Monday, November 26, 2007

நினைத்தேன் எழுதுகிறேன்!..

நம் வாழ்க்கையெனும் சாலையை செப்பனிட்டு இருமருங்கிலும் நல்விதைகளை தூவி நன்னடத்தையை தழைத்தோங்க செய்யும் முக்கிய பணி குடும்பமெனும் கட்டமைப்பில் பெற்றோரிடமும், சமுதாயம் எனும் அமைப்பில் ஆசிரியரிடமும் தான் இருக்கின்றது. நம்முடைய பள்ளி,கல்லூரி வாழ்க்கையில் நம்மை செம்மைப்படுத்திய ஆசிரியர்களும் உண்டு, வெறுப்பை வளர்த்த ஆசிரியர்களும் கண்டிப்பாக உண்டு. என்னுடைய அம்மாவும் ஆசிரியப் பணியில் இருப்பவர் தான், என் அம்மா பணிபுரியும் பள்ளியில் தான் நான் படித்தேன்.

பள்ளியை பொறுத்தவரையில் என் அம்மா மிகவும் கண்டிப்பானவர், அதே சமயத்தில் மிகவும் அன்பானவர், இது வரை என் அம்மாவிடம் பயின்றவர் ஒருவர் கூட என் அம்மா தன்னை அடித்ததாகவோ அல்லது சரியாக படிக்கவில்லையென்று அலட்சியப்படித்தியதாகவோ புகார் சொன்னதேயில்லை. நாம் வகுப்பில் கூறும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செய்கையும் மாணவர்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விடும் என்று என் அம்மா சொல்வார்.

சரியாக படிப்பவரை பாராட்டி உற்சாகப்படுத்தும் அதே நேரம் படிக்காதவரை மற்றவர் எதிரில் மனம்நோக கிண்டல் செய்வது என்பது மிகவும் தவறான ஒரு விடயம், அதை விட தவறானது படிக்காத மாணவர்களை அலட்சியப்படுத்துவது. சில ஆசிரியர்கள் அது மாதிரி இருப்பதுண்டு அவர்களை பற்றி தான் இந்த பதிவு. இவர்கள் எப்படியென்றால் நன்றாக படிக்கும் சில மாணவர்களை தங்கள் செல்லப்பிள்ளைகளாக தத்து எடுத்துக்கொண்டு அவர்களுக்கு மட்டும் தனியாக குறிப்புகள் தருவது, வகுப்பில் அவர்களை மட்டுமே பார்த்து பாடமெடுப்பது, அவர்களை மட்டுமே கேள்விகள் கேட்டு மேலும் மேலும் உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களை மேற்கொள்வார்கள்.

ஏங்க படிக்காதவனை படிக்க வைக்கறதுல தாங்க ஒரு ஆசிரியரோட வெற்றியே இருக்கு, நல்லா படிக்கறவனை மேலும் நல்லா படிக்க வைக்கறது ஒன்னும் பெரிய விடயம் இல்லை, ஒன்னுமே தெரியாதவனை படிக்க வைக்கறது தான் சாதனை, ஆனா இப்ப இருக்கற பள்ளிகள் அப்டியா இருக்கு, எல்.கே.ஜி சேர்க்கறதுக்கு கூட நுழைவு தேர்வு வைக்கறாங்க. சரி பதிவோட நோக்கம் அது இல்ல, குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் உற்சாகப்படுத்தி மத்தவங்களை எப்டியோ போகட்டும்னு விடற ஒரு சில ஆசிரியர்களை பத்தி தான்(இதையெல்லாம் அவங்க எங்க படிக்கபோறாங்கன்னு நீங்க நினைச்சாலும் என்னோட ஆதங்கத்தை தான் இப்டி பதிவா போட்டு புலம்பறேன், அதனால கண்டுக்காம மேல படிங்க:))

நான் கல்லூரியில படிக்கும் போது ஒரு கஷ்டமான பாடப்பிரிவை எடுக்கறதுக்கு ஒரு அருமையான பேராசிரியை வந்தாங்க. அவங்களோட திறமையை பத்தி ஏற்கனவே எங்க சீனியர்ஸ் சொல்லியிருந்தாங்க, அவங்க பாடம் எடுக்க ஆரம்பிச்ச சில வகுப்புகளுக்குள் நாங்களும் அதை கண்டுக்கொண்டோம். ஒவ்வொரு வகுப்பிலும் மிகவும் அழகாக முன்பே திட்டமிட்டு அன்றைக்கான பாடத்தை ஒரு குழந்தைக்கு சொல்லித் தருவது போல் சொல்லித்தருவார், தங்களுக்கு தான் எல்லாம் தெரியும், தவறாக சொல்லிக்கொடுத்தாலும் தான் சொல்றது தான் சரி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சில ஆசிரியர்களுக்கிடையே தனக்கு தெரியாத விடயங்களை எங்களிடையே வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுடன், அடுத்த வகுப்பிலேயே அதை தெரிந்துக்கொண்டு வந்து எங்களுக்கு விளக்கி சொல்வார்.

இவ்வளவு அருமையான ஆசிரியரிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம் சில நாட்களிலேயே வெட்டவெளிச்சமாகி விட்டது. மிக நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் என்று ஒரு சிலர் கண்டிப்பாக ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பார்கள், இவங்களுக்கெல்லாம் ஒரு முறை மேலோட்டமாக சொல்லிக்கொடுத்தாலே புரிந்து விடும். அந்த மாதிரி சில தோழிகள் எங்க வகுப்பிலும் இருந்தாங்க(சில பேர் மதிப்பெண் மட்டும் வாங்கிடுவாங்க ஆனா ஏதேனும் சந்தேகம் கேட்டா சொல்ல தெரியாது, அந்த மாதிரி இல்லாம உண்மையிலேயே புத்திசாலிங்கள தான் நான் இங்க குறிப்பிடறேன்).

இந்த பேராசிரியை இந்த மாணவியர் அமரும் திசை பார்த்து மட்டும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க நாங்களெல்லாம் ரொம்ப மட்டம் இல்லையென்றாலும் ரொம்ப அறிவாளியெல்லாம் இல்லை, இதனால கஷ்டப்பட்டது மத்த எல்லா மாணவர்களும் தான். (வகுப்பில நம்மள பார்த்து பாடம் நடத்தினாலே சில சமயத்தில சுகமா தூங்கற வம்சம் நாம:) இதுல நம்மள கண்டுக்கவேயில்லேன்னா எப்டி இருக்கும்? சுத்தமா போர் அடிக்கும்:)). வகுப்பில் அவர்கள் இருக்கும் திசை பார்த்து பாடம் நடத்துவது, வகுப்பு முடிந்தவுடன் அவர்களிடம் பேசி சந்தேகங்கள் தீர்ப்பது, அவர்களுக்கு மட்டும் சில குறிப்புகள் தருவது என்று நாளடைவில் மற்ற எல்லாரையும் புறக்கணிப்பது போல் இது தொடர்ந்து நடந்து வந்தது. இது எங்களுக்கு சங்கடமாக இருந்தது, அதை எப்படி அவரிடம் சொல்வது என நாங்க யோசிக்கும் சமயத்தில் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.

எங்கள் துறையின் அந்த வருடத்திற்கான பட்டறை வகுப்பு மற்றும் கண்காட்சியில் எங்க வகுப்பிலிருந்து சில மாணவர்களை தெரிவு செய்து இரண்டு,மூன்று பிரிவுகளாக அவர்களை பிரித்து ஏதேனும் ஒரு தலைப்பில் செயல்முறை விளக்கம் மேற்கொள்ள சொல்லியிருந்தனர். அதில் ஒரு பிரிவில் நானும், என் தோழிகள் மூன்று பேரும் இருந்தோம். இன்னொரு பிரிவில நாங்க குறிப்பிட்டிருந்த பேராசிரியரின் தத்துப்பிள்ளைகள் இருந்தனர்(இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் அந்த குறிப்பிட்ட தோழியர் மீது எங்களுக்கு எந்தவிதமான காழ்ப்புணர்சியும் இருந்ததில்லை, அவர்களை பார்த்து வியந்ததுண்டு இப்படியும் அறிவாளிகள் இருக்க முடியுமா என்று, அவங்களும் எங்களோட ரொம்ப நல்லா தான் பழகினாங்க)இந்த செயல்முறை விளக்கத்துக்கு நாங்களே தலைப்பு தேர்ந்தெடுத்துக்கொண்டு ஒரு பேராசிரியரின் துணையோடு இயங்க வேண்டியிருந்தது.

எங்க தோழியருக்கு அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அந்த ஆசிரியர் உதவி செய்ய முன் வந்து விட்டார். நாங்க வேற பேராசிரியரின் உதவியை பெற்று கொள்ள எங்க துறைத் தலைவரின் அறைக்குச் சென்றோம். அங்கே அமர்ந்திருந்த இன்னொரு பேராசிரியரிடம் புத்தகத்தை கொடுத்து அதில் குறிப்பிட்டுள்ள ஒரு தலைப்புக்கு செயல்முறை விளக்கம் கொடுக்க உதவ முடியுமா என்று நான் கேட்டேன்.

அப்பொழுது பக்கத்திலேயே அமர்ந்திருந்த இவங்க என்னிடமிருந்து புத்தகத்தைப் பிடுங்காத குறையாக வாங்கி பார்த்து விட்டு சக ஆசிரியரிடம், "இதோ பாருங்க இந்த தலைப்பை நான் ஏற்கனவே தேர்வு செஞ்சுட்டேன் இதை என் பிள்ளைங்க தான் செய்யப்போறாங்க, அருமையா பண்ணப்போறோம் பாருங்க" என்று மிக பெருமையாக கூறினார். அவங்க சாதாரணமாக 'இல்லம்மா, இதை எனக்கு கீழ வர்ர மாணவர்கள் பண்ணப்போறாங்க' அப்டின்னு சொல்லியிருந்தா கூட நாங்க வருத்தப்பட்டிருக்க மாட்டோம். ஆனா அந்த மாணவர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் போலவும், நாங்க ஒன்றுக்கும் உதவாத ஜென்மங்கள் போன்ற தொனியிலும் அவர் பேசியது ஏற்கனவே கடுப்பில் இருந்த எனக்கு இன்னும் வருத்தத்தை தான் அதிகரிச்சது.

நேரே அவங்க எதிரில் போய் நின்று, " என்னது உங்க பிள்ளைகளா? மேடம் நாங்களும் உங்க வகுப்பில தான் இருக்கோம், அப்ப நாங்கெல்லாம் யாரு?உங்க மாணவர்கள் இல்லியா? சரி பரவாயில்ல நீங்க இந்த தலைப்பை உங்க பிள்ளைகளுக்கு எடுத்துக்கோங்க நாங்க வேற தலைப்பு எடுத்துக்கறோம் ரொம்ப நன்றி மேடம் " என்று சொன்னவுடன் அதை எதிர்ப்பார்க்காத அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தார். இத்தனையும் எங்க துறை தலைவர் எதிரிலேயே நடந்தது, ஏற்கனவே அவங்களுக்கு நாங்க வச்ச பேரு டெரர், அவ்ளோ பயம் அவங்கள கண்டா.

நான் ரொம்ப வேகமா சொல்லி முடிச்சப்புறம் தான் அவங்க இருந்ததை கவனிச்சேன், ஆகா நம்ம பொழப்பு இன்னிக்கு அவ்ளோ தான்னு நினைச்சேன், என் தோழிகளும் அப்டியே ஒரு பயத்தோட பார்த்தாங்க. ஆனா நல்ல வேளை அவங்க அதிசயமா ஒன்னுமே சொல்லல , என்னை பார்த்து லேசா புன்னகைத்த மாதிரி இருந்தது. சரி சொல்ல வந்ததை சொல்லிட்டோம் இனி வர்ரறத பார்த்துக்கலாம்னு வேற தலைப்பை தேர்வு செஞ்சு எப்டியோ ஒப்பேத்திட்டோம்(தமிழ் சினிமாவுல வர்ர மாதிரி வெறியோட படிச்சு பரிசெல்லாம் வாங்கல;) சுமாரா தான் செஞ்சு முடிச்சோம்).

இந்த சம்பவம் நடந்தப்புறம் அவங்க கிட்ட நிறைய மாற்றங்கள் தன்னுடைய தவறை புரிஞ்சுக்கிட்டு மாறிட்டாங்க. ஏதோ இவங்க நல்லவங்களா இருந்ததால நான் சொன்னதை பெரிய பிரச்னையாக்காம(நான் அப்படி சொன்னது கூட ப்ரச்னை இல்ல, எல்லா பேராசிரியர்கள் முன்பும் அப்படி அவங்க இயல்பை வெளிச்சம் போட்டு காட்டியது தான் ப்ரச்னை அதுக்கு தான் நான் பயந்தேன்) புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிட்டாங்க. இந்த மாதிரி பல பேர் இருக்காங்க என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் இப்படி நடந்துக்கொள்ளும் ஆசிரியர்களை கண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு வாழும் உதாரணமாக தான் இருக்கணும், இந்த மாதிரி ஒரு பதிவை எழுத வைக்கற அளவுக்கு இருக்க கூடாது என்பது என் கருத்து(எதுக்கு இந்த பதிவுன்னு கேக்கறவுங்களுக்கு இங்கன ஒன்னு சொல்லிக்கறேன் " நாங்களும் கருத்து சொல்லுவோமில்ல;)")

19 comments:

G3 said...

நிஜமாவே சூப்பர் பதிவு வேதா. இதை படிச்சவுடனே எங்க புது டேமேஜரோட அதிசய மேனேஜ்மண்ட்(??!!!) திறமைய பத்தி ஒரு பதிவா போட்டு புலம்பனும் போல இருக்கு. ஆனா என் ஆபீஸ் மக்கள் எல்லாம் என் பதிவ படிக்கறதுனால சொ.செ.சூ. வெச்சுக்க நான் தயாரில்ல :)

G3 said...

இந்த பதிவ படிச்சதும் எனக்கு 2 விஷயம் தோனுச்சு..
இன்னும் கீழ வாங்க...

அவை..
1. ப்ளாக் உலக ஜான்சி ராணி வேதா வாழ்க!!!!

2. கருத்து கந்தமாமி வேதா வாழ்க!!!!

[சீரியஸ் பதிவுல கும்மியான்னெல்லாம் திட்டபுடாது சொல்லிட்டேன்]

வேதா said...

@காயத்ரி,
ஹிஹி நான் கூட இதை எழுதறதுக்கு முன்னாடி யோசிச்சேன் இதை நம்ம தோழிகள் யாராவது படிச்சு அவங்க கிட்ட போட்டு கொடுத்துட போறாங்களேன்னு :)

நமக்கு ஏற்கனவே ஜான்சிராணி பட்டம் பள்ளியில படிக்கும்போதே கொடுத்துட்டாங்க :D

/கருத்து கந்தமாமி வேதா வாழ்க!!!!/
அடிப்பாவி இதெல்லாம் அநியாயம் இத நான் ஒத்துக்க மாட்டேன் :)


/[சீரியஸ் பதிவுல கும்மியான்னெல்லாம் திட்டபுடாது சொல்லிட்டேன்]/
சின்னப்புள்ளதனமாயில்ல இருக்கு சீரியஸ் பதிவுல கும்மினா தான் அது கும்மி இல்லேன்னா வெறும் டம்மி :D

ambi said...

அடடா! பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரி!னு நீங்க எழுந்த வேகம் தான் என்னே! புல்லரிக்குது போங்க. :))

கொஞ்சம் பாராவை பத்தி பிரிச்சு எழுத கூடாதா? ஆபிஸ்ல தம்மாத்துண்டு வின்டோவா வெச்சுண்டு படிக்கறது எவ்ளோ சிரமம்?னு படிச்சு பாருங்க, அப்ப தெரியும். கர்ர்ர்ர்ர்ர்ர். :)

//சீரியஸ் பதிவுல கும்மினா தான் அது கும்மி இல்லேன்னா வெறும் டம்மி //

*ahem, சரி, வாத்தியார் பிள்ளை மக்கு!னு ஒரு பழமொழி உண்டாமே நிஜமா? :p

Again template changedaa? :p

நாகை சிவா said...

நீங்க ஒரு சைடா இருந்து சொன்ன மாதிரி ஒரு சின்ன பீலிங். ரைட் ஏதா இருந்தாலும் சொன்ன மேட்டரு சரி. சில ஆசிரியர்கள் அப்படி தான் இருக்காங்க.

நமக்கு எல்லாமே அப்படி தான் கல்லூரியில். லொள்ளு பேசுவதாலே நம்ம கேங் பக்கம் திரும்ப மாடாங்க. அதுக்கு நாங்க தான் காரணமோ?

அதே சமயத்தில் எங்க பிள்ளைங்க மேட்டரு எல்லா இடத்திலும் இருக்குற மேட்டரு தான். இருக்கனும் என்பது கூட என் கருத்து. ஆனா அது படிக்குற பிள்ளைங்க படிக்காத பிள்ளைங்க இருந்தா கதைக்கு ஆவாது.

நீங்க சொன்ன மாதிரியும் இருந்தார்கள் சிலர். இன்னும் சிலர் நம்மளை கூப்பிட்டு அவங்கள் பாடமாக இல்லாமல் இருந்த போதிலும் அதுக்கு நோட்ஸ் கொடுத்து புரிய வைச்சு, திட்டி, அன்பா பேசி எல்லாம் நம்மள பாஸ் ஆக வச்சு இருக்காங்க.

கலை said...

ஆமா, இப்படியும் சில ஆசிரியர்கள் இருந்து சில மாணவர்களை முன்னேற விடாமல் பண்ணி விடுவார்கள். நானும் இப்படி ஒரு ஆசிரியர் பற்றி எழுதி இருக்கிறேன். பாருங்கள். http://summaonru.blogspot.com/2006/01/blog-post_07.html

ரசிகன் said...

ஏனுங்க வேதா.. ஒரு முப்பது,முப்பத்தஞ்சி வருஷத்துக்கு முந்திய .:D விஷயங்களையே இப்பத்தேன்
மலரும் நினைவுகளா எழுத ஆரம்பிச்சியிருக்கிங்க.. நீங்க எப்ப நிகழ்காலத்துக்கு வர்ரது?..ஹிம் ...ஒன்னும் சொல்லறதுக்கில்ல...

ரசிகன் said...

ஆமாங்க.. நீங்க அம்புட்டு ஆவேசமா பேசனதுக்கு அந்த டீச்சர் என்ன சொன்னாய்ங்கன்னு ஒன்னுமே சொல்லலையே.:-?. அதுசரி .. அத கேக்கறதுக்குள்ளதான் உங்க அம்மா உங்கள தூக்கத்துலேருந்து எழுப்பி விட்டுட்டிருப்பாய்ங்களே?.:))))))

ரசிகன் said...

// G3 said...

நிஜமாவே சூப்பர் பதிவு வேதா.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

வேதா said...

@அம்பி,
/கொஞ்சம் பாராவை பத்தி பிரிச்சு எழுத கூடாதா?/
நான் பிரிச்சு தான் எழுதியிருக்கேன், உங்களுக்கு மட்டும் ஏன் அப்டி தெரியுது? optical illusion? :D இருந்தாலும் நீங்க சொன்னதுக்காக கொஞ்சம் மாத்தியிருக்கேன் :)

/வாத்தியார் பிள்ளை மக்கு!னு ஒரு பழமொழி உண்டாமே நிஜமா? :p/
அது பழமொழி இல்லீங்கோ தப்புமொழி :)

@சிவா,
ஒரு சைடா வந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனம் எடுத்துக்கிட்டு தான் இதை எழுதினேன் சிவா ஏன்னா எங்கம்மாவும் ஒரு ஆசிரியர் தான், ஒட்டுமொத்தமா எல்லாரையும் குற்றஞ் சொல்லக்கூடாதில்லையா? உங்களுக்கு ஏன் அப்டி தோணுது?

எல்லா ஆசிரியர்களுக்கும் தனக்கு பிடித்த மாணவன்/மாணவி அப்டின்னு கண்டிப்பா இருப்பாங்க அதை நான் ஒத்துக்கறேன். ப்ரச்னை அவங்க கிட்ட மட்டும் கவனம் செலுத்துவதில் தான் ஆரம்பிக்கிறது அப்படி இருக்கற சிலரை தான் நான் சொல்லியிருக்கேன்.

/இன்னும் சிலர் நம்மளை கூப்பிட்டு அவங்கள் பாடமாக இல்லாமல் இருந்த போதிலும் அதுக்கு நோட்ஸ் கொடுத்து புரிய வைச்சு, திட்டி, அன்பா பேசி எல்லாம் நம்மள பாஸ் ஆக வச்சு இருக்காங்க./
என்னோட தமிழாசிரியை இப்டி தான் :)

@கலை,
அட நீங்களும் எழுதியிருக்கீங்களா? கண்டிப்பா படிக்கறேன் வருகைக்கு நன்றி :)

@ரசிகன்,
முப்பது வருசத்துக்கு முன்னாடி நான் பொறக்கவேயில்லீங்கோ :)

/நீங்க அம்புட்டு ஆவேசமா பேசனதுக்கு அந்த டீச்சர் என்ன சொன்னாய்ங்கன்னு ஒன்னுமே சொல்லலையே.:-?. /
ஏங்க ஆவேசமா பேசினேன்னு எப்ப சொன்னேன்? ரொம்ப பவ்யமா உண்மையான வருத்தத்தோட தான் பேசினேன்.
அவங்க பதில் சொல்ற வரைக்கும் நாம எங்க நின்னோம்? அவங்க அப்டி சமாளிச்சு நிலைமை கட்டுக்குள்ள வர்ரதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் :D

/இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்../

கண்டிச்சா மட்டும் போதாது காரணமும் சொல்லணும்..

ரசிகன் said...

// // G3 said...
நிஜமாவே சூப்பர் பதிவு வேதா.//
ரசிகன் said...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
வேதா said...
கண்டிச்சா மட்டும் போதாது காரணமும் சொல்லணும்..// //

குரு-சிஷ்யைக்குள்ள நீங்களே பாராட்டிக்கிட்டாக்கா எப்படிங்க...
தப்பு தப்பு தப்பு.. அத நாங்கதேன் சொல்லனும்..[பிரகாஷ்ராஜ் ஸ்டெயிலுல படிங்க..]

நிஜமாவே சூப்பர் பதிவுங்க.. வேதா. ஹிஹி...:))))

கீதா சாம்பசிவம் said...

ஏனுங்க வேதா.. ஒரு முப்பது,முப்பத்தஞ்சி வருஷத்துக்கு முந்திய .:D விஷயங்களையே இப்பத்தேன்
மலரும் நினைவுகளா எழுத ஆரம்பிச்சியிருக்கிங்க.. நீங்க எப்ப நிகழ்காலத்துக்கு வர்ரது?..ஹிம் ...ஒன்னும் சொல்லறதுக்கில்ல...

ஹிஹிஹி, ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!

ambi said...

@geetha paati, இங்க பாருடா அனியாயத்தை! யாரு யார பாத்து ரிப்பீட்டு போடறாங்க. :)

நேவி புரட்சி, உப்பு சத்யாகிரக காலத்தில் பிறந்தவங்க எல்லாம் வாயவே தொறக்க கூடாது, ஆமா! :p

manipayal said...

நீங்க சொல்றது பூராவும் உண்மை.BTW என் மனைவியும் 7 வருடம் ஆசிரியை ஆக இருந்து இப்போது ஒரு பள்ளியின் பிரின்ஸ்பால் ஆக இருக்கிறார்

அம்பி - எனக்கும் அந்த பழமொழி எப்படி வந்ததுன்னு தெரியல்லை. கட்டயாம் என் பசங்க மக்கு கிடையாது.

Dreamzz said...

mmm! nalla thaan handle panni irukeenga! my last disagreement with a teacher ended up as a staring down match. lol!

ok back to the point, yes there are some teachers, and i have to admit i have been in the limelight sometimes and enjoyed it, but thinking back, i think it is disgusting to treat some ppl like that and the rest diff.

maturity i guess!

Compassion Unlimitted said...

This one brought tears in my eyes..Both my children have suffered because of the lack of encouragement from teachers..I do hope this posting of yours gets in various school magazines too !!
Excellent Veda..Keep it up
Tc
Cu

வேதா said...

@அம்பி,
அதான பார்த்தேன் எங்கடா வாய்ப்பு கிடைக்கும்னு அலைவீங்களே ;D

@மணி,
/நீங்க சொல்றது பூராவும் உண்மை.BTW என் மனைவியும் 7 வருடம் ஆசிரியை ஆக இருந்து இப்போது ஒரு பள்ளியின் பிரின்ஸ்பால் ஆக இருக்கிறார்/

சரி தான் அப்ப உங்களுக்கும் இதை பத்தியெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கும் :)

அம்பி கேட்கறதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க அவர் எப்பவும் இப்படி தான் ஏதாவது காமெடி பண்ணுவாரு நாங்க அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டோம் :D

@ட்ரீம்ஸ்,
ஆமா இப்படியும் சில ஆசிரியர்கள் இருக்கத் தான் செய்யறாங்க :(

@cu,
நல்லா படிக்கற மாணவன் கூட சரியான வழிகாட்டுதல் இல்லேன்னா தவறி போக வாய்ப்புகள் அதிகம், அதற்கான பொறுப்பு அதிக அளவில் ஆசிரியரை தான் சாரும். நீங்க சொல்றது மனதுக்கு கஷ்டமா தான் இருக்கு.

/I do hope this posting of yours gets in various school magazines too !!/
ஆகா எனக்கு இப்டி ஆப்பு வைக்க பார்க்கறீங்களே :D

Compassion Unlimitted said...

//ஆகா எனக்கு இப்டி ஆப்பு வைக்க பார்க்கறீங்களே //

Unmaya sonnalum ippadi than reactiona..enna ulagamayya idhu..adhu sari nee school teacher a ? summa than kekkaren
TC
CU

vijay said...

// ரசிகன் said...
ஆமாங்க.. நீங்க அம்புட்டு ஆவேசமா பேசனதுக்கு அந்த டீச்சர் என்ன சொன்னாய்ங்கன்னு ஒன்னுமே சொல்லலையே.:-?. அதுசரி .. அத கேக்கறதுக்குள்ளதான் உங்க அம்மா உங்கள தூக்கத்துலேருந்து எழுப்பி விட்டுட்டிருப்பாய்ங்களே?.:))))))
//

அப்போ அவ்வளவும் கனவு சீன் தானா?:D