Tuesday, May 15, 2007

அம்பி கல்யாண வைபோகமே :)

ப்ளாக் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட அகில உலக புகழ்பெற்ற பி.மு.க கழகத்தின் உறுப்பினர், தொ(ல்)லைத்தொடர்பு துறை அமைச்சர், கலியுக நாரதர் ,ஆப்பு அம்பியின் திருமண விழா நேற்று இனிதே நடைப்பெற்றது. திருமணத்துக்கு அனைவரையும் அன்போடு அழைத்த (பின்ன அப்ப தான் மொய் நிறைய வரும் ஹிஹி) அம்பிக்கு முதலில் நன்றிகள். அவரோட ப்ளாக் உலக காதல் கதை இனி நிஜ உலகத்தில் அழகாக ஆரம்பமாகிறது :)

திருமணத்திற்கு செல்வது என்று முடிவெடுத்தவுடனே எப்பொழுது போவது? முகூர்த்தத்திற்கா? மாலை வரவேற்பிற்கா? நம்ம வலையுலக நண்பர்கள் யார் யார் வருவாங்க? என்ன பரிசு அளிப்பது(கல்யாணத்திற்கு போனா கண்டிப்பா மொய் வைக்கணுமா?:)) என ஒரே குழப்பம். போன வாரமே நம்ம சிஷ்யன் பில்லு பரணிக்கு மயில் தூது அனுப்பியிருந்தேன் . ஒழுங்கு மரியாதையா ஜி3யோட கன்சல்ட் பண்ணி நீங்கல்லாம் எப்ப வரப்போறீங்கன்னு சொல்லுங்க என்று கேட்டிருந்தேன். அதுக்கு ரொம்ப பவ்யமா,"குருவே உங்கள அப்டி விட்டுடுவோமா? கண்டிப்பா உங்களுக்கு மயில அனுப்பறேன்" அப்டின்னு சொல்லிட்டு கடைசி நிமிஷம் வரைக்கும் நான் அனுப்பின மயிலை திருப்பி அனுப்பவேயில்லை, ஒரு வேளை வறுத்து சாப்டுட்டாரோன்னு நினைச்சுக்கிட்டு, சரி இப்ப என்ன பண்றது? அப்டின்னு யோசிக்கும்போதே நம்ம திராச சார் போன் பண்ணி "என்ன? நீ எப்ப வர்ர?" அப்டின்னு கேட்டாரு.

சரி நம்ம பில்லு பரணி தான் கல்யாணத்து வந்தா எங்க மொத்த சாப்பாட்டுக்கும் அவரு கிட்ட பில் கட்ட சொல்லிடுவாங்களோன்னு பயந்து போய் பெங்களூர்ல டேமேஜர் சொல்ற ஆணியை புடுங்க போயிட்டாரு, ஜி3 காண்டாக்ட் பண்ண முடியல(மத்த நேரத்துல எல்லாம் ப்ளாக் யூனியன்ல மொக்கை போட்டுக்கிட்டு இருக்கும் மக்கள்ஸ் எல்லாம் திடீர்னு ரெண்டு நாளா லீவுல போயிட்டீங்களா?:) நம்ம சார் இருக்கும்போது என்ன கவலை? அதனால கல்யாணத்துக்கு வரேன் சார், காலைல தான் வரப்போறேன்னு சொன்னேன். அப்புறம் பார்த்தா ,அடிக்கற வெயில்ல குழாயை தொறந்தாலே வென்னீர் தான் வருது, இதுல நாம வேற அசோக் நகர் வரைக்கும், அதுவும் நம்ம வாகனத்துல(ஸ்கூட்டி) போனா அவ்ளோ தான் வண்டியோட சேர்ந்து உருகிடுவோம்னு மாலை வரவேற்பிற்கு வரேன் சார்னு சொல்லிட்டேன்.

சாயங்காலம் ஒரு 6:15 மணிக்கா கிளம்பி அசோக் நகர் போறதுக்குள்ள நொந்து போயிட்டேன், அதுவும் 100 ft ரோடுல பயங்கர ட்ராபிக் எங்க பார்த்தாலும் எமகிங்கரர்கள் மாதிரி லாரிகள். திராச சார் வேற அவ்ளோ தூரம் வண்டியில பத்திரமா வருவியான்னு கேட்டாரு. என்ன பண்றது? நம்ம இருக்கறது மெயினான ஏரியா(!)ன்னு பேரு தான் ஆசியாவிலேயே பெரிய தொகுதி வேற ஆனா ஒரு பேருந்து வசதி உண்டா?:(

எங்க ஏரியாவிலேயே எங்கயாவது பக்கத்துல கல்யாணத்தை வைக்காம இப்டி ஊருக்கு ஒதுக்குப்புறமா அசோக் பில்லர் கிட்ட கல்யாண மண்டபத்தை பிடிச்சிட்டாங்க ஹிஹி :) இப்டி ஒரு வழியா மண்டபத்துக்கு வந்துப் பார்த்தா பாதி மண்டபம் காலியா இருக்கு, ஆகா நாம தான் ரொம்ப சீக்கரமா வந்துட்டோமோன்னு திராச சாருக்கு ஒரு போனை போட்டேன். அவர் அப்ப தான் காரோட்டி வந்த களைப்பு(!) தீர கீழ டைனிங் ஹால் போயிருந்தாரு(என்ன சார் காபியா? டிபனா?). அவரு வர்ர வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம திருவிழால தொலஞ்சுப்போன குழந்தை மாதிரி(ஹிஹி நாந்தான், இனி இந்த டயலாக்க அம்பி சொல்ல முடியாது;)) திருதிருன்னு முழிச்சுக்கிட்டே என்னமோ ரொம்ப தெரிஞ்ச மாதிரி வேற ப்ளாக்கர்ஸ் வந்துருக்காங்களான்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி பரவாயில்ல நிறைய பசங்களும் இருந்தாங்க) .

அப்புறம் திராச சாரும் அவரோட தங்கமணியும் வந்தாங்க (பொற்கொடி, சாரோட தங்கமணி உன்ன ரொம்ப விசாரிச்சாங்க, கோப்ஸ் உங்களையும் தான்). அவங்களோட போய் ஒரு வசதியான இடமா பார்த்து செட்டில் ஆனப்பறம் நம்ம அம்பியின் பாசப்பிணைப்பு, திராச சார் பாஷைல சொல்லணும்னா அம்பியோட கோஸ்ட் ரைட்டர் ஹிஹி அதாவது அம்பி பேருல பல நல்ல பதிவுகளை எழுதும் அம்பியின் தங்கக்கம்பி சீசீ தம்பி, கணேசன் அவர்களை சார் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரோட கொஞ்ச நேரம் பேசிட்டு சைந்தவியோட அருமையான கச்சேரியை ரசிச்சுக்கிட்டே இருக்கும்போது சுமார் 7:15 மணிக்கு தான் திரு அம்பியும் அவரோட திருமதியும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி வந்தனர்.

க்ரீம் கலர் ஷெர்வானியும்,அதற்கேற்ப மெரூன் கலர் துப்பட்டாவோடு அம்பி கலக்க அவரை விட அதிகமாக கலக்கியது அவரோட தங்கமணி தான்(குஜராத்தி ஸ்டைலில் புடவை அணிந்திருந்தார், அழகான கலர் ஆனா எப்டி சொல்றதுன்னு தெரியல, ஜி3 ஹெல்ப் ப்ளீஸ் அது என்ன கலர்?). ஆங் முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டுட்டேனே நம்ம டுடி அக்கா முதல் நாளே குடும்பத்தோட வந்து டெண்ட் அடிச்சுட்டாங்களே அவங்கள பார்க்க முடியலையேன்னு நான் தேட, சாரும் அவங்க பரிசு வாங்க போயிருப்பாங்கன்னு சொன்னாரு. அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க பரிசு வாங்க போகலியாம்(நம்ம ப்ளாக் யூனியன் மூலமா அம்பிக்கு கொடுக்கற பரிசு பெங்களூரில் தான் வழங்கப்பட இருக்கிறது. இதை பற்றிய விவரங்கள் டுடி அக்கா சொல்லுவாங்க) பூங்கொத்து வாங்க போனாங்களாம். போய் ரொம்ப நேரம் ஆகுதுன்னு கேள்விப்பட்டு ஒரு வேளை இவங்களே செடி நட்டு, பூ பறிச்சு பொக்கே செய்யப்போறாங்களோன்னு நாங்க திகைச்சுப்போயிட்டோம்.

அதுக்குள்ள இன்னொரு குழப்பம். அம்பிக்கு என்னை தெரியும் ,ஏற்கனவே பார்த்திருக்கார், ஸோ ஜி3 வந்தா அவங்களா போய் அம்பி கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டா தான் எங்களுக்கு தெரியும். அதனால முன்னாடியே அம்பி கிட்ட போய் சொல்லிட்டோம். நடுவுல கொஞ்சம் கச்சேரியும் ரசிச்சுக்கிட்டு இருந்தோம். திடீர்னு மேடையில் நின்னுக்கிட்டு இருந்த அம்பியும், தங்கமணியும் எங்கள பார்த்து காத்துல என்னமோ எழுதி கதகளி ஆட ஆரம்பிச்சுட்டாங்க இதென்னடா இது? இவங்க தனியா நடன கச்சேரி செய்யப்போறாங்களான்னு பார்த்தா அவங்க பக்கத்துல ஜி3 நிக்கறாங்க அதை தான் அவங்க அப்டியே அபிநயம் பிடிச்சு எங்களுக்கு சொன்னாங்க.

அப்புறம் ஜி3யோட அறிமுகப்படலம் முடிஞ்சு அரட்டையை ஆரம்பிக்கும்போது ஜி3 அருணுக்கு போன் பண்ணினாங்க. அவரும் எங்க கூட எல்லாம் பேசி ஸ்பான்ஸர் பண்ண பரணி ஊரில் இல்லாததால் தன்னால் திருமணத்திற்கு வரமுடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். கொஞ்ச நேரத்தில டுடி அக்காவும் வந்துட்டாங்க, இவ்ளோ பெரிய சென்னை மாநகரத்துல ஒரு பொக்கே கிடைக்கலயாம் சரி பரவாயில்ல காசு மிச்சம்னு மனசை தேத்திக்கிட்டு அம்பியை வாழ்த்த நாங்க மேடைக்கு போனோம்.

எங்கள பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமான அம்பி "மொய் எங்க? மொய் எங்க? "என்று பல முறை கேட்டு நாங்க எதுவும் தராததால சே! இப்டி கலெக்ஷன் கம்மியாகிடுச்சே என்று வருத்தப்பட்டார். பின் எங்க நட்பே உங்களுக்கு பெரிய பரிசு தான்னு நாங்க எல்லாரும் ஒரு பெரிய ஆப்பை அவருக்கு வைக்கவும் அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்(படங்கள் திராச சார் தான் எடுத்தார் அவரு அதை தன் ப்ளாகில் போடுவதாக கூறியுள்ளார்)பின் என்னிடம் நம் வலையுலக நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்கள் வாழ்த்துக்களையும் அவர்கள் சார்பாக நான் கூறினேன். ஜி3யின் செல் மூலமாக தலைவர் கார்த்தியும், நண்பர் அருணும் வாழ்த்தினார்கள். அதை விட முக்கியமான மேட்டர் என்னவென்றால் என்னை பார்த்ததும் மிகவும் சந்தோஷமடைந்த அம்பியின் தங்கமணி நான் அம்பியை அவருடைய ப்ளாகில் நன்றாக வாருவதாகவும்(ஹலோ இது சீப்பு வச்சு தலை வார்ரது இல்ல கோப்ஸ்:))அதை தன்னால் இனி செய்ய முடியாது எனவும் அதனால என்னை தொடர்ந்து அந்த பணியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்(ஹிஹி அம்பி உங்களுக்கு இந்த மேட்டர் தெரியுமா?) தங்கமணியாகிவிட்டதால் ஏன் அதையெல்லாம் செய்யக்கூடாது? தாராளமா செய்யலாம் இதுக்கு நீங்க ட்ரையினிங் எடுக்க சரியான ஆள் நம்ம ப்ளாக் உலக நாட்டாமை, பி.மு.க முதல்வர், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ச்யாம் அவர்களின் தங்கமணி என்று அம்பியின் தங்கமணியிடம் பரிந்துரைத்தேன்.

பின் அவர்களிடம் விடைப்பெற்று மிக மிக முக்கியமான வேலையை கவனிக்க சென்று விட்டோம்(வேற எங்க? டைனிங் ஹால் தான்). சோறு கண்ட இடமே சொர்க்கமென நான், ஜி3, டுடி, திராச சார், அவரு தங்கமணி எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது கரெக்டா பெங்களூரிலிருந்து மோப்பம் புடிச்சு நம்ம பரணி போன் பண்ணினார். அப்புறம் நம்ம தலைவர் கடலை கார்த்தி, அருண் அவங்க கூட பேசிட்டு வர்ரதுக்குள்ள அடுத்த பந்தி ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு மேலயும் உட்கார்ந்துக்கிட்டு இருந்தா சாப்பிடும் போதே இலை எடுத்துடுவாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நானும், ஜி3யும் மனசேயில்லாமல் எழுந்துட்டோம். அப்புறம் எல்லாரும் வெளிய வந்து பனிக்கூழ் அதான்பா ஐஸ்க்ரீமை ஒரு வெட்டு வெட்டினாங்க. நாங்கல்லாம் கொழந்த மாதிரி ஐஸ்க்ரீம் சாப்டமாட்டோம் பீடா தான் போடுவோம்னு ஒரு பிட்டை போட்டு பீடாவை சாப்டேன்(ரெண்டு நாளா ஜுரம் ,கல்யாணத்துக்கு வந்ததே எப்டியோ சமாளிச்சு தான், இதுல ஐஸ்க்ரீம் வேறயா?)

இப்டியாக ஜாலியாக ப்ளாக்கர்ஸ் மீட் அதாவது அம்பி கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது.
என்ன இன்னுமா இருக்கீங்க? அவ்ளோ தான் ஷோ ஓவர் எல்லாரும் வந்து அம்பியை வாழ்த்திட்டு, நல்லா சாப்டுட்டு வீட்டுக்கு போயாச்சு, நீங்களும் போயிட்டு(வந்ததுக்கு நாலு கமெண்ட் போட்டுட்டு)வாங்க :)

Friday, May 04, 2007

தொடரும் அனுபவங்கள் - 4 (இறுதிப்பகுதி)

பெரிய மலையில் யோக நரசிம்மரை தரிசித்த பின் நாம் செல்ல இருப்பது சின்ன மலை(பெரிய மலையிலேயே உங்களை ரொம்ப நாள் காக்க வச்சதுக்கு மன்னிச்சிடுங்க ஹிஹி). பெரிய மலை அடிவாரத்திலிருந்து சிறிது தூரம் நடந்துச் சென்றால் சின்ன மலை அடிவாரத்திற்கு செல்லலாம். போகும் வழியில் இடதுபுறத்தில் ஒரு குளம் வரும், அது தான் பாண்டவ தீர்த்தம். அதன் கரையில் அமைந்திருக்கும் ஒரு சத்திரத்தில் தான் எங்கள் சபா பல வருடங்களாக கார்த்திகை மாத வைபவம் கொண்டாடியது. தற்போது அந்த சத்திரம் பாழடைந்துவிட்டதால் வேறு இடத்தில் நடத்துகிறோம். குளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் சிறிய மலை அடிவாரம். சிறிய மலையானது சுமார் 350 அடி உயரமானது.

பெரிய மலை ஏறிவிட்டு இதில் ஏறும் போது அட இவ்வளவு படிகள் தானா? என்று தோன்றும். பெரிய மலை படிகளில் பாதி கூட இருக்காது. பொதுவாக வானர சகாக்கள் இங்கு தான் அதிகமாக இருக்கும் என பலர் எண்ணுவர். ஆனால் இங்கு சகாக்களின் நடமாட்டம் பெரிய மலையை விட குறைவு தான். இங்கு அமைந்துள்ள யோக ஆஞ்சநேயர் பெரிய மலையை நோக்கியவாறு அமர்ந்த யோக நிலையில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். ஆஞ்சநேயரை தரிசித்து வெளியே வந்தவுடன் ராமர் சன்னிதி உள்ளது. சிறிய மலையின் சிறப்பு மலை மேல் உருவாகியுள்ள ஒரு குளம் தான்.

மனநிலை சரியில்லாதவர்கள்,தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இங்கு வந்து குளத்தில் குளித்து ஆஞ்சநேயரை தரிசித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுண்டு. ஆனால் குளம் மிகவும் ஆழமாக இருக்கும்,எனவே மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்குள்ள மடப்பள்ளியில் வடை ரொம்ப பிரசித்தம். அதை பிரசாதமாக வாங்கிச் செல்லலாம் வழக்கம் போல நம் சகாக்கள் அனுமதித்தால் மட்டுமே மடப்பள்ளி வாசலிலேயே வானரப்படையினரும் பள்ளிக்கொண்டிருப்பர். கார்த்திகை மாதத்தில் இங்கு கூட்டம் களை கட்டும், முக்கியமாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசித்தால் ரொம்ப விசேஷம். கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நெரிசல் அதிகமாக இருக்கும், அதுவும் படிகள் முழுவதும் வரிசை இருக்கும். நாங்கள் முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் போவதை தவிர்த்துவிடுவோம்.

இனி சோளிங்கர் செல்வது எப்படி என்பதை பார்ப்போம். சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்று அங்கிருந்து சோளிங்கர் செல்வது தான் எளிது. சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அரக்கோணம் ரயில்நிலையத்திலிருந்து அரக்கோணம் பேருந்து நிலையம் சுமார் 1 கி.மீ இருக்கும். முன்பெல்லாம் நடந்து தான் செல்ல வேண்டும். இப்பொழுது ஷேர் ஆட்டோவில் 5 ரூபாய் கொடுத்தால் பேருந்து நிலையத்தில் விட்டு விடுவார்கள். அங்கிருந்து சோளிங்கர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம்(பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள்). ஆனால் இறங்குமிடம் சோளிங்கர் அல்ல, கொண்டப்பாளையம். கொண்டப்பாளையம் நிறுத்தத்தையும் எளிதில் கண்டுக்கொள்ளலாம். ஒரு பெரிய வளைவில் கொண்டப்பாளையம் என்று எழுதியிருப்பார்கள், கூடவே நம்மை வரவேற்று அருள் புரிய அருகிலேயே நங்கநல்லூர் ஆஞ்சநேயர் அளவில் ஒரு பெரிய ஆஞ்சநேயர் சிலை ஒன்று இருக்கும். இங்கு இறங்கிக்கொண்டு அங்கிருந்து பெரிய மலை அடிவாரத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று விடலாம். இங்கு தேவஸ்தான பேருந்துகளும் வரும் ஆனால் அதற்காக காத்துக்கொண்டிருந்தால் நேரமாகிவிடும். எனவே ஆட்டோவிலேயே செல்லலாம். ஆனால் அதற்கு முன் கொண்டப்பாளையம் நுழைவாயிலில் உள்ள தட்டாங்குளம் என்னும் குளத்திற்கு சென்று வாருங்கள். இங்கு குளிப்பது பாவங்களை போக்கும், நாங்கள் சோளிங்கர் வந்தால் ஒரு நாளாவது இங்கு குளிக்காமல் போக மாட்டோம். ஆனால் ஆழம் அதிகம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரிய மலை அடிவாரத்தில் நான் சொன்ன மாதிரி பூமாலைகள்,துளசிமாலைகளை தவிர்த்து(தைரியமாக வாங்கிச்செல்பவர்களும் உண்டு) குங்குமம்,கற்கண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மலையேறலாம். வாங்குமிடத்திலேயே கூட நாம் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு செல்லலாம்.

திருமங்கையாழ்வார்,பேயாழ்வார் ஆகியோரால மங்களாசாசனம், அதாவது பாடப்பட்ட ஸ்தலமான சோளிங்கப்புரம் அனைவராலும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.