Wednesday, April 25, 2007

தொடரும் அனுபவங்கள் - 3நாளை என்பதே கிடையாது சிம்மனிடம் என்று சொல்வார்கள். சிறுவன் பிரகலாதனிடம் அவன் தந்தை இரண்யகசிபு 'எங்கே உன் ஹரி?' என்று கேட்டவுடன் 'அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று கூறுகிறான். தன் பக்தன், ஒரு சிறுவன் கூறுகிறான் என அலட்சியப்படுத்தாமல் பக்தனை காக்க தூணை பிளந்த வந்த சிம்மன் அதன் பிறகு யோகத்தில் அமர்ந்தது இந்த மலையில் தான். இது நான் குழந்தையாக இருந்த போது சோளிங்கரின் கோவில் பற்றி பெரியவர்கள் சொல்லிக் கேட்ட கதை. பின் தெரிந்துக்கொண்டது,

ஒரு முறை சப்தரிஷிகளும் நரசிம்மரை தரிசிக்க வேண்டி இங்கே தவம் செய்தார்கள். அப்பொழுது அவர்களின் தவத்தில் மகிழ்ந்து சிம்மன் ஒரு கடிகைக்குள் அதாவது சுமார் 24 நிமிடங்களுக்குள் யோக நிலையில் தரிசனம் கொடுத்தார்.இதனால் இந்த இடம் கடிகை மலை, திருக்கடிகை, கடிகாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. ரிஷிகளின் தவத்தை கலைக்க முயன்ற அரக்கர்களிடமிருந்து அவர்களை காப்பாற்ற தன் சங்கு,சக்கரத்தை ஆஞ்சநேயரிடம் கொடுத்து அவர்களுக்கு காவலாக அமர வைக்கிறார் சிம்மன். அதற்கு சாட்சியாக சின்ன மலையில் ஆஞ்சநேயர் யோக நிலையில் சங்கும்,சக்கரமும் தரித்து காட்சி அளிக்கிறார்.
சரி, இப்ப பெரிய மலை ஏறுவோம். 1305 படிகளை கொண்டு சுமார் 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது பெரிய மலை. அடிவாரத்தில் சில படிகள் ஏறியவுடன் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் சன்னிதி, சிம்மனை தரிசிக்கும் முன் அவன் அடியாரை தரிசித்து அவன் அருளுடன் மலை ஏறுவோம். இங்கு நம் சகாக்களான வானர படையினரின் வரத்து கொஞ்சம் அதிகம் என்பதால் சற்று சாக்கிரதையாக ஏற வேண்டும். முடிந்த வரை கையில் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம். பூ, துளசிமாலை எல்லாம் அடிவாரத்தில் கிடைக்கும், அதை வாங்கிக்கொண்டு ஏறினால் சிம்மன் மனது வைத்தால் மட்டுமே மேலே ஏறும் வரை அவை உங்களிடத்தில் இருக்கும், இல்லையெனில் பாதி வழியிலேயே அவன் அடியார்கள், அதான் நம்ம சகாக்கள் வாங்கி தங்கள் கழுத்தில் சார்த்திக்கொள்வார்கள்:) எனவே முடிந்த வரை தவிர்த்துவிடுங்கள். பெருமாளுக்கு கற்கண்டு பொட்டலமும், தாயாருக்கு குங்கும பொட்டலமும் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் அதுவும் சிறிய பாக்கெட்டாக வாங்கிக்கொள்ளுங்கள். பெண்கள் சேலையோ,சுடிதாரோ எது அணிந்தாலும் காற்றில் பறக்கவிடாதீர்கள், பின்னாடியே வந்து இழுத்து விடும். கண்டிப்பாக தலையில் பூ வைத்துக்கொண்டு மலை ஏறாதீர்கள். கையில் கம்பு வைத்துக்கொள்ளுங்கள்,அடிவாரத்தில் கிடைக்கும், ஆனால் அது பயமுறத்த மட்டும் தான், அடித்து மட்டும் விடாதீர்கள்.

முதன் முறை ஏறுபவர்களுக்கு சற்று சிரமம் தான். ஏறும் போது செங்குத்தாக ஏறாமல் வளைந்து வளைந்து ஏறினால் அதாவது zigzag ஆக ஏறினால் சிரமம் இருக்காது. மேலே ஏற ஏற வெயில் தெரியாமல் இருக்க சில வருடங்களுக்கு முன் கூரை போட்டுள்ளார்கள். சிறு வயதில் நாங்க நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மலையேறும் போது விடுவிடுவென்று நிற்காமல் மேலே ஓடுவோம், திடீரென்று எங்கேயாவது குரங்கு கூட்டத்தை பார்த்தால் மட்டும் பயந்து நின்று விடுவோம் என் அண்ணன் வருவதற்காக. என் அண்ணனும் சும்மா இருக்க மாட்டான் கம்பை அதன் முகத்திற்கு நேரா காண்பித்து அதை சீண்டுவான், மிரட்டினால் ஓடி விடும். இப்பொழுதெல்லாம் அப்டியில்லை எல்லா வானரங்களும் மனிதர்களை விட தேறி விட்டன, நாம் முறைத்தால் அதுவும் திரும்பி முறைத்து நம்மை துரத்தும். அதனால் நாம் சீண்டாமல் இருப்பதே நலம் :)

மேலே ஏற ஏற ஒவ்வொரு 100 படிகள் முடிந்தவுடன் 100வது படியிலேயே எண்ணிக்கை பதித்திருப்பார்கள். அதை வைத்து இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என கணக்கிடலாம். அங்கங்கே மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கும், அதில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டும் போகலாம். நீர்மோர் கூட கிடைக்கும். தாகத்திற்கு சில இடங்களில் குழாய்களும் உண்டு. பாட்டிலில் தண்ணீர் கொண்டு வர தேவையில்லை, மலை மீது தண்ணீர் ரொம்ப இனிப்பாக அருமையாக இருக்கும். அதுவும் யாரும் இல்லாத சமயத்தில் அழகாக குழாயை திறந்து நம் சகாக்களும் தாகம் தீர்த்துக்கொள்வர். குடும்பம் குடும்பமாக அமர்ந்துக்கொண்டு நம்மை வேடிக்கை பார்ப்பது தான் அவர்களுக்கு பொழுதுப்போக்கே:)

உயரத்திலிருந்து பார்க்கும்போது மலையை சுற்றிய இடங்களில் இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கும். சுற்றிலும் பசுமையான வயல்வெளிகள், மலைத்தொடர்கள் என அழகான காட்சிகள் காணக்கிடைக்கும். கடைசி சுமார் 100 படிகள் ஏறுவது தான் கொஞ்சம் சிரமம்,ரொம்ப செங்குத்தாக இருக்கும், ஏற்கனவே களைத்துப் போய் வரும் நமக்கு இங்கு கொஞ்சம் மூச்சிரைக்கும். பின் கோபுரவாசலிலே அமைந்திருக்கும் படிகளில் அமர்ந்துக்கொண்டு ஆளையே தூக்கி விடும் அளவுக்கு வீசும் காற்றில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைவோம்.
கோபுரவாயிலில் வழி சென்று இடதுபுறத்தில் திரும்பியவுடன் இருக்கும் குழாய்களில் கால்களை அலம்பிக்கொண்டு, தாகம் தணித்துக்கொண்டு தாண்டிச்சென்றால் கொடி மரம் வரும். இங்கு சேவித்துவிட்டு வலதுபுறம் நுழைந்தவுடன் பிரகாரம் வரும். இதில் பிரகாரத்தை வலதுப்புறமாக சுற்றிக்கொண்டு வரிசையில் உள் நுழைந்தால் முதலில் தாயார்சன்னதி. அழகும்,அறிவும்,கம்பீரமும் நிறைந்து நம்மை இன்முகத்துடன் வரவேற்கும் நம் தாய், அமிர்தவல்லித்தாயார். இங்கு குங்கும பொட்டலத்தை கொடுத்து அர்ச்சித்து பின் தாயாரை பிரதட்சணம் செய்துக்கொண்டு ஒரு பெரிய வலம் வந்தால் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி. இவன் சன்னதியை காணத் தான் இவ்வளவு படிகள் ஏறி வந்தோமென்றால் இங்கேயும் சுமார் 10 படிகள் ஏற வைக்கிறான் சிம்மன். அழகிய அமர்ந்த கோலத்தில் கம்பீரத்துடனும், கண்களில் கருணையுடனும் நம் துன்பம் நீக்கும் அழகிய யோக நரசிம்மன் சன்னிதியின் உள்ளே மட்டுமா வீற்றிருக்கிறான்? அவன் கோலம் காண மலையேறி வந்துள்ள நம் உள்ளங்களிலும் தான்.


அனுபவங்கள் தொடரும்..

Wednesday, April 18, 2007

தொடரும் அனுபவங்கள் - 2

போன பதிவில் பூஜை முடியும் தருவாயில் நாங்க எழுந்து வெளியே வந்துவிடுவோம் என்று சொன்னதற்கு என்ன காரணம் தெரியுமா? பஜனை பாடல்கள் பாடி முடித்ததும் சாமிக்கு நைவேத்தியங்களை படைத்து பின் கற்பூர ஆரத்தி நடைப்பெறும். சபாவிற்குத் தலைமை வகிக்கும் மாமிக்கு சரியாக ஆரத்தி எடுக்கும் நேரத்தில் சாமி வரும்,சாதாரணமாகவே சாமி வந்து ஆடுபவர்களை அடக்க முடியாது ,அதுவும் நரசிம்மர் என்றால் கேட்கவே வேண்டாம். இதனால் அவர் சாதாரணமாக இருக்கும் போதே எங்களுக்கு அவரிடம் பேச பயமா இருக்கும்.அதுவும் சின்ன வயசில் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கும், மெதுவாக எங்க அம்மாக்களின் பின்னாடி ஒளிந்துக்கொள்வோம் நானும் என் நண்பர்களும். அந்த நேரத்தில் அங்குள்ள கிராமத்து மக்கள் அவரை நெருங்கி ஆசி கேட்க ஆரம்பித்துவிடுவர். சிறு வயதில் எங்களுக்கு சாமியாடுவது என்பது பயத்தை தந்தாலும் வளர வளர எங்களுக்குள் பல கேள்விகள் வர ஆரம்பித்தன.

பொதுவாக மனதளவில் திடமில்லாதவரும்,எளிதில் உணர்ச்சிமயப்படுபவரும் தான் சாமியாடுவார்கள். இவர்களிடம் சென்று நம் துக்கத்தை சொல்லும் போது 'பாவம், இவ்வளவு கஷ்படுகிறார்களே இவர்களுக்கு அந்த கடவுள் தான் வழிகாட்ட வேண்டுமென்று' எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எவ்விதத்திலாவது இவர்களுக்கு வழிகாட்டவேண்டுமென்று யோசிக்க யோசிக்க தங்கள் நிலை மறந்து,தான் அவர்களுக்கு என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை கடவுள் சொல்வதாக நினைத்து சாமியாடுகின்றனர். இதனால் குறை சொல்பவர்களும் நிம்மதியடைகிறார்கள்,தங்கள் கஷ்டங்களை கடவுளிடம் இவர்கள் எடுத்துச்செல்கிறார்கள் என நம்புகின்றனர். ஆனால் எனக்கு இதில் உடன்பாடில்லை, எனவே இந்த சமயத்தில் மட்டும் நான் வெளியே வந்துவிடுவேன் இல்லையெனில் பின்னே சென்று நின்றுவிடுவேன். என்னை பொறுத்தவரை கடவுள் எதையும் நேரில் வந்து சொல்வதில்லை எல்லாவற்றையும் நம்மிடம் செயலால் தான் உணர்த்துகிறார்.

கடமையை செய்தால் நமக்கான பலன்கள் கண்டிப்பாக வந்தடையும். அதுவும் தவிர கடவுளுக்கும் எனக்கும் இடையில் எந்த விதமான பாலமும் தேவையில்லை என்று நினைப்பவள் நான். எதுவாகயிருந்தால் என் முறையிடுதல் கடவுளிடம் மட்டும் தான் இருக்கும். எனவே எனக்கு சாமியாடுவதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இதை வீட்டில் சொன்னால் உதைப்பார்கள் ஏனென்றால் என் குடும்பத்தினரில் போன தலைமுறையை சார்ந்தவர்களுக்கு இதில் நம்பிக்கை அதிகம், அதுவும் சபாவின் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்மணியை தங்கள் குருவாகவே நம்புகிறார்கள்(சாமி வருவது என்பதை மட்டும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மற்றபடி அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் மிக அதிகம்,ஏனென்றால் அவர் பக்தி அப்படிப்பட்டது, அடியார்களுக்கு பணி செய்தால் அது தெய்வத்திற்கே செய்த மாதிரி என்று சொல்வார்கள்).

வெள்ளிக்கிழமை பஜனை முடிந்த பிறகு ப்ரசாதங்கள் விநியோகிக்கப்படும். நம்ம 'லலாம் அண்ணாச்சி' சொன்ன மாதிரி இதுக்காகவே காத்திக்கிட்டு இருந்த நாங்க முதல்ல போய் நிப்போம், விநியோகிக்க இல்ல, சாப்படறதுக்கு தான் :) பின் ததியாராதனை அதாவது அன்னதானம் நடைபெறும். கார்த்திகை மாதம் மூன்றாம் வார இறுதியில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் யார் வந்தாலும் கண்டிப்பாக சாப்பாடு உண்டு. வெள்ளி இரவு பஜனை முடிந்த பிறகு பொதுவாக அடுத்த நாட்களில்(சனி,ஞாயிறு) இரண்டு மலைகள் ஏறி நரசிம்மரையும்,ஆஞ்சநேயரையும் சேவித்து வருவோம்.

அடுத்த பதிவில் பெரிய மலை ஏறி யோக நரசிம்மரை தரிசிப்போம்.

அனுபவங்கள் தொடரும்..

Wednesday, April 11, 2007

தொடரும் அனுபவங்கள்..

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வந்துட்டாலே எல்லாருக்கும் விடுமுறை நினைவு வரும், அதே போல் எங்களுக்கு டிசம்பர் மாதமும் ஒரு விதத்தில் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், அதாவது தமிழ் மாத கணக்குப்படி கார்த்திகை மூன்றாம் வாரம் நாங்கள் போகும் இடம் சோளிங்கர். எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக தொடர்ந்து சோளிங்கருக்கு செல்கிறோம்.அம்பி உடனே உலா வரும் ஒளிக்கதிர் என்று நினைத்து விடாதீர்கள்:).

கோவிலை பற்றி மட்டுமல்லாமல் பல விஷயங்களை இங்கே பதிவிட போகிறேன். எனக்கு ஆதாரமாக இருக்கும் கடவுள் நம்பிக்கை,கோவில்,பக்தி,பக்தி சார்ந்த வழக்கங்கள்,என் சந்தேகங்கள் என பலவும் தொடராக இங்கே வரப்போகிறது. முதலில் சோளிங்கரை பற்றி சொல்லப்போகிறேன். அரக்கோணத்திலிருந்து 45 நிமிடங்கள் பேருந்தில் பிரயாணம் செய்தால் நாம் இங்கு போகலாம். கொண்டபாளையம் என அழைக்கப்படும் அழகான ஒரு ஊரில் அமைந்துள்ள மலைத்தொடரில் சின்ன மலை,பெரிய மலை என இரு மலைப்பகுதிகள். பெரிய மலை எனப்படும் மலையில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் ஆலயம். யோகம் என்றால் தியானம்,அமைதி எனப்படும். நரசிம்மர் என்றாலே உக்ரமாக இருப்பாரென நினனப்பீர்கள்,ஆனால் இங்கே யோகத்தில் அழகாக அமர்ந்திருப்பார். இந்த மலைக்கோயிலுக்கு 1305 படிகள் ஏறி செல்ல வேண்டும். சின்ன மலையில் யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 600 படிகளுக்கு மேல் உள்ளது.

சென்னையில் அமைந்திருக்கும் ஒரு நரசிம்மர் பக்த சபாவில் என் பாட்டி உறுப்பினராக இருந்தார். இந்த சபா சார்பில் சோளிங்கரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் மூன்றாம் வார இறுதியில் மூன்று நாட்களுக்கு அன்னதானம் நடைபெறும். இந்த ஏற்பாடுகளை செய்வதற்காக சபா உறுப்பினர்கள் மட்டும் இரண்டு நாள் முன்பே சென்று விடுவார்கள். என் பாட்டியும் அவர்கள் கூடவே சென்று விடுவார். என் பாட்டியை தொடர்ந்து அவருடைய மகன்,மகள் குடும்பங்கள் என அனைவரும் உறுப்பினராகி விட்டதால் எங்க குடும்பத்திற்கு இது ஒரு வருடாந்திர சந்திப்பு என்றே சொல்லலாம்.


என் மாமாக்கள்,அத்தைகள்,பெரியப்பா,பெரியம்மா அவர்கள் சொந்தம் என பெரிய கூட்டமே கூடி விடும்.என் பாட்டி(அம்மாவின் அம்மா)மாதிரி ஒரு பெண்ணை பார்ப்பது மிகவும் அபூர்வம். அனைவர் மீதும் அப்படி ஒரு அன்பை பொழிவார். அவருக்கு பிடிக்காத நபர் என்று ஒருவர் இருந்ததே இல்லை, சோளிங்கர் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பே தீபாவளிக்கு செய்வது போல பட்சணங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார். அங்கே போய் தங்கும் போது அனைவருக்கும் அதை கொடுப்பார், ஒருவரை கூட விடாமல் கணக்கு போட்டு எடுத்து வைத்திருப்பார்.

நாங்கள் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவேண்டியிருக்குமாதலால் வெள்ளிக்கிழமை மதியம் தான் கிளம்புவோம், இரவு போய் அங்கு சேர்ந்து விடுவோம். சில வருடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை கூட கிளம்புவதுண்டு. அப்பொழுது காலை சிற்றுண்டிக்காக வீட்டிலிருந்து ஒரு பெரிய தூக்கு நிறைய இட்லி வார்த்து எடுத்து வருவார்கள் . கொண்டபாளையும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நாங்கள் வாடிக்கையாக தங்கும் சத்திரத்துக்கு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும்(இப்பொழுதெல்லாம் ஷேர் ஆட்டோ வந்து விட்டது). நாங்க நடந்து செல்லும்போதே தூக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் இட்லிகளை சாப்பிட்டு விடுவோம் கூடவே எங்களை வரவேற்கும்பொருட்டு வரும் எங்க சகாக்களுக்கும் சிறிது தானம் செய்ய வேண்டும், வானர படைகளாச்சே கொடுக்கவில்லையென்றால் தூக்கையே தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்:)

சிறுவயதிலேயே சோளிங்கர் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டதால் அங்கே செல்வது என்பது எனக்கு கிட்டத்தட்ட சுற்றுலா செல்வது போல தான். நாங்கள் தங்கியிருக்கும் சத்திரம் முழுவதும் உறவினர்கள்,நண்பர்கள்,பல புதிய பக்தர்கள் ஆகியோரால் நிறைந்து ஒரு கல்யாணம் போல் இருக்கும். வந்தவுடன் முதல் வேலை எங்க வயதை ஒத்தவர்களுடன் விளையாட செல்வது தான். சத்திரத்தின் பின்புறத்தில் புதராக மண்டிக்கிடக்கும்,நிறைய பாறைகளும் இருக்கும். முக்கியமாக சத்திரத்தின் வாயிலிலேயே பாண்டவ தீர்த்தம் என்ற அழகிய குளம். இதில் ஆழம் அதிகமென்பதால் நாங்க போவதற்கு தடா விதிப்பார்கள். நாங்க பெரியவர்களுக்கு தெரியாமல் குளத்தில் கால் நனைப்போம். பின்புறம் புதர் மண்டிக்கிடக்குமிடமெல்லாம் பேய் இருக்கிறது என்று பயமுறுத்துவார்கள். அதையும் பொருட்படுத்தாமல் நாங்க கும்பலாக சென்று விளையாடிவிட்டு வருவோம்.

வெள்ளிக்கிழமை மாலை பஜனைக்கான ஏற்பாடுகள் நடக்கும். சத்திரத்திலேயே லட்சுமிநரசிம்மரின் படத்தை வைத்து அழகான மலர்களால் ரொம்ப அருமையாக அலங்கரித்திருப்பார்கள். பின் சபாவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு மாமியின் தலைமையில் பஜனை ஆரம்பிக்கும். நாங்களோ பொறுமையில்லாமல் பாடல்களை பாடிக்கொண்டு ப்ரசாதத்திற்கு காத்திருப்போம். மெதுவாக மென்மையான பாடல்களின் ஆரம்பிக்கும் பூஜை நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகி மக்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டு உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிப்பார்கள்(நாங்க மெதுவா கூட்டத்தை விட்டு வெளியே வந்துடுவோம்)

அனுபவங்கள் தொடரும்..