Friday, December 14, 2007

கலியுக பாஞ்சாலிகள்...

வறுமையின் வண்ணம் பூசிய பஞ்ச நிலங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு வட மாநில குக்கிராமத்தின் எல்லையில் மாலை மடியும் நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க யாரும் காணா வண்ணம் வந்துக்கொண்டிருந்தாள் 16 வயதான குல்ஷன்.

பஞ்சத்தில் அடிபட்ட பல நூறு விவசாய குடும்பங்களில் அவள் குடும்பமும் ஒன்று, வயிற்றை கழுவ கூலி தொழிலுக்கு செல்லும் தந்தை, வீட்டில் இரு மகள்களை வைத்துக்கொண்டு அவர்களை கட்டி காப்பாற்றும் பொறுப்பில் தாய், 10 வயது தங்கை என்று ஏழ்மையில் உழலும் குடும்பத்தை சேர்ந்த குல்ஷன் தன் தந்தை ஊரில் இல்லாத இந்த நேரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாள்.

தூரத்து மறையும் சூரியனை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கிருந்த ஒரு பாழும் மண்டபத்தில் தன் காதலனுக்காக காத்துக்கொண்டிருக்கும் குல்ஷன் வீட்டை விட்டு ஏன் வந்தாள்? அவள் காத்திருக்கும் நேரத்தில் நாம் சற்று பின்னோக்கி செல்வோம்..

அன்று காலை எப்பவும் போல கூலி வேலைக்கு போன குல்ஷனோட தந்தை மதியம் வெகு சீக்கிரமே வீடு திரும்பினார்

'என்னாச்சு இவ்ளோ சீக்கிரம் வேலை முடிஞ்சுடுச்சா'? இது குல்ஷனின் தாய்.

'இல்லம்மா இன்னிக்கு முழு நாள் வேலை இல்லை, பாதி நாள் கூலி தான் கிடைச்சுது'

'ரெண்டு நாள் கழிச்சு இன்னிக்கு தான் கூலிக்கு ஆள் எடுத்தாங்க, அதுக்குள்ள இப்டி பண்ணிட்டாங்களே ? பசங்க சாப்டு ரெண்டு நாள் ஆகுது' என்று கண்ணீருடன் கூறிய குல்ஷனின் தாய் கணவர் ஏதோ நினைவில் அமர்ந்திருப்பதை பார்த்தாள்.

'என்னாச்சு ஏன் இவ்ளோ அமைதியா இருக்கீங்க உடம்பு சரியில்லையா?'

'இல்ல அப்டியெல்லாம் இல்ல, நம்ம கிஷன் இல்ல? அவனை இன்னிக்கு பார்த்தேன்'

'அப்டியா என்ன சொன்னாரு உங்க நண்பரு?'

'வந்து வந்து நான் சொன்னா நீ கோபிச்சுக்கூடாது அவன் அதை பத்தி சொல்லும்போதே எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு முடியாதுன்னு சொல்லிட்டு தான் வந்தேன், ஆனா வர்ர வழியெல்லாம் யோசிச்சேன், அவன் சொன்னது சரின்னு தான் தோணுது,நமக்கும் கொஞ்சம் வழி பொறக்கும்..' என்றார் தயங்கியபடி.

'என்ன விசயம் அதை சொல்லுங்க முதல்ல'

'நம்ம குல்ஷனை கிஷனோட நண்பனுக்கு தெரிஞ்சு இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு...'

தன் குழந்தைகளுக்கு திருமணம் என்ற வைபவமே நடக்காது என நினைத்திருந்த குல்ஷனின் அம்மாவுக்கு இந்த செய்தி பெரு மகிழ்ச்சியை தந்தது, ஆனாலும் கணவர் முகத்தில் இருந்த கவலை,பயம்,தயக்கம் எல்லாம் குழப்பத்தை தர,

'நல்ல விஷயம் தான? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? செலவுக்கு பயமா?'

'இல்லம்மா நமக்கு செலவே இல்ல, அவங்களே கல்யாணத்தையும் பண்ணி, நமக்கு கையில் 5,000 பணமும் கொடுத்துடுவாங்க, நம்ம கடனை பாதியாவது அடைச்சுடலாம் இல்ல?'

'என்னது அவங்க பணம் கொடுப்பாங்களா? நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு பயமா இருக்கு நீங்க சொல்றதை பார்த்தா நம்ம பக்கத்து வீட்டு அமன் தங்கச்சிக்கு நடந்த கல்யாணம் மாதிரியில்ல இருக்கு..... இல்ல இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்... என் பொண்ணு என்ன பொம்மையா வச்சு வெளையாட...' என கதற தொடங்கினாள்.

'நமக்கு வேற வழியே இல்ல, பொண்ணை நாம செலவழிச்சு நல்லபடியா கல்யாணம் செஞ்சு கொடுக்க முடியாது..'

'என் பொண்ணுக்கே கல்யாணமே வேண்டாம் இப்டியே இருந்துட்டு போகட்டும்..'

'நல்லா யோசிச்சு தான் சொல்றியா? அவ வயசு இப்பவே 16, அவளை வீட்டுக்கு வெளில கூட அனுப்ப முடியாத நிலைமை தான் நம்ம கிராமத்துல, ஏன் சுத்தி இருக்கற நிறைய கிராமங்களில் பொண்ணுங்க நிலைமை இப்டி தான இருக்கு, எப்ப என்ன நடக்கும்னே தெரியல, தெரிஞ்ச ஆம்பளைங்கள கூட நம்ப முடியல, அதுக்கு நான் சொன்ன வழி எவ்வளவோ பரவாயில்ல, அவங்க வேற கிராமத்தை சேர்ந்தவங்க,நம்ம கடனும் அடையும் நம்ம ரெண்டாவது பொண்ணோட வாழ்க்கையாவது ஒழுங்கா அமையும். இன்னும் கொஞ்ச நேரத்துல கிஷன் வந்து என்னை கூட்டிக்கிட்டு அவங்க வீட்டுக்கு போவான், எந்த கிராமம்னு கூட தெரியாது கிஷன் விசாரிச்சுட்டு வருவான், நான் கிளம்ப போறேன்..' என்றார் குல்ஷனின் தந்தை.

இத்தனையும் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த குல்ஷன் அதிர்ச்சியில் உறைந்து போனாள், எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அது நடக்கப் போகிறது. அப்படியென்ன அதிர்ச்சி இருக்கிறது பக்கத்து வீட்டு அமனின் தங்கை கல்யாண வாழ்க்கையில் என்கிறீர்களா?

அமனின் தங்கை இப்ப கர்ப்பமா இருக்கா, ஆனா அவள் யாரோட குழந்தைக்கு அம்மாவாக போகிறாள் என்று அவளுக்கே தெரியாது, ஏனென்றால் மூன்று சகோதர்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் மூத்த மகனுக்கு அவளை கல்யாணம் எனும் பேரில் விற்று விட்டனர், ஆனா மனைவியானதோ மூன்று பேருக்கும், காரணம் இந்த சுற்றுவட்டாரத்தில் வெகுவாக குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்.

இப்ப புரிகிறதா குல்ஷன் ஏன் தன் காதலனை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டு அவங்க ஊருக்கு தப்பிச்சு போகப் போகிறாள் என்று?

பாவம் அவளுக்கு தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது ஊர் விட்டு ஊர் வந்து இங்கு கூலித் தொழிலாளியாக இருக்கும் அவள் காதலனின் வீட்டுக்கு தான் திருமணம் என்ற பெயரில் மூன்று சகோதரர்களுக்கு தன்னை விலை பேச தந்தை சென்றிருக்கிறார் என்று...


பி.கு : இந்த கதையை சர்வேசன் நடத்தும் சிறுகதை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்

33 comments:

வேதா said...

பெண் சிசுக்கொலை தீவிரமாக உள்ள இடங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதின் விளைவு பஞ்சாப், ஹரியானா போன்ற பல இடங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் இருந்து பெண்களை விலை பேசி வாங்கி வருவது, சில இடங்களில் அவ்வாறு வாழ வரும் பெண்கள் அந்த குடும்பத்தில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் மனைவியாக இருப்பது, வெகு எளிதாக வெளியில் நடமாட முடியாமல் இருப்பது என பிரச்னைகள் நீண்டு கொண்டே இருக்கின்றது. அதற்கு ஆதாரமான செய்தி இங்கே

ambi said...

//வறுமையின் வண்ணம் பூசிய பஞ்ச நிலங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு பஞ்சாப் மாநில குக்கிராமத்தின் எல்லையில் //

கதை நல்லா கருத்தோட தான் இருக்கு. ஆனா முதல் வரி தான் இடிக்குது. ஐந்து நதிகள் பாய்கிறது பஞ்சாப்பில். நாட்டின் மொத்த கோதுமை சாகுபடியில் கிட்டதட்ட 30 சதவிதம் பஞ்சாபில் இருந்து தான்.

இதே சட்டிஸ்கர், அல்லது ஜார்கண்ட்!னு சொல்லி இருந்தா ஒத்துக்கிட்டு இருப்பேன்.

எனவே நக்கீரி! ( நக்கீரனின் பெண் பால்) சொல்லில் குற்றம் இல்லை, பொருளில் தான் உள்ளது. :))

ஹ! யாருகிட்ட பஞ்சாப்பை பத்தி பேசறீங்க? :p

ambi said...

முதல் பின்னூட்டத்தையும் நீங்களே போட்ட கயமை தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். வேணா ஒரு பி.கு போட்டுகுங்க யாரு வேணாம்னு சொன்னா? :p

எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆபிஸ்ல பதிவு படிக்கறோம்?
அதுக்காச்சும் ஒரு மரியாதை வேணாம்? :))

ambi said...

அட இன்னிக்கு வெள்ளிகிழமை, அதான் கரக்ட்டா உங்க பதிவு வந்திருக்கு. :))

வேதா said...

இன்றைய நாளிதழில் வந்த செய்தி

ரசிகன் said...

பெண்சிசு கொலைகளை மையமா வைச்சு நச்சுனு எழுதியிருக்கிங்க...
அருமையா இருக்குங்க..வேதா..

Dreamzz said...

vibareethaamaana unmai.. varumaiyin niram.. nijamave sigappu thaan pola.

ரசிகன் said...

இப்போதே திருந்தாவிட்டால்,சமுகத்தில் பரவப்போகும் போகும் ஆபத்தை அருமையா சித்தரிச்சு இருக்கிங்க...

எங்கயோ நடக்கற விசயமான்னாலும்,
நாளை தமிழகத்தையும் பாதிக்காதுன்னு என்ன நிச்சயம்.

சமிபத்துல கூட கள்ளிப்பால் குடுத்து
குழந்தை கொல்லப்பட்டதுன்னு படிச்சேன்.

பாரம்பர்யம்,மான,மரியாதை ன்னு வாழும் கிராமத்து மக்களுக்கு இந்த கதைய நாடகமா போடடுக் காட்டினாலாவது திருந்த மாட்டார்களா?.

ரசிகன் said...

நீங்கள் கொடுத்த சுட்டியை படித்தேன் 1000 பேருக்கு 300 பெண்கள் மட்டுமே.
அதிர்ச்சியாக இருக்கு...

என்ன செய்து கொண்டிருந்தது அரசு.. பெண்சிசு கொலைகளின் போது?..
தொண்டு நிறுவனங்கள் கூடவா விழிப்புணச்சி ஏற்ப்படுத்த முயல வில்லை?..

Dreamzz said...

//How ironical it is that just when Indians are patting themselves on the back on having the richest man in the world in their midst, when the middle classes are celebrating the rising stock market, when the media is openly promoting two Bollywood blockbusters as if they were essential news, girls are being killed, women are being bought and girls and women have to fear for their lives in many parts of this country. This reality should cancel out the euphoria. But it barely makes a dent. It touches our consciences for a moment and then recedes. //

Nice story line! aana theriyvendiyavangalukku theriyaadhu! puriyaadhu. enna panna!

Compassion Unlimitted said...

Idhu aadhi kaalathilirudhe nadanthu varum oru sadangu kodumai than. porukku sendru madiyum podhu thambiyo annano maiviyaaga etrukollum oru sadangu....indrum nadakkirathe endra varutthamum than

ezhutthil aazham therigirathu,varutthathin

வேதா said...

@அம்பி,
நான் பஞ்சாப் மாநிலத்தில் கதையை தேர்ந்தெடுத்ததே அங்கு அதிக அளவில் இது நடைப்பெறும் காரணத்தால் தான், அதனால நீங்க சொன்ன பாயிண்டை கவனிக்கல சரி விடுங்க ஒரு கதைன்னா இப்டி ஏதாவது ஓட்டை இருக்க தானே செய்யும் :)


/எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆபிஸ்ல பதிவு படிக்கறோம்?
அதுக்காச்சும் ஒரு மரியாதை வேணாம்? :))/
செய்யறது களவாணித்தனம் இதுல மரியாதை வேறயா? உங்க ஆபிஸ்லேயே அது உங்களுக்கு கிடைக்காது எங்க கிட்ட எதிர்ப்பார்க்கலாமோ? ;D

வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள் அதான் அன்னிக்கு போட்டேன் :D

வேதா said...

@ட்ரீம்ஸ்,
உண்மைகள் என்றுமே விபரீதமானவை தான் :(
/Nice story line! aana theriyvendiyavangalukku theriyaadhu! puriyaadhu. enna panna!/
ஹும் புரிய வைக்க வேண்டியது நம் கடமை இல்லையா? அரசாங்கம் இதற்கான முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

@ரசிகன்,
ஆமா இப்ப இதை படிக்கும் போது வெறும் கதையா தோணலாம் ஆமா இப்டியெல்லாம் கூட நடக்குமா என தோணலாம். ஆனா இப்பவே இதையெல்லாம் இதை சரி செய்யாட்டா கண்டிப்பா இப்படிப்பட்ட விபரீதங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு.

/நீங்கள் கொடுத்த சுட்டியை படித்தேன் 1000 பேருக்கு 300 பெண்கள் மட்டுமே.
அதிர்ச்சியாக இருக்கு... /
பேரதிர்ச்சி தான் :(


@cu,
/porukku sendru madiyum podhu thambiyo annano maiviyaaga etrukollum oru sadangu....indrum nadakkirathe endra varutthamum than/
கணவன் இறந்த பிறகு இன்னொருவனை கணவனாக ஏற்றுக்கொள்வது வேறு ஒரே நேரத்தில் பல பேருக்கு மனைவியாக இருப்பது வேறுங்க :(ezhutthil aazham therigirathu,varutthathin

கீதா சாம்பசிவம் said...

பாவம் அவளுக்கு தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது ஊர் விட்டு ஊர் வந்து இங்கு கூலித் தொழிலாளியாக இருக்கும் அவள் காதலனின் வீட்டுக்கு தான் திருமணம் என்ற பெயரில் மூன்று சகோதரர்களுக்கு தன்னை விலை பேச தந்தை சென்றிருக்கிறார் என்று...

பெண்கள் சதவீதம் குறைவுதான் என்றாலும் பஞ்சாப் பெண்கள் தைரியம் மிகுந்தவர்கள், எனக்குத் தெரிஞ்சு இத்தனை வறுமையும் கிடையாது, வெளிமாநிலங்களில் இருந்து, முக்கியமாய் உ.பி. யில் இருந்து பெண் எடுப்பதாய்த் தான் கேள்விப் பட்டேன். உங்க சுட்டியையும் பார்த்துட்டு வரேன், திரும்ப.

கீதா சாம்பசிவம் said...

இது குஜராத்திலும் பல வருஷங்களாய் நடை பெற்று வருவதாயும் கேள்வி, பொதுவாகவே பெண்கள் விகிதம் குறைந்து தான் இருக்கிறது. அதன் தாக்கம் வடநாட்டில் அதிகமாய்த் தெரிகிறது.

நாகை சிவா said...

கதையா இல்ல நிஜமா என்று யோசித்தே கொண்டே படித்தேன். அந்த அளவுக்கு சகஜமாக நடக்கிறது ஒரு சில இடங்களில். வருத்தமான விசயம் தான். நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது அவர்கள் அவ்வாறு செய்ய தூண்ட காரணத்தையும் அறிந்து சரி செய்ய அரசோ சேவை அமைப்புகளோ முயல வேண்டும்.

Compassion Unlimitted said...

Narukkunu thalaila oru kuttu vaanginen..mothirak kai thane..paravaa ille
TC
CU

வேதா said...

@அம்பி,
பஞ்சாப் மாநிலம் என்பதை மாற்றி விட்டேன் இப்ப திருப்தியா? :)

வேதா said...

மக்கள்ஸ் இந்த கதையை சர்வேசன் நடத்தும் கதை போட்டிக்கு அனுப்புகிறேன், உங்க ஆதரவு தேவை :D

ரசிகன் said...

// வேதா said...

@அம்பி,

/எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆபிஸ்ல பதிவு படிக்கறோம்?
அதுக்காச்சும் ஒரு மரியாதை வேணாம்? :))/

செய்யறது களவாணித்தனம் இதுல மரியாதை வேறயா? உங்க ஆபிஸ்லேயே அது உங்களுக்கு கிடைக்காது எங்க கிட்ட எதிர்ப்பார்க்கலாமோ? ;D //

நச்.. ஹே..ஹே,,, இது சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

ரசிகன் said...

:)))))))

ambi said...

//பஞ்சாப் மாநிலம் என்பதை மாற்றி விட்டேன் இப்ப திருப்தியா? //

இப்ப ஓகே! :)

கதை போட்டிக்கா? வெரிகுட். இன்னும் கொஞ்சம் வரிகளை சுருக்கி இருக்கலாமோ?

ambi said...

@தம்பி ரசிகா! ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே? சமயம் வரும் போது கவனிச்சுக்கறேன். :p

SurveySan said...

ரொம்ப நல்ல கதை வேதா!

Divya said...

நேர்த்தியான நடை, ஆழமான கரு, ரொம்ப அருமையா கருத்தை உணரும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க!

வறுமையும், பெண் சிசுக்கொளைகளும், ஒரு பெண்ணை பங்கு போடும் நிலைக்கு கொண்டு செல்கிறது என எண்ணும் போது கஷ்டமாக இருக்கிறது!


போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இராம்/Raam said...

கதை நல்லாயிருத்துச்சு... :)


//எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆபிஸ்ல பதிவு படிக்கறோம்?
அதுக்காச்சும் ஒரு மரியாதை வேணாம்? :))//

அம்பி'யோட இந்த கமெண்ட் படிச்சி ரொம்ப நேரமா சிரிச்சிட்டுருந்தேன்... :)

கோபிநாத் said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு வேதா...வாழ்த்துக்கள் ;))

Arunkumar said...

ஷாக்கிங்கா இருக்கு இந்த நியுஸ். :-(
Very nice attempt to write a story based on this horrible fact.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வேதா

Arunkumar said...

//
ஐந்து நதிகள் பாய்கிறது பஞ்சாப்பில். நாட்டின் மொத்த கோதுமை சாகுபடியில் கிட்டதட்ட 30 சதவிதம் பஞ்சாபில் இருந்து தான்.
//

thala
oru nimisham ramana padam paatha maathiri irunduchu !!!

smiley said...

Wish you and your family a Merry Christmas and a Happy New Year

மதுரையம்பதி said...

முதலில் கதையை மட்டுமே படிச்சேன். அதனாலதான் பின்னூட்டமிடாது போயிட்டேன். இன்னைக்கு திரும்ப வந்து நீங்க கொடுத்த சுட்டியினையும் படித்தேன்.

கதை நன்றாக வந்துள்ளது. கொஞ்சம் ஹெவி சப்ஜெக்ட் தான். பரிசு பெற வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

முடிவு ::((ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

Nithya A.C.Palayam said...

பெண் சிசுக்கொலை ,பெண் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவுங்க இதனால் விளையும் விபரீதங்கள் ......,உண்மைகள் என்றுமே விபரீதமானவை தான்