Monday, March 26, 2007

மொழி

இல்ல இல்ல இது மொழி படத்தின் விமர்சனம் இல்ல. அந்த படம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது (அப்ப எழுதின நாங்க கேணையனுங்களான்னு அடிக்க வராதீங்க, அதான் எல்லாரும் அருமையா விமர்சனம் பண்ணிட்டீங்களே புதுசா நான் எதுக்கு?ஹிஹி).

இந்த படத்தை நேத்து தான் பார்த்தேன். பார்த்தவுடன தோணிய விஷயங்கள்,

1. ஜோ என்ற அருமையான நடிகையை தமிழ் சினிமா இழக்கக்கூடாது.

2.ப்ரகாஷ்ராஜும்,ராதாமோகனும் இணைந்து இன்னும் இது மாதிரி நல்ல படங்களை தரவேண்டும்.

3.வெறும் வணிகத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பெயரை சொல்லி ஹீரோயிசம் காட்டும் கதாநாயகர்கள் இது மாதிரியும் நடிக்க கொஞ்சம் கத்துக்க வேண்டும்.

இந்த படத்தில் வரும் ஜோவின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு அருகாமையை உணர்த்தியது. என் அம்மாவின் இளைய சகோதரிகள் இரண்டு பேரும் இதே மாதிரி பிறவியிலேயே பேசும்,கேட்கும் சக்தி இழந்தவர்கள். இவர்களுடன் நாங்கள் தினம் தினம் பேசுவது சைகை மொழியில் தான். இவர்களின் உலகம் தனி உலகம். என்ன தான் சைகையிலேயே எல்லாவற்றையும் பேசினாலும் இவர்களது எண்ணங்கள் எல்லாம் மனதோடு தடைப்பட்டு போய் விடுகின்றன. நாம் எதையாவது நினைத்தோமானால் அது சொற்களாகவும், பேச்சாகவும் நம் மனதினுள்ளே ஓடிக்கொண்டிருக்கும்,ஆனால் இவர்களுக்கு எல்லாம் படங்களே.

மொழி படத்தில் ஜோதிகா தனக்கு பிறக்கும் குழந்தையும் ஊமையாக பிறந்து விடுமோ என்று பயந்து திருமணத்திற்கு மறுத்துவிடுவார். அப்பொழுது ஒரு அருமையான வசனம் வரும்,'வாழ்க்கையில் சில விஷயங்களை கேள்வி கேட்காம ஏத்துக்கணும்'. என் சித்தியின் திருமண விஷயத்தில் இது தான் நடந்தது. அவருக்கு வந்த வரனும் அவரை போலவே பேசும்,கேட்கும் திறன் இழந்தவர். என் பாட்டிக்கோ(அம்மாவின் அம்மா)இந்த திருமணத்தில் உடன்பாடில்லை,அவர்களின் குழந்தையும் இதே மாதிரி பிறந்துவிடும் என்ற பயம் தான். ஆனால் மாப்பிள்ளை வீட்டில் விடாமல் பேசி என் பாட்டியை சம்மதிக்க வைத்தனர். இரு சகோதரிகளில் மூத்த சகோதரிக்கு இப்படி தான் திருமணம் நடந்தது. தெய்வாதீனமாக அவர்களுக்கு பிறந்த மகன் எந்த குறையுமில்லாமல் பிறந்தான்,தற்போது அவன் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறான். இளைய சகோதரிக்கு திருமணமாகவில்லை எங்களுடன் தான் வசிக்கிறார்,வேலைக்கும் செல்கிறார்.

பொதுவாகவே இப்படி குறைப்பாட்டுடன் பிறந்தவர்களுக்கு தன்மானம் அதிகம். நான் அவர்களுடன் பேசும் போது மிகவும் சாக்கிரதையாக பேசுவேன். தங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் ரொம்ப குறிப்பாக இருப்பார்கள். என் சித்திகளின் எதிரில் மற்றவருடன் பேசினால் நாங்கள் அவர்களை பற்றி தான் பேசுகிறோமோ என்று சந்தேகம் வந்து விடும்,மொத்தத்தில் அவர்களை தவிர்த்து விட்டு பேசுவது என்பது அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம். அதுவும் என் சித்தப்பாவிற்கு(முதல் சித்தியை திருமணம் செய்தவர்) தனக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கவே கூடாதென்று நினைப்பார். எதுவாக இருந்தாலும் அதை பற்றி விளக்கமாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்.

காது கேட்காது எனினும் இவர்களுக்கு தங்களை சுற்றி நடப்பதை புரிந்துக்கொள்ள முடியும். எப்பொழுதும் மிகவும் எச்சரிக்கையோடு இருப்பர். என் சித்திகள் இருவரும் படிக்கவில்லையே தவிர கை வேலைகளில் மிகவும் தேர்ந்தவர்கள், அருமையாக சமைப்பர், மற்றவர்களின் நடை,உடை பாவனைகளை ஒரு கை தேர்ந்த நடிகரை போல நடித்துக்காட்டுவர். மொத்தத்தில் நம்மை போல சாதாரண மனிதர்களை விட இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றே எனக்கு தோன்றும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகளும் கூட,ஏனென்றால் இவர்களுக்கென்றே ஒரு தனி உலகம் அது யாருக்கும் தெரியாதது புரியாதது,தனி மொழி அது மெளனம்.

(இது மொழி படத்திலிருந்து சுட்டது)

இயற்கையின் மொழிகள் புரிந்து விடின்
மனிதரின் மொழிகள் தேவையில்லை,
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்
மனிதருக்கு மொழியே தேவையில்லை.

(இது நானே இட்டது)

கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்..

Friday, March 16, 2007

நான் வந்துட்டேன் :)

ஆணிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. ஆபிசில் தான் ஆணி பிடுங்குவீர்களா? எனக்கு வீட்டிலேயே நிறைய ஆணிகள் பிடுங்க வேண்டியதாயிற்று. அதுக்குள்ள எதிர்கட்சிகள் என்னை பற்றி புரளியை கிளப்பி விட்டார்கள். நம்ம தோஸ்துகள் எல்லாம் இன்னுமா யோசிக்கறீங்கன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு தாக்கிட்டாங்க :)

ஆணிகள் பல இருந்தாலும் இங்கே எழுத முடியாவிட்டால் கூட எல்லாருடைய வலைப்பக்கத்துக்கும் போய் படிக்கும் கடமையிலிருந்து விலகவில்லை என்று இங்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கிடையில் அமெரிக்கா செல்லவிருக்கும் தானை தலைவி(வலி) கீதாவின் தலைமையகத்திற்கு ஒரு ரகசிய பயணம் மேற்கொண்டு அவரை வரவேற்கும் பொருட்டு அமெரிக்காவில் கட் அவுட் வைக்கும் செலவிற்கு நிதி திரட்டி தலைவருக்கு அனுப்பி வைத்தாயிற்று(தலைவரே பெட்டி அனுப்பினேனே வந்து சேர்ந்துவிட்டதல்லவா?)இப்படியெல்லாம் வீட்டில் விடாது ஆணியும் பிடுங்கி தளராது கட்சி பணியும் மேற்கொண்டு களைத்து போயிருக்கும் நான் ரொம்ப சீரியஸா ஒரு பதிவும் போடறேன். அதையும் படிச்சு ரோசனை பண்ணுங்க, வர்ட்டா?:)

********************************************************************************

சிறிது மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர் அவருடைய மகனை சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சேர்க்க யோசனை கேட்டு வந்திருந்தார். அப்பொழுது என்னுடைய தம்பி இன்னொரு பள்ளியின் பெயரை சொல்லி அங்கே சேர்க்குமாறு யோசனை சொன்னான். அதற்கு மறுத்து அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது(அவரும் ஆசிரியர் என்பதால் சில குறிப்பிட்ட பள்ளிகளில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு தெரிந்திருந்தது).

சென்னையில் அமைந்திருக்கும் சில பணக்கார பள்ளிகளில் (அங்கு பணக்கார வர்க்கம் மட்டும் தான் படிக்க இயலும், நம்மள மாதிரி நடுத்தரவர்க்கம் அதுக்கு சொத்தையே எழுதி வைக்கணும்) மாணவர்களுக்கிடையே சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் புழங்குவதுண்டாம். நான் கல்லூரியில் படிக்கும் போது எங்கள் கல்லூரியின் அருகே மிக பிரபலமான ஒரு ஐஸ்க்ரீம் கடை இருந்தது, எப்பொழுது போனாலும் கூட்டம் தான். திடீரென்று ஒரு நாள் எங்கள் கல்லூரி முதல்வர் அந்த கடை இருக்கும் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும், மீறி செல்பவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர் என்று அறிவித்தார். காரணம், அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கே தெரியாமல் ஐஸ்க்ரீமில் போதை கலந்திருந்தார்கள். இந்த செய்தி பத்திரிக்கைகளில் எல்லாம் வந்து பின் அந்த கடையை அடைத்து விட்டார்கள்.

ஆனால் போதை பொருட்களின் வரத்து சமீபகாலங்களில் அதிகரித்து விட்டது, காரணம் இளைஞர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது. பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள் என்று சகல இடத்திலும் ஒரு மறைக்கப்பட்ட பயங்கரமாக பரவி வருகிறது. மக்கள் தொலைக்காட்சியில் இதை பற்றி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சியாக இருந்தும் கூட திரு. ராமதாசை ஒரு விதத்தில் பாராட்ட வேண்டும், அவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நன்றாகவே இருக்கின்றன, ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவதில் தவறுவதே இல்லை.

இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் என்னவென்றால் பள்ளிகளில் மிகவும் எளிதில் நடக்கக்கூடிய போதை மருந்து போக்குவரத்தை கண்டும்காணாமல் இருக்கும் பள்ளி நிர்வாகங்கள், பணம் வாங்கிக் கொண்டும் அரசியல் காரணங்களாலும் கடமை தவறும் காவல்துறையினர் ஆகியோரின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் தவிர தற்போது மிக வேகமாக பரவி மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரமும் இதற்கு காரணம், உலகமயமாக்கலின் காரணமாக ஊடுருவும் கலாச்சார மாற்றங்களில் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு. எதை நாம் எடுத்துக்கொள்வது என்பதில் தான் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது.

சிறிது நாளுக்கு முன் பூனேயில் நடந்த பார்ட்டியில் போதை பொருட்களோடு அகப்பட்ட மாணவர்களும்,இளைஞர்களுமே நம் நாட்டில் மிக வேகமாக பரவி வரும் போதை மயக்கத்திற்கு சாட்சி. தவறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? நம்மிடமிருந்து தான். போதை பழக்கத்திற்கு அடிமையாவதில் இரு வகைகள் உண்டு. எடுத்துக்கொள்ளும் பண்டத்தில் போதை மருந்து கலந்திருப்பது தெரியாமல் மாட்டிக்கொள்வது. இந்த வகைக்கு பலியாவது பெரும்பாலும் பள்ளி செல்லும் வயதினர். சென்னையிலேயே பள்ளிகளுக்கு வெளியில் சாக்லெட் வடிவத்தில் குழந்தைகளுக்கு இதை பழக்கப்படுத்துவதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

இதை தடுக்க நம் வீட்டு குழந்தைகளுக்கு நாம் தான் சொல்லி தரவேண்டும், வெளியில் விற்கும் பண்டங்களை வாங்குவதால் ஏற்படும் அபாயங்களை விளக்க வேண்டும். பெரும்பாலும் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் குழந்தைகள் தினமும் பள்ளி முடிந்தவுடன் வெளியே வாங்கி சாப்பிடும் நிலையில் உள்ளனர். அவர்கள் இன்னும் கூடுதல் கவனத்தோடு தங்கள் பிள்ளைகளை கவனிக்க வேண்டும். இரண்டாவது வகை போதை பொருள் என்று தெரிந்தே அதையும் தான் ஒரு முறை முயற்சி செய்துப்பார்க்கலாமே என்று ஒரு பந்தாவிற்காக செய்வது(களவும் கற்று மற என்பதை கடைப்பிடிப்பதாக நினைப்பு). இது இன்னும் கொடுமை,மீளவே முடியாது.

தனிமனித ஒழுக்கம் இல்லாமை, பெற்றோர் கவனிப்பு இல்லாமை, முக்கியமாக பணவரத்து அதிகம் புழங்கும் இளைஞர்களிடையே தான் இப்பழக்கம் எளிதில் தொற்றிக்கொள்கிறது. மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்(பெயர் மறந்துவிட்டது) சொன்ன ஒரு விஷயம் கேட்க சாத்தியமில்லா ஒன்றாக தோன்றினாலும் நடந்து விடுமோ என்ற அச்சம் மனதின் ஒரு மூலையில் இருந்தது, அவர் சொன்னது இது தான்," மதுவை ஒழித்து விடுவோம் என்று சொல்லி மது விலக்கை அமுல்படுத்தி பின் மதுவிலக்கையே விலக்கி அரசே பார்களை திறந்ததுப்போல் அரசே போதை பொருட்களை விற்கும் நிலை வந்து விடக்கூடாது, அதற்கு முன் அரசு இயந்திரம் விழித்துக்கொண்டு போதை போக்குவரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்" என்பதே. இதையே நாமும் எண்ணுவோம், போதைப்பொருட்களை நிராகரிப்போம்.

Tuesday, March 06, 2007

இது கொஞ்சம் சீரியஸ்..
பி.கு: அது ஒன்னுமில்லீங்கோ போன பதிவுல சொன்ன மாதிரி சீரியஸ் பதிவு போடலாம்னு பார்த்தா நிலைமை கொஞ்சம் சரியில்ல.இப்போதைக்கு பதிவிட முடியாது ஆனா நாமெல்லாம் சொன்னா சொன்னது தான், சீரியஸ் பதிவுன்னு தான சொன்னேன்,அதனால நான் சீரியஸா யோசிச்சுக்கிட்டு இருக்கேன், மீட் யூ இன் தி நெக்ஸ்ட் போஸ்ட் ஹிஹி:) அய்யோ கல் பறந்து வருதே...........டமால்........

பி.கு.கு( இது நாட்டாமைக்கு, சாரி பி.மு.க முதல்வருக்கு)

முதல்வரே உங்களுக்காக தான் மூக்குத்தி தெரியற மாதிரி போஸ் கொடுத்துருக்கேன், வைர மூக்குத்தி ஒன்னு பாக்கியிருக்கே(அதான் முதல்வராகிட்டீங்க இல்ல கட்சி நிதியிலிருந்து எடுத்து வுடறது ஹிஹி, அய்யோ பாறாங்கல்லே பறந்து வருதே.........)