Tuesday, June 26, 2007

ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும் :)

இந்த பதிவின் தலைப்பை பார்த்து அதன் சிறப்பை எல்லாரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்பீர்கள். பலரும் யூகித்தது போல் இது என்னுடைய 125வது பதிவு. இந்த பதிவை மேலும் சிறப்பிக்க என்ன செய்வது என யோசிக்கும் போது தான் நம்ம சூடான் புலி எட்டு பதிவை போட சொல்லி வேண்டிக்(!)கேட்டுக்கொண்டார், நானும் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டேன்:)(அடிப்பாவி பொய் சொல்றா! மெயிலில் மிரட்டல் வந்தத அப்டியே மறச்சுட்டா) சரி, சரி நடுநடுவில் என் மனசாட்சி கூறும் உண்மையை யாரும் படிச்சிடாதீங்க :)

இந்த எட்டுப்பதிவை ஏற்கனவே எழுதினவங்க எல்லாரும் அவங்க செய்த சாதனைகளை வரிசைப்படுத்தி இருக்காங்க. நாமெல்லாம்(டென்சன் ஆகாதீங்க அவள தான் சொல்லிக்கறா) என்னத்த சாதிச்சோம்னு யோசிச்சு பார்த்தா அதெல்லாம் இந்த எட்டுக்குள்ள அடங்காதுன்னு தெரிஞ்சுப்போச்சு(அய்யோ சாமி இவ அலம்பல் தாங்கலியே) அதனால என் வாழ்க்கையில் இது வரையில் என்னை மகிழ்வித்த, பாதித்த, மாற்றிய சின்ன சின்ன விஷயங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

1. எங்கம்மா நல்லா பாடுவாங்க ஆனா அதை மேலும் வளர்த்துக்கொள்ள அவங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கல. அதனால நானாவது பாட்டுக் கத்துக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆசைப்பட்டதுல தப்பேயில்ல, அதுக்காக என்னை பாட்டு வகுப்புல சேர்த்து விட்டதும் தப்பே இல்ல, ஆனா எப்ப சேர்த்துவிட்டாங்க? கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது :) நானும் எங்கம்மாவை மதிச்சு பாட்டு வகுப்புக்கு போனேன். இந்த அழகன் படத்துல மம்முட்டி டுடோரியல் காலேஜுக்கு படிக்க போவாரு, அப்ப அங்க இருக்கற மாணவர்கள் அவர ஆசிரியர்னு நினைச்சுப்பாங்க. அந்த மாதிரி தான் நான் பாட்டு கத்துக்கிட்ட கதையும். எனக்கே சிரிப்பா வரும், பின்ன நம்மள சுத்தி நண்டும், சுண்டுமா 5,6 வயசு குழந்தைகள் உட்கார்ந்திருக்கும். எப்படி பாட்டு வரும்? அவங்க பண்ற சேஷ்டைகள் பார்த்து சிரிப்பு தான் வரும்:) ஆனாலும் விடாமுயற்சியா 2 வருடம் பாட்டு கத்துக்கிட்டு என் கல்லூரியில் பாட்டும் பாடினேன். அது தான் எனக்கு முதல் மேடையேறிய அனுபவமும் கூட, சாதனையும் தான் ! (நீ பாடினதை முழுசா உட்கார்ந்து கேட்டாங்களே அது தான் பெரிய சாதனை அதை சொன்னியா நீ?)

2.இதுவும் ஒரு கல்லூரி அனுபவம் தான். நான் முதுகலை படிக்கும் போது(இருபாலாரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி) நடந்த முதல் வருட தேர்வில் ஒரு பாடத்தில் தான் வெற்றி, மற்ற எல்லா பாடத்திலும் தோல்வி. என் வாழ்க்கையில் படிப்பு விஷயத்தில் நான் சந்தித்த முதல் தோல்வி அது. நான் தேர்வில் தோல்விடைந்து விட்டேன் என்பதை விட என் பெற்றோருக்கு நான் தந்த அதிர்ச்சி, படிப்பை தொடர போவதில்லை என்று சொன்னது தான். இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது கூட எனக்கு நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்? நன்றாக படிக்கும் நான் ஏன் சரியாக படிக்கவில்லை? தோல்வியை கண்டு ஏன் துவண்டேன்? என்பதெல்லாம் ஒரு புரியாத புதிர் தான். என் வாழ்வில் இன்று வரை எல்லா வகையிலும் நான் அனுபவப்பாடம் பெற்ற நாட்கள் என்றால் அது முதுகலை படித்த அந்த இரண்டு வருடங்கள் தான். தோல்விகளை தாண்டியும் வாழ தெரிந்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம். (ரொம்ப பீல் பண்றாங்களாம்:))

3. பாட்டு பாடி எல்லாரையும் மகிழ்வித்த நான்(அது உன் பாட்டை கேட்டவங்க சொல்லணும்) நாடகத்திலும் நடித்தேன். முதுகலை படிக்கும்பொழுதில் என் நண்பன் தமிழ்த்துறையில் நடந்த நாடகப்போட்டியில் கலந்துக்கொள்ளலாம் என கூறினான். நாங்களும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தில் ஒத்துக்கொண்டோம்(அடிப்பாவி அதுவா உண்மை? பரிசுப்பணம் 2000ரூ சொன்னப்புறம் தான ஒத்துக்கிட்ட?). உடனே அவசர அவசரமாக போட்டியில் கலந்துக்கொள்ள பேரை கொடுத்து நாடகமும் எழுதிவிட்டான் என் நண்பன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே எழுதியிருந்தான், பின்ன என் நண்பனில்லையா?:) (அவனுக்கு மட்டும் இது தெரிஞ்சது இங்க ஒரு கொல விழும்). நாடகத்துல எனக்கு ஒரு நல்ல கதாப்பாத்திரமும் கூட, ஆனா கடைசி நிமிஷத்துல ரொம்ப ஆசைப்பட்டு கேட்டான்னு என் தோழிக்கு அதை விட்டுக்கொடுத்துட்டேன். இதுல டென்சனான என் நண்பனை கூல் டவுன் பண்ணி இன்னொரு கதாப்பாத்திரத்தை எனக்காகவே கொண்டு வந்தோம். அது ஒரு அழகிய தேவதை கதாப்பாத்திரம், நான் ஏற்கனவே தேவதை மாதிரி அழகா இருக்கறதனால மேக்கப் வேண்டாம்னு சொல்லிட்டாங்க :D (அடிப்பாவி தேவதைன்னு சொல்லி வெள்ளை புடவை கட்டிக்கிட்டு தலைய விரிச்சுப்போட்டுக்கிட்டு நீ பேசுனதை பார்த்து பயந்துட்டு தான் உங்க நாடகத்துக்கு பரிசு கொடுத்ததா எல்லாரும் பேசிக்கறாங்க) நான் ஏத்துக்கிட்ட கதாப்பாத்திரம் நாடகத்தில் ரொம்ப நேரம் வரல்லேன்னா கூட நான் பேசிய வசனங்கள் தான் எங்க நாடகத்துக்கு வெற்றி வாங்கி தந்தன (சென்னை 28 படத்துல வர்ர கதாநாயகி பேசின நாலு வரி டயலாக்கை விட கம்மியா பேசிட்டு என்னமோ சீன் போடறா? சரி இவ்ளோ சொன்னியே பரிசுப்பணம் 2000 ரூ இல்ல வெறும் 1000 ரூ தான் அதுலயும் காஸ்ட்யூம் செலவு போக மிச்சத்தை ட்ரீட் கொடுத்தே அழிச்சியே அத சொன்னியா?)

4. வாழ்க்கையில் நாம் மற்றவர் மேல் வைக்கும் அன்புக்கு எவ்வளவு சக்தியுள்ளது என்பதை நான் புரிந்துக்கொண்டது என் பாட்டி(அம்மாவின் அம்மா) உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது தான். எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை முடிந்து பின் நினைவு திரும்பாமலேயே சிறிது சிறிதாக எங்களை விட்டு என் பாட்டி பிரிந்துக்கொண்டிருந்தார். எங்க குடும்ப மருத்துவர் என்னிடமும் என் அம்மாவிடமும் மட்டும் என் பாட்டி இனி பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டார். அன்று இரவு மருத்துவமனையில் நான் தான் என் பாட்டிக்கு துணையாக இருந்தேன். வேறு யாரும் கூட இருக்க முடியாத நிலைமை. அந்த இரவு என்னால் மறக்கவே முடியாது, மிக தைரியமாய் யார் துணையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தின் துணையோடு அன்று இரவு முழுவதும் கழித்தேன். சில சமயங்களில் எந்த அசைவும் இருக்காது, பாட்டி என்று கூப்பிட்டால் அதுவரை கண் திறந்துப் பார்த்துக்கொண்டிருந்தவர் அன்று எந்த அசைவுமில்லாமல் இருந்தார். மனதில் பயத்துடனும், கவலையுடனும் அடிக்கடி அவர் மூக்கருகே கை வைத்து சுவாசம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அவரை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அவர் எங்களுக்காக செய்தவை அத்தனையும் கண் முன் விரிந்துக் கொண்டே இருக்க பாரமான மனதுடன் கழிந்த அந்த இரவு எனக்கு ஒரு வகையில் எதையும் எதிர்நோக்கும் தைரியம் கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பின் ஒரு வாரத்தில் என் பாட்டி மரணமடைந்தார்.


(யப்பா இதுக்கே முடியல இப்பவே கண்ணகட்டுது இன்னும் 4 எழுதனுமா? அய்யோ இந்த பதிவுலக மக்கள கடவுள் தான் காப்பாத்தணும்)


5. நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் போது ஆங்கிலத்தில் என் திறமையை பார்த்து வியந்த(!) என் ஆங்கில ஆசிரியை கண்டிப்பாக மாநில அளவில் எனக்கு இடம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்(நல்ல வேளை அப்டி ஒன்னு நடக்கல உலகம் தப்பிச்சுது) அதே போல் என் வகுப்பில் இன்னொரு பெண்ணை கணித பாடத்தில் எதிர்ப்பார்த்தனர். கடைசியில் எல்லாம் தலை கீழாக நடந்தது. நான் கணிதத்தில் முதலிடமும் , அவள் ஆங்கிலத்தில் முதலிடமும் வாங்கினாள் மாநில அளவில் அல்ல பள்ளி அளவில் தான் :) இதெல்லாம் மாநில அளவில் ரேங்க வாங்கிய நம்ம மக்களுக்கு சாதாரணம் என்றாலும் நான் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மதிப்பெண் வாங்கியது என்னளவில் சாதனையே (இதுக்கு பள்ளியில் பரிசு கொடுக்கறாங்கன்னு சொல்லி ஒரு லஸ்ஸி குடிக்கற லோட்டா கொடுத்து உன் மானத்த வாங்கினாங்களே அத வசதியா மறைச்சுட்டியே;))

6. என் பெயரை சொன்னவுடன் ஏதோ ஓரளவுக்கு பரிச்சயமாக நம் வலையுலக மக்களுக்கு தோன்றுவதென்றால் அதற்கு காரணம் இந்த வலைப்பூக்கள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் நீ இவ்வளவு எழுதுவாய், கவிதைகள் என்ற பெயரில் கிறுக்குவாய் என்று யாராவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டேன். என் தனிமை உலகத்தின் வாயிலாய் இந்த வலைப்பூக்கள் அமைந்திருப்பது என் எழுத்தின் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையும், நீங்க கொடுக்கும் ஊக்கமும் தான்.(நம்பாதீங்க, நம்பாதீங்க இதெல்லாம் பின்னூட்டம் வாங்க சொல்லப்படுகின்ற வார்த்தைகள்:))

7. அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான். (இது வேற எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே,அடிப்பாவி சிவா தன் பதிவுல எழுதினதை அப்டியே ஜி3 பண்ணிட்ட? நீயெல்லாம் திருந்தவேமாட்டியா?)


8. மக்களே இதெல்லாம் விட நான் பெருமையா நினைக்கறது என் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தான். புத்தகங்கள் தான் என்றுமே நம் தனிமையின் உற்ற துணை என்பதை நான் நம்புகிறேன். ஒரு நூலகம் கூட இல்லாத மிக சாதாரண பள்ளியில்(ஆசிரியர்களை குறிப்பிடவில்லை எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் அனைவரும் அருமையானவர்கள்) படித்த நான் புத்தகங்கள் படிக்கவும், ஓரளவு நன்றாக என் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுத காரணம் எங்கள் நூலகம் தான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இயங்கி வரும் எங்க நூலகம். மிக சிறிய அளவில் தான் இருந்தாலும் எனக்கு அதில் பெருமையே(அது சரி தமிழ் புலமைன்னு ரொம்ப தான் சீன் போடற ஒரு சந்திப்பிழை இல்லாம தொடர்ந்து எழுத முடியுமா உன்னால?)

அப்பாடி ஒரு வழியா எட்டு போட்டாச்சு :) இதுக்கு விதிமுறைகள் வேற இருக்காம் , அது என்னன்னா,

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

பி.கு:
இது என்னோட 125வது பதிவு என்பதால் உங்களையெல்லாம் போனா போகுதுன்னு விட்டுரேன் யாரையும் நான் அழைக்கப்போறதில்ல பொழச்சுப்போங்க :) ஹலோ எங்க கிளம்பிட்டீங்க? கமெண்ட் போட தான? சரி இது ஒரு சிறப்பு பதிவு என்பதால முதல் கமெண்டுக்கு புளியோதரை, சுண்டல் எதுவுமில்ல அதுக்கு பதிலா இந்த பதிவுக்கு வர்ர 125வது பின்னூட்டத்துக்கு என் சார்புல நம்ம நாட்டாமை ஒரு ஃபுல்லும் ஒரு குவார்ட்டரும் வாங்கி தருவாரு :)(இப்டி சொன்னா எல்லாரும் கமெண்டை அள்ளி குவிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்:)) எங்க நிரூபிங்க , உங்க கும்மி அடிக்கும் திறமையை :)

Monday, June 18, 2007

போண்டா இல்லா ஒரு பதிவர் சந்திப்பு!

நேற்று அண்ணாநகரில் மக்கள் வெள்ளத்தில் நாட்டாமையின் பழப்பஞ்சாயத்து எப்படி நடந்தது? நயனை பார்க்கும் அவசரத்தில் தீர்ப்பை அவசர அவசரமாக கூறி விட்டு தன் வெத்தலை பொட்டியுடன் எஸ்கேப் ஆன ஆல் இன் ஆல் அழகுராஜாவும், காண்ட்ராக்ட் எடுத்து கமெண்ட் போடும் வள்ளல் சிபியும், சுக்- சாகரில் நல்லா சாப்டு நாட்டாமையை போண்டியாக்கி விடலாம் என்று நினைத்து , நாட்டாமையால் அந்த சதி முறியடிக்கப்பட்டு சோகமாகி பின் சூஸ் குடித்து மனதை தேற்றிக்கொண்ட காயத்ரியும், நானும், இந்த பூனையும் பீர் குடிக்குமா? என்பது போல் சீன் போட்ட கோல்மால் கோபாலும் கலந்துக்கொண்ட 'பழக்கடையில் ஒரு பஞ்சாயத்து' பற்றி சுடச்சுட படிக்க வாங்கிவிட்டீர்களா?...... சீசீ பீர்அடிக்கும் பூனையின் வலைப்பதிவிற்கு வருகை தாருங்கள்.

விளம்பரம் தந்தாச்சு ! சொன்ன மாதிரி அமெளண்டை என் அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்க மக்களே :) சரி இவ்ளோ தூரம் வந்துட்டு சும்மா போனா எப்டி? என்னுடைய பழைய கவிதையை நானே ஜி3 பண்ணி போடறேன். அதையும் படிச்சுட்டு வழக்கம் போல் கல்லெறிஞ்சுட்டு போங்க(வைரக்கற்களா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்:) )

நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!


பாவனையற்ற நிலைப்பாடுகளும்,
பரஸ்பர பகிர்வுகளும்,
இயல்பான பேச்சுக்களும்,
உள்நோக்கில்லா தொடுதல்களும்,
ஆரோக்கியமான சிந்தனைகளும்,
கொண்ட நம் நட்பு,
சமூக துச்சாதனர்களால் துகிலுரியப்படும் வரை,
நான் உணரவில்லை நண்பா,
நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!பி.கு : விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவு "ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" :)

Friday, June 08, 2007

அன்புடன்..

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவிதை என்ற பெயரில் எழுதுவதையெல்லாம் சகித்துக்கொண்ட என் தோழிகள் ஒரு கல்லூரியில் நடந்த கவிதைப்போட்டியில் பங்கேற்க சொல்லி வற்புறுத்தி அனுப்பினர்,'யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்' பாலிசி தான் எல்லாம் ;) அந்த நேரத்தில் நான் எழுதி வந்த கவிதைகள்(!) எல்லாம் எப்டின்னா, ஒரு வாக்கியத்துல இருக்கற எல்லா வார்த்தைகளையும் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கவுஜன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்(இப்ப மட்டும் என்னவாம்?:)) நானும் என் தோழிகள் என் கவிதைகளை புகழ்வதை பார்த்துட்டு(அது வஞ்சப்புகழ்ச்சின்னு அப்ப எனக்கு தெரியல;))போட்டில கலந்துக்கிட்டேன். எல்லாரும் கவிதை எழுதறதோட நிறுத்தாம அதை மேடையில் போய் படிக்கணும். நமக்கு இதெல்லாம் புதுசு,ஏதோ கவிதைங்குற பேருல கிறுக்கிட்டு இருந்தேன். எல்லாரும் படிச்ச மாதிரி நானும் போய் படிச்சுட்டு வந்தேன். சரி இப்ப என்ன சொல்ல வர்ர? உனக்கு பரிசு கிடைச்சுதா? அப்டின்னு கேட்கறீங்க. அதான் இல்ல, அங்க வந்தவங்க எழுதியதை பட்டிமன்றத்துல கவிதையை மேற்கோள் காட்ற மாதிரி ஏற்ற இறக்கத்துடன் ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை வாசித்தனர். நானும் அப்டியே செஞ்சேன். கடைசியா பரிசுகளை அறிவிக்க வந்த நடுவர், இப்படியெல்லாம் ஒரு வரியையே திரும்பத்திரும்ப படிக்கறதனால அது கவிதையாகி விடாது என்று சொல்லிட்டு போயிட்டாரு:) நம்ம இமேஜ் டோட்டல் டேமேஜ்:) இப்டி கவிதை எழுதறேன்னு கொல வெறியோட திரிஞ்சுக்கிட்டு இருந்த நான் அதோட வச்சேன் என் கவிதை எழுதும் முயற்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி.


கல்லூரியில் அதுக்கப்புறம் ஆட்டோகிராப் புத்தகத்தில் தான் கடைசியா கவிதை எழுதினேன். என் கவிதைகளில் ஒன்றை வேற வழியே இல்லாம எங்க துறை ஆண்டு மலரில் வெளியிட்டாங்க.(கணக்குக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?:)) இப்படியாக கல்லூரிக் காலத்தில் நிறுத்தி வைத்த என் கவிதை ஆர்வத்தை உண்மையிலேயே உருப்படியாக செதுக்க உதவியது தமிழ் வலைப்பதிவுகள் தான். எதையும் தொடர்ந்து முயற்சித்தால் உருப்படியாக ஏதாவது தேறும் என்று புரிந்துக்கொண்டு இங்கு என் வலைப்பக்கத்திலும் தனியாக கவிதைக் கடையை திறந்தேன் :) அதன் பிறகு என் வலைநண்பர்கள் தரும் ஊக்கத்தினால் இணையத்திலும் கவிதைப் போட்டிகளில் கலந்துக்கொண்டேன்.


இம்முறை அன்புடன் குழுமம் நடத்திய ஆண்டு விழா கவிதைப்போட்டியிலும் கலந்துக்கொண்டேன். இந்த கவிதைப் போட்டியின் விவரங்களை நண்பர் சிவா மற்றும் என் கவிதைக்கடையின் ரகசிய ரசிகையும், கடையிலிருந்து சில கவிதைகளை சுட்டு அன்புடன் குழுமத்தின் 'சுட்ட கவிதைகளில்' வெளியிட்டு என் கவிதைகளுக்கு மதித்தப்பளித்த சேதுக்கரசி அவர்களும் எனக்கு மடல் மேல் மடல் அனுப்பி உற்சாகப்படுத்தினார்.

இம்முறை கவிதைப்போட்டி சற்று வித்தியாசமான முறையில் இருந்தது. கவிதைகளுக்கு தலைப்பு தரப்படவில்லை. அதுவும் தவிர இயல்கவிதை, படக்கவிதை, ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை என்று பிரிவுகள் வேறு. நான் பங்குக்கொண்டது இரு பிரிவுகளில் படக்கவிதை, இயல்கவிதை. சிறிது நாட்களுக்கு முன்பு தான் முடிவுகள் வெளியாகத் துவங்கின. அது மட்டுமில்லாமல் நடுவர்களின் அழகான உரைகளும் தொடர்ந்து வந்தன. சரியாக படக்கவிதை பிரிவின் முடிவுகள் வரும் போது நான் ஊரில் இல்லை. பின் இரண்டு நாட்கள் கழித்து என் மின்னஞ்சல் பெட்டியில் தகவல் வந்திருந்தது நானும் பரிசு பெற்றிருக்கிறேன் என்று. மிகவும் மகிழ்ச்சியோடு அன்புடன் குழுமத்தில் சென்று பார்த்தேன். படக்கவிதை பிரிவில் எனக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு என்றாலும் அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது எனக்கு கிடைத்தது பெரிய விஷயமாக தான் எனக்கு தோன்றியது.

படக்கவிதைகளின் எண்ணிக்கை: 149
கவிஞர்களின் எண்ணிக்கை: 61


படக்கவிதைக்கு நடுவர்களாக இருந்தவர்கள் நாம் ஏற்கனவே அறிந்த வலைப்பதிவாளர்கள் திரு.ஆசிப் மீரான், திரு.பாலபாரதி மற்றும் ஒரு பெயர் வெளியிடாத நண்பர்.

படக்கவிதைக்கு நடுவர்களின் விமர்சனம்:

"தனியாக விளக்கிச் சொல்ல ஏதுமில்லாத வெளிப்படையான கவிதை. நான்கு பக்கத்திற்கு நீட்டி முழக்காமல் நான்குவரிகளில் சொல்லப்பட்டிருப்பதாலேயே இது கவனத்தை சட்டென்று ஈர்த்து விடுகிறது. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் கவிதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு நீளமாகச் சொல்கிறோம் என்பதல்ல என்பதை நிரூபித்த கவிதை. அழகான காட்சிப்படுத்துதலைக் கையாண்டிருக்கும் இந்தக் கவிதை மண்ணடி நீரை மனிதன் உறிஞ்சி மண்ணையே தாகத்தால் தவிக்க வைத்திருக்கும் விசயத்தை சூசகமாக எடுத்துரைக்கிறது.ஆறுதல் பரிசைப் பெறுகிறது இந்தக் கவிதை."


அன்புடன் குழுமத்துக்கும்,சேதுக்கரசிக்கும் நன்றி தெரிவித்து மடல் அனுப்பலாம் என்று நினைக்கையில் நான் பரிசு பெற்றதை நம்ப முடியாமல் என் கணினியும் வேலை நிறுத்தம் செய்துவிட்டது :)இறுதியில் போட்டி முடிவுகள் அனைத்தும் வெளியான பின்பு இன்னொரு இன்ப அதிர்ச்சி, இயல்கவிதை பிரிவில் நடுவராக இருந்த 'திசைகள்' என்னும் வலையிதழ் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் இயல்கவிதை பிரிவில் தன்னை கவர்ந்த கவிதைகள் என்று கூறி பத்து கவிதைகள் தேர்ந்தெடுத்தார். அதில் நான் அனுப்பிய கவிதையும் ஒன்று. அந்த கவிதையும், அதற்கு
திரு.மாலன் அளித்த விமர்சனமும் ஏன் அந்த கவிதை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்படவில்லை? என்ற காரணத்தையும் முன் வைக்கிறார்.


இயல்கவிதை பிரிவில் நான் அனுப்பிய கவிதை :

"நட்பென்னும் கவிதை"

நிலாச் சோற்றில்
நிலவையே சாட்சியாக்கி
எழுதப்பட்டது,
நம் நட்பென்னும் கவிதை.

நம் பாவாடை சரசரக்க,
தெருவில் புழுதி மேகங்களுக்கு நடுவில்,
மின்னலாய் விளையாடி,
சேர்த்து வைத்தோம்
நமக்கான சந்தோஷ கணங்களை.

தலையணையாய் புத்தகங்கள்
தாலாட்டுப் பாட,
ஓர் அன்னையாய் நீ ஊட்டினாய்
பாடங்களை.

பருவத்தில் மலர்ந்ததும்,
கண்களே பாலமாகி,
கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,
நமக்கே நமக்கான,
விடயங்கள்.

மலர்ந்ததும்,
மலர்ந்தது காதல்.
மணப்பந்தலில்,
கண்ணீரை அச்சாரமாக்கி,
நம் பிரிவைக் கடன்வாங்கினேன்,
மீண்டும் மீட்டு விடவே.

இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்,
என் காட்சிகள் என்னவோ நீயாகவே..

என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,
நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி காத்திருக்கிறேன்
உன் வரவிற்காக.

சொல்லாய் நானும்
பொருளாய் நீயும் இருக்க,
காலமே
காலனாய் வந்து
நம் உறவு பிரித்தாலும்
இனி கிடையாது,
நம் நட்பென்னும் கவிதைக்கு "."

திரு.மாலன் அவர்களின் விமர்சனம் :

நட்பிற்குக் கனம் சேர்ப்பது அருகாமையா? பிரிவா? இது ஒரு பட்டிமன்றத்தில்
பதில் தேடிப்பார்க்க வேண்டிய கேள்வியாக இருக்கலாம். ஆனால் ஒரு பருவத்தில் துள்ளி விளையாடி, இன்று தொலைந்து போய்விட்ட நண்பர்களை நினைத்துப் பார்க்கையில் உள்ளத்தின் ஓரமாய் ஓர் வலி உருவாகி மறையும். ஆண்களுக்காவது பரவாயில்லை, இந்தப் புலம் பெயர்கிற யுகத்திற்கு முன்னால் வரை அவர்களது நட்பில் பல ஆயுசு பரியந்தம் தொடர்ந்திருக்கிறது. ஆனால் பெண்களது நட்பு வளையம்? கழுத்தில் கயிறு ஏறிக் கனவன் வீட்டுக்குப் போனபின சில உறவுகளே கூட உலர்ந்து போகிற அவர்களது வாழ்க்கையில், பள்ளி நாட்களில் பயிரான அந்த பால்யகாலத்துச் சிநேகம் தொட்டுத் தொடர்ந்தா வரும்?கல்லூரி நாட்களில் அன்றாடம் பார்த்து அற்ப விஷயங்களிலிருந்து அரசியல் பிரசினைகள் வரை அலசி எடுத்து, வகுப்பெடுக்கும் ஆசிரியர் முதல் வாசல் வழி போகும் அப்பாவி மனிதர்கள் வரை அத்தனை பேரையும் கிண்டலடித்துக் கேலி பேசிகிறுகிறுத்துப் போன தோழமைகள், அந்த மூன்றாண்டுகள் முடிந்து கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறிய சில நாள்களிலேயே காணாமல் போய்விடும் சோகம் சில நட்புக்களுக்கு நேர்ந்துவிடும்.நெருக்கமான தோழியின் திருமணத்திற்குக்கூடப் போக முடியாத சூழல்களில் சிக்கிக் கொள்ளும் சிநேகிதிகளும் உண்டு. இந்த வலி தமிழ் இலக்கியத்தில் அதிகம் பதிவு செய்யப்படாத வலி. (இதை நான் ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறேன் என்பதை விட்டுவிடலாம்) அந்த வலியைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்த இன்னொரு கவிதை. கவிதை மொழி கைவரப்பெற்றிருந்தால் இன்னும் கனம் பெற்றிருக்கும்.

இந்த பதிவின் மூலம் அன்புடன் குழுமத்தை சேர்ந்த திரு.புகாரி, சேதுக்கரசி மற்றும் அனைத்து நடுவர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய வலைநண்பர்களுக்கும் என் நன்றிகளையும், பரிசு பெற்ற மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் :)

Friday, June 01, 2007

படித்ததில் பிடித்தது

இமயம் முதல் குமரிவரை
இழுத்துப் பிடித்திருப்பதால்தான்
வளையாமலிருக்கிறது
இந்த வறுமைக்கோடு

சீனத்து சுவரின்று
'ச்சீ'.. எனபோனது
தேசத்து ரேஷன் தோறும்
பஞ்சம் வரிசையில் நிற்கிறது.

தலைமீறி போனதாலோ
தெரியவில்லை, 'வறுமை'
கோட்டிற்கு கீழ்
வந்தோர்க்கெல்லாம்
'வசதி' தலைப்பாகையானது.

0% வட்டியில்
பென்சுகள் ஓடும் பட்ஜெட்டில்
காற்றில் பறக்குது ஒரு முழம்,
அது
ஏழைக்கெஞ்சியக் கோவணம்!

'தொகைக் கொடுத்தால் தண்ணீர் ;'
என்கிற யுகத்தில்
தொண்டை நனைகிறது இப்படி,
பட்டதும் படாததுமாய்!

பட்டினிச் சாவுகள் எல்லாம்
பழமையாகிக் கொண்டிருக்கிறது.
பசித்தால் உண்ண
பூச்சிக்கொல்லி இருக்கிறதே!

கன்னியாகும் முன்னே
சிறுமிகளுக்கு
தாவணி வேஷங்கள்!

கட்டிய புருஷர்களின்
அனுமதிப்படி நடக்கிறது
மனைவியருக்கு
'சாந்தி முகூர்த்தங்கள்'

'செய்யும் தொழிலே தெய்வம்'
'வசதி'வாரியப் பிரிவில்
வறுமைக்கு வேலைவாய்ப்புகள் பல.

காவிரியில் நீரில்லை
கவலை வேண்டாம்,
கண்ணீரை குடிநீராக்கச் சொல்லுங்கள்,
கடல் எழுந்து
கைத்தட்டும்!

மானம் சுமையாக,
மூலையில் முதிர்கன்னிகள்
முடக்கியது வரதட்சணை
முடங்கியதோ இளமை
கருக உயிர்களை வறுப்பதாலோ
வந்தது பெயர் 'வறுமை'

எழுதியவர் : தென்றல் (கணையாழியில் வெளிவந்தது)

மக்களே இந்த பதிவு சுட்ட பழம் இன்னும் சில நாட்களில் புதுப்பொலிவோடு சுடாத பழம் சீசீ சுடாத பதிவு ஒன்றை வெளியிடுகிறேன் தற்போதைக்கு இந்த கவிதையை சுவையுங்கள் :)