Thursday, November 01, 2007

மீண்டும் ஒரு பயணம் -4 (இறுதிப் பகுதி)

இராமேசுவரத்தில் இராமநாதசுவாமி கோவில் மட்டுமில்லாமல் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்கள், புராணம் சம்பந்தப்பட்ட இடங்கள் அமைந்துள்ளன. அவற்றை சுற்றி பார்க்க சிறந்த வழி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்துக்கொள்வது தான். கோவிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் விசாரித்த போது 200ரூ ஆகும் என்றும் சொன்னார்கள். எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் ஒரே மாதிரி தான் வசூலிக்கிறார்கள், எனவே பேரம் பேச முடியாது, அதுவும் தவிர நாங்க சுற்றி பார்த்த பிறகு தான் தெரிந்தது 200ரூ நியாயம் தான் என்று. என்னென்ன இடங்கள் பார்க்க போகிறோம் என்று அவர்களே ஒரு அட்டையில் அச்சடித்து வைத்திருக்கிறார்கள் அவர்களே தான் கைடும்.


(கோதண்டராமர் திருக்கோவில்)முதலில் நாங்க போனது கோதண்டராமர் கோவில். தனுஷ்கோடிக்கு போகும் பிரதான சாலையில் தனுஷ்கோடிக்கு ஆறு கிலோமீட்டர் முன்பாக இடது பக்கத்தில் ஒரு கிளைச்சாலை இருக்கிறது, இதில் சிறிது தூரம் பயணித்தால் இந்த கோவில் வருகிறது. இந்த இடத்தில் தான் விபீஷணன் இராமரிடம் சரணாகதி அடைந்ததாக கூறப்படுகிறது. தனுஷ்கோடியை கடல் கொண்ட போது இந்த கோவிலும் முழுகிவிட்டதாம், அதற்கு சாட்சியாக பழைய கோவிலின் இரண்டு கற்தூண்கள் இங்கு நிற்கின்றன, தற்போது புதிதாக அதே இடத்தில் கோவிலை சிறிது உயரத்தில் நிர்மாணித்துள்ளனர்.

இரண்டாவதாக நாங்க சென்ற இடம் ராமர் பாதம் அமைந்துள்ள கோவில் இதுவும் சற்று உயரத்தில் தான் அமைந்திருக்கிறது, இராமர் சீதையை மீட்க இலங்கைக்கு செல்வதற்கான வழியை ஆலோசித்த இடம் எனக் கூறப்படுகின்றது. அளவில் சின்ன கோவில் தான் ஒரே ஒரு சன்னிதி அங்கு இராமர் பாதம் அமைந்துள்ளது. அதை தரிசித்து விட்டு அதே கோவிலில் மேல் கூரைக்கு செல்ல படிகள் உண்டு, இங்கு ஏறிப்பார்த்தால் இராமேசுவரம் முழுவதும் தெரிகிறது, ரொம்ப அருமையான காட்சி கண்டிப்பா பார்க்க வேண்டியது. இந்த கோவிலுக்கு போகும் வழியிலேயே அமைந்துள்ளது சாட்சி ஆஞ்சநேயர் கோவில், ரொம்ப சின்ன இடம் தான். இதில் புராண விசேஷம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியல ஆனா இது இவங்களோட பட்டியலில் மூணாவது இடம்.

அதற்கடுத்து நாங்க பார்த்த மூன்று இடங்கள் இராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம். இராமர் தீர்த்தம் என்பது ஒரு குளம், இராவண வதத்தையடுத்து ஏற்பட்ட தோஷம் நீங்க இங்கு குளித்ததால் இது இராமர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது, இங்கு ஒரு கோவிலும் உள்ளது. ஆனா நாங்க போன போது மூடியிருந்தது அதனால இந்த கோவிலை பற்றி அதிகம் தகவல் தெரியல. லட்சுண தீர்த்தம் என்பது இராவணனின் மகனை இலட்சுணனன் கொன்ற பாவம் நீங்க குளித்த இடம் என்று சொன்னார்கள் இங்கேயும் ஒரு சின்ன சிவன் கோவில் இருக்கிறது. சீதா தீர்த்தம் சிதிலிமடைந்து உள்ளது இப்ப புணரமைப்பு நடந்து வருகின்றது. இந்த மூன்று இடத்திலும் மக்களை கவர்வது என்னவென்றால் மிதக்கும் கல் என்று சொல்லி ஒரு தொட்டியில் பெரிய கற்களை விட்டிருக்கிறார்கள் நாம் தொட்டு தூக்கி பார்க்கலாம், நல்ல கனமாக தான் இருக்கிறது.

இம்மூன்று தீர்த்தங்களையும் பார்த்த பிறகு அருகிலேயே பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது, இது சின்ன வீடு போன்ற அமைப்பில் உள்ளது, பெரிய பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கே பல வருடங்களாக ஒளிர்ந்து வரும் ஒரு அணையா தீபம் இருக்கிறது, இங்கேயும் மிதக்கும் கல் வைத்திருக்கிறார்கள், ராமர் பாலம் கட்ட இந்த வகை கற்களை தான் உபயோகித்தார் என்று அங்கிருந்த அர்ச்சக கூறினார். பாண்டிச்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ள பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் தான் இந்த மாதிரி கல்லை நான் முதன்முதலில் பார்த்தேன். அதை பற்றி சொல்லும் போது இங்கிருந்து தான் அங்கே எடுத்துச்செல்லப்பட்டது என்று சொன்னார், மேலும் இராமர் தீர்த்தம், லட்சுண தீர்த்தம் போன்ற இடங்களில் வைத்திருக்கும் கற்கள் இவையல்ல என்றும் அங்கு காசுக்காக ஏமாற்றுகிறார்கள் என்று ஆட்டோ ஓட்டுனர் சொன்னார். இந்த கோவிலுடன் இந்த சின்ன சுற்றுப்பயணம் முடிகின்றது, இந்த இடங்களையெல்லாம் சுற்று பார்க்க கிட்டத்தட்ட குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும், எல்லா இடங்களையும் பற்றி சொல்வதோடு மட்டுமல்லாமல் பொறுமையாக காத்திருந்து அழைத்து போகிறார்கள். எனவே இதையெல்லாம் சுற்று பார்க்க ஆட்டோ தான் நல்ல தேர்வு. முக்கியமாக நம் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமின் வீட்டுக்கும் அழைத்து சென்றார். இப்பொழுது அங்கு அருகிலேயே அவருடைய சகோதரர் கடை வைத்திருக்கிறார். இங்கு முத்துக்கள் நன்றாக இருக்குமென என் சித்தப்பா சொல்லி அனுப்பியிருந்தார், ஆனால் நாங்க போயிருந்த நாள் வெள்ளிக்கிழமையானதால் எல்லாரும் தொழுகைக்கு சென்றிருந்தனர். அதனால் கடை மூடியிருந்தது.

இதன் பிறகு திரும்பவும் கோவில் அருகிலேயே இறங்கிக்கொண்டோம். மாலை 5 மணி அளவில் திரும்பவும் கோவிலருகே அமைந்துள்ள கடைகளை சுற்றி பார்க்க வந்தோம், பொதுவாக விலை அதிகமாக தான் சொல்கிறார்கள். காலையில் தான் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது அதுவும் தவிர தரிசனம் முடித்தவுடன் சரியாக சுற்றி பார்க்கவில்லை என்று என் அம்மாவிற்கு குறை. அதனால திரும்ப கோவிலுக்கு போனோம், ஆச்சரியமாக கூட்டமே இல்லை இலவச தரிசன வரிசையிலேயே சிறிது நேரம் நின்று தரிசனம் செய்ய முடிந்தது. கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் காலையில் ஊருக்கு வரும் பேருந்துகள்,ரயில்களில் வருவதால் காலையில் தரிசன கூட்டம் அதிகமாக இருக்கின்றது, நன்றாக தரிசிக்க வேண்டுமென்றால் மாலையில் செல்வது உத்தமம்.


(அக்னி தீர்த்தம்)சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு அழகிய உதாரணமாக திகழும் இராமேசுவரம் நிச்சயம் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய இடம். இந்த பகுதியோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன். இராமேசுவரத்திலிருந்து திருப்புல்லாணி,சேதுக்கரை ஆகிய இடங்களுக்கு சென்றோம். தற்போது அதை பற்றி எழுதும் மனநிலையில் இல்லை எனவே பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் :)

12 comments:

Sumathi. said...

ஹாய் வேதா,

அழகா நல்லா சொல்லியிருக்கீங்க.நானும் ஒரு 3 வாட்டி போயிருக்கேன். அதிலயும் இந்த் ஆட்டோவிலயும்போயி நீங்க சொன்ன இடத்தையும் பாத்துருக்கேன்.
எல்லாமே நல்லாயிருக்கு.

நாகை சிவா said...

நல்ல பயணம்...

எல்லா இடமும் பாத்தீங்க...

ராமர் பாலம் பாக்கலையா?

Compassion Unlimitted said...

mikka nandri..oru arumayana thoguppu..innum konjam ethir paarkalaam endru ninaitha podhu..//இராமேசுவரத்திலிருந்து திருப்புல்லாணி,சேதுக்கரை ஆகிய இடங்களுக்கு சென்றோம். தற்போது அதை பற்றி எழுதும் மனநிலையில் இல்லை எனவே பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் :)// ippadi koori vitteergale..hope everything is fine with you
God Bless
TC
CU

Dreamzz said...

/எல்லா இடமும் பாத்தீங்க...

ராமர் பாலம் பாக்கலையா?//
ரிப்பீட்டு!

Dreamzz said...

அப்புறம் ஒரு இடத்துல ஆஞ்சினேயர் கோயில் இருக்க்கும். ஆதுக்கு எதிர்தாப்ல, கடல் அமைதியா தெளிவா இருக்குமே.. பாத்தீங்களா??

ambi said...

நல்ல அருமையான விவரனை. அடுத்த முறை நான் போகும் போது நினைவில் வைத்து கொள்கிறேன். :)


//ராமர் பாலம் கட்ட இந்த வகை கற்களை தான் உபயோகித்தார் என்று அங்கிருந்த அர்ச்சக கூறினார்.//

அப்ப, பாலம் இருக்கு!னு சொல்ல வரீங்க, அதானே! :p

@puli, புலி, நல்லா கோர்த்து விடற பா! எப்படியோ வேதா வீட்டுக்கு ஆட்டோ, சுமோ போனா சரி. :)))

வேதா said...

@சுமதி,
ஓ நீங்க மூணு போயிருக்கீங்களா? அப்ப நான் எழுதினதுல எதுவும் தவறான தகவல் இல்லியே :D

@சிவா,
இல்ல ராமர் பாலம் பார்க்கல :)

@cu,
உங்க கரிசனத்துக்கு நன்றி :) பெரிதாக எதுவும் இல்லை ரெண்டு நாளா கொஞ்சம் தலைவலி கூடவே எழுத சோம்பேறித்தனமும் :D

@ட்ரீம்ஸ்,
நீ எந்த ஆஞ்சநேயர் கோவில் சொல்ற? எனக்கு தெரியலயே

@அம்பி,
இந்த விவரனை உங்களுக்கு உபயோகமா இருந்தா எனக்கு மகிழ்ச்சி தான் :)

/அப்ப, பாலம் இருக்கு!னு சொல்ல வரீங்க, அதானே! :p/
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் :) நான் சொன்னது சரியா? தவறா இருந்தா திருத்தவும் :)

என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பறதுல அவ்ளோ சந்தோஷமா? நல்லா இருங்க :D

Compassion Unlimitted said...

Onnu kekka marandhutten..indha murai sutta padama illai sudatha padama ?
TC
CU

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம், நல்லா இருக்கு, இந்தப் பகுதி, இவை எதும் நாங்க இன்னும் பார்க்கலை, ஒவ்வொரு முறை செல்லும்போது அவசரமாயே திரும்புவதால் இது எல்லாம் பார்க்க முடியலை. ஆனால் திருப்புல்லாணி, தேவிபட்டினம் போன்ற இடங்கள் சென்றிருக்கிறோம்.

கீதா சாம்பசிவம் said...

சேதுக்கரை, அதாவது தனுஷ்கோடிக்குப் போயிருக்கோம். மற்றவை இனி எப்போவாவது போனால் பார்க்கணும். மனநிலையில் இருந்து தேறிவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இங்கேயும் அதே!!!!! சேம் ப்ளட்? :(

வேதா said...

@cu,
சுட்ட பழம் தான் :)

@கீதா,
நாங்களும் தேவிப்பட்டணம் போயிருந்தோம் அதை பற்றி வேறு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

/மனநிலையில் இருந்து தேறிவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்./
தங்கள் அன்புக்கு நன்றி :)

Sathish said...

mmm...