Saturday, January 27, 2007

எங்கயும் போகல ..:)

தலைவி காணாமல் போனவர்கள் லிஸ்டுல நம்மளையும் சேர்த்துட்டதனால, நான் எங்கயும் காணாம போயிடுல தொடர்ந்து எழுதி உங்களையெல்லாம் அப்டியே மகிழ்வித்து என் சேவையை தொடர்வேன் என தெரிவிக்கவே இந்த இடைக்கால பதிவு:) அது வரைக்கும் என் கவிதை பக்கத்தில் புதியதாக எழுதிய கவிதையை படித்து வழக்கம் போல் கல்லெறியுமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்:)

Sunday, January 14, 2007

இன்புறுவ ரெம்பாவாய்!


இன்றுடன் மார்கழி மாதம் நிறைவடைகிறது, இந்த மாதம் முழுவதும் திருப்பாவை பாசுரங்களுக்கு நான் எனக்கு தெரிந்த வகையில் எழுதிய விளக்கத்தை படித்ததோடு மட்டுமல்லாமல் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி. இந்த முறை நான் எழுதியது பாடல்களுக்கான நேரடி விளக்கம் மட்டுமே, ஆனால் ஒவ்வொரு பாடலுக்கும் உண்மையான உள்ளர்த்தம் நிறைய உள்ளது, அதை முழுவதும் புரிந்துக் கொண்டு எழுதுவது என்பது கொஞ்சம் கடினம் தான், அதற்கான அவகாசமும்,புரிதலும் எனக்கு இன்னும் வரவில்லை. அடுத்த முறை அதை முயற்சிக்கிறேன். பாடல்களின் விளக்கம் எழுத எனக்கு மிகவும் உதவிய புத்தகங்கள் திரு டி.இராஜகோபாலன் எழுதிய 'ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை(விளக்க உரையுடன்)' மற்றும் எழுத்தாளர் திரு சுஜாதா எழுதிய 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்'. திரு.சுஜாதாவின் புத்தகத்தில் ஆண்டாளை பற்றி கூறியுள்ள என்னை கவர்ந்த சில வரிகள்,

"இந்த முப்பது பாடல்களையும் நோக்கும்போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும் கண்ணனின் உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புகிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு பெண் தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற புது நோக்கில் அவரை ஒரு புரட்சிப் பெண்ணாகப் பார்க்க முடிகிறது."

இனி திருப்பாவையின் இறுதி பாடலையும் பார்ப்போம்,

திருப்பாவை பாடல் - 30 (14/01/2007)

"வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
."

பொருள்:

பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை , சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை(பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின்(ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்.

நாளை தை மாதம் பிறக்கிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனக் கூறுவர் அதன் படி நினைத்த காரியம் நிறைவேற ஆண்டவனின் அருளும், நிறைவேறாவிட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தையும் அனைவரும் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்! :)

" அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

Thursday, January 11, 2007

யாருக்கு வேணும் சர்க்கரை பொங்கல்? :) திருப்பாவை பாடல் (27-29)

என்னடா இது பொங்கலே இன்னும் வரல அதுக்குள்ள சர்க்கரை பொங்கலை பற்றி சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? மார்கழி மாதம் 27வது நாளான இன்று கூடாரவல்லி என்று சொல்வர். அதாவது இன்று மார்கழி நோன்பிருப்பவர்கள் பாலில் அரிசி சேர்த்து செய்யப்படும் அக்காரவடிசல் என்ற இனிப்பு பதார்த்தத்தை செய்து கடவுளுக்கு படைப்பர். எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து நைவேத்தியம் செய்வோம்.திருப்பாவையின் முதல் 5 பாசுரங்கள் மார்கழி நோன்பை பற்றியும் அதை எப்படி மேற்கொள்வது என்பதையும் சொல்கிறது. 6-15 பாடல்களில் தன் தோழிகளை எழுப்புகின்ற ஆண்டாள், 16வது பாடலில் கண்ணின் வீட்டிற்கு வந்து வாயில் காப்பானை எழுப்புகிறாள், தொடர்ந்து வரும் பாடல்களில் நந்தகோபன்,யசோதை,பலராமன்,நப்பின்னை, அவள் மார்பின் மீது படுத்துறங்கும் கண்ணனையும் எழுப்புகிறாள். 23வது பாடலில் கண்ணன் எழுந்திருப்பதையும், 24இல் அவன் அவதாரங்களை புகழ்ந்தும், 27வது பாடலான இந்த பாசுரத்தில் 'மார்கழி நோன்பு முடியும் தருவாயில் உள்ளது, உன்னை நாங்கள் பாடி உன் அருளை வேண்டுகிறோம், இத்தனை நாள் ஆபரணங்கள் அணியாமல், கண்ணுக்கு மை எழுதாமல், மலர் சூடாமல், நெய், பால் ஆகியவை உண்ணாமல் பாவை நோன்பை மேற்கொண்டு உன் புகழ் பாடினோம், நீ எங்களுக்கு அருள் செய்து நாங்கள் வேண்டுவன தா என்று சொல்கிறாள்'.எங்கள் வீட்டிலும் இன்று சர்க்கரை பொங்கல் செய்தார்கள். நன்றாக முழங்கை நெய் வழிய சுடச்சுட சர்க்கரை பொங்கல் நாங்க சாப்டாச்சு, உங்களுக்காக இதோ இங்கேயும் தருகிறேன், நல்லா சாப்பிட்டு என்சாய் பண்ணுங்க:)திருப்பாவை பாடல் - 27 (11/01/2007)

"கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகைவரை வெல்லக்கூடிய வலிமையுடைய கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடிப் புகழ்ந்து உன் அருளை பெற வேண்டியதால் நாங்கள் பெறும் சன்மானங்கள் யாதெனில்,சூடகம்(வளை), தோள்வளைகள்(வங்கி),தோடுகள்,பூவின் வடிவில் இருக்கும் ஆபரணங்கள், காலில் அணியப்படும் ஆபரணங்கள் ஆகியவை. அதோடு மட்டுமல்லாமல் புத்தம் புது ஆடைகள் அணிந்து, முழங்கை வரை நெய் வழியும் அளவிற்கு பால் சோறும் உள்ளம் குளிர உண்டு மகிழ்வோம்.


திருப்பாவை பாடல் - 28 (12/01/2007)

"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பசுக்களை மேய்த்துக் கொண்டு அதன் பின்னே சென்று காடுகளில் நாங்கள் ஒன்று கூடி உண்போம்.அதிகம் அறிவை பெறாத ஆயர்குலத்தை சேர்ந்தவர்களான எங்களுள் ஒருவனாக நீ பிறந்த புண்ணியம் செய்தவர்கள் நாங்கள். குறை ஒன்றுமில்லாத கோவிந்தனே நமக்குள் இருக்கும் இந்த உறவானது உன்னாலும், எங்களாலும் என்றும் ஒழிக்க முடியாதது. ஒன்றும் அறியாத பிள்ளைகளான நாங்கள் அன்பினால் உன்னை சிறு பெயரிட்டு அழைத்தால் எங்கள் மீது கோபம் கொள்ளாதே இறைவனே! நாங்கள் வேண்டும் பறை எங்களுக்கு அளிப்பாயாக.திருப்பாவை பாடல் - 29 (13/01/2007)

"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இந்த அதிகாலைப் பொழுதில் இங்கு வந்து உன்னை வணங்கி உன் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாங்கள் போற்றுவதன் காரணத்தை கேட்பாயாக! மாடு மேய்க்கும் ஆயர் குலத்தில பிறந்த நீ, நாங்கள் செய்யும் சிறு தொண்டுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வாயாக! கோவிந்தனே நாங்கள் உன்னிடம் அருள் வேண்டி இன்று மட்டும் வரவில்லை இனி என்றும், ஏழேழு பிறவிக்கும் உன்னோடு உறவு கொள்வோம், உனக்கு மட்டும் நாங்கள் பணி செய்வோம், இதை தவிர எங்கள் மற்ற விருப்பங்களை நீ மாற்றி விடு.

Friday, January 05, 2007

சொல்லிய பொய்யும் சொல்லாத உண்மையும்

நினையாமலே எழுகின்றன
உன் நினைவுகள்
உண்மையின் வடிவங்களாய்.

கண்களை இறுக மூடியும்
இமைகளைக் கிழித்துக் கொண்டு
புகுகின்றன காட்சிகள்,
நான் மறுக்க முடியாத
நிகழ்வுகளாய்.

என் கண்களின் வழி
என்னுள் புகுந்து,
என் கைப்பிடித்து,
என் வாழ்க்'கை'யில் இணைய
விழைவதாய் சொன்னாயே!

அன்று
நான் சொல்லாமல் விட்ட உண்மையை
இன்று
நித்தமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
கேட்க தான் நீயில்லை!

சொல்லாத உண்மை
உள்ளுக்குள் கனத்தாலும்,
சுகமான சுமையென சுமந்து விடுவேன்
இப்பிறவியில் மட்டும்,
இனி வரப் போகும் பிறவிகளில்
உண்மையே உரைப்பதென்ற
முடிவுடன்.

திருப்பாவை பாடல் - (18-26)


திருப்பாவை பாடல் - 18 (02/01/2007)

"உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்.
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:

மதநீர் பெருகும் யானையை போல் வலிமையும் பகைவரை கண்டு அஞ்சி ஓடாத வலிமையான தோள்களையும் உடையவனான நந்தகோபனின் மருமகள் நப்பின்னையே, நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே கதவை திற! பொழுது விடிந்து நாற்புறமும் கோழிகள் கூவுகின்றன, குருக்கத்திக் கொடிகளில்(மாதவி பந்தல்) மீது குயில்கள் அமர்ந்து கூவுவதைக் கேள்!
பந்து பொருந்திய விரல்களை உடையவளே நாங்கள் கண்ணனின் பேர் பாட வந்துள்ளோம். உன் தோள் வளைகள் ஒலி எழுப்ப நீ எழுந்து வந்து, உன் செந்தாமரை கையால் கதவை திறவாய்!


திருப்பாவை பாடல் - 19 (03/01/2007)

"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்"

பொருள்:

குத்து விளக்குகள் நாற்புறமும் சுடர் விட்டெரிய யானைதந்தத்தால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலில், மென்மையான சயனத்தில்(படுக்கையில்), கொத்து கொத்தாக பூக்களை கூந்தலில் சூடிக்கொண்டு உறங்குகின்ற நப்பினையின் மார்பில் தலை வைத்து படுத்துறங்கும் கண்ணா நீ வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசு! மை பூசியுள்ள அழகிய கண்களை உடைய நப்பின்னையே! அவனை விட்டு சிறிது நேரமும் பிரிய மனமில்லாததால் எவ்வளவு நேரமாகியும் கண்ணனை துயிலெழுப்பாமல் இருக்கிறாயே, இது உன் குணத்திற்கு தகுமோ?

(முந்திய பாடலில் நப்பின்னையை எழுப்பிவிட்டு இப்பாடலில் அவள் மேல் படுத்துறங்கும் கண்ணனை எழுப்புகின்றனர்)


திருப்பாவை பாடல் - 20 (04/01/2007)

"முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்"

பொருள்:


முப்பத்து மூன்று தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பே அவர்கள் நினைத்த இடத்திற்கு சென்று அவர்களின் நடுக்கத்தை போக்கும் வலிமையுடையவனே! உன் உறக்கத்திலிருந்து எழுந்திராய்! தன்னிடம் அடைக்கலம் என்று வந்தோரை காப்பவனும்,வலிமையுடையவனும் அவர்களின் பகைவருக்கு துன்பம் கொடுப்பவனுமான தூய்மையானவனே எழுந்திராய்! கலசம் போன்ற மென்மையான முலைகளையும், பவளம் போன்ற சிவந்த வாயினையும், அழகிய சிறு இடையினையும் கொண்ட நங்கை நப்பின்னையே! திருமகளே! நீ துயிலெழுந்து வந்து எங்கள் நோன்புக்கு தேவையான விசிறியும்(உக்கமும்),கண்ணாடியும்(தட்டொளி) கொடுத்து உன் மணாளனான கண்ணனும் நாங்களும் நீராட வழி செய்வாயாக!திருப்பாவை பாடல் - 21 (05/01/2007)

"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்ற மாய்நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்"

பொருள்:

கலங்களில்(பாத்திரங்களில்)கறந்த பாலானது பொங்கி வழியும் அளவிற்கு இடைவிடாது பால் சுரக்கும் நல்ல வளமை மிக்க பசுக்களை உடைய நந்தகோபருடைய மகனே! பொழுது விடிந்ததை அறிவாயாக! வலிமைமிக்கவனே! அனைவருக்கும் பெரியவனே! இவ்வுலகில் தோற்றமளிக்கும் ஒளி படைத்தவனே! துயிலெழு! பகைவர்கள் உன் வலிமையை அறிந்து தங்கள் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து உன் வாசலில் வந்து உன் திருவடிகளை பணிவது போல் நாங்களும் உன்னை போற்றி புகழ வந்துள்ளோம்.


திருப்பாவை பாடல் - 22 (06/01/2007)


"அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல்
நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இந்த அகன்ற பூமியை ஆண்ட அரசர்கள் எல்லாரும் தங்கள் அகங்காரத்தையெல்லாம் விட்டு உன் கட்டிலின் அடியில் வந்து காத்திருப்பது போல் நாங்களும் உன் அன்பை வேண்டி வந்து காத்திருக்கிறோம். சலங்கையின் மணி போல, பாதி மலர்ந்த தாமரைப் பூப்போன்ற உன் அழகிய சிவந்த கண்கள் சிறிது சிறிதாக திறந்து எங்கள் மீது உன் பார்வை விழக்கூடாதா? சந்திரனும், சூரியனும் ஒரே சமயத்தில் தோன்றுவது போல் உன் அழகிய இரண்டு கண்களாலே எங்களை நோக்கினால் நாங்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடாதோ?


திருப்பாவை பாடல் - 23 (07/01/2007)

"மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத் திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
."

பொருள்:

மழைக்காலத்தில் மலைக்குகையில் தன் துணையோடு உறங்கி கிடந்த சிங்கமானது விழித்துக் கொண்டு தன் எதிரிகளை அழிக்க, கண்களில் தீப்பொறி பறக்க, பிடரி மயிர் சிலிர்த்துக் கொள்ள, உடலை உதறி நிமிர்ந்து கர்ஜனையிட்டுக் கொண்டே குகையிலிருந்து வெளி வருவது போல, காயாம் பூ போன்ற நிறமுடைய நீயும் உன் கோயிலிலிருந்து வெளியே வந்து இங்கு எழுந்தருளி அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் இங்கு வந்துள்ள காரணத்தை கேட்டு எங்களுக்கு அருள் செய்வாயாக!


திருப்பாவை பாடல் - 24 (08/01/2007)

"அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று படைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மாபலி சக்ரவர்த்தியிடம் இரந்து பெற்று அன்று இந்த உலகத்தையே அளந்த திருவடிகளை போற்றுகின்றோம், சீதையை மீட்க இலங்கைக்கு சென்று இராவணனை வென்ற உன் தோள் வலிமையை போற்றுகின்றோம், சகடாசுரனை உதைத்து அழித்த உன் புகழை போற்றுகின்றோம், கன்று வடிவில் வந்த அசுரனை எறிதடியாய் கொண்டு கபித்தாசுரன் என்னும் அசுரனின் மீதெறிந்து இருவரையும் அழித்தவனே உன் திருவடிகளை போற்றுகின்றோம், இந்திரனின் கோபத்திலிருந்து இடையர்களை காப்பாற்ற கோவர்த்தனகிரி மலையை குடையாய் பிடித்தவனே உன் குணத்தைப் போற்றுகின்றோம், பகைவர்களையெல்லாம் வெல்லும் உன் கையில் உள்ள வேலை போற்றுகின்றோம். இவ்விதம் உன் புகழை என்றென்றும் பாடி உன்னிடம் அருள் பெற இன்று வந்துள்ள எங்களுக்கு அருள் புரிவாயாக!


திருப்பாவை பாடல் - 25 (09/01/2007)

"ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

தேவகிக்கு மகனாய் அவதரித்து பின் அதே இரவில் யசோதையின் மகனாய் மாறி கம்சனின் கண்ணில் படாமல் வளர்ந்து வந்தவனே! தனக்கு தெரியாமல் வளர்ந்து வருவதை அறிந்ததும் பின் நடக்க போவதை அறியாமல் உனக்கு தீங்கு நினைத்த கம்சனின் நினைப்பை தவறாக்கி அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! உன்னை பிரார்த்தித்து வந்த எங்களின் குறிக்கோளை நிறைவேற்றினால் உன் பிராட்டியான லட்சுமி ஆசைப்படும் செல்வத்தையும், அதை காக்கவல்ல உன் வீரியத்தையும் நாங்கள் பாடி எங்கள் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்!


திருப்பாவை பாடல் - 26 (10/01/2007)

"மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அடியாருக்கு எளியவனான திருமாலே! நீலமணி போன்ற நிறமுடையவனே! மார்கழி நீராடி பாவை நோன்பை மேற்கொள்ள நாங்கள் வந்துள்ளோம், அதற்கு எங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாதெனில், உலகத்தையெல்லாம் நடுங்கச்செய்யும் ஒலி உடையதும், பால் வண்ணமும் கொண்ட உன் பாஞ்சசன்னியத்தை போன்ற சங்குகளும், பெரியதான வாத்தியங்களும்(பறை), பல்லாண்டு பாடுபவர்களும், மங்கல தீபங்களும், கொடிகளும், பல்லக்கு,தேர் போன்றவை மேலே கட்டியிருக்கும் பட்டுத்துணிகளும்(விதானம்) ஆகியவையே. ஊழிக் காலத்தில் ஆலிலை மீது பள்ளிக் கொள்பவனே! இவற்றை நீ எங்களுக்கு தந்துருள வேண்டுகிறோம்.