Friday, June 01, 2007

படித்ததில் பிடித்தது

இமயம் முதல் குமரிவரை
இழுத்துப் பிடித்திருப்பதால்தான்
வளையாமலிருக்கிறது
இந்த வறுமைக்கோடு

சீனத்து சுவரின்று
'ச்சீ'.. எனபோனது
தேசத்து ரேஷன் தோறும்
பஞ்சம் வரிசையில் நிற்கிறது.

தலைமீறி போனதாலோ
தெரியவில்லை, 'வறுமை'
கோட்டிற்கு கீழ்
வந்தோர்க்கெல்லாம்
'வசதி' தலைப்பாகையானது.

0% வட்டியில்
பென்சுகள் ஓடும் பட்ஜெட்டில்
காற்றில் பறக்குது ஒரு முழம்,
அது
ஏழைக்கெஞ்சியக் கோவணம்!

'தொகைக் கொடுத்தால் தண்ணீர் ;'
என்கிற யுகத்தில்
தொண்டை நனைகிறது இப்படி,
பட்டதும் படாததுமாய்!

பட்டினிச் சாவுகள் எல்லாம்
பழமையாகிக் கொண்டிருக்கிறது.
பசித்தால் உண்ண
பூச்சிக்கொல்லி இருக்கிறதே!

கன்னியாகும் முன்னே
சிறுமிகளுக்கு
தாவணி வேஷங்கள்!

கட்டிய புருஷர்களின்
அனுமதிப்படி நடக்கிறது
மனைவியருக்கு
'சாந்தி முகூர்த்தங்கள்'

'செய்யும் தொழிலே தெய்வம்'
'வசதி'வாரியப் பிரிவில்
வறுமைக்கு வேலைவாய்ப்புகள் பல.

காவிரியில் நீரில்லை
கவலை வேண்டாம்,
கண்ணீரை குடிநீராக்கச் சொல்லுங்கள்,
கடல் எழுந்து
கைத்தட்டும்!

மானம் சுமையாக,
மூலையில் முதிர்கன்னிகள்
முடக்கியது வரதட்சணை
முடங்கியதோ இளமை
கருக உயிர்களை வறுப்பதாலோ
வந்தது பெயர் 'வறுமை'

எழுதியவர் : தென்றல் (கணையாழியில் வெளிவந்தது)

மக்களே இந்த பதிவு சுட்ட பழம் இன்னும் சில நாட்களில் புதுப்பொலிவோடு சுடாத பழம் சீசீ சுடாத பதிவு ஒன்றை வெளியிடுகிறேன் தற்போதைக்கு இந்த கவிதையை சுவையுங்கள் :)

6 comments:

மு.கார்த்திகேயன் said...

முதல் வரியே டாப் கியரில் தொடங்குகிறதுங்க வேதா.

தேசத்தின் சந்தோசப் பக்கங்களின் மறுபக்கத்தை தொட்டிருக்கிறார் கவிஞர், கூடவே படிப்பவரின் இதயங்களையும்

மு.கார்த்திகேயன் said...

அன்புடன் கவிதை போட்டியில் பரிசு வாங்கிட்டீங்க போல. வாழ்த்துக்கள் வேதா..

கலக்குங்க வேதா..

தி. ரா. ச.(T.R.C.) said...

படிக்க ஒரு கவிதை. பரிசுக்கு ஒரு கவிதை. வாழ்த்துக்கள்

Arunkumar said...

//
0% வட்டியில்
பென்சுகள் ஓடும் பட்ஜெட்டில்
காற்றில் பறக்குது ஒரு முழம்,
அது
ஏழைக்கெஞ்சியக் கோவணம்!
//

நச்சுனு சொல்லியிருக்காரு !!

Arunkumar said...

அன்புடன் கவிதை போட்டி பத்தி ஒரு பதிவு (உங்க கவிதைங்களோட) pending.. சீக்கிரம் போடுங்க :P

சிங்கம்லே ACE !! said...

வறுமையின் கொடுமையை உணர்த்தும் நல்ல கவிதை..