Tuesday, February 27, 2007

எச்சரிக்கை: இது ஒரு மொக்கை பதிவு :)

ப்ளாக்குல வாங்குற ஆப்பு போதாதுன்னு நமக்கு ஆப்பு வைக்கறதுக்குன்னே பல பேரு நாட்டுல திரியறாங்க. நேத்து என்னாச்சு நம்ம ப்ளாட் வாண்டு ஒன்னு எங்க வீட்டுக்கு வந்துச்சு. இந்த மேடம் எப்படின்னா வாய தொறந்தா நல்ல நல்ல வார்த்தையா தான் பேசுவாங்க(அதாவது, பன்னி,நாயே,எருமைமாடு)நல்லா தான்யா புள்ளைய வளர்க்குறீங்க, டிஸ்கவரி சேனல் மட்டும் தான் காட்டுவீங்களோ? ஆனா என்னைய கண்டா அதுக்கு கொஞ்சம் பயம்,நாம தான் ரெம்ப ரீஜண்டாச்சே (அது ஒன்னும் இல்ல, ஒரு நாள் சுத்தும்முத்தும் பார்த்து யாரும் இல்லேன்னு நோட் பண்ணிக்கிட்டு அது வாயில பட்டுன்னு போட்டுட்டேன் அதிலிருந்து என்னைய பார்த்தா மட்டும் அதோட வாய் தானா அக்கான்னு கூப்டும்) நம்ம வீட்டுக்குள்ள வரும் போது மட்டும் வாலை சுருட்டி வச்சுக்கிடும் :)நேத்து வரும்போதே மேடம் ரொம்ப கோவமா வந்தாங்க, அவங்க வீட்டு உடைஞ்சு போன சைக்கிளை பக்கத்து வீட்டு வாண்டு தொட்டுடுச்சாம் அதுக்கு இந்தம்மா அவனை ரெண்டு சாத்து சாத்திடுச்சு. நம்ம வாய் சும்மா இருக்குமா, ரொம்ப நல்லவ மாதிரி 'அச்சச்சோ அப்டியெல்லாம் பண்ணக்கூடாது செல்லம், அவன் பாவம் இல்ல? அப்புறம் எல்லாரும் உன்ன பேட் கேர்ள்னு சொல்லுவாங்க, பாரு அக்கா அப்டியெல்லாம் யாரையாவது அடிக்கறேனா அதான் எல்லாரும் என்ன குட் கேர்ள்னு சொல்றாங்க' அப்டின்னு ஒரு பிட்ட போட்டேன்.நம்ம நல்ல நேரம் பாருங்க விதி பின்னாடியிலிருந்து கைக்கொட்டி சிரிச்சது. அப்டியே ஸ்லோமோஷன்ல திரும்பி பார்த்தா என்னோட மாமி நிக்கறாங்க. 'வாண்டுக்கு அட்வைஸ் பண்றியே கொஞ்சம் உன் ப்ளாஷ்பேக்கை ஓட்டி பாரும்மா' அப்டின்னு சிவாஜி கணக்கா டயலாக் விட்டாங்க. சொன்னதோட நிக்காம அவங்களே கொசுவர்த்தி சுருளை பத்தவும் வச்சுட்டாங்க, நானும் ஊதி ஊதி பார்த்தேன், ஹும்.. முடியல, சரி நம்ம பொழப்பு இன்னிக்கு அவ்ளோ தான்னு ஓரமா போய் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இப்ப ப்ளாஷ்பேக், ஓகே ஷ்டார்ட் மீஜிக்:)சின்ன வயசுல அதாவது எனக்கு மூணு வயசு இருக்கும் போது என் தம்பி பொறந்தான், அதனால எங்கம்மா அவங்கம்மா வீட்டுல இருந்தாங்க,நான் எங்க வீட்டுல தான் இருந்தேன். அப்ப ஒவ்வொரு வார இறுதியிலும் எங்கம்மாவை பார்க்க பாட்டி வீட்டுக்கு போவேன்.அப்ப நான் ரொம்ப சமத்து(நிறுத்து நிறுத்து யார் கிட்ட ரீல வுடற?)சரி சரி நாம அந்த ஏரியால நுழைஞ்சாலே எங்க பாட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க அப்டியே சுனாமியம்மனை கண்ட மாதிரி நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க. ஏன்னா அவங்க வீட்டுல நிஜமாவே சமத்து பொண்ணு ஒண்ணு இருந்தது.ஏற்கனவே வீட்டுல புது வரவால நான் கொஞ்சம் கடுப்புல இருந்தேன். பின்ன எல்லாரும் திடீர்னு நான் ஒருத்தி இருக்கேன்னு மறந்து என் தம்பியை கொஞ்ச ஆரம்பிச்சாங்க, எல்லா மொத பசங்களுக்கும் வர்ர கோவம் எனக்கும் வரும், என்ன கொஞ்சம் அதிகம். என் தம்பி தூங்குற நேரமா பார்த்து அவன கிள்ளி வுட்டுட்டு வந்துடுவேன், அவன் அழும்போது அப்டியே கவலப்படற மாதிரி ஆக்ட் வுடுவேன்(நமக்கு இதெல்லாம் சொல்லி தெரியணுமா எல்லாம் தானா வர்ரது தான்)இதெல்லாம் கூட நான் நினைவு தெரிஞ்சு செஞ்சதில்லை, சின்ன வயசுல குழந்தைத்தனமா செஞ்சது(ஹிஹி அப்டி சொல்லி சமாளிக்க வேண்டியது தான்).இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இப்ப என் தம்பி என்னை வெறுப்பேத்தறதை முழு நேர தொழிலாகவும், அப்பப்ப அவன் ஆபிச்ல ஆணி புடுங்கறதை பகுதி நேர தொழிலாகவும் வச்சுக்கிட்டு இருக்கான்:)அட சொல்ல வந்த மேட்டரை வுட்டுட்டேன் பாருங்க, நம்ம பக்கத்து வீட்டு சமத்து பொண்ணு பத்தி சொன்னேன் இல்ல, அது என்னை அவங்க தெருக்கோடில பார்த்தாலே அலற ஆரம்பிச்சுடும். அவங்கம்மா முன்னாடியே என் மாமி கிட்ட சொல்லி வச்சுடுவாங்க 'உங்க நாத்தனார் பொண்ணு வந்ததுன்னா சொல்லிடுங்க, நான் என் பொண்ணை வீட்டுக்குள்ளேயே வச்சுக்கிறேன்'. சரி எதுக்கு தான் இவ்ளோ ஆர்ப்பாட்டம்னு கேட்கறீங்களா? அது ஒன்னும் இல்லீங்க அவங்க வீட்டு பொண்ணு மேல என்ன விரோதமோ தெரியலை,போன ஜென்மத்து பகையோ தெரியல, ஒண்ணுமே செய்ய மாட்டேன்,பேச கூட மாட்டேன் நேரா போய் கன்னத்துல பட்டுன்னு ஒரு அறை விடுவேனாம்,அவ்ளோ தான் அவ அலறி அடிச்சுக்கிட்டு ஓடி போயிடுவா.இதுல காமெடி என்னன்னா இதெல்லாம் எனக்கே நினைவுல இல்ல, ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் இந்த சம்பவத்தை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சொல்லலேன்னா எங்க சொந்தக்காரங்களுக்கு ஜென்ம சாபல்யமே கிடைக்காதுங்குற மாதிரி எல்லா வாண்டுகள் கிட்டயும் சொல்லி என்னைய பழிவாங்கிடுவாங்க.இந்த கதையை கேட்டுக்கிட்டு இருந்த எங்க ப்ளாட் வாண்டுக்கு என்ன புரிஞ்சுதோ தெரியல, அதிலிருந்து என்னய பார்த்து நீயெல்லாம் அட்வைஸ் பண்ண வந்துட்டங்குற ரேஞ்சுக்கு ஒரு லுக் வுடும், ஆனா வாய் மேல போட்டதை நினைவுல வச்சுக்கிட்டு எதுவும் சொல்லாம போயிடும்.
இப்டி நாம சின்ன வயசுல அறியாத பருவத்துல தெரியாம(!)பண்ணின டகால்டி வேலையெல்லாம் வெளிய தெரியாம நாம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணனும்னா இனிமே ஒரு பழமொழிய நினைவுல வச்சுக்கணும், 'பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பேசு, இரவுல அது கூட பேசாத' :)
சரி இதெல்லாம் ஒரு மேட்டர் இதையும் ஒரு பதிவா போடறியான்னு கேட்கறவுங்களுக்கு சொல்லிக்கறேன் எத்தன நாளைக்கு தான் சீரியஸ் பதிவா போடறது? அதான் இந்த மொக்கை, அடுத்த பதிவு ஒரு சீரியஸ் மேட்டரோட ஆம்புலன்ஸுல காத்துக்கிட்டு இருக்கு, அடுத்த வாரம் அதை அட்மிட் பண்ணிக்கிடலாம், இப்போதைக்கு மீ த எஸ்கேப், வர்ட்டா?:)

Monday, February 19, 2007

படித்ததில் பிடித்தது

வானம் கறுத்து
வளவளன்னு பெய்த மழை
வாய்க்கால் வழி ஓடி
ஊரு கண்மாய் நிறைஞ்சிடுச்சு..
ஊத்துத் தண்ணி பொங்கிடுச்சு..
யாரு கண்ணு பட்டுச்சோ
ஊரு ரெண்டாச்சு
ஊறும் தண்ணி பகையாச்சு
வானத்து மழைக்காக
வழக்கும் வந்திருச்சு...
வெட்டு குத்துப் பகையாகி,
செயிலிலே நாலு பேரு
சென்பாந்தரம் ஆறு பேரு
வாய்க்கால் வந்திடுச்சு..
வாய்ப் பேச்சு சுருங்கிடுச்சு..
யாருக்கு யார் உறவோ
யார் மனுஷர் யாருக்கோ
மனசு வறண்டாச்சு..
மனுஷ குலம் வெடிப்பாச்சு..

பி.கு: பிரபஞ்சனின் 'முதல் மழைத்துளி' புத்தகத்தில் படித்தது,பிடித்தது :) இதில் 'சென்பாந்தரம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை,யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்:)சில மாதங்களுக்கு முன் தமிழ்சங்கத்தில் நடந்த கவிதை போட்டியில் நான் கலந்துக் கொண்டதையும், அந்த கவிதைகளையும் இங்கு பதிவு செய்திருந்தேன்.அந்த போட்டியில் நான் எழுதிய கவிதைக்கு இரண்டாம் இடம் அறிவித்திருந்தார்கள். அதை முன்பே அறிவித்துவிட்டார்கள், நான் தான் அதை வெளிப்படுத்தவில்லை(சில பேருக்கு மட்டும் தெரியும்) இப்பொழுது இரண்டாம் இடம் வந்ததிற்காக இந்த மெடல் கொடுத்திருக்கிறார்கள் :) தமிழ்சங்கமும், நண்பர்களும் கொடுத்த உற்சாகம் தான் இந்த பரிசு கிடைக்க காரணம், எனவே அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் :)

பரிசுக்குரிய கவிதை இங்கே

Wednesday, February 14, 2007

காதலும் கடைசரக்காயிற்று..

இன்னும் 10 நாள் தான்.. ஒரு வாரம் தான்.. 7,6,5...... இதெல்லாம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விடறதுக்கு கவுண்டவுன் இல்ல, இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதன்முறையாக எந்த தியேட்டரிலும் ஓடாத படத்தை போடறதுக்கும், விக்காத பொருட்களையெல்லாம் ஏமாந்தவங்க தலையில கட்றதுக்கும் புதுசா ஒரு வழி கிடைச்சுருக்கே, காதலர் தினம் அதுக்கான கவுண்டவுன் தான் :)

காதல் என்ற வார்த்தையை எழுதக்கூட தெரியாத சிறு குழந்தைகள் கூட ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று சொல்லுகிற அளவு காதல் எங்கும் பரவி கிடக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை கொண்டாடப்படாத ஒன்று திடீரென்று எங்கு பார்த்தாலும் வியாபிக்க காரணம் என்ன? நம்ம ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனவுடன தொடர்ந்து சுஷ்மிதா சென்,லாரா தத்தா என்று நம் நாட்டு பெண்களே ப்ரபஞ்ச அழகி, உலக அழகி, என்று கன்னாபின்னாவென்று பட்டங்களை தொடர்ந்து வென்றதன் காரணம் என்ன தெரியுமா? நம் நாட்டில் அழகு சாதனங்களை விற்பதற்கு தான். அது மாதிரி இப்ப நம் நாட்டு வியாபாரிகளே காதலர் தினத்தை முன்னிட்டு தங்களுடைய பொருட்கள் இளைஞர்களை கவர பல உத்திகளில் ஈடுபடுகின்றனர்.

விஞ்ஞானத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசுரத்தனமான வளர்ச்சியாலும்,உலக மயமாக்கல்(globalisation) போன்றவற்றின் மூலமாகவும் மேற்கத்திய கலாச்சாரம் இங்கு பரவுவதை எவ்விதத்திலும் தடுக்க முடியாது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல நம் நாட்டு கலாச்சாரத்தில் அவர்கள் ஈடுபாடு கொள்வது போல தான் நாமும் அவர்களின் கலாச்சாரத்தில் ஈடுபடுகிறோம். இன்னும் சொல்லப்போனால் நம் சங்ககால இலக்கியங்களில் கூட காதல் தான் வெகு அழகாக சித்தரிக்கப்படுகின்றது. எனவே தமிழ் கலாசார சீரழிவு என்று சொல்லிக் கொண்டு காதலர் தினத்தை எதிர்ப்பது அபத்தம் என்பதே என் கருத்து. ஏனென்றால் காதலை கொண்டாடுவதினாலேயே அது தவறான ஒரு விஷயம் ஆகாது. அதை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பது தான் முக்கியம். கலாச்சாரம் என்பதை விட தனி மனித ஒழுக்கம் என்பதே முக்கியம். ஆனால் காதல் என்பதை புரிந்துக்கொள்ள முடியாத வயதில் வெறும் இனக்கவர்ச்சி மற்றும் வெற்று பந்தாவிற்காக சுற்றுபவர்களால் தான் காதல் என்பது ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. 'காதல்' போன்ற, பள்ளிக்கூட பருவத்தில் வரும் கன்றுக்குட்டி காதலை ஆதரிக்கும் படங்கள் தான் சிறுவர்கள் மனதில் காதலை பற்றி தவறான எண்ணங்களை ஊக்குவிக்கின்றன. எனவே காதலர்கள் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன் இந்த மூன்று விஷயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்,

1. உண்மையிலேயே ஒருவரையொருவர் காதலிக்கிறீர்களா என்று நன்கு யோசித்துக்கொள்ளுங்கள்(சும்மா அன்னிக்கு பிக்கப் பண்ண ஒரு பொண்ணு/பையன் கிடைச்சான்னு சொல்லி காதலை அசிங்கப்படுத்தாதீங்க)

2. விலை உயர்ந்தது என்று சொல்லி உபயோகப்படுத்த முடியாத பரிசுப்பொருட்களை வாங்கி உங்க பெற்றோர்/உங்க காசை கரியாக்காதீங்க

3. பொது இடத்தில் உங்களை தவிர பொது மக்களும் இருப்பாங்க என்பதை நினைவில் கொண்டு காதல் செய்யுங்க ;)

இதெல்லாம் சொல்றதுக்கு நீ யாருன்னு கேட்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன், எல்லாம் ஒரு சமூக அக்கறை தான்:)

இது வரை பொறுமையா படிச்ச உங்களை பாராட்டி நீங்க சிரித்து மகிழ அலைபேசியில் வந்த சில குறுஞ்செய்திகள்,அதாங்க எஸ்.எம்.எஸ் :) இது எனக்கு வந்தது இல்ல, ஒரு தமிழ் பத்திரிக்கையில் போட்டிருந்ததை சுட்டது :)

சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? உன்னை நினைக்கறது சந்தோஷம்.. உன்னையே நினைக்கறது துக்கம் :)

எல்லா ஆண்களும் 'காதல்'ங்கிற பேர்ல ரெண்டாவது தாயை தேடுவாங்க, ஆனா காதலிக்கிற எல்லா பெண்களுக்கும் கிடைக்கறது 'காதலன்'ங்கிற பேர்ல முதல் குழந்தை :)

ஒரு பொண்ணு உன்ன பார்த்து சிரிச்சா மனசுல பட்டர்ஃப்ளை பறக்கும், முகம் சந்தோஷத்துல மிதக்கும், ஏன்னா மச்சி.. அணையப்போற விளக்கு தான் ப்ரகாசமா எரியுமாம் :)

சரி காதலை பத்தி சொல்லிட்டு கவிதை எழுதாம இருக்க முடியுமா :) பொறுமையா அதையும் படிச்சுட்டு போங்க,
எங்க எழுதியிருப்பேன்னு உங்களுக்கு தெரியுமில்லையா? ;)

Monday, February 05, 2007

டபுள் சென்சுரி அடித்த தானைத்தலைவி(வலி)..

கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா நம்ம சங்கத்தின் யானை சீசீ தானைத்தலைவி(வலி) தங்கத்தலைவி(வலி) கீதா அவர்கள் டபுள் சென்சுரி அடிச்சு(யாருப்பா அது அவங்க வயசான்னு கேட்குறது?) நம்மள விட பெரியாளாகிட்டாங்க அவங்களுக்காக ஒரு விழா எடுக்கலேன்னா கூட ஒரு பாராட்டு பதிவாவது வேண்டாமா? அதனால சகலமானவர்களுக்கு தெரிவிச்சுக்கற்து என்னன்னா நம்ம தலைவி இன்னும் பல நல்ல கருத்துக்களுடன்(!)கூடிய பதிவுகளை எழுதி பதிவுலகிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொண்டு தலைவி கீதாவிற்கு கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை கட்சியின் கொ.ப.செ என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். அப்டியே நம்ம காலண்டர் கவிஞர் மணிப்ரகாஷ் தலைவி(வலி)க்கு எழுதியுள்ள பாராட்டுரையை இங்கன போய் படிச்சுக்கோங்க:)


தலைவிக்கு கட்சியின் சார்பாக பூங்கொத்து :)