Monday, February 11, 2008

சுத்தத்தமிழும் கல்யாண சாப்பாடும் ஒரு பயோடேட்டாவும் (செம மொக்கை:))

என்னுடைய முந்திய பதிவுல நண்பர் ஒருத்தர் கேள்வி கேட்டிருந்தார் இப்டி சுத்த தமிழ்ல (அதாவது அவருக்கு என் பதிவுகள் படித்தது வாழ்த்துகள் படம் பார்த்த மாதிரி இருந்ததாம்:)) எழுதறதால என்ன பயன்? நல்ல கேள்வி தான். இப்ப இருக்கற காலக்கட்டத்துல ஆங்கில கலப்பில்லாம பேசறது அப்டிங்கறது அரிதாகி வருது, அதுவும் நாம சாதாரணமா பேசினாலே ஆங்கிலம் கலந்து தான் வருது, அப்டி இருக்கும் போது குறைந்தபட்சம் இங்கு ஆங்கில கலப்பில்லாமல் எழுத முயற்சிப்பதில் எனக்கு ஒரு தன்னிறைவு அவ்வளவு தான் :)

நாம தினமும் வீட்டுல பேசும் போது எப்போவெல்லாம் முழுக்க ஆங்கிலத்தில் பேசறோம்னு யோசிக்கறதுண்டு, நமக்கே தெரியாம பழக்க தோஷத்துல விழற சில ஆங்கில வார்த்தைகள், அலுவலக விஷயமாக ஏதாவது அழைப்பு வந்தால் அப்பொழுது பேசும் போது(என் தம்பி இல்லாத நேரங்களில் அவன் அலுவல் சம்பந்தமா வர்ர அழைப்புகளை ஏற்கும் போது ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்) சில சமயங்களில் முக்கியமா ஏதாவது ரொம்ப தீவிரமான ஒரு விஷயத்தை பத்தி தொலைப்பேசியில் பேசும் போது நான் ஆங்கிலம் பயன்படுத்துவதுண்டு, அதற்கு காரணம் நான் இருக்கற சூழ்நிலை அப்டி. சென்னையில அடுக்குமாடி கட்டிடங்கள் என்றாலே பெரும்பாலும் அடுத்த வீட்டுக்காரன் இருக்கானா செத்தானா அப்டின்னு கூட கவலைப்படாத ஒரு கூட்டம் இருக்கற இடம்.

ஆனா நாங்க இருக்கற இடம் இருக்கே அதுக்கு பேரு தான் ப்ளாட்ஸ் ஆனா அது ஒரு ஒண்டுக்குடித்தனம் மாதிரி. எல்லார் வீட்டுக்கதவும் திறந்து தான் கிடக்கும் அவ்ளோ நம்பிக்கை :) பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல நடக்குற எல்லா விசயங்களும் நாம விரும்பலேன்னா கூட நம்ம வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துக்கும். இந்த மாதிரி இடத்துல போன் பேசறது இருக்கு பாருங்க அது ரொம்ப கொடுமை. நான் ரொம்ப முக்கியமான விசயம் பேசும் போது தான் யாராவது ஒரு புண்ணியவான்/வதி வந்து கொஞ்சம் பேப்பர் கொடேன், காப்பி பொடி கொடேன், அவள் விகடன் இருக்கா? இப்டி கேட்டுக்கிட்டே நம்ம பக்கத்துல வந்து நிப்பாங்க.

அப்ப 'ஓகே ஓகே, நோ ப்ராப்ளம், ஐ வில் கால் யூ லேட்டர்' இப்டி சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும்,(அப்ப ஆங்கிலத்துல பேசினா மட்டும் புரியாதான்னு கேட்கறவங்களுக்கு சொல்லிக்கறேன் அதெல்லாம் யாரு என்னன்னு பார்த்து தான பேசுவோம் ஹிஹி:)) அது பெரிய கடுப்பா இருக்கும், நாமளே ஒரு ப்ளோல பேசிக்கிட்டு இருக்கும் போது இப்டி வந்து இடம்,பொருள் புரிஞ்சுக்காம பேசறவங்கள பார்த்தா அப்டியே கோபமா வரும். திட்டவும் முடியாது(ஏன்னா நாளைக்கே ரெண்டு ஸ்பூன் காப்பி பொடிக்கோ, சாம்பார் பொடிக்கோ நாம் போய் நிக்க வேண்டியிருக்கும் :))

அந்த சமயத்துல எழுந்தும் போக முடியாது, சந்தேகம் வந்துரும் என்னடா இவ சரியா நாம வந்த நேரம் பார்த்து எழுந்து போறான்னு யோசிப்பாங்க. சில பேரு தான் நாம சொல்றத புரிஞ்சுக்கிட்டு நாசூக்கா ஒதுங்கிடுவாங்க. சரி இப்ப இதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறீங்களா? ஒண்ணுமே இல்ல நான் ஏதோ சொல்ல வந்து வேற தலைப்புல எழுதிட்டேன் போலிருக்கு :) அதனால இதனால என்ன சொல்ல வரேனா நாம தினமும் ஆங்கில கலப்போட பேசறது அவசர அவசரமா சாப்பிடறா பாஸ்ட் புட் மாதிரி, இப்டி சில சமயங்களில் இங்கு முடிந்த வரை ஆங்கில கலப்பில்லாம எழுதறது அப்டிங்கறது கல்யாண சாப்பாடு மாதிரி :)

இப்டி தான் பயோடேட்டா என்பதின் தமிழ் வார்த்தை என்னவாக இருக்கும்னு யோசிக்கிட்டு இருந்தேன், அறிமுகம் சரியா இருக்குமான்னு தெரியல, சரி இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி என்றால் நம்ம யூனியன் மக்களின் பிரதாபங்களையெல்லாம் ஒரு குமுதம் பாணி பயோடேட்டா மாதிரி போடலாம்னு ஒரு எண்ணம், நினைச்சுட்டோம் சரி முடிச்சிடலாம்னு யாரை முதல்ல அறிமுகப்படுத்தலாம்னு யோசிக்கவே இல்ல நமக்கே தெரியுமே அது நம்ம தலைவி தான்னு :)

சரி இப்ப அறிமுகம்

பெயர் : சங்கத்தின் தனிப்பெரும் தலைவி(வலி), தானே உதித்த தானைத் தலை(வலி), மொ.ப.கீதா(இதுக்கெல்லாம் அர்த்தம் தரப்படாது :)), தமிழ் டீச்சர்

வயது : என்னது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நிரந்தர தொழில் : முழு காலமும் எவ்வித பிரச்னை வந்தாலும் விடாமல் மொக்கை போட்டு மன்னிக்கவும் பதிவுகள் போட்டு அனைவரையும் மகிழ்விப்பது :)

உபதொழில் : ப்ளாக்கிடுவது, பல தரப்பட்ட குழுமங்களில் எழுதுவது போன்ற சில முக்கிய வேலைகள் முடிந்த பின் எங்கேயாவது பயணம் புறப்படுவது(அதையும் வந்து விடாம பதிவுகளா போட்டு தள்ளுவாங்க என்னே உங்க தொண்டுள்ளம்:))

திடீர் தொழில் : டாடா இண்டிகாமுடன் போராடி போராடி அலுத்துப்போய் தானே ஒரு அகல்கற்றை சேவை அதாங்க பிராட்பேண்ட் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம் :)

நண்பர்கள் : அவங்க வயதை குறிப்பிடாத எவரும் :)

எதிரிகள் : வேற யாரு? டாடா இண்டிகாம் தான் :)

பிடித்த பொருள் : அம்பிக்கு பிடிக்காத எதுவும் :)

பிடிக்காத பொருள் : அம்பிக்கு பிடித்த எதுவும் :)

ஒரே பொழுதுபோக்கு : அம்பிக்கு ஆப்பு வைப்பது எப்படி? கண்ணாடி உடைந்து போகாத அளவுக்கு தமிழில் எப்படி எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவது என்று ட்யூஷன் எடுப்பது :):)

யப்பா ஒரே பதிவுல இவ்ளோ மொக்கையா என்று யோசிக்கறீங்களா? உண்மையில வேற ஒரு விஷயத்தை பத்தி தான் எழுதலாம்னு வந்தேன் ஆனா யோசிக்க அவகாசமே இல்ல. எப்பவும் டிசம்பர் மாசம் வந்தாலே எங்க வீட்டுல என் பாட்டி மூலமா ஏதாவது பிரச்னை வரும் இந்த தடவை ஒன்னும் ஆகலியேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டோம் அதுக்கு வந்தது தாமதமா ஒரு ரிவர்ஸ் ஆப்பு :) முதல்ல என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு அப்புறம் எனக்கு, என் தம்பிக்கு,அப்பாவுக்கு, எங்க வீட்டு கணினி இப்டி வரிசையா வந்து பாட்டிக்கு வந்துடுச்சு, அதனால கொஞ்சம் மருத்துவமனை,வீடுன்னு பிஸி. அப்பப்ப வந்து இப்டி எட்டிப்பார்க்கறேன், இந்த பதிவு கூட முன்னால எழுதி வச்சது தான் :) சரி வரேன் இனிமே போய் எல்லார் பதிவுகளுக்கும் ஒரு வருகை பதிவு செய்யனும் அப்புறம் பார்க்கலாம் :)

Monday, February 04, 2008

எனக்கு பிடிச்சது..

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடுச்சாம், அது மாதிரி நம்ம கணினி தான் படுத்துக்கிச்சு நம்ம அண்ணன் இருக்கும் போது என்ன கவலைன்னு பார்த்தா என் ராசி போலிருக்கு அவரோடது டாடா இண்டிகாம் கனெக்ஷன் அதுலேயும் வச்சாங்க ஆப்பு(டாடா இண்டிகாம் பத்தி சொல்லவே வேணாம் அந்த மகிமையை பத்தி தான் நம்ம தலைவி நிறைய எழுதிட்டாங்களே :)

நாம தான் எதுவும் எழுத முடியல நம்ம நண்பர்கள் எழுதறதையெல்லாம் படிக்கலாம்னு ஒரு திருப்தி இருந்தது. எழுதலியே தவிர எல்லா வலைப்பக்கங்களையும் படிச்சுட்டு தான் இருந்தேன். நல்ல வேளை கடைசில நேத்திலிருந்து எங்க கணினியே சரி பண்ணியாச்சு. அதான் மறுபடியும் அதிரடியா திரும்ப வந்தாச்சு(அடங்க மாட்டோம்ல:))

நம்ம நண்பர் கோபி ஒரு தொடர் ஆட்டத்துக்கு அழைச்சிருந்தார். போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவை பற்றி குறிப்பிட வேண்டுமாம்.

உண்மைய சொல்லனும்னா நான் போடற எல்லா பதிவுகளையும் எனக்கு பிடித்து தான் நான் போடறேன். விதிவிலக்குகள் உண்டு சில பதிவுகள் படு மொக்கையாக இருக்கும், சிலது தேவையற்ற ப்ரச்னைகளை கிளப்பி விட்டுருக்கும், சிலது ஏண்டா எழுதினோம் என்று தோன்றும் அளவு இருக்கும். இதையெல்லாம் மீறி என் அளவில் சில வகைகளில் பிடித்தவை என்றால்,

1. என் திறமையை ஓரளவு வெளிக்கொணர்ந்து என் பெயரை ஓரளவு வலையுலகில் பரிச்சயமாக்கிய கவிதை போட்டியை பற்றி நான் எழுதிய பதிவு,

அன்புடன்..

2.இது வரை கதைகள் என்ற பெயரில் சில முயற்சிகள் செய்திருந்தாலும் சமீபத்தில் சர்வேசன் நடத்திய கதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கதை எனக்கு பிடித்த ஒன்று

கலியுக பாஞ்சாலிகள்..

3.நகைச்சுவை என்ற பெயரிலும் வாழ்த்துகிறேன் என்ற பெயரிலும் முடிந்த வரை எல்லாரையும் வம்புக்கிழுத்த பதிவு :)

நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்..


இதை தவிர என்னுடைய பயணக்கட்டுரைகள் எல்லாமே எனக்கு பிடித்தவை. இப்டி சொல்லிக்கிட்டே இருந்தா எல்லா பதிவுகளையும் சொல்ல வேண்டியிருக்கும் அதனால இதோட நிறுத்திக்கிறேன் :)

உங்களுக்கு ஏதாவது தோணுச்சுன்னா சொல்லிட்டு போங்க :)