Wednesday, July 25, 2007

வாழ்த்துகிறேன் இன்று...

இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர் 'பில்லு பரணி' அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கு கூறிக்கொள்கிறேன். பரணி நீங்க ரொம்ப நாளாக எழுதி வந்தாலும் கிட்டத்தட்ட உங்க 100வது பதிவுல தான் உங்க அறிமுகம் எனக்கு கிடைச்சது.

ஆரம்பத்தில் படித்தேன் என்று கூறிக்கொள்வதற்காக மட்டுமே என் பின்னூட்டங்களை பதிய ஆரம்பித்த நான் கடந்த சில மாதங்களாக தான் தொடர்ந்து உங்க பதிவுகளை ஆழமாக(!) படித்து வருகிறேன். உங்க நகைச்சுவை உணர்வு(அதுவும் உங்க டைமிங் சென்ஸ் சூப்பர்:))அழகிய ஹைக்கூ கவிதைகள், பீலிங்க்ஸ் பதிவுகள், சமயத்தில் சில மொக்கைகள் என எல்லாமே எனக்கு பிடித்தவை தான் :) இன்னும் சொல்லப்போனால் நான் எழுதும் கவிதைகளை படித்து தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கும் , சமயத்தில் பின்னூட்ட புயலாக மாறி என் பின்னூட்ட பெட்டியை நிறைத்ததற்கும் என் நன்றிகள்.

என்னையும் குருவாக ஏற்று பணியும் அன்பு சிஷ்யனே தொடரட்டும் உன் பதிவெழுதும் பணி. இன்று மட்டுமல்லாமல்,என்றும் பல சிறப்புகள் பெற்று நீ வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
"இன்னும் வார்த்தை தேடுகின்றேன் உன்னை வாழ்த்துவதற்கு! "

ம்மாவின் அன்பும்
ன்றோரின் நட்பும்
தழோரத்து புன்னகையும்
தல் குணமும்
ண்மையான மனமும்
ரறியும் பெருமையும்
ன்றும் மகிழ்வும்
ற்றமிகு வாழ்வும்
யமில்லா வாக்கும்
ருமித்த கருத்தும்
கோவென்ற புகழும்
ஒளவையின் சொல்லும்

(என்றும் உன்னோடு திகழ)
'ஃ' போல்,
ஒன்று இரண்டாகி
பின் மூன்றாகவும்
வாழ்த்துக்கள் :)
உன் பழைய பதிவுகளை புரட்டிப் பார்த்ததில் சில வரிகளை மேற்கோள் காட்டி "I want a life like that….Is that a dream?" என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தாய். "கறுப்பா சிவப்பா தெரியவில்லை கவலைகள் இது வரை முளைத்ததில்லை" என்ற பாடல் வரிகளின் படி, நீ நினைக்கும் அந்த வாழ்க்கை உனக்கு கண்டிப்பாக அமைய கடவுளை வேண்டுகிறேன் பரணி :) இதுவே உன் பிறந்த நாளுக்கு என் எளிய பரிசு :)

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"
Monday, July 23, 2007

தெய்வத்தின் தரிசனம் !

ரொம்ப நாளா எழுதறேன்னு சொல்லி இழுத்தடிச்சு இனி ஏமாத்த முடியாதுன்னு தெரிஞ்சுப்போச்சு :) காயத்ரி வேற அவ வலைப்பக்கத்துல என் கவிதைய போட்டு எனக்கு ஓசில வெளம்பரம் கொடுத்துட்டா, அப்புறமும் அவ கொடுத்த கவிதை(!) டேகை எழுதாம விட்டா அது கேவலமா போயிடும், அதனால் இதோ, நம்ம தத்துவ ஞானி தொடங்கி வைத்த "தேவதை கனவுகள்", அடுத்த அத்தியாயமாய் காயத்ரியிடம் "மன்னவன் வந்தானடி தோழி" என மலர்ந்து இங்கு "தெய்வத்தின் தரிசனம்" எனத் தொடர்கிறது. இதையடுத்து எங்கு இக்கவிதை மலரப்போகிறது என பிறகு பார்க்கலாம் :)இப்ப கவிதைக்கு போகலாமா? :)

(இது காயத்ரி எழுதிய கவிதையின்(!) இறுதி வரிகள்)

இன்று மாலையும்
கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்
முக்கியமான விஷயம்
பேச வேண்டும் என்று
அது என்னவாக இருக்கும்
என்று அறிந்திருந்தாலும்
ஆவலுடன் கிளம்புகிறேன்!!!(இனி என் கற்பனை!)இதுவரை
ஒரு நிமிடம் தாண்டி
என் முகம் தங்கியதில்லை
நிலைக்கண்ணாடியில்;

இன்றோ கணக்கில்லா கணங்களாய்
நான் அழகு பார்க்க,
குத்தகைக்கு எடுத்தேனோ என்று
என் நிலைக்கண்ணாடியும் வியக்க,
இது வரை உணர்ந்திராத
நானறியா என் நாணத்தை
பிம்பத்தில் கண்டு
நானும் வியந்தேன்!

பெண்மை பூரித்து
என் மெய்யில் கலந்திருந்தும்,
ஆண்மையும் வியக்கும்
ஆண்களை கண்டிருந்தும்,
சலனிக்காத என் மனம்
சட்டென கலைந்தது
உன் தரிசனத்தில்;

தேவதைகள் தரிசனம்
கனவில் மட்டும் தான்,
ஆனால்
நித்தமும் உன் தரிசனம்
நிஜத்தில் என் கிழக்கில்
ஆதித்யனாய்!

புதைந்திருந்த ஆசை,
வரைந்திருந்த கற்பனை,
நிறைந்திருந்த அன்பு,
இவையாவையும் விட
மிகுந்திருந்த என் கர்வம்
எல்லாமாக சேர்த்து வைத்தேன்
என்றாவது உன்னிடம் சமர்ப்பிக்க!

உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்,
ஆனால் உன்னை இன்னும்
நெருங்க முடியவில்லை;

உன் விழிகளால்
என் கர்வம் உடைத்தவனே
இனி எந்நாளிலும் இவ்விழிகள்
எனக்கு மட்டுமே!

இல்லை! இல்லை!
என்று கூறி வந்த என்னை
ஆம்!ஆம்!
எனக் கூற வைத்தவனே,
என் நிலை மறந்து
என் மெய் துறந்து
காதலாகி
கசிந்துருகி
நான் கேட்பதெல்லாம்,
"தேக்கி வைத்த அன்பின்
கனந்தாங்காமல் விம்மும்
என் காதலை தாங்கிக்கொள்ள
உன் தோள்கள் கிடைக்குமா?"

கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க!
தெய்வத்தை தேடிச்சென்ற வெண்மதிக்கு(இது தலைவிக்கு நான் வைத்த பெயர்:))கிடைத்தது வரமா? சாபமா? விடை அறிய யாராவது இந்த கவிதை சங்கிலியை தொடர வேண்டும், அதற்கு சரியான தகுதியுடையவர் என நான் கருதுவது எனது அருமை சிஷ்யன், மஞ்சக்காட்டு மைனாவை தேடி அலையும் பில்லு பரணி (இது குருவின் ஆனை சீசீ ஆணை:) சாரி பிரியா உன் நினைவுல ஆனைன்னு சொல்லிட்டேன் ஹிஹி)

Monday, July 16, 2007

நன்றியுரைத்தேன் இன்று..

இன்றுடன் நான் வலைப்பதிய ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஊக்கமளித்த என் இனிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :)

மீண்டும் அடுத்த வருடமும் உங்களுக்கு நன்றி கூறும் வகையில் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் அவா :)


தனித்திருக்கும் பொழுதுகளில்
துணையாய் வந்துதித்து,
மனக்கிடங்கில் உறங்கிக்கிடந்த
சோம்பலை தட்டி எழுப்பி,
விரல்கள் பிரசவித்த வார்த்தைகள்
என் வலைப்பூக்களில் மணம் பரப்ப,

நாற்புறமும் வண்ணங்கள்
அள்ளி இறைக்கும் பட்டாம்பூச்சிகளாய்,
என் வலைப்பூக்களை சுற்றி வந்து
என் இதழ்களுக்கு
புன்னகையை பரிசாய் அளித்த
நட்புள்ளங்களுக்கு தருவதற்கு
என்னிடம்,
நன்றியை தவிர
வேறு வார்த்தைகள் இல்லை..


என்றும் அன்புடன்,
வேதா

Friday, July 13, 2007

படித்ததில் பிடித்தது..

மு.கு : ரவீந்தரநாத் தாகூர் அவர்களின் 'கீதாஞ்சலி' கவிதைத்தொகுப்பின் தமிழ் மொழிப்பெயர்ப்பின் ஒரு பகுதி இது. தமிழில் மொழிப்பெயர்த்தவர் திரு. மானோஸ். நான் படித்தவரை இந்த பகுதி எனக்கு மிகவும் பிடித்தது. எனவே இங்கு உங்கள் பார்வைக்கும் ..


நேரம் பறக்கிறது,வழியோ நெடுந்தூரம், என் யாத்திரைக்கு ஒரு முடிவில்லை. ஆதி முதல் தோன்றிய சோதிக்கதிர் ஒன்றில் நான் வெளிவந்தேன். வனாந்தரங்கள் போன்ற எத்தனையோ உலகங்களைக் கடந்து, பல நட்சத்திர மண்டலங்களின் வழியே நான் யாத்திரை செய்தேன். எனக்கு வெகு தொலைவிலுள்ள பாதையே உனக்கு மிக அருகே உள்ளது. திக்குத் திசை தெரியாமல் வளைந்து செல்லும் முயற்சியே, ஒரு கீதம் போல் தெளிவாயுள்ள தெய்வீகப் பாதையில் சேர்கிறது.

யாத்ரீகன் பக்கத்து வீடெல்லாம் தட்டிப் பார்த்த பிறகே தன் வீட்டை அடைகிறான்.அது போல் உன் இதயக் கோயிலை அடைய பல வெளியுலகங்களைத் தாண்டி அலைய வேண்டியிருக்கிறது.

என் கண்கள் உன்னைத் திசை திசையாகத் துருவிப் பார்த்தும் காண முடியாமல் நான் கண்களை மூடினேன். 'இதோ இருக்கிறாய்' என்று சிக்கெனப் பிடித்துக் கொண்டேன்.

'எங்கே,எங்கே?' என்று ஓலமிட்டுப் பெருகிய என் கண்ணீரெல்லாம் ஆயிரம் ஓடைகளாகப் பெருகி, 'நானே உண்மை!' என்ற பெருவெள்ளத்தோடு சேர்ந்து உலகைப் பிரளயமாக்குகிறது.
பி.கு : அப்டியே இந்த பாடலையும் கேட்டுட்டு போங்க. அருணா சாய்ராம் குரலில் கண்ணன் மீது ஒரு கிராமிய பாடல் :) கண்டிப்பாக ரசிப்பீர்கள் :) (பாடலை வலையேற்றுவதற்கு எனக்கு உதவிய ஒரு வலைப்பக்கம் இங்கே)
பி.கு.கு : மக்களே போன பதிவில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, அங்க பதில் போடாததுக்கு இங்க மன்னிப்பு கேட்டுக்கறேன். வீட்டுல தொடர்ந்து ஆணி புடுங்க வச்சுட்டாங்க, அதான் தனித்தனியா பதில் போட முடியல :) இந்த அழகுல , அழகு சங்கிலித்தொடர் வேற எழுதனும், வாக்கு கொடுத்துட்டேன் தலைவி(வலி)க்கு(எப்ப டேக் பண்ணினாங்க? எத்தன பேர் டேக் பண்ணினாங்கன்னு கூட நினைவுல இல்ல அவ்ளோ பழைய டேக்;)), அதை தவிர இன்னும் ஒரு டேக் பாக்கியிருக்கு(காயத்ரி கண்டிப்பா எழுதிடறேன்:)) எனவே மக்களே! மீண்டும் திங்கட்கிழமை உங்களை சந்திக்கிறேன் எனக்கூறி விடைபெறுவது உங்கள் அன்புத்தோழி வேதா :)

Monday, July 02, 2007

நேற்றே எழுதியிருக்க வேண்டியது ..

நேற்று மருத்துவர் தினம் என்று தினசரியில் போட்டிருந்தார்கள். உடனே எங்கள் குடும்ப மருத்துவர் திரு.பஞ்சாட்சரம் செல்வராஜன் அவர்களின் நினைவு தான் வந்தது. இவர் எங்கள் குடும்ப மருத்துவர் என்பதை விட குடும்ப நண்பர் என்றே சொல்லலாம். மருத்துவர் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஊசி, மருந்து வாடை, வாடிய முகங்கள், மிகவும் சீரியஸான டாக்டர் முகம். ஆனால் எங்கள் மருத்துவர் அவ்வளவு எளிதாக ஊசி போட்டு விடமாட்டார். முடிந்த வரை மாத்திரைகளை பயன்படுத்திவிட்டு தேவையென்றால் மட்டுமே ஊசியின் உதவியை நாடுவார். எனவே சிறு குழந்தைகளிடையே இவர் மிகவும் விரும்பப்படுபவர். வசதியில்லாதவர்களின் நிலை உணர்ந்து உதவி புரிபவரும் கூட.


ஏதாவது உடல் நிலை சரியில்லையென்று இவரை பார்க்க செல்லும் பொழுது உள்ளே நுழைந்தவுடன் இவர் சிரித்த முகமே எங்கள் உடல் உபாதையை மறக்கடித்துவிடும். ஏதாவது நகைச்சுவையாக பேசிக்கொண்டே இருப்பார். இவரும் என்னை போல ஒரு புத்தகப்பிரியர். எங்க நூலகத்தில் உள்ள புத்தகங்களை பற்றி பேசுவோம், சில இலக்கிய இதழ்களை எனக்கு படிக்க கொடுத்து உதவுபவரும் கூட. குடும்ப நண்பர் என்ற முறையில் அவருடைய செல்பேசியின் எண்ணை எங்களுக்கு கொடுத்த அவரை செல்லில் அழைத்து மருந்து கேட்கும் பழக்கமே எங்களுக்கு கிடையாது, முக்கியமாக நானும் என் தம்பியும் அவரை சந்திக்க செல்லும் போது எல்லாரையும் போல வரிசையில் தான் செல்வோம். ஒரு முறை என் தந்தை நாங்கள் அவரை செல்லில் அழைத்து தொந்தரவு செய்ய மறுத்ததை குறிப்பிட்ட போது அவர்களும் என் பிள்ளைகள் போல தான் எனவே தாராளமாக தொடர்பு கொள்ளலாம் என கூறியது அவருடைய பெருந்தன்மைக்கும் அன்பிற்கும் ஒரு அழகிய சான்று.


அது மட்டுமல்ல இவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய பல சிறுகதைகள் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றை தொகுத்து "மகாலி என்னும் மகாலிங்கம்" என்று ஒரு புத்தகமாக கூட வெளியிட்டுள்ளார். மருத்துவ துறை சார்ந்த "வியத்திகு சிறுநீரகங்கள்" என்ற புத்தகமும் எழுதி வெளியிட்டார். சிரித்த முகத்துடனும், அந்தஸ்து பேதமின்றி அனைவரையும் மதிக்கும் நற்பண்புடனும், நட்புறவுடனும், சமூக சிந்தனையுடனும், அனைத்தையும் விட சிறந்த மனிதராகவும், மருத்துவராகவும் இருக்கும் எங்கள் மருத்துவருக்கு நேற்றே மருத்துவ தின வாழ்த்துக்களை என் செல்பேசியிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டாலும் இந்த பதிவின் மூலம் என் வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.