) இறுதி வரிகள்)

இன்று மாலையும்
கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்
முக்கியமான விஷயம்
பேச வேண்டும் என்று
அது என்னவாக இருக்கும்
என்று அறிந்திருந்தாலும்
ஆவலுடன் கிளம்புகிறேன்!!!(இனி என் கற்பனை!)இதுவரை
ஒரு நிமிடம் தாண்டி
என் முகம் தங்கியதில்லை
நிலைக்கண்ணாடியில்;

இன்றோ கணக்கில்லா கணங்களாய்
நான் அழகு பார்க்க,
குத்தகைக்கு எடுத்தேனோ என்று
என் நிலைக்கண்ணாடியும் வியக்க,
இது வரை உணர்ந்திராத
நானறியா என் நாணத்தை
பிம்பத்தில் கண்டு
நானும் வியந்தேன்!

பெண்மை பூரித்து
என் மெய்யில் கலந்திருந்தும்,
ஆண்மையும் வியக்கும்
ஆண்களை கண்டிருந்தும்,
சலனிக்காத என் மனம்
சட்டென கலைந்தது
உன் தரிசனத்தில்;

தேவதைகள் தரிசனம்
கனவில் மட்டும் தான்,
ஆனால்
நித்தமும் உன் தரிசனம்
நிஜத்தில் என் கிழக்கில்
ஆதித்யனாய்!

புதைந்திருந்த ஆசை,
வரைந்திருந்த கற்பனை,
நிறைந்திருந்த அன்பு,
இவையாவையும் விட
மிகுந்திருந்த என் கர்வம்
எல்லாமாக சேர்த்து வைத்தேன்
என்றாவது உன்னிடம் சமர்ப்பிக்க!

உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்,
ஆனால் உன்னை இன்னும்
நெருங்க முடியவில்லை;

உன் விழிகளால்
என் கர்வம் உடைத்தவனே
இனி எந்நாளிலும் இவ்விழிகள்
எனக்கு மட்டுமே!

இல்லை! இல்லை!
என்று கூறி வந்த என்னை
ஆம்!ஆம்!
எனக் கூற வைத்தவனே,
என் நிலை மறந்து
என் மெய் துறந்து
காதலாகி
கசிந்துருகி
நான் கேட்பதெல்லாம்,
"தேக்கி வைத்த அன்பின்
கனந்தாங்காமல் விம்மும்
என் காதலை தாங்கிக்கொள்ள
உன் தோள்கள் கிடைக்குமா?"

கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க!
தெய்வத்தை தேடிச்சென்ற வெண்மதிக்கு(இது தலைவிக்கு நான் வைத்த பெயர்:))கிடைத்தது வரமா? சாபமா? விடை அறிய யாராவது இந்த கவிதை சங்கிலியை தொடர வேண்டும், அதற்கு சரியான தகுதியுடையவர் என நான் கருதுவது எனது அருமை சிஷ்யன், மஞ்சக்காட்டு மைனாவை தேடி அலையும் பில்லு பரணி (இது குருவின் ஆனை சீசீ ஆணை:) சாரி பிரியா உன் நினைவுல ஆனைன்னு சொல்லிட்டேன் ஹிஹி)